சென்னை, ஆக. 31- தமிழ் நாட்டில் மின் கட்டணம் செலுத்துவதில் டிஜிட்டல் முறையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2025-2026ஆம் ஆண்டில் மட்டும் இணைய வழி (ஆன்லைன்) உள்ளிட்ட டிஜிட்டல் வழிகளில் 10.63 கோடி முறை மின் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மின் வாரியத்துக்கு ரூ.62,537 கோடி வருவாய் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளையும் சேர்த்து 3.51 கோடி மின் நுகர்வோர் உள்ளனர்.
இதில் 2.54 கோடி பேர் வீட்டு மின் நுகர்வோர். இலவச மின்சாரத்தை பெறும் நுகர்வோர்களை தவிர்த்து, ஒவ்வொரு மாதமும் சராசரியாக 1 கோடி முதல் 1.15 கோடி பேர் மின் கட்டணம் செலுத்துகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தற்போது நேரடியாக மின் அலுவலகங்கள் மற்றும் கட்டண மய்யங்களுக்கு செல்வதை தவிர்த்து, கைத்தொலைபேசி மற்றும் இணையதளம் வாயிலாக கட்டணத்தை செலுத்தி வருகின்றனர்.
கைத்தொலைபேசி பயன்பாடு அதிகரிப்பு மற்றும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் எளிதாகியிருப்பது ஆகிய காரணங்களால் மின் கட்டணத்தையும் இணைய வழியில் செலுத்தும் பழக்கம் வேகமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் மொத்த மின் கட்டண வசூலில் டிஜிட்டல் முறையின் பங்கு 87 சதவீதமாக இருந்துள்ளது. கடந்த 2024-2025ஆம் ஆண்டில் 9.56 கோடி முறை டிஜிட்டல் முறையில் மின் கட்டணம் செலுத்தப்பட்டு, ரூ.58,285 கோடி வசூலானது. இதுவே 2025-2026இல் 10.63 கோடி பரிவர்த்தனைகளாக அதிகரித்ததுடன், வசூல் ரூ.62,537 கோடியாக உயர்ந்துள்ளது.
மின் கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்துவோர் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2021-2022இல் 5.17 கோடி பரிவர்த்தனைகள் மூலம் ரூ.24,896 கோடி வசூலானது. 2022-2023இல் 6.56 கோடியாகவும், 2023-2024இல் 7.93 கோடியாகவும் உயர்ந்தது. 2024-2025இல் 9.56 கோடியை எட்டிய நிலையில், தற்போது 10.63 கோடியாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “இணைய வழியில் மின் கட்டணம் செலுத்துவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு 10 முதல் 15 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்து வருகிறது. கடந்த ஆண்டு மின் கட்டணம் செலுத்தியதில் டிஜிட்டல் முறையின் பங்கு 87 சதவீதமாக இருந்தது. இணைய வழியில் மேலும் புதிய சேவைகள் தொடங்கப்பட உள்ளன. இதனால் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்துவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்” என்றார்.
