காத்மாண்டு, செப். 3- “மாபெரும் பனிச் சரிவு மற்றும் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதற்கு காலநிலை மாற்றமே காரணம். காற்று மாசு ஏற்படுத்திய இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் உதவி என்பதற்கு பதிலாக காலநிலை இழப்பீட்டை வழங்க வேண்டும்,” என நேபாள வெளியுறத் துறை அமைச்சர் ஷிசிர் கானல் வலியுறுத்தி உள்ளார்.
நம் அண்டை நாடான நேபாளம், சமீபத்தில் பனிப்பாறை உடைந்ததால் உருவான பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் பெரும் பாதிப்புகளை சந்தித்தது. மீட்புப் பணிகளில் இந்தியா உட்பட பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. மேலும், பல நாடுகள் நிவாரணத்துக்கான உதவித்தொகையை அறிவித்துள்ளன.
இது குறித்து நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிசிர் கானல், நேற்று (1.9.2026) கூறியுள்ளதாவது:
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுக்கு உலகளாவிய புவி வெப்பமடைதலே காரணம். ஆகையால், இது வழக்கமான மனிதாபிமான அடிப்படையிலான நிவாரணப் பணி என்றோ அல்லது தொண்டு என்றோ பார்க்கக்கூடாது.
மாறாக, உலகளாவிய பருவநிலை மாற்றத்தால் நாங்கள் சந்தித்த பேரழிவுக்கு கிடைக்க வேண்டிய நீதி மற்றும் இழப்பீடு ஆகும்.
இதற்காக உலக நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள ‘இழப்பு மற்றும் பாதிப்புக்கான நிதி’ அமைப்பிடம் நேபாள நிதி அமைச்சகம் முறையான கோரிக்கை விடுத்துள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய கார்பன் உமிழ்வு நாடுகளான இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற தொழில்மயமான நாடுகள் இதற்கு தார்மீக மற்றும் சட்டப்பூர்வ பொறுப்பேற்பதுடன், இழப்பீடும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
