‘‘தண்டிக்கப்பட்ட விஞ்ஞானிகள்’’ பகுத்தறிவுப் பயணத்துக்கு ஒரு வழிகாட்டி!நூல் மதிப்புரை

இணையவழி கையெழுத்து இயக்கம்

 

மனித வரலாற்றின் மிகச் சிறந்த இயங்குசக்தி எது? என்று கேட்டால், யோசனையின்றி ‘அறிவியல்’ என்று சொல்லிவிடலாம். இன்று நாம் அனுபவிக்கும் அத்தனை வசதிகளும், நோய்களிலிருந்து விடுபட்டு வாழும் பாதுகாப்பான வாழ்க்கையும், பிரபஞ்சத்தை அளக்க முனையும் நமது பரந்த அறிவும் ஒரே இரவில் சாத்தியமானவை அல்ல. அவை ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஆயிரக்கணக்கான மனிதர்களின் அர்ப்பணிப்பும், வாழ்நாள் உழைப்பும் மறைந்துள்ளன.

இன்று நாம் இயல்பாக ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு அறிவியல் உண்மையும், ஏதோ ஒரு காலத்தில் பழைமைவாதம், மதக் கோட்பாடுகள், அதிகார மமதை மற்றும் சக விஞ்ஞானிகளின் அறியாமை ஆகியவற்றை எதிர்த்து நின்று பெற்ற வெற்றியாகும். பூமி சூரியனைச் சுற்றுகிறது என்று சொன்னதற்காக ஆயுள் முழுவதும் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்ட கலிலியோ, பிரபஞ்சம் முடிவுற்றது என்று பிரகடனப்படுத்தியதற்காக நாவறுக்கப்பட்டு உயிருடன் கொளுத்தப்பட்ட ஜியோர்டானோ புருனோ, பிரசவத்தின் போது மருத்துவர்கள் கை கழுவ வேண்டும் என்று கூறி நோய்த்தொற்றைத் தடுக்க முயன்றதற்காக மனநலக் காப்பகத்தில் அடைக்கப்பட்டு உயிர் துறந்த இக்னாஸ் செம்மல்வெஸ்சு, மனித குலத்தின் கணினி அறிவியலுக்கு அடித்தளமிட்டும் சமூகத்தின் குறுகிய மனப்பான்மையால் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட ஆலன் டூரிங் என இந்த நூலில் இடம் பெற்றுள்ள 42 விஞ்ஞானிகளின் வாழ்க்கையும் ஒரு காவியச் சரித்திரமாகும். சி.ராமலிங்கம் எழுதியுள்ள ‘தண்டிக்கப்பட்ட விஞ்ஞானிகள்’ எனும் இந்நூல், வெறும் அறிவியல் வரலாற்று ஆவணம் மட்டுமல்ல; மனித நாகரிகம் தனது அறியாமையால் செய்த வரலாற்றுப் பிழைகளின் சாட்சியமும் கூட. அலெக்ஸாண்டரியாவின் ஹைபாதியா தொடங்கி, நவீன வேதியியலின் தந்தை லாவோசியர், டார்வின், சந்திரசேகர் வரை, தங்கள் காலத்தின் மரபுகளையும் அதிகார அமைப்புகளையும் கேள்வி கேட்டு உண்மையை உரக்கச் சொன்ன பேரறிஞர்களின் வாழ்வியலையும் தியாகத்தையும், மிகக் கடுமையான உழைப்போடும் விரிவான தரவுகளோடும் உணர்ச்சிமிக்க எளிய தமிழில் ஆசிரியர் வாசகர்களுக்கு விவரித்துள்ளார்.

இவர்கள் தண்டிக்கப்பட்டபோது தோற்றது இந்த விஞ்ஞானிகள் அல்ல; மாறாக, அவர்களைப் புரிந்துகொள்ள மறுத்த அன்றைய சமூகம்தான். அதிகாரங்களும் அடக்குமுறைகளும் அழிந்துவிட்டன; ஆனால், இந்த விஞ்ஞானிகள் கண்டறிந்த உண்மைகள் மட்டுமே காலத்தைக் கடந்து இன்றைக்கும் மனித குலத்துக்கு வெளிச்சம் பாய்ச்சிக் கொண்டிருக்கின்றன.

‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ எளிதாக நடந்துவிடுவதில்லை. புதிய சிந்தனைகளையும் மாற்றங்களையும் ஏற்றுக்கொள்வதற்குச் சமூகம் என்றும் தயங்கியேயே வந்திருக்கிறது. கடந்த வந்த இந்தத் தவறுகளில் இருந்து நாம் கற்க வேண்டிய பாடம் ஒன்றுதான்.

அறிவியல் என்பது வெறும் தகவல்களின் தொகுப்பு அல்ல; அது அதிகாரங்களை நோக்கி, உண்மையின் குரலில் கேள்வி கேட்கும் துணிச்சல். கேள்விகளைக் கண்டு அஞ்சாமல், மரபுசாரா புதிய சிந்தனைகளைப் பகுத்தறிவின் வெளிச்சத்தில் அணுகும் பகுத்துவத்தை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். பள்ளி மாணவர்களும், இளைஞர்களும், சிந்தனையாளர்களும் கட்டாயம் வாசிக்க வேண்டிய வரலாற்றுச் சான்றாவணம் இந்நூல். சிந்தனைச் சிறைகளை உடைத்து, பகுத்தறிவு வெளிச்சத்தை நோக்கிப் பயணிக்கத் துடிக்கும் ஒவ்வொரு வாசகர்களின் கரங்களிலும் இந்நூல் ஒரு நல்விகாட்டியாக இருக்கும்.

‘தண்டிக்கப்பட்ட விஞ்ஞானிகள்’

சி.ராமலிங்கம்

‘இந்து தமிழ் திசை’ வெளியீடு

விலை: ரூ.300

ஆன்லைனில் பெற:

https://store.hindutamil.in/publications

தொடர்புக்கு: 7401296562

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *