பிரான்சில் பெண்களை இழிவுபடுத்திய இந்து சாமியார்கள்!

இணையவழி கையெழுத்து இயக்கம்

செப்டம்பரில் பாரிஸ் அருகே பிரான்சின் முதல் பெரிய இந்து ஆலயம் திறக்கப்படவுள்ளது என்று கடந்த சில நாட்களாகவே பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டது. பாரிஸ் அருகிலுள்ள புஸ்ஸி-செயின்ட்-ஜார்ஜஸ் பகுதியில் அமைந்துள்ள போச்சசான்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா(BAPS)வின் சுவாமிநாராயண் இந்துக் கோயில் திறக்கப்படுவதையொட்டி, 2026 செப்டம்பர் 2 முதல் 14 வரை, 13 நாள் ‘கலாச்சாரத் திருவிழா’வுடன் கொண்டாட்டங்கள் இருப்பதாகவும் பெரிதாக விளம்பரப்படுத்தினார்கள். அதன் ஒரு பகுதியாக செப்டம்பர் 3 அன்று பாரிஸில் உள்ள செய்ன் நதியில் நடைபெறவிருந்த படகு ஊர்வலத்திற்கு முன்னதாக, ஈபிள் கோபுரத்திற்கு முன்பாக நடைபெற்ற மதச் சடங்கில் அந்த அமைப்பைச் சேர்ந்த துறவிகள் பங்கேற்றனர். பிறகு செப்டம்பர் 5-ஆம் தேதி என்று அந்த அமைப்பைச் சேர்ந்த சுமார் 100 பேர் கொண்ட குழுவினர் ஈபிள் கோபுரத்தைப் பார்வையிடச் சென்றனர். அப்போது அந்தக் கோபுரத்தை நிர்வகித்துவரும் ஈபிள் கோபுர நிர்வாக நிறுவனத்தாரிடம் அங்கு பணியில் உள்ள பெண்களை, இந்தத் துறவிகளின் கண்களில் படாமல் ஒதுங்கியிருக்கும் வகையில் ஏற்பாடுகளைச் செய்யுமாறு கேட்டுள்ளனர். அதற்கு அந்த நிறுவனமும் ஒப்புக் கொள்ளவே, பல பெண்கள், ஈபிள் கோபுரத்தின் பல பணிகளில் இருந்தும், குறிப்பிட்ட நேரத்துக்குப் பெண்களை மாற்றுப் பணிகளுக்கு அனுப்பியும், ஓய்வுக்கு அனுப்பியும் அலைக்கழிக்கப்பட்டனர்.

தங்கள் பணியிடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அவமதிப்பைக் கண்டு ஈபிள் கோபுரப் பணியாளர்கள் சங்கத்தினர் கொதித்தெழுந்தனர். ஒரு நாள் பணிப் புறக்கணிப்புப் போராட்டத் திலும் ஈடுபட்டதால், ஈபிள் கோபுரம் ஒரு நாள் மூடப்படும் நிலை உருவானது. இது பிரான்சில் பலத்த எதிர்ப்பலையைத் தோற்றுவித்துள்ளது. பெண்கள் அவமானப்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள பணியாளர் சங்கப் பிரதிநிதியான டயானா டெய்வோன் “இது ஊழியர்களிடமும், குறிப்பாகப் பெண்களி டமும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது; நடந்த சம்பவங்களாலும், சிலர் நடத்தப்பட்ட விதத்தாலும் அவர்கள் அனைவரும் அவமானப் படுத்தப்பட்டதாக உணர்கிறார்கள்” என்றும் தெரிவித்துள்ளார். “இந்த அதிர்ச்சியான செய்தி, கண்டனத்திற்குரியது” என்று பாரிஸ் நகர மேயரும், ஈபிள் கோபுர நிர்வாகத்தை நிறுவனத்தின் தலைவருமான ஏரியல் வீல் தெரிவித்துள்ளார்.

இது குறித்துக் கண்டனம் எழுந்ததும், “எங்களது சாதுக்களுக்கு எட்டடுக்கு பிரம்மச்சரிய ஒழுக்கம் உள்ளது. அதில் பெண்களுடன் பேசுதல், தொடர்பு கொள்ளுதல், அவர்களுடன் நெருக்கமாக இருப்பது போன்றவை தவிர்க்கப்பட வேண்டியவையாகக் குறிப்பிடப்படுகின்றன. இதை பெண்களை இழிவுபடுத்துவதற்கான கொள்கை அல்ல; சாதுக்களின் ஆன்மிக ஒழுக்கம் என்று   போச்சசான்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா கருதுகிறது” என்று விளக்கம் அளித்திருக்கிறார்கள் அந்தக் குழுவினர். ”யாரும் புண்பட்டிருந்தால் வருந்துகிறோம்” என்று அறிவிப்பும் செய்திருக்கிறார்களாம்.

இந்தியாவை நாறடித்த ஹிந்து மதத்தின் ‘நறுமணம்’, அது செல்லும் திசையெல்லாம் மூக்கைத் துளைக்கிறது. பெண்ணடிமைத்தனம், பெண்களை இழிவாகக் கருதுதல், இழிவாக நடத்துதல், வர்ணாசிரமம், ஜாதி, தீண்டாமை, பாகுபாடு, வன்கொடுமைகள், அவற்றுக்குக் கடவுள்-மதப் பூச்சுப் பூசி ‘புனித’ப்படுத்துதல், மற்றவற்றைத் ‘தீட்டு’ என்று ஒதுக்கி வைத்தல் – இவை தானே ஹிந்து மதம். அடிப்படை மனிதப் பண்புகளை இழந்தவர்களாகத் தானே பயிற்றுவித்திருக்கிறது இந்த மதம் என்பதற்கு இவையெல்லாம் சான்றுகள் அல்லவா?

இந்தியாவிலிருந்து படிப்பு, பணி என்று புலம்பெயர்ந்து விட்டவர்களிடம் ஹிந்து மதத்தைப் பரப்பப் போகிறோம் என்று சொல்லி, பணம் பறிக்க, அமெரிக்காவிலும், அய்ரோப்பாவிலும் கோயில்களை உருவாக்குவதைப் பல்வேறு குழுக்களின் பெயரில் தொடர்ந்து இந்துத்துவவாதிகள் செய்துவருகின்றனர்.

அங்கெல்லாம் திருவிழாக்கள் என்ற பெயரில் கூத்தடிப்பதும், இரைச்சலை ஏற்படுத்துவதும், தீபாவளி என்ற பெயரில் வெடிவெடித்து, பட்டாசு கொளுத்தி குப்பைகளைப் பெருக்குவதும், ஒலி மாசு ஏற்படுத்துவதும், தீ மிதித்தல், அலகு குத்துதல், அங்கப் பிரதட்சணம் என்று காட்டிமிராண்டிக் காலத்துப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதும், நாமம் தரித்துக் கொண்டு செம்பைத் தூக்கிக் கொண்டு பஜகோவிந்தம் பாடி பிள்ளைகளைப் பிச்சையெடுக்க வைப்பதும் அந்த மக்களிடையே அசூயை ஏற்படுத்தி முகம் சுழிக்க வைக்கிறது.

அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை ஜாதியப் பாகுபாட்டுடன் நடத்துவது தொடர்பாகப் புகார்கள், வழக்குகள் என்று நாளும் இந்தப் பிரச்சினை பெரிதாகிக் கொண்டிருக்கிறது. உலகத்தின் கண்ணில் ஹிந்து மதம் என்பது எவ்வளவு ‘புனித’மானது என்றும், தொன்மையானது என்றும் இவர்கள் ‘ஒப்பனை’ போட்டுக் காட்டினாலும், உண்மைத் தன்மை பல்லிளித்துக் கொண்டே இருக்கும்.

பெண்களைக் குறித்து மனுதர்மமும், கீதையும் சொல்வது என்ன? சான்றுக்குச் சில:

*பெண்கள் நிலையற்ற புத்தி படைத்தவர்கள். அவர்கள் நம்பத்தகாதவர்கள். (ரிக்வேதம் 8-3-17)

*பெண்கள் நட்பு நீடித்ததல்ல; அவர்கள் கழுதைப் புலியின் தன்மையுடையவர்கள். (ரிக் வேதம் 10-95-10)

*பெண்ணை விட பாவகரமான பிராணி வேறு இல்லை. பெண் எரிகிற நெருப்பு போன்றவள்; பெண் மாய்கை (வஞ்சக) குணமுள்ளவள். சவரக் கத்தியின் கூர்மையான பதம் போன்றவள். இவைகள் எல்லாம் உண்மையாகவே ஒரு பெண்ணின் தன்மையில் இருக்கின்றன. (மகாபாரதம் அனுஷன் பர்வம் 43-22)

* உலகம் தோன்றுவது முதல் பெண்கள் நிலைமை சூது நிறைந்தது. பெண்கள் தாமரை இலை தண்ணீர் போல் சலனப் புத்தியுடைவர்கள். வாள் போல் கூர்மையான கொடுமைத் தன்மையுடையவர்கள். (இராமாயணம், ஆரண்ய காண்டம் 13-5-6)

இப்படி பயிற்றுவிக்கப்பட்டவர்கள், இவற்றைப் ‘புனித’க் கருத்துகளாகக் கருதுவோர் எப்படி நடந்துகொள்வார்கள்? அதுதான் பிரான்சில் நடந்திருக்கிறது. பெண்களைச் சக மனிதராகப் பார்த்தால் இப்படி ஒதுக்கி வைக்கத் தோன்றுமா? நாங்கள் துறவிகள் – ‘பிரம்மச்சாரிகள்’ என்பதால் பெண்களை ஒதுங்கி நிற்கச் சொல்லுங்கள், நாங்கள் செல்லும் வழியில் இருந்து அகற்றுங்கள் என்று இன்று சொல்வார்களானால், இதே தான் நாங்கள் ‘புனிதர்’கள், சைவப் பட்சிணிகள் – அதனால் மாமிசம் உண்ணுவோர் விலகி ஓடுங்கள், மாற்று மதத்தவர், ஜாதியினர் விலகி ஓடுங்கள் என்று சொல்ல எத்தனை நாளாகும்?

மதச் சுதந்திரம் என்பது வேறு; மதத்தின் பெயரில் பாகுபாடு காட்டுவதை அனுமதிப்பது என்பது வேறு. உலக நாடுகள் வழங்கும் உரிமைகளை மதத்தின் பெயரால் தவறாகப் பயன்படுத்துவதுதான் பார்ப்பனியத்தின் வரலாறு.

இது உலக நாடுகளுக்கு ஓர் எச்சரிக்கைச் செய்தி!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *