எதிர்கால “செயற்கை நுண்ணறிவு உலகம்” மனிதர்களுக்குச் சாதகமா? பாதகமா?

7 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு ஏவுகணையின் தவறான தாக்குதலில் 170 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

பாணன்

ரஷ்யாவின் சார்டாவ் நகரில் நடந்த ஒரு நிகழ்வு செயற்கைத் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டில் இன்றளவும் பல்வேறு குறைபாடுகள் உள்ளதையும், இதனால் பல சிக்கல்கள் வரும் என்பதையும் உறுதிப்படுத்தி உள்ளது.

தாக்கும் முயற்சியில்

சார்டாவ் நகரில் இயங்கி வரும் பிரபல எலக்ட்ரானிக்ஸ் கடையில், வாடிக்கையாளர்களுக்குத் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குவதற்காக ‘சியோமா’ என்ற செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் நவீன ரோபோ பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் திடீரென அந்த ரோபோவைத் தள்ளியுள்ளார்.

இதனால் நிலைகுலைந்துக் கீழே விழப் பார்த்த ரோபோ, உடனடியாகச் சமாளித்து மீண்டும் நிமிர்ந்து நின்றது. தொடர்ந்து, தன்னைத் தள்ளிய நபரை நோக்கி நகர்ந்து சென்று, தனது காலை உயர்த்தி அவரை உதைப்பது போல் தாக்கும் முயற்சியில் ஈடுபட்டது.

சூழ்நிலை கைமீறிப் போவதைக் கண்ட கடை ஊழியர்கள், உடனடியாகத் தலையிட்டு அந்த ரோபோவின் செயல்பாட்டை முடக்கினர்.

தொழில்நுட்ப வளர்ச்சி மனித குலத்தின் வாழ்க்கையை எளிமையாக்கி வரும் வேளையில், அதே தொழில்நுட்பம் சில நேரங்களில் அச்சுறுத்தலாகவும் உருவெடுக்கிறது.  மனிதர்களுக்கு உதவ வேண்டிய கருவி, தற்காப்பு என்ற பெயரிலோ அல்லது தவறான படிமுறை குறியீடுகள் காரணமாகவோ மனிதரைத் தாக்க முற்பட்டது, ஏஅய் தொழில்நுட்பத்தின் சாதக பாதகங்களைப் பற்றிய தீவிர விவாதத்தைத் தூண்டியுள்ளது.

வேலைத்திறன் மற்றும் துல்லியம்: மனிதர்களால் செய்ய முடியாத அல்லது ஆபத்தான பணிகளை ஏஅய் ரோபோக்கள் மிகத் துல்லியமாகவும், சோர்வின்றியும் செய்கின்றன.

மருத்துவத் துறை புரட்சி: சிக்கலான அறுவை சிகிச்சைகளைச் செய்வது, நோய்களை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிவது போன்றவற்றில் ஏஅய் மிகச் சிறந்த உதவியாளராகச் செயல்படுகிறது.

வாடிக்கையாளர் சேவை: செய்திக்குறிப்பில் குறிப்பிட்டது போல, கடைகள், உணவகங்கள், விமான நிலையங்களில் மனிதர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கி சேவையை விரைவுபடுத்துகின்றன.

தரவு பகுப்பாய்வு: கோடிக்கணக்கான தகவல்களைச் சில நொடிகளில் பகுப்பாய்வு செய்து, நிறுவனங்கள் சரியான முடிவுகளை எடுக்க உதவுகின்றன.

ஏஅய் மற்றும் ரோபோக்களின் பாதகங்கள்  எதிர்பாராத கட்டுப்பாடற்ற நடத்தைகள்: ரஷ்ய சம்பவத்தில் நடந்தது போல, மனிதர்களின் செயல்களுக்கு எதிர்வினையாற்றும்போது ஏஅய் ரோபோக்களின் சுய-கட்டுப்பாடு கைமீறிப் போக வாய்ப்புள்ளது.

வேலைவாய்ப்பு இழப்பு: மனிதர்கள் செய்யும் பணிகளை ரோபோக்கள் வரிசையாகக் கைப்பற்றுவதால், உலகளவில் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

மனித உணர்வுகளின்மை: ரோபோக்களுக்குச் சுயசிந்தனையோ அல்லது மனித உணர்வுகளோ கிடையாது. அவை நிரலாக்கம்  செய்யப்பட்டத் தரவுகளின் அடிப்படையில் மட்டுமே இயங்குவதால், சூழலுக்கு ஏற்ப நெகிழ்வுத்தன்மையுடன் முடிவெடுக்க முடியாது.

ஏஅய் அமைப்புகள் ஹேக் செய்யப் பட்டால் அல்லது தவறான மனிதர்களின் கைக்குச் சென்றால், அவை பெரும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களாக மாறக்கூடும்.

கட்டுரை, ஞாயிறு மலர்

ரஷ்ய நிகழ்வு உணர்த்தும் பாடம்

ரஷ்யாவில் நடந்த நிகழ்வு, ஏஅய் தொழில்நுட்பம் இன்னும் முழுமையான முதிர்ச்சியை அடையவில்லை என்பதையே காட்டுகிறது. மனிதர்களுடன் நேரடியாகப் பழகும் ரோபோக்கள் வடிவமைக்கப்படும்போது, அவற்றிற்கு அய்சக் அசிமோவின் (Isaac Asimov) ரோபோட்டிக்ஸ் விதிகள் போன்ற கடுமையான பாதுகாப்பு எல்லைகள் அமைக்கப்பட வேண்டும். குறிப்பாக, “ஒரு ரோபோ எந்தச் சூழ்நிலையிலும் மனிதனுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடாது” என்ற முதன்மை விதி அவற்றின் மென்பொருளில் உறுதியாகப் பதிக்கப்பட வேண்டும்.

பிஞ்சுகளின் உயிரைப் பறித்த ஏஅய் ஏவுகணை?

கடந்த பிப்ரவரி 29ஆம் தேதி ஈரான் – அமெரிக்கப் போர் துவங்கிய முதல் நாளே அமெரிக்கா – இஸ்ரேல் நாடுகள் ஏவிய ஏவுகணை ஒன்று சிறுவர் பள்ளியைத் தாக்கியதில் 170 சிறுவர் – சிறுமிகள் உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதல் பற்றி ஏஅய் தொடர்பாக ஆய்வு செய்துவரும் கனடாவைச் சேர்ந்த ஆய்வாளர் சமூக வலைதளம் ஒன்றில் இவ்வாறு பதிவிட்டிருந்தார்.

அதில் “அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானுக்கு எதிராகப் போரில் ஏஅய் மூலம் செயல்படும் ஏவுகணையை முதல் முதலாக பயன்படுத்தின. அந்த ஏஅய் ஏவுகணையின் நினைவகத்தில் குறிப்பிட்ட இலக்கு அல்லது சீருடை அணிந்த வீரர்கள் வரிசையாக நிற்பது போன்றவை பதிவு செய்யப்படும்.

இங்கு ராணுவ வீரர்களும் சீருடை அணிவார்கள், வரிசையாக நிற்பார்கள். அதே போல் பள்ளி மாணவர்களும் சீருடை அணிவார்கள், வரிசையாக நிற்பார்கள்.

அமெரிக்க – இஸ்ரேல் நாடுகள் முதல்முதலாக பணிக்குச் செல்லத் தயாராக வரிசையில் நிற்கும் ஈரான் விமானப்படை வீரர்களைக் குறிவைத்து ஏவுகணையை ஏவின. ஆனால் ஏவுகணை தரையை ஸ்கேன் செய்த போது பள்ளியில் மாணவிகள் சீருடையோடு வரிசையில் அமர்ந்திருந்தனர். இதனால் ஏஅய் மூலம் செயல்பட்ட ஏவுகணை அருகில் உள்ள விமானப்படைத் தளத்திற்கு முன்பாகவே பள்ளியைத் தேர்வு செய்து தாக்கி உள்ளது” என்று அவர் எழுதியிருந்தார்.

இது தொடர்பாக அமெரிக்கா இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. அதன் பிறகு ஏஅய் ஏவுகணையை அமெரிக்கா பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுரை, ஞாயிறு மலர்

போதைப் பொருள் தயாரிப்பில் ரோபோக்கள்

இதேபோல் தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான கும்பலைப் பிடிக்கச்சென்ற பாதுகாப்புப் படையினருக்கு போதைப் பொருளைத் தயாரிக்க ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டது குறித்து பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அங்கு செயற்கை நுண்ணறிவுத் துணையோடு இவ்வாறு ஒரு செயலைச் செய்யும்போது அதற்கான வழக்கு மற்றும் தண்டனைத் தொடர்பான சட்ட விதிகள் எதுவும் இதுவரை உருவாக்கப்படவில்லை. இதனால் யாரையும் கைதுசெய்ய முடியாமல் திரும்பிவிட்டனர். போதைப்பொருள் கண் முன்பாகவே தயாரிக்கப்படுவது தெரிந்தும் யார் மீதும் நடவடிக்கை எடுக்கமுடியாமல் பாதுகாப்புத் துறையினர் திரும்பியது எதிர்காலத்தில் தனிநபர்கள் எவ்விதமான குற்றச்செயல்களிலும் ஏஅய் மென்பொருளைப் பயன் படுத்துவார்கள் என்பதற்கு மேலும் ஓர் எடுத்துக்காட்டு!

இந்தியாவில் 40 விழுக்காடு இணையதளக் குற்றங்கள் செயற்கை நுண்ணறிவு மூலமே நடக்கின்றன. காவல்துறை அதிகாரியாகவோ அல்லது இதர பாதுகாப்புத்துறை அதிகாரியைப் போன்றோ அலைப்பேசியில் தோன்றி மிரட்டுவது அதிகரித்து விட்டது. செயற்கை நுண்ணறிவின் மூலம் வரும் காணொலிகளில் போலி எது, உண்மை எது என்று வல்லுநர்கள் கூட சில நேரங்களில் திணறி விடுகின்றனர். அப்படி இருக்க  சாமானியர்கள் எளிதில் சிக்கி விடுகின்றனர்.

சாதகமான விளைவுகள்!

செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம், ஒரே நாணயத்தின் இரு பக்கங்களைப் போல, மகத்தான வாய்ப்புகளையும் கடுமையான அபாயங்களையும் ஒருசேரக் கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவின் மிகப்பெரிய சாதகமான விளைவுகள் அறிவியல் மற்றும் மருத்துவத் துறைகளில் காணப்படுகின்றன.

அய்க்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி, ஏஅய் 200 மில்லியனுக்கும் அதிகமான புரதங்களின் கட்டமைப்புகளைக் கணித்து, மருந்து கண்டுபிடிப்பு மற்றும் தடுப்பூசி ஆராய்ச்சிகளை விரைவுபடுத்தியுள்ளது. வல்லுநர்களின் கூற்றுப்படி, விரைவில் ஆராய்ச்சியாளர் களுடன் இணைந்து செயல்படக்கூடும், புதிய கணிதக் கண்டுபிடிப்புகளை உருவாக்குவதிலிருந்து தத்துவார்த்த இயற்பியலில் புதிய முடிவுகளை எடுப்பது வரை இதன் திறன் விரிவடைகிறது.

மனிதர்களுக்கு ஏற்படுகின்ற கடினமான சில பிரச்சினைகளை இந்த அமைப்புகள் வேறுபட்ட தர்க்கத்தின் மூலம் தீர்க்க முடியும் என்பது ஒரு புதிய நம்பிக்கையை அளிக்கிறது.

உண்மையைக் காட்டிலும் உண்மையைப் போன்றே தோற்றமளிக்கும் தகவல்களை உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு தரமற்ற உள்ளடக்கங்களை உருவாக்குகிறது. போலிக் காட்சிப் பதிவுகளின் எண்ணிக்கை 2023-இல் 5 லட்சமாக இருந்ததிலிருந்து 2025-இல் 8 மில்லியனாக உயர்ந்துள்ளது. இது தகவலின் மீதான நம்பிக்கையைக் குலைத்து, ஜனநாயகத்திற்கும், பொதுவான விவாதங் களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறும் என அய்க்கிய நாடுகள் சபை எச்சரிக்கிறது.

கற்பதின் இன்றியமையாத பகுதி எது?

செயற்கை நுண்ணறிவின் மிக ஆழமான தாக்கம் மனிதர்களின் சிந்தனைத் திறனில் ஏற்படலாம். ஓர் ஆய்வில், பரிசோதனைக்கு உட்பட்ட மாணவர்கள் கட்டுரை எழுதும் போது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தியவர்கள், தங்கள் சொந்த அறிவைப் பயன்படுத்தியவர்களை விட மிகக் குறைவான மூளை செயல்பாட்டைக் காட்டினர். மேலும், அவர்கள் எழுதியதை மனப்பாடம் செய்யவில்லை என்பதும் தெரியவந்தது. கடினமான பயிற்சியே கற்கும் செயல்முறையின் இன்றியமையாத பகுதி என்பதை இது உணர்த்துகிறது .

கல்வி மற்றும் சமூக உறவுகளிலும், அதிகமான மாணவர்கள் ஏஅய்யை நம்பி, ஆழமான சிந்தனையைத் தவிர்க்கும் பழக்கத்திற்கு ஆளாக நேரிடும் என வல்லுநர்கள் அஞ்சுகின்றனர் .

இந்தச் சவால்களை எதிர்கொள்வது என்பது தொழில் நுட்பத்தின் ஒரு பகுதியாக அல்லாமல், பன்னாட்டு அளவிலான ஒழுங்குமுறையின் ஒரு பகுதியாகும். அய்க்கிய நாடுகள் சபை, அபாயங்களை கட்டுப்படுத்துவதற்கான பயனுள்ள உலகளாவிய ஆளுமை விதிமுறைகளை நிறுவுவதற்கான காலக்கெடு குறுகி வருவதாக எச்சரிக்கிறது

டெமிஸ் ஹசாபிஸ் போன்ற தொழில்நுட்ப வல்லுநர்கள், இந்த தொழில்நுட்பத்தின் பயன்பாடு சமத்துவமாக, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், தீமைகளைத் தடுக்கவும் பன்னாட்டு ஒத்துழைப்பு மிக முக்கியமானது என்று வலியுறுத்துகிறார்கள் .

பலவீனங்களை வெளிப்படுத்தி அச்சுறுத்தலாகுமா?

இறுதியாக, எதிர்கால செயற்கை நுண்ணறிவு உலகம் நம் மதிப்புகளின் ஒரு கண்ணாடியாகும். இது ஒரு பக்கத்தில் மனிதகுலத்தின் மகத்தான சாதனைகளுக்கு உதவும் ஒரு சக்தியாகவும், மறுபக்கத்தில் நமது பலவீனங்களை வெளிப்படுத்தும் ஒரு அச்சுறுத்தலாகவும் திகழும். இது நல்லதா கெட்டதா என்பதை தீர்மானிக்கும் சக்தி, தொழில்நுட்பத்திடம் இல்லை, மாறாக நாம் அதை எவ்வாறு வடிவமைக்கிறோம் என்பதில்தான் உள்ளது. செயற்கை நுண்ணறிவு என்பது மனித குலத்திற்கு ஒரு சக்திவாய்ந்த கருவி. அதை நாம் எவ்வாறு வடிவமைக்கிறோம், கட்டுப்படுத்துகிறோம் என்பதில்தான் அதன் எதிர்காலம் உள்ளது. தொழில்நுட்பத்தின் வேகத்திற்கு ஏற்ப, அதன் பாதுகாப்பு விதிகளையும், மனிதர்களுடனான தொடர்பு வரம்புகளையும் செம்மைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை மேலே கூறிய நிகழ்வுகள் ஓர் எச்சரிக்கை மணியாக நமக்கு உணர்த்துகின்றன!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *