குலசேகரன்பட்டினம், செப்.6- தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் அமைக்கப்பட்டு வரும் ராக்கெட் ஏவுதளம் அரசு கட்டமைப்புதான் என்றும், அதன் பராமரிப்புப் பணி மட்டுமே தனியார் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது என்றும் இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்எல்வி எஃப்-17 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதைத் தொடா்ந்து இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் சிறீஹரிகோட்டாவில் செய்தியாளா் களிடம் கூறியதாவது:
நம் நாட்டின் புவி கண்காணிப்பு, பேரிடா் மேலாண்மை உள்பட பல்வேறு பயன்பாடுகளுக்காக 36,000 கி.மீ. புவிவட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும் முதல் செயற்கைக்கோள் என்பதால் இந்தத் திட்டமானது சிறப்பு வாய்ந்ததாகும். ஜிஎஸ்எல்வி எஃப்-17 ராக்கெட், நாங்கள் எதிர்பார்த்ததைவிட கூடுதல் திறனுடன் செயல்பட்டது. ஜிஎஸ்எல்வியில் ஆரம்பகால ஏவுதலில் 1,536 கிலோ வரை மட்டுமே செலுத்த முடிந்தது. ஆனால், தற்போது 2,367 கிலோ எடையைச் சுமந்து சென்று வரலாறு படைத்துள்ளது.
நாட்டில் அதிகமாக வருவாய் ஈட்டுவதில்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு 3ஆவது இடம்!

சென்னை, செப்.6- நாட்டில் அதிகமாக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது.
ரயில்வேயில் பல்வேறு தொலைநோக்கு திட்டங்களுடன், நவீன கட்டமைப்புகளை ஒன்றிய அரசு உருவாக்கி வருகிறது. இதனால், ரயில்களின் இயக்கம் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, மாநகரங்களில் பயணிகளின் எண்ணிகை ஆண்டுதோறும் 7 முதல் 9 சதவீதம் வரை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கடந்த நிதி ஆண்டில், ரயில்வேயின் தகவலின்படி, நாட்டிலேயே பயணிகள் பிரிவில், அதிகமாக வருவாய் ஈட்டும் முதல் 10 இடங்களில் சென்னை சென்ட்ரல் 3ஆவது இடத்தில் உள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோசனை குழு உறுப்பினர் ஜாபர் அலி கூறியதாவது:
வருவாய் ஈட்டுவதில் முதலிடத்தில் டில்லி ரயில் நிலையம் ரூ.3,337 கோடியும், 2ஆம் இடத்தில் மேற்கு வங்க மாநிலம் ஹவுரா ரயில் நிலையம் ரூ.1,692 கோடியும், 3ஆவது இடத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ரூ.1,299 கோடியும், 4ஆவது இடத்தில் தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையம் ரூ.1,276 கோடியும், 5ஆவது இடத்தில், டில்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையம் ரூ.1,227 கோடி வருவாயும் ஈட்டியுள்ளன.
இதையடுத்து, மும்பை, அகமதாபாத், பூனே ரயில் நிலையங்களும் இடம் பெற்றுள்ளன. மேற்கண்ட முக்கிய நகரங்கள் நான்கு வழி பாதைகளாக மாற்றப்பட உள்ளன.
இதனால், பயணிகள், சரக்கு ரயில்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும். ரயில் பாதை பணிகள் முடியும்போது, 2030இல் தற்போதுள்ளதை காட்டிலும், 50 சதவீதம் ரயில்கள் அதிகரிக்க ரயில்வே இலக்கு நிர்ணயித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
3ஆம் கட்ட சிறப்பு தீவிரத் திருத்தம்
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டை தள்ளிவைத்த மாநிலங்கள்!
புதுடில்லி, செப்.6- நாடு முழுவதும் 3ஆவது கட்டமாக 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நடந்தன.
இதில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடு வதற்கான நாள்கள் நெருங்கி வரும் நிலையில், பல மாநிலங்கள் பல்வேறு காரணங்களுக்காக அந்த காலக்கெடுவை நீட்டித்து உள்ளன. குறிப்பாக 11 முதல் 28 நாள்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் மராட்டிய மாநிலம் அதிகமாக 28 நாள்கள் நீட்டித்து இருக்கிறது. கருநாடகம் மற்றும் டில்லி மாநிலங்கள் 20 நாள்களும், தெலங்கானா 18 நாள்களும் கால நீட்டிப்பை பெற்றுள்ளன.
இதைப்போல ஒடிசா (15 நாள்கள்), ஆந்திரா, அரியானா, பஞ்சாப் மாநிலங்களும் (11 நாள்கள்) கால நீட்டிப்பை அறிவித்து உள்ளன. முன்னதாக தமிழ்நாடு உள்பட மாநிலங்களில் நடந்த 2ஆம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின்போதும் பல மாநிலங்கள் கால நீட்டிப்பை அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
