பரந்தூர், செப்.13- பரந்தூர் அருகே மதுரமங்கலத்தில் தொழில்பூங்கா அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்துவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் 1, 2026 தேதியிட்ட அந்த அரசாணையில்,”மதுரமங்கலத்தில் சிப்காட், தொழில்பூங்கா அமைப்பதற்காக நிலங்களை அரசு கையகப்படுத்துகிறது. நில உரிமையாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகை சிப்காட் அமைப்பின் மேலாண்மை இயக்குநரால் நிர்வகிக்கப்படும் நிதியிலிருந்து வழங்கப்படும். மொத்தம் 8.3820 ஹெக்டேர் நிலம் தொழில் தேவைகளுக்காகக் கையகப்படுத்தப்படுகிறது. கையகப்படுத்தப்படும் நிலத்தின் வரைபடங்களை காஞ்சிபுரம் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) மற்றும் காஞ்சிபுரம் சிறப்பு வட்டாட்சியர் (நில எடுப்பு) அலுவலகங்களில் வேலை நாட்களில் நேரில் பார்வையிடலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செமிகண்டக்டர் துறையில் அதிகரித்து வரும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், மதுரமங்கலத்தில் ரூ.175 கோடி மதிப்பீட்டில் இத்தொழிற்பூங்கா உருவாக்கப்படவுள்ளது. இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரமங்கலம் என்பது பரந்தூருக்கு அருகே இருக்கும் கிராமம். பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான முந்தைய அரசின் திட்டத்தை முதலமைச்சர் விஜய் ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்தநிலையில் பரந்தூருக்கு அருகிலேயே விவசாய நிலத்தை கையகப்படுத்தி சிப்காட் அமைக்கப்படும் என்று அறிவித்திருப்பது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
தேசிய லோக் அதாலத்:
1.02 லட்சம் வழக்குகளுக்குத் தீர்வு
சென்னை, செப்.13 தமிழநாட்டில் நேற்று (12.9.2026) நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் (மக்கள் நீதிமன்றம்) 1.02 லட்சம் வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, ரூ.982.18 கோடி வழங்கப்பட்டது.
நீன்றங்களில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க தேசிய அளவில் லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் ஆண்டுதோறும் 4 முறை நடத்தப்படுகிறது. அந்த வகையில் தேசிய அளவில் லோக் அதாலத் நேற்று (12.9.2026) நடைபெற்றது. தமிழ்நாடு மாநில சட்டப்பணி ஆணைக் குழு நடத்திய இந்த லோக் அதாலத்தில் மொத்தம் 524 அமா்வுகளில் வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதில், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், செக் மோசடி வழக்குகள், சிவில் வழக்குகள் என்று பலதரப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
வழக்கில் தொடா்புடைய இரு தரப்பினா்களிடம் நீதிபதிகள் பேச்சு நடத்தி, அவா்களது முழு சம்மதத்துடன் வழக்குகளை சமரசத்துக்கு கொண்டு வந்து முடித்து வைத்தனா்.
இது குறித்து மாநில சட்டப்பணி ஆணைக்குழு உறுப் பினா் செயலா் நீதிபதி எஸ்.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் நடந்த தேசிய லோக் அதாலத்தில் ரூ.982.18 கோடி மதிப்பிலான 1.02 வழக்குகள் தீா்வு காணப்பட்டுள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தைப் பொருத்தவரை, லோக் அதாலத்தில், மொத்தம் 17,840 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில், ரூ.172.82 கோடி மதிப்பிலான 15,948 வழக்குகள் இரு தரப்பு சம்மதத்துடன் முடிவுக்கு வந்தன.
ஒரு மோட்டாா் வாகன விபத்து வழக்கில் உயிரிழந்த வரின் குடும்பத்தினருக்கு ரூ.1.70 கோடி இழப்பீடு தொகைக்கான காசோலையை அவரது குடும்பத்தினரிடம் சென்னை உயா்நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிர மணியம் வழங்கினாா்.
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள
4,724 தற்காலிகச் செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பம்

சென்னை, செப்.13- தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் தற்காலிகமாக நிரப்பப்படவுள்ள 4,724 செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேசிய நலவாழ்வு இயக்கத்தின் கீழ் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம், சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் உள்ள செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் திருப்பூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர இதர மாவட்டங்களில், மாவட்ட நலவாழ்வு சங்கங்களின் கீழ்செயல்படும் அனைத்து சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் உள்ள செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தற்காலிக அடிப்படையில் ஒப்பந்த முறையில் நிரப்பப்படவுள்ள 4,724 காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பம் மற்றும் மாவட்ட வாரியாக காலிப்பணியிடங்களின் விவரம் ஆகியவற்றை https://nhm.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, அடையாளச் சான்று, ஒளிப்படம் உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து, அந்தந்த மாவட்ட சுகாதார அலுவலருக்கு செப்.25-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
