
திராவிடர் இயக்க வரலாற்றுச் சுவடுகளின் அருகில் நின்றும், அடுத்தடுத்த சுவடுகளை நோக்கிய ’நடைப்பயணம்’ எனும் பெயரில் நடந்தும் சென்று, அந்தந்த வரலாற்றுச் சுவடுகளின் பின்னணியை விவரிப்பதுதான் இந்நடைப் பயணத்தின் நோக்கம். இப்பணியை, ’திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்’ கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து செய்து வருகிறது. இது குறிப்பாக, திராவிடர் இயக்கத் தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாள், சென்னை நாள், நீதிக்கட்சியின் தொடக்க நாள் போன்ற முக்கிய நாட்களில் நடத்தப்பட்டு வருகிறது.
22.08.1639 அன்றுதான் மதராசப் பட்டினம் பிறந்தது. 1996 வரையிலுமே அதே பெயருடன்தான் இருந்தது. சென்னை மாகாணத்திற்கே, ’தமிழ்நாடு’ என்று தனித்தமிழ் பெயர் சூட்டுவதற்கு திராவிடர் இயக்கத்தலைவர் அறிஞர் அண்ணாதான் வரவேண்டி யிருந்தது. 18.07.1967இல் தி.மு.க. ஆட்சிக்காலத்தில்தான் அப்பெயர் சூட்டப்பட்டது. அப்பெயர், 14.01.1969 அன்று தான் அமலுக்கும் வந்தது. திராவிடர் இயக்கத் தலைவர், முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக வந்தபின் தான், ”மதராஸ்” என்ற பெயர், ”சென்னை” என்றும் மாற்றப்பட்டது. மாற்றப்பட்ட நாள் 17.07.1996. அதுவும் திராவிட இயக்க ஆட்சிதான்! இதற்கெல்லாம் எந்த தமிழியக்கமும் மெனக்கெடவில்லை. இப்போது மதராசப் பட்டினத்திற்கு வயது, 387. சென்னைக்கு வயது, 30.

1996 ஆம் ஆண்டே சென்னை என்று பெயர் சூட்டப்பட்டுவிட்டாலும், அதைக் கொண்டாடும் மனநிலைக்கு 2004 இல்தான் சிலர் தயாரானார்கள். அவர்கள் ”சென்னை நாள்” கொண் டாட, ”மயிலாப்பூர் நடை” எனும் பெயரில், மயிலாப்பூரைச் சுற்றியுள்ள கோயில்களுக்கு நடையாகச் சென்று, அவாள்களின் வரலாற்றையே நினைவு கூர்ந்தனர். சென்னை நகரின் சுயமரியாதையை மீட்க வேண்டி, ”திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்”, சார்பாக, உண்மையான சென்னை நாளைக் கொண்டாடும் விதமாக, கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கி, கடந்த 12 ஆண்டுகளாக, தொடர்ந்து, திராவிடர் இயக்கத்தின் முத்திரைகள் பதிக்கப்பட்டுள்ள, சென்னை நகரின் பல்வேறு பகுதிகளிலும், இந்த ”சென்னை நாள் நடை பயணம்” நடத்தப் பட்டுள்ளது.
1923 இல் சென்னையின் முதல் திட்டமிடப்பட்ட குடியிருப்புப் பகுதியாக உருவாக்கப்பட்டது தியாகராய நகர்தான். அதற்கு தற்போது 103 வயதாகிறது. சென்னை வாசிகளே, அதன் வரலாற்று முக்கியத்துவத்தை அறிந்திருக்க மாட்டார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு சென்னை நாளை முன்னிட்டு, தியாகராய நகரின் வரலாற்று முக்கியத்துவத்தை எடுத்துக்கூறும் விதமாக, 29.08,2026 சனிக்கிழமை அன்று, ”நூற்றாண்டைக் கடந்த சென்னை தியாகராய நகர்” எனும் பெயரில், ”திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்” ஒரு வரலாற்று நடை பயணம் ஏற்பாடு செய்திருந்தது. அந்நிகழ்வில் தோழர்கள் அதிகாலை 6 மணிக்கு, உஸ்மான் சாலையில் ஒன்று கூடினார்கள். அங்கு தொடங்கி, நடேசன் பூங்காவில் காலை 8:00 க்கு பயணம் நிறைவுற்றது. இந்த வரலாற்று நடை பயணம் சுமார் 4 கி.மீ. தூரத்தை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் மெட்ராஸ் பிரசிடென்சிக்குப் பிரதமராக இருந்த, பானகல் அரசர் அவர்களின் திட்டமிடல் மூலம் உருவானதுதான் இந்நகர். திராவிடர் இயக்கத் தலைவர்களின் முக்கியமானவரும், நீதிக்கட்சியை தொடங்கியவர்களில் ஒருவருமான சர்.பிட்டி.தியாகராயரின் நினைவாக, இந்நகரத்திற்கு அவரின் பெயரையே சூட்டப்பட்டுள்ளது. சென்னை மாகாணத் திற்கு ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியரும், நீதிக்கட்சி அரசில் உள்துறை அமைச்சர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்தவருமான, கான் பகதூர் சர்.முகமது உஸ்மான் அவர்கள் நினைவாகத்தான், ”தெற்கு உஸ்மான்” மற்றும், ”வடக்கு உஸ்மான்” சாலைகள் இருக்கின்றன. இந்திய அரசியல் ஆளுமைகளும், கல்வியாளர்களுமான ஆற்காடு சகோதரர்கள் சர்.ராமசாமி (முதலியார்) மற்றும், சர்.லட்சுமண சாமி (முதலியார்) ஆகியோரின் நினைவாகத்தான், ”ஆற்காடு சாலை” உள்ளது. நீதிக்கட்சியின் முக்கிய தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் திகழ்ந்து, ’ வேலை வாய்ப்புகளில் பார்ப்பனரல்லாதார் உரிய பிரதிநிதித்துவம் பெறுகிற வரையிலும், குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பார்ப் பனர்களுக்கு இடஒதுக்கீடே தரக் கூடாது’ என்று அதிரடியான தீர் மானத்தை முன்மொழிந்த ஓ.தணி காசலம் (செட்டியார்) அவர்களின் நினைவாகத்தான், ”தணிகாசலம் சாலை” உள்ளது.

அதுபோலவே, சென்னை மாநகர மேயராக இருந்த பாசுதேவ் அவர்கள் நினைவாகத்தான், ”பாசுதேவ் சாலை” உள்ளது. நீதிக்கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த டபிள்யூ.பி.ஏ.சவுந்திரபாண்டியனாரின் நினைவாகத்தான், தியாகராய நகரின் முக்கிய கடைவீதியான, ”சவுந்திர பாண்டியன் அங்காடி” உள்ளது. அந்த அங்காடியும், தியாகராய பெயரில் உள்ள சாலையில்தான் அமைந்துள்ளது. அப்படிப்பட்ட சிறப்புக்குரிய அங்காடியைத்தான், இன்றைக்கு, ’பாண்டி பஜார்’ என்று திரித்துக் கூறி, நமது வரலாற்றை நாமே மறைத்துக்கொள்ளும் அவலமும் ஏற்பட்டுள்ளது. நீதிக்கட்சி ஆட்சியில், பானகல் அரசரின் அமைச்சரவையில் சென்னை மாகாணத்தின் வளர்ச்சித்துறை அமைச்சராக பணியாற்றிய, சர்.தின்னவேலி நெல்லையப்ப சிவஞானம் (பிள்ளை) அவர்களின் நினைவாகத்தான், ”சிவஞானம் சாலை” உள்ளது. புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும், இந்திய ரிசர்வ் வங்கியை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றியவருமான, திவான் பகதூர் சர்.கோபதி நாராயண சுவாமி (செட்டி) அவர்களின் நினைவாகத்தான், ”கோபதி நாராயண சாலை” உள்ளது. அந்தச் சாலையில்தான், அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கலைக்கூடத்திற்கு சர்.பிட்டி.தியாகராயரின் பெயர் சூட்டப் பட்டுள்ளது. அந்தக் கலைக்கூடத்திற்கு எதிரில்தான், என்.எஸ்.கே. என்ற அழைக்கப்படும், ”கலைவாணர் சிலை” நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு நிகழ்வுதான் அறிஞர் அண்ணா கலந்து கொண்ட கடைசி நிகழ்வாகும்.
நீதிக்கட்சியை தோற்றுவித்தவர் களில் ஒருவரும், 1912 இலேயே, ”திராவிட சங்கம்” அமைத்தவரும், ”திராவிடன் இல்லம்” அமைத்து பார்ப்பனரல்லாதாருக்கு தங்கிப்படிக்கும் விடுதியையும் கட்டி, ஒரு வரலாற்றுத் திருப்பத்தை உண்டாக்கியவருமான டாக்டர்.சி.நடேசனார் பெயரில் ஒரு பூங்காவும், இந்நகரின் மய்யத்தில் அமைந்துள்ளது. தந்தை பெரியார் – அன்னை மணியம்மையார் ஆகியோரின் திருமண ஏற்பாடு, செ.தெ.நாயகம் வீட்டில்தான் பதிவு செய்யப்பட்டது. அதற்கு சாட்சியாக, செ.தெ.நாயகம் அவர்களின் மருமகளும், புள்ளியியல் துறை அலுவலர் நெல்லைநாயகம் அவர் களின் வாழ்விணையருமான் ஞானம் அம்மையார் அவர்களும் கையொப்பம் இட்டிருக்கிறார். அவ்வரிய வரலாற் றையும் நினைவூட்டும் வண்ணம், ”செ.தெ.நாயகம் தியாகராய நகர் மேனிலைப்பள்ளி” எனும் பள்ளியும், அந்நகரில்தான் இருக்கிறது.
தலைவர்களின் பெயர்கள் மட்டு மல்லாமல், தியாகராய நகர் கட்டுமானப் பணியின் போது விஷவாயு தாக்கி உயிர் நீத்த இரண்டு பணியாளர்களான, ”கோவிந்து” மற்றும், ”நாதமுனி” ஆகியோரின் பெயர்களும், தியாகராய நகரின் இரண்டு, தெருக்களுக்கு வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், அண்ணல் காந்தி அவர்கள் வட இந்தியர்கள் ஒரு தென்னிந்திய மொழியையும், தென்னிந்தியர்கள் ஒரு வட இந்திய மொழியையும் கற்றுக் கொள்ள வேண்டும் என விரும்பி, அதை செயல்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ள, ”தக்ஷிண பாரத ஹிந்தி பிரச்சார சபா” இந்நகரில்தான் அமைந்துள்ளது. ஆனால், அண்ணல் காந்தி குறிப்பிட்டதைப் போல, ”உத்தர பாரத தமிழ்ப்பிரச்சார சபா” ஏன் வடநாட்டில் இன்றைக்கும் அமைக்கப்படவில்லை? என்ற கேள்வியும் இந்நடைப்பயணத்தில் எழுப்பப்பட்டது என்பன போன்ற ஏராளமான வரலாற்றுக் குறிப்புகள் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

ஒவ்வொரு சாலைகள், பூங்காக்கள், பள்ளிகள் ஆகியவற்றின் பின்னணியில் விரிந்து கிடக்கும், வியக்க வைக்கும் திராவிட இயக்க வரலாற்றை, அதற்கான தரவுகளுடன் ஊடகவியலாளர் கோவி.லெனின் எடுத்துரைத்தார். தோழர்கள் கேள்விகள் கேட்டும் தங்களின் அய்யங்களை தெளிவுபடுத்திக் கொண்டனர்.
கழகத் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், ஊடகவியலாளர் முரளிகிருஷ்ணன் சின்னதுரை, இரா.அருள் ஆகியோர் ஒருங்கிணைப்பில், தோழர்கள் யுகேஷ், புவனன், ஜெ.பாபு, சீனிவாசா, பேராசிரியர்கள் மாறப்பன் மற்றும் ரஷீத்கான், தங்கதுரை, இரா.நாகராஜ், ஆனந்த், பெரியார் மாணாக்கன், தமிழ்நிலா ஆகியோர் கலந்துகொண்டனர். நிறைவாக காலைச் சிற்றுண்டியுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
திராவிடர் இயக்க வரலாற்றை படிப்பதைவிட, கேட்பதைவிட, வரலாற்றுச் சுவடுகளின் மீது நின்றபடியே அவ்வரலாற்றையே அசைபோடுவது என்பது, பசுமரத்தாணி போல், வரலாற்றுத் தரவுகள் புத்தியில் பதிந்து விடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிறைவோடு கலந்துகொண்ட தோழர்கள் விடைபெற்றனர்.
– உடுமலை வடிவேல்
