வணிகமயமாகும் விண்வெளி: இழப்பு யாருக்கு?

இணையவழி கையெழுத்து இயக்கம்

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியில் மனிதனைக் கடித்த கதையாக, ஒவ்வொரு துறையாகத் தனியாருக்கு விற்று, கடைசியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) சில செயல்பாடுகளையும், விண்வெளித் துறையையும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை ஏற்படுத்தி, வணிக மயமாக்கத் திட்டமிட்டுவிட்டது ஒன்றியத்தை ஆளும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசு!

இஸ்ரோ வடிவமைத்து, குலசேகரப்பட்டினத்தில் உருவாக்கப்பட்டுள்ள ரூ.986 கோடி மதிப்பிலான சிறிய செயற்கைக்கோள் ஏவுதள வளாகத்தின் செயல்பாடுகளையும் நிர்வாகத்தையும் ஏற்றுக்கொள்வதற்காகத் தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe) அந் நிறுவனத்தின் அறிவிப்பின்படி, இதை ஏற்று நடத்த விண்ணப்பித்து, வெற்றி பெறும் நிறுவனம் 2,233 ஏக்கர் பரப்பளவுள்ள அந்த வளாகம் முழுவதும் ஏவுதல் திட்டங்களை நடத்துவது, பாதுகாப்பைக் கையாள்வது, மற்றும் பணிகளுக்கான தயார்நிலையை நிர்வகிப்பது போன்ற பணிகளைச் செய்யும்.

இந்த மாற்றத்தின் போது ஓர் ஆண்டுக்குள் செய்யப்படும் ஏவுதல் திட்டங்களுக்கான  தொழில்நுட்ப வழிகாட்டுதலுக்கு மட்டுமே  இஸ்ரோவின் பங்கு இந்த ஏவுதளத்தில் இருக்குமாம்.

இஸ்ரோவின் செயல்பாடுகள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி கண்காணிக்கப்பட வாய்ப்புள்ளவை; பொறுப்பான பதில் கூறக் கடமைபட்டவை. ஒரு தனியார் நிறுவனம் ஏவுதளத்தை இயக்கத் தொடங்கிவிட்டால், இஸ்ரோவைப் போல நாடாளுமன்றக் கேள்விகளுக்குப் பதிலளிக்கவோ அல்லது சிஏஜி தணிக்கையை எதிர்கொள்ளவோ அதற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை.

1962இல் அன்றைய பிரதமர் நேரு, அறிவியலர் விக்ரம் சாராபாய் ஆகியோரின் முயற்சியினால் தொடங்கப்பட்டு, பல சாதனைகளையும், சோதனைகளையும் கண்டு, கற்று வளர்ந்து வந்திருக்கிறது. இதனைத் தனியார் மயம், வணிகமயம் ஆக்கிட 2019ஆம் ஆண்டு முதல் மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசு எடுத்த முடிவும், நடவடிக்கைகளும் தற்போது வேகமெடுத்துள்ளன.

‘தனியார் நிறுவனங்கள் விண்வெளித் துறையில் பங்கேற்பது புதிய ஆராய்ச்சிகளுக்கு வழிவகுக்கும், இளைய ஆற்றல்கள் உருவாகும்’ என்றெல்லாம் சொல்லப்பட்டாலும், அவையெல்லாம் வெறும் அடையாள சமாளிப்புகளே! ஒரு சங்கிலித் தொடர் மளிகைக் கடை வைப்பதற்கே பல கோடி நிதி தேவைப்படும்போது, அதிலேயே டாட்டாவும், ரிலையன்சும் தான் போட்டிபோடுகிறார்கள். விண்ணில் ராக்கெட் ஏவுவதற்கும், செயற்கைக்கோள் அனுப்புவதற்கும் எத்தனை ஆயிரம் கோடி முதலீடு வேண்டும்? அதில் யார் ஈடுபட முடியும்? எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் போல உருவாகியிருக்கும் அமெரிக்கத் தனியார் நிறுவனங்களுடன் போட்டியிட, பிரதமர் நரேந்திர மோடியின் நண்பர்களான அடானியையும், அம்பானியையும் போன்ற ஆகப் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மேலும் பணம் கொழிக்கவே இது பயன்படும் என்கிறார்கள் தனியார் மயத்தை எதிர்ப்போர்.

இதனால், ‘இஸ்ரோவுக்கு என்ன ஆகப் போகிறது? அதுவும் ஆரோக்கியமான போட்டியில் இறங்கலாமே’ என்ற வாதம் வைக்கப்படும். ஆனால், தனியார் நிறுவனங்களுடன் போட்டி என்பது நடக்கக் கூடியதா? இத்தனை ஆண்டுகளாக, இஸ்ரோவினால் பயிற்றுவிக்கப்பட்டு, அனுபவம் பெற்ற மூத்த அறிவியல் தொழில்நுட்ப வல்லுநர்கள் 100 பேர் அண்மைக் காலத்தில் இஸ்ரோவிலிருந்து விலகி உள்ளனர்; சிலர் விருப்ப ஓய்வு பெற்றுள்ளனர். ‘குதிரை ஓடியதற்குப் பிறகு லாயத்தைப் பூட்டிய கதையாக’, கடந்த ஜூலை மாதத்தில் அவசர அவசரமாக, பணியிலிருந்து விலகும் அனுமதி பெறுவதற்கான விதியைத் திருத்தியுள்ளது ஒன்றிய அரசு. அதிலும் ககன்யான் போன்ற நாட்டின் முக்கியமான திட்டங்களில் இருப்பவர்கள் பணியிலிருந்து விலக முடியாத நிலையைத் தோற்றுவித்துள்ளது. இதன் மூலம் இத்தகைய திட்டங்களில் இடம்பெறாத பலர் அடுத்தடுத்து விலகிவருகின்றனர் என்று செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

தனியார் நிறுவனங்கள் பெரும் சம்பளம், வசதிகளைக் காட்டி, இஸ்ரோ உருவாக்கி வைத்த மனித அறிவு வளத்தை, அதன் ஆய்வாளர்களை இப்போது கபளீகரம் செய்ய ஆரம்பித்துவிட்டது. பல்லாயிரம் கோடிகளில் உருவாக்கப்பட்ட ஏவுதளங்கள், தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட இதர வசதிகளையும் மெல்ல மெல்ல தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளும். இதற்காகச் செலவழிக்கப்பட்டது மக்கள் வரிப்பணம் அல்லவா? அதன் பலனை நுகரப் போவது பெரு நிறுவனங்களா? வணிக நலன்களுக்கான செயற்கைக்கோள்களை ஏவுவது போன்றவற்றை இஸ்ரோ மட்டுமே ஏன் செய்யக் கூடாது? அதனால் வரும் வணிக நலன்களை, பிற நாட்டுமக்கள் நலத்திற்கான ஆய்வுகளில் ஏன் முதலீடு செய்யக் கூடாது?

சிறு, சிறு ஏவுதல்கள், செயற்கைக் கோள்கள் தயாரித்தல் போன்றவற்றின் மூலம் கிடைக்கும் அனுபவத்தைக் கொண்டு தானே நாட்டின் நலன்களுக்கான வானிலை முன்னறிவிப்பு, பேரிடர் மேலாண்மை, வேளாண்மை, மீன்வளம், ஊரகத் தகவல் தொடர்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, கல்வி, வெள்ளம் மற்றும் சூறாவளி எச்சரிக்கைகள் போன்றவற்றுக்காகவும், நாட்டின் பாதுகாப்புக்காகவும் அனுப்பப்படும் செயற்கைக்கோள்கள் மேம்படுகின்றன. விண்வெளித் துறையைத் தனியார் மயமாக்குவதன் மூலம் வணிகச் செயல்பாடுகள் தனியார் மயமாகிவிட்டால் இஸ்ரோவுக்கு எங்கிருந்து அனுபவம் கிடைக்கும்? விண்வெளித் துறை போன்ற மிகவும் சிக்கலான துறையில், வடிவமைப்பு, உற்பத்தி, சோதனை, அனுபவம் ஆகியவை தொழில்நுட்பத் திறனின் இன்றியமையாத கூறுகளல்லவா?

மேலும், விண்வெளியில் தனியார் நிறுவனங்களை அனுமதிப்பதன் மூலம் என்ன நோக்கத்திற்காக அவை நாட்டை விண்ணிலிருந்து ஆய்வு செய்கின்றன, என்னென்ன தரவுகள் சேகரிக்கப்படுகின்றன என்பதில் நாட்டின் கட்டுப்பாடு இல்லாமல் போவதுடன், நாட்டின் பாதுகாப்புக்கும் ஆபத்தாக முடியாதா? படிப்படியாக வெளிநாட்டு மூலதனம் இந்தத் துறையில் நுழைந்து, அது நம்முடைய அறிவுத் தளம், தரவுகள், பாதுகாப்பு, போக்குவரத்து, முப்படை நகர்வுகள், தொலைத் தொடர்பு உள்ளிட்ட பலவற்றையும் வேவு பார்க்க வாய்ப்பாகிவிடுமே என்பது பொதுவான கவலையளிக்கும் அம்சங்களாகும். அமெரிக்காவில் எந்தப் பெரிய நிறுவனமும், அந்நாட்டின் நலனுக்கெதிராகச் செயல்பட முடியாது என்பதுடன், அவர்களின் இராணுவ, உளவு நலனுக்காகவே  தனியார்  பெயரில் பல நிறுவனங்கள் உருவாக்கப்படும். ஆனால், இந்தியாவின் நிலை அப்படியில்லை என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. இவையெல்லாம் குறித்துக் கவலையிருக்குமேயானால், அமெரிக்காவைப் பார்த்து இந்தியாவும் சூடுபோட்டுக் கொள்ளாது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *