முல்லைப் பெரியாறு அணையில் வல்லுநர் குழுவினர் நான்கு நாள்கள் ஆய்வு

3 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

கூடலூர், ஆக. 31- தேசிய அணை பாதுகாப்பு ஆணையத் தலைவர் அனில் ஜெயின் நேரடி மேற்பார்வையிலான சுயாதீன வல்லுநர் குழு நாளை (1.9.2026) முதல் 4ஆம் தேதி வரை முல்லைப் பெரியாறு அணையில் நேரடி கள ஆய்வு மேற்கொள்ள உள்ளது. அணையின் கட்டமைப்பு வலிமை, நிலைத்தன்மை, நீரியல் பாதுகாப்பு, நிலநடுக்கத்தை தாங்கும் திறன், பராமரிப்பு நடைமுறை உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைத்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும்.

இக்குழுவில் தேசிய நீர்மின் கழக மேனாள் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் குழு தலைவர் பால்ராஜ் ஜோஷி, அய்அய்டி ரூர்கி பன்னாட்டு அணை சிறப்பு மய்யத் தலைவர் எம்.எல்.சர்மா, என்எச்பிசி முன்னாள் நிர்வாக இயக்குநர் கோபால் தவான் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

சென்னையில் 46 பகுதிகளின் குடிநீரில் ‘ஈகோலை’ பாக்டீரியா

தி.மு.க. உறுப்பினர் புகார்

சென்னை, ஆக.31- சென்னை மாநகராட்சியின் 48 பகுதிகளில் எடுக்கப்பட்ட குடிநீர் மாதிரிகளை ஆய்வு செய்ததில், 46 பகுதிகளின் குடிநீரில் ‘ஈகோலை’ பாக்டீரியா கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சென்னை மாமன்றக் கூட்டத்தில் திமுக உறுப்பினர் ராஜூ ஆதாரத்துடன் புகார் எழுப்பினார். சென்னை மெட்ரோ குடிநீர் மிகவும் தரமற்றதாக விநியோகிக்கப்படுவதாக உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இந்த புகாரை தொடர்ந்து, நகரின் பல்வேறு பகுதிகளில் விநியோகிக்கப்படும் குடிநீர் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் உறுதியளித்துள்ளார்.

வீடுகளுக்கே சென்று 25 டன்
பழைய சோஃபா, மெத்தைகள் அகற்றம்!

மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னை, ஆக. 31– மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் அளித்த தகவல் அடிப்படையில், அவர்களின் வீடுகளுக்கே சென்று கடந்த 29.8.2026 அன்று 25 டன் பழைய சோஃபா, மெத்தைகள் அகற்றப்பட்டன.

இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியின் சார்பில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பொதுமக்கள் முன்கூட்டியே தரும் தகவலின் அடிப்படையில், அவர்களின் வீடுகளிலிருந்து பழைய சோஃபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் ஆகிய திடக்கழிவுகளை பெற்று அகற்றும் பணி கடந்த ஆண்டு அக்டோபர் முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், நேற்று முன்தினம் 29.8.2026 மட்டும் 74 நபர்களிடமிருந்து வரப்பெற்ற தகவலின் அடிப்படையில், 25.2 டன் பழைய பொருட்கள் பெறப்பட்டு, கொடுங்கையூரில் உள்ள எரியூட்டும் நிலையத்துக்கு எடுத்துச் சென்று விஞ்ஞான முறையில் எரியூட்டி அழிக்கப்பட்டது. இதற்காக 35 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று நடைபெறும் இந்த சேவையை பெறுவதற்கு, பொதுமக்கள் முன்கூட்டியே மாநகராட்சியின் “நம்ம சென்னை” செயலியில் பதிவு செய்ய வேண்டும் அல்லது மாநகராட்சியின் 1913 என்ற எண்ணுக்கு தகவல் அளிக்க வேண்டும். சென்னை மாநகராட்சியின் மூலம் சிறப்பாக வழங்கப்பட்டுள்ள 94450 61913 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கும் தகவலை அனுப்பலாம்.

இதனடிப்படையில் மாநகராட்சிப் பணியாளர்கள் பதிவு செய்த நபர்களின் வீடுகளுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் நேரடியாகச் சென்று, பழைய சோஃபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து பாதுகாப்பாகவும், அறிவியல் முறையிலும் அகற்றும் பணிகளை மேற்கொள்வார்கள். இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பொறியியல் மாணவர்கள்
புராஜெக்ட் செய்ய ரூ.25 ஆயிரம் நிதியுதவி

சென்னை, ஆக. 31- தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி ஊக்குவிப்பு, ஆலோசனை மய்யத்தின் இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றிக்கை: ஆராய்ச்சி ஊக்குவிப்பு, ஆலோசனை மய்யம் சார்பில் ஆராய்ச்சி நிதியுதவி திட்டத்தின்கீழ் புராஜெக்ட் கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன.

பொறியியல் 3ஆம் ஆண்டு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 6 மாத கால புராஜெக்ட்டுக்கு அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் வரை நிதியுதவி வழங்கப்படும். திட்டக் கருத்துருக்களை இணைய வழியில் 15.9.2026-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை http://ctdt.annauniv.edu/sip என்ற இணையதளத்தில் அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *