“கொம்பூதி” சே.முனியசாமி!

இணையவழி கையெழுத்து இயக்கம்

வி.சி.வில்வம்

குக்கிராமத்தில் பிறந்து, நான்காம் வகுப்பு வரை படித்து, மதுரை வீதிகளில் விறகு வியாபாரம் செய்து, இன்று திருமண மண்டபங்களுக்கு உரிமையாளராகி, 25 நாடுகளுக்கு மேல் விமானங்களில் பறந்து, அடுத்த மாதம் ஜப்பானிற்கும் செல்லவிருக்கும் அய்யா முனியசாமி அவர்களை, இந்த வார ஞாயிறு மலருக்காக, மதுரையில் அவர் வீட்டில் சந்தித்தோம்.

அய்யா வணக்கம்! தாங்கள் பிறந்த ஊர் எது?

என் பெயர் சே.முனியசாமி. நான் இராமநாதபுரம் மாவட்டம் “கொம்பூதி” கிராமத்தில் பிறந்தேன். இப்போது 77 வயதாகிறது. அம்மா பெயர் முனியம்மாள், அப்பா பெயர் சேவுகன். எங்கள் பெற்றோர் பர்மாவில் வசித்து, பிறகு தமிழ்நாடு வந்தவர்கள். எங்கள் கிராமம் “வானம் பார்த்த பூமி”. ஓர் ஆண்டில் 6 மாதம் வேலை இருக்கும், மீதம் 6 மாதம் வெளியூர் சென்றுவிடுவார்கள். குறிப்பாக உரத்தநாடு அருகிலுள்ள தெளியங்குடிகாடு கிராமத்திற்குச் செல்வார்கள். எங்கள் பெற்றோரும் அப்படி இடம் மாறி வசித்ததால், எனது கல்வி பாதிக்கப்பட்டது. இறுதியில் நான்காம் வகுப்பு வரையே முடித்தேன். இச்சூழலில் தான் எனது 15 ஆம் வயதில், 1964 ஆம் ஆண்டு நானும், அம்மாவும் மதுரைக்கு வந்துவிட்டோம். தந்தையார் உரத்தநாடு பகுதியிலேயே வேலை பார்த்து வந்தார்.

மதுரைக்கு வந்துவிட்டோமே தவிர, தங்குவதற்கு இடமில்லை. அதுசமயம் திருப்பரங்குன்றம் பகுதியில் இருந்த ஒரு சத்திரத்தில் நான்கைந்து குடும்பங்கள் தங்கியிருந்தார்கள். அவர்களுடன் நாங்களும் சேர்ந்து கொண்டோம். அருகில் என்ன வேலை கிடைக்கிறதோ அதை அம்மா பார்ப்பார்கள். நான் ஒரு உணவகத்திற்கு வேலைக்குப் போனேன்.

இளம் வயது வாழ்க்கை வறுமை நிறைந்ததாக இருந்திருக்கிறதே?

ஆமாம்! சில காலங்கள் கழிந்த நிலையில் “வில்லாபுரம்” பகுதிக்கு 10 ரூபாய் வாடகைக்கு ஒரு குடிசை வீட்டிற்கு வந்தோம். அம்மா சிறிய அளவில் வியாபாரம் செய்ய, நான் வேறொரு உணவகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். ஒரு கட்டத்தில் கூடுதல் வருமானம் வேண்டி, முனிச்சாலை அருகே ஒரு விறகுக் கடைக்கு வேலைக்குப் போனேன். லாரி முழுவதும் வரும் விறகை இறக்கினால் ஒரு ரூபாய் ஊதியம். அதை எடுத்து அடுக்கி வைத்தால் இரண்டு ரூபாய் ஊதியம். நான் சொல்வது 1965-1966 காலகட்டம். இப்படியே போன நிலையில் நாமே சொந்தமாக விறகு வியாபாரம் செய்தால் என்னவென்று அம்மாவும், நானும் முடிவு செய்தோம். அதன்படி விறகுகள் வாங்கி, அதை நன்கு காய வைத்து, கைவண்டியில் வைத்துத் தெருக்களில் விற்பனை செய்தோம்.

பின்னாளில் எம்.கே.புரம் பகுதியில், மாத வாடகை ரூபாய் 50 கொடுத்து விறகுக்கடை ஒன்றைத் தொடங்கினேன். ஓரளவு வளர்ந்த நிலையில், தந்தையார் காலமானார். இதற்காகக் கிராமத்திற்குச் சென்றதில் பல நாட்கள் போனது. இதனால் ஏற்பட்ட இழப்பில் இருந்து மீள்வதற்குப் பணம் இல்லை. இதற்கிடையில் எங்கள் கடைக்கு விறகு வாங்க வரும் ஓர் அம்மா, தன்னுடைய நகைகளைக் கொடுத்து, இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார். நினைத்துப் பார்க்கவே முடியாத அந்த உதவியால், மீண்டும் முன்னேறி வந்தோம். இதனைத் தொடர்ந்து நான் குறைந்த வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலும் செய்தேன்.

இந்நிலையில், விறகுக் கடை இருந்த இடம் விற்பனைக்கு வந்தது. அதனைச் சொந்தமாக வாங்கி, பின்னாளில் சிறிய அளவிலான மண்டபம் ஒன்று கட்டினேன். அதனையொட்டி மற்றுமொரு மண்டபமும், அருகருகிலே இரண்டு வீடுகளும் கட்டி, அங்கேதான் நானும், வாழ்விணையர் பாக்கியம் அவர்களும் வசித்து வருகிறோம்.

பெரியார் கொள்கை எப்போது அறிமுகமானது?

நான் சிறு பிள்ளையாக இருந்த போதே ஜாதியச் சிந்தனைகளில் வெறுப்புடன் இருந்தேன். எங்கள் கிராமத்தில், பிற மனிதர்கள் மீது தீண்டாமையைக் கடைப்பிடிப்பதில் தீவிரமாக இருப்பார்கள். எங்கள் வீட்டிலும் அப்படியே செய்தார்கள். இதற்காக எங்கள் அம்மாவை நான் தொடர்ந்து எதிர்த்து வந்தேன். தவிர அனைத்து மக்களோடும் சமமாகப் பழகும் வாய்ப்பை நான் ஏற்படுத்திக் கொண்டே இருப்பேன். அதேபோல பெரிதாகக் கடவுள் பக்தி என்னிடம் இருந்ததில்லை. இவ்வளவிற்கும் எங்கள் அம்மா, கையில் சூடம் ஏற்றி சாமியாடுவார். இயல்பாகவே இருந்த எனது பகுத்தறிவுச் சிந்தனை, அதை ஏற்க மறுத்தது.

இந்தச் சமயத்தில் எனக்குக் காது குத்த ஏற்பாடு செய்தார்கள். அது எனக்குப் பிடிக்கவில்லை. அதேபோல நான் ஆசையாக வளர்த்த ஆட்டுக்குட்டியை, அந்த நிகழ்ச்சிக்கு வெட்டவும் ஏற்பாடு செய்தார்கள். எனக்கு மனம் ஒப்பவே இல்லை. ஏனெனில் எனது பொழுதுபோக்கே அந்த ஆட்டுக்குட்டிதான். நாங்கள் இருவரும் விளையாடிக் கொண்டே இருப்போம், அதனிடம் நான் பேசிக் கொண்டே இருப்பேன். இந்நிலையில் காது குத்தும் நாளன்று, நான் வெளியே ஓடிவிட்டேன். கடைசி வரை நான் வரவே இல்லை. எனவே எனது காதும், எனது ஆடும் அன்றைய தினம் தப்பித்தன.

இப்படி நான் “விளையாட்டுத் தனமாக” இருப்பதாக எண்ணி, எனக்கு ஜாதகம் பார்க்கத் தொடங்கினார்கள். ஏழெட்டு முறைப் பார்த்ததில், ஒவ்வொரு முறையும் ஒன்றைச் சொன்னார்கள் ஜோசியர்கள். இதில் பணம் போனதே தவிர, பலன் ஏதும் ஏற்படவில்லை.

திராவிடர் கழகத்திற்கு எப்போது வந்தீர்கள்?

நான் மதுரைக்கு வந்த பிறகு, என்னுடைய 47 ஆவது வயதில் எனக்கு இயக்க அறிமுகம் கிடைத்தது. வடக்குமாசி தெருவில் சென்ற போது, தந்தை பெரியார் குறித்தப் பாடல்களைக் கேட்டேன். ஒலி வந்த திசை நோக்கிச் சென்றேன். அது ஒரு பள்ளிக்கூட ஆண்டு விழா. அங்கு தான் மதுரை வரதராஜன் அவர்களை முதலில் சந்தித்தேன். என்னை அறிமுகம் செய்து கொண்டு, எனது பகுத்தறிவுச் சிந்தனைகளைப் பகிர்ந்துக் கொண்டேன். அவர் வரவேற்று என்னை அமர வைத்ததுடன், சிறப்பு விருந்தினர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார்.

பின்பு குற்றாலம் பயிற்சி முகாம் குறித்துக் கூறி, நன்கொடை கேட்டார்கள். நான் 25 கிலோ உளுந்தம் பருப்பு வாங்கிக் கொடுத்து, குற்றாலத்திற்கும் சென்றேன். அப்போது கேரளா பொதுப்பணித்துறை வளாகத்தில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. அங்குதான் முதன்முதலில் ஆசிரியர் அவர்களைச் சந்தித்தேன். நன்றாகச் செயல்படுங்கள் என ஆசிரியர் அவர்கள் பாராட்டினார். அப்போது முதல் இயக்கத்தில் ஈடுபத்திக் கொண்டு, முடிந்தவரை பங்காற்றி வருகிறேன்.

பெரியார் கொள்கையால் தங்களுக்கு ஏற்பட்ட பயன்கள் என்ன?

நான் இராமநாதபுரம் மாவட்டம் கொம்பூதி எனும் குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். கல்வி பெறும் வாய்ப்பு இல்லாமல் போனதோடு, இளம்வயது வாழ்க்கை முழுக்க வறுமை நிறைந்ததாக இருந்தது. அம்மாவும், நானும் மதுரைக்குப் போவதற்கு 10 ரூபாய் கடன் வாங்கிப் போனோம். அதுவும் ஒரு ரூபாய் வட்டிக்கு. பொருளாதாரத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும், பெரியார் இயக்கத்தில் சேர்ந்த பிறகுதான் அறிவுப்பூர்வமான அணுகுமுறை, சிந்தித்துச் செயலாற்றும் திறனைப் பெற்றேன். ஏராளமான மனித செல்வங்களை நட்பாக்கிக் கொண்டேன். தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்கள் மாவட்டத் தலைவர் வரை பொறுப்புக் கொடுத்தார்கள். அதையும் சிறப்பாக செய்தேன். தொடர்ந்து பொதுக்குழு உறுப்பினராக இருந்து, தற்போது மாவட்டக் காப்பாளராக இருந்து வருகிறேன்.

எங்கள் வீட்டில் நடைபெற்ற மூன்று திருமணங்களும் சுயமரியாதை முறையிலே நடைபெற்றது. அதில் இரண்டு திருமணங்களை ஆசிரியர் நடத்தி வைத்தார். பெரியார் உலகத்திற்கு இதுவரை 1.20 ஆயிரம் கொடுத்துள்ளேன். இரண்டாவதாகக் கட்டிய புதிய இல்லத்தைக் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் திறந்து வைத்தார். இயக்க நிகழ்ச்சிகள், மாநாடுகள், பொதுக் கூட்டங்கள், போராட்டங்கள் என அனைத்திலும் பங்கேற்பேன். அய்ந்தாறுமுறை சிறைக்கும் (ஒருநாள் சிறை) சென்றுள்ளேன்.

வெளிநாடுகளுக்கு அதிகமான பயணங்கள் போயிருப்பதாக அறிந்தோமே?

ஆமாம்! இன்றைக்கு வசதியோடு வாழ்ந்தாலும், தொடக்கத்தில் எப்படி வாழ்ந்தோம் என்பதை நான் வெளிப்படையாகப் பேசுவேன். இப்படி மனம்திறந்து பேசுகிற நிலையைப் பகுத்தறிவுச் சிந்தனைதான் எனக்குக் கற்றுக் கொடுத்தது. இப்படி பல்வேறு கருத்துகளைத் தோழர்களுடன் பகிர்ந்து கொள்கிற போவதுதான் மதுரை தோழர் வா.நேரு அவர்கள், “உங்கள் வாழ்க்கை அனுபவங்களைத் தொகுப்பு நூலாகக் கொண்டு வாருங்கள்”, எனக் கூறினார். அதன் பின்னர் வந்தது தான் “விறகு வண்டி முதல் விமானம் வரை” என்கிற எனது நூல். அதன் அட்டைப்படத்திலேயே நான் இழுத்துச் சென்ற விறகு வண்டியும், விமானமும் ஒருசேர இருக்கும்.

அந்த நூலினைத் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மதுரையில் வெளியிட்டார். அந்நூல் குறித்து ‘விடுதலை’யில் ‘வாழ்வில் சிந்தனைகள்’ பகுதியிலும் எழுதி மகிழ்வித்தார்கள். எனது முதல் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் 2009 ஆம் ஆண்டு தொடங்கியது. சீனா, ஹாங்காங், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், எகிப்து, துபாய், இலண்டன், பாரிஸ், ஜெர்மன், அமெரிக்கா உள்ளிட்டு இதுவரை 25 நாடுகளுக்குப் பயணம் சென்றுள்ளேன். எதிர்வரும்

அக்டோபர் மாதம், பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் நடைபெற இருக்கும் ஜப்பான் மாநாட்டிலும் கலந்து கொள்ள இருக்கிறேன். இந்தியாவைப் பொறுத்தவரை காஷ்மீர், டில்லி, மேகாலயா, அஸ்ஸாம், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் சென்றுள்ளேன்” என சே.முனியசாமி தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *