புதுவையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்

18 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

எந்த ஆட்சியிலும், ஆளுங்கட்சியினருடைய பேச்சை, பேரவைத் தலைவர் இத்தனை முறை நீக்கினார் என்கிற வரலாறு கிடையாது!
இதுதான் த.வெ.க. அரசின் 100 நாள்கள் ஆட்சியின் தனித்த சாதனை!
மூன்றாவது கூட்டணியும் உருவாகலாம்; இன்னொரு கூட்டணியும் உருவாகலாம்!

சென்னை,  ஆக.30  தமிழ்நாட்டில் இதுவரை வரலாற்றில், வேறு எந்த ஆட்சியிலும், ஆளுங்கட்சியினுடைய பேச்சை, பேரவைத் தலைவர் இத்தனை முறை நீக்கினார் என்பது கிடையாது. அதுதான், இவர்களுடைய 100 நாள்கள் ஆட்சியினுடைய தனித்த சாதனையாகும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

புதுவையில், தமிழர் தலைவர் ஆசிரியர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி!

நேற்று (29.8.2026) புதுச்சேரிக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

1944 இல் சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில், நீதிக்கட்சி திராவிடர் கழகமாக  மாற்றப்பட்ட பிற்பாடு, ஏற்கெனவே புதுச்சேரியிலும் அந்த இயக்கத்தின் தாக்கம் இருந்தது. பல நேரங்களிலே தந்தை பெரியார் அவர்கள் புதுச்சேரிக்கு 1934 இல், 1937 இல் வந்தி ருந்தாலும்கூட, 1945 இல்  அதிகாரப்பூர்வமாக திராவிடர் கழகம் தொடக்க விழா என்று தற்போது கம்பன் கலையரங்கம் என்று அழைக்கப்படுகின்ற ஒதியஞ்சாலை மைதானத்தின் கொட்டகையிலே  சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இயக்கம் இங்கு வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காகத் தேவையின்றித் தொல்லைகள் கொடுத்தார்கள்!

அன்றைக்குப் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அரசி யலிலே ஈடுபட்டிருந்தார். அவருடைய அரசியல் பிடிக்காதவர்களும், உள்ளூரிலே இருக்கக்கூடிய பிரச்சினைகளையும், இந்த மாநிலத்திற்குள் இருக்கும் பிரச்சினைகளை வைத்துக்கொண்டும், அன்றைய காங்கிரசிலே இருந்த பல தோழர்கள், இந்த இயக்கம் இங்கு வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காகத் தேவை யின்றித் தொல்லைகள் கொடுத்தார்கள். காலையில் நடைபெற்ற நிகழ்வில், அழகிரி போன்றவர்கள், மற்றவர்கள் எல்லோருமே பங்கேற்றுச் சிறப்பாக எல்லா நிகழ்ச்சிகளும் நடந்தன. தந்தை பெரியார், அதேபோல நம்முடைய நாவலர், பேராசிரியர் ஆகியோரும் வந்தார்கள். அய்யா அவர்களோடு நிறைய தோழர்கள் வந்திருந்தார்கள். குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள்.

கலைஞரைக் குறிவைத்திருந்தார்கள்!

அதற்கு முன்னால், நாகை திராவிட நடிகர் கழகம் சார்பில், நம்முடைய கலைஞர் அவர்கள் எழுதி நடித்த நாடகங்கள் இங்கே கெப்ளே தியேட்டரில் நடந்து வந்தன. பல நாடகங்களைச் சிறப்பாக நடத்திக் கொண்டுவந்தார். அதிலே சுயமரியாதை இயக்கப் பிரச்சாரத்தை, கொள்கைப் பிரச்சாரத்தை இவரே முன்னின்று நடத்துகிறார் என்பதினால், அவரைக் குறிவைத்திருந்தார்கள்.

நான் அப்போது கடலூரிலிருந்து வந்திருக்கக்கூடிய  12 வயது மாணவன். என்னுடைய மூத்த அண்ணாரை அழைத்துக்கொண்டு இங்கு வந்தேன். ஆசிரியர் திராவிடமணி கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சி எனக்கு இன்னும் நன்றாக நினைவிருக்கிறது. அப்போது கலவரம் ஆரம்பித்தது. உடனே தந்தை பெரியார், ‘பெண்கள் மற்றவர்கள் பாதுகாப்பாக வெளியே புறப்படுங்கள்’ என்றார். அதிகாரிகளும் வந்து, ‘இல்லை, கூட்டத்தை நீங்கள் நடத்தாதீங்க’ என்று கேட்டுக்கொண்டார்கள்.

‘எங்களால் இதைச் சமாளிக்க முடியவில்லை என்று எழுதிக்கொடுங்கள், பாதுகாப்பாக உங்களை அனுப்புகிறோம்’ என்று சொன்னார்கள். மதியத்திற்கு மேலே இந்தக்கலவரம் தொடங்கியது. இது முழுக்க முழுக்க புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுடைய உள்ளூர் அரசியல் எதிரிகளால் நடத்தப்பட்டது.  அப்போது பெருமாள் அவுக்கா அவர்கள் மற்றவர்கள் எல்லாம் இந்த இயக்கத்தில் இங்கு இருந்தார்கள். இன்றைக்கு அது நடந்து, 80 ஆண்டுகள் தாண்டி 86 ஆவது ஆண்டு.

அப்படிப்பட்ட புதுவையிலே சிறப்பாகத் தந்தை பெரியாருடைய கொள்கை பலமாக வேரூன்றியிருந்தது. இதிலே குறிப்பாக ஒன்றைச் சொல்லவேண்டும், இந்த மாநாட்டிலே என்ன நடந்தது என்றால், அதிலே கலந்துகொண்டவர் இன்றைக்கு இருக்கிற அளவுக்குப் பிரபலமானவர் அல்ல; நம்முடைய கலைஞர் அவர்கள். ஆனால், கலைஞரைக் குறிவைத்தார்கள், ‘இவர்தான் இந்த நாடகத்திலெல்லாம் இந்தச் சுயமரியாதைக் கருத்தைப் பரப்புகிற நடிகர்’ என்று அவரைத் தாக்கினார்கள்.

கலைஞரை அடித்து,
சாக்கடையில் தள்ளிவிட்டார்கள்!

மாநாடு ஒரு பக்கத்திலே உள்ளே நடந்துகொண்டி ருக்கிறது. அதற்கு வந்துகொண்டிருந்த கலைஞரை, ‘இவன்தான் மிக முக்கியமாக இந்தக் கருத்தையெல்லாம் பேசுகிற ஆளு’ என்று சொல்லி, தாக்குவதற்கு முயற்சி செய்தனர். அவர் ஓட முயற்சித்தபோது, அடித்தார்கள். அவர் ஒரு வீட்டிற்குள்ளே போய் புகுந்தார், பாதுகாப்புக்கு! அந்த வீட்டுக்காரர்கள் வெளியே போகச் சொல்லிவிட்டார்கள். அவர் வெளியே வந்தவுடன், அவரை அடித்து, சாக்கடையில் தள்ளிவிட்டார்கள்.

இயக்க வரலாற்றில்
மறக்க முடியாத நிகழ்வு!

அதற்குப் பிறகு, மற்றவர்கள்  பார்த்து, அவரைத் தூக்கி விட்டார்கள்.  இந்த நிகழ்வை ‘நெஞ்சுக்கு நீதி’யில் பதிவு செய்திருக்கிறார். இந்த நிகழ்வு என்பது கலை ஞருடைய வாழ்நாளில் மறக்க முடியாத  ஒன்றாகும். இயக்கத்தினுடைய வரலாற்றிலும் மறக்க முடியாத ஒன்று இது.

ஆகவே, பல கலவரங்கள், எதிர்ப்புகள்… காஞ்சி கல்யாணசுந்தரம் ‘தொழிலாளன் மித்திரன்’ என்ற ஒரு பத்திரிகையை நடத்தினார்கள். இப்படி இந்த இயக்க வரலாறு பலவற்றைத் தாண்டி, இன்றைக்குச் சிறப்பான வகையிலே திராவிடர் கழகம் அதனுடைய 83 ஆவது ஆண்டு என்று வரக்கூடிய அளவிற்கு, இன்றைக்கு வந்திருக்கிறது. இந்தச் சூழலிலே, ‘எதிர்ப்பில் வென்று, எதிர்நீச்சலில் வென்ற தந்தை பெரியார் அவர்களுடைய இயக்கம்’ என்பதைத் தலைப்பாகக்கொண்டு, இன்றைய இளைஞர்கள் எந்த லட்சியத்தை ஏற்றாலும், எந்தக் கொள்கையைப் பின்பற்றினாலும், எந்த இயக்கத்திலே இருந்தாலும், அதனுடைய லட்சியம், கொள்கைகள், அதனுடைய போராட்ட வழிமுறைகள், அதற்கு ஏற்படுகிற எதிர்ப்புகள், இவை அத்தனையையும் எப்படிச் சமாளிப்பது, எப்படி வெற்றிபெற வேண்டும் என்றால், தன்னம்பிக்கையோடும், தளராத உழைப்பினாலும், தியாகத்தினாலும் என்பதற்கு அடையாளமாகத்தான் பொதுவாழ்க்கையிலே இருக்கிறவர்களுக்கு ஓர் அடையாளம் என்பதைச் சுட்டிக்காட்டவும்தான் இந்த மாநாடு நடைபெறுகின்றது.

50 ஆண்டுகளுக்கு முன்
இங்கே பேசியிருக்கிறோம்!

‘பெரியார் என்றைக்கும் தோற்கமாட்டார்.’ அவரே சொன்னார், ‘என்னுடைய போராட்டங்களுக்கான வெற்றி உடனடியாகக் கிடைக்காது; கொஞ்சம் தாமதமாகும். ஆனால், நான் ஒருபோதும் தோல்வி யடைய மாட்டேன்’ என்று. அதை மக்களுக்கு எடுத்துச் சொல்வதுதான் இன்றைய கூட்டம். புதுச்சேரிக்கு வந்திருக்கிறோம். இதுவரையில், புதுச்சேரி எல்லைக்குள்ளே, நகரத்துக்குள்ளே, மாநக ரத்துக்குள்ளேயே நடத்திக் கொண்டிருந்தோம். ஆனால், இன்றைக்கு பாகூர் கொம்யூனில் இந்தக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.  நீண்ட காலத்திற்கு முன் பாகூரில் நான் பேசியிருக்கிறேன். இன்றைக்கு அதுவே ஒரு பொன்விழா; 50 ஆண்டுகளுக்கு முன் பேசியிருக்கிறோம். ஆகவேதான், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உங்களையெல்லாம் சந்திக்கிறோம். அதுவும் புதுவை ஊடகச் சகோதரர்களைச் சந்திப்பதில் எனக்கு ஒரு தனி மகிழ்ச்சி. ஏனென்றால், இது ஒரு குடும்பம் மாதிரி இருக்கக்கூடியவர்கள். உங்களால்தான் சமூகநீதிப் பிரச்சினையே இங்கு உருவானது.

இப்பொழுது சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது!

அந்தச் சமூகநீதிக்கான சட்டம், விஸ்வநாதன் அவர்கள் இருந்தபோது, நீங்கள் பல கேள்விகளைக் கேட்டு, மாநில உரிமைகள், மாநிலத் தகுதி புதுவைக்கு இருக்க வேண்டும் என்பதைக் கேட்டு, அடிக்கடி நீங்கள் அவைபற்றித் தெளிவான செய்திகளை வெளியிட்டு வருவதன் மூலமாகத்தான், இந்த வாய்ப்பு ஏற்பட்டது. ஆகவே, மாநில உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும். மாநிலத்திலே சமூகநீதியும், சுயமரியாதையும், கொள்கையுள்ள ஓர் அரசியல் தேவை. ஏனென்றால், புதுவையிலே பொலிடிக்கல் என்பது பல காலங்களிலே விசித்திரமானது. அதனால், இந்தக்கட்சியில் இருந்தார், அந்தக் கட்சிக்குப் போனார், அந்தக் கட்சியிலிருந்து இந்தக் கட்சிக்கு வந்தார்  என்பதெல்லாம் இப்பொழுது சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது.

மக்கள் உதவிக்கான
கொள்கையாய் இருக்க வேண்டும்!

ஆகவே, அதெல்லாம் இல்லாத, பொது ஒழுக்க நீதிகள் வேண்டும். பொதுமக்களுக்கு ஒரு கொள்கை லட்சியம் என்றால், வெறும் பதவிக்கான கொள்கை அல்ல, மக்கள் உதவிக்கான கொள்கையாய் இருக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம். அதற்காகத்தான் பிரச்சாரத்திற்கு இங்கு வந்திருக்கிறோம், உங்களைச் சந்தித்திருக்கிறோம். இது சம்பந்தமாக ஏதேனும் கேள்விகள் இருந்தால் கேளுங்கள். இதற்கு அப்பாற்பட்டுக் கேட்டீர்கள் என்றாலும், பதில் சொல்வேன். ஆனால், என்ன நட்டம் என்றால், நாங்கள் எதற்காக வந்திருக்கிறோமோ அந்தப் பிரச்சினையை விட்டுவிட்டு, வேறு இடத்திலே திசைதிருப்பி, நாளைக்கு நீங்கள் தலைப்புப் போடும்போது என்ன போடுவீர்களென்றால்… ஏனென்றால், நானும் பத்திரி கைக்காரன், 60 ஆண்டுகளாக நான் பத்திரிகையாசிரியர், அதனால் எனக்குத் தெரியும் எதைப்போடுவது என்று. ஆகவேதான், அருள்கூர்ந்து, உங்களுடைய ஒத்துழைப்பைக் கேட்கிறேன். நீங்கள் கொஞ்சம் அதற்கு ஏற்றாற்போன்று சம்பந்தப்படுத்திக் கேள்விகளைக் கேளுங்கள்!

மூன்றாவது கூட்டணியும் உருவாகலாம்; இன்னொரு கூட்டணியும் உருவாகலாம்!

செய்தியாளர்: ஒன்றியத்திலே தேசிய ஜனநாயகக் கூட்டணி… இந்தியா கூட்டணியைத் தாண்டி மூன்றாவது கூட்டணி உருவாவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா?

தமிழர் தலைவர்:  நான் அரசியல் ஆரூடக்காரன் இல்லை. ஆனால், அறிவுப்பூர்வமாகச் சிந்தித்தால், நாளைக்கு என்ன செய்தி என்பது தெரியாததற்குப் பெயர்தான் அரசியல், ஒன்று.

இரண்டாவது, ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசையாக அரசியல் போகாது. அரசியலினுடைய தனித்தன்மையே, வித்தியாசமானது, இரண்டும், இரண்டும் நான்கு என்று கூட்டினால், அது கணக்கு. அரசியலில் மட்டும், இரண்டும் இரண்டும் நான்காகலாம், இரண்டும் இரண்டும் பூஜ்ஜியமாகலாம், இரண்டும் இரண்டும் 16 ஆகலாம். இதுதான் அரசியலுடைய தன்மை.

ஆகவேதான், அந்த அடிப்படையிலே யோசனை செய்தால், நாளைக்கு நிச்சயமாக மூன்றாவது கூட்டணியும் உருவாகலாம், இன்னொரு கூட்டணியும் உருவாகலாம், இப்போது இருக்கிற கூட்டணியே உரு மாறலாம். உருவாவது வேறு; உரு மாறுவது வேறு; இரண்டும் நடக்கும்.

செய்தியாளர்: ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது மாநில அரசினுடைய  உரிமையைச் சார்ந்தது என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சொல்லியிருக்காரே?

மாநில அரசுகளுக்கு அரசியலமைப்புச்
சட்ட ரீதியாக ‘சென்சஸ்’ எடுத்துப்போடுவதற்கு அதிகாரம் கிடையாது!

தமிழர் தலைவர்: நல்ல கேள்வி இது. முக்கியமான கேள்வி. இந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது இருக்கிறதே, அது ஒரு விசித்திரம். யாரெல்லாம் ஜாதி ஒழிய வேண்டும் என்று சொல்கிறார்களோ, போராடு கிறார்களோ அவர்கள்தான் ஜாதிவாரிக் கணக்கை வலியுறுத்துகிறார்கள். யாரெல்லாம் ஜாதி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்கள் எல்லாம் ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு ‘அய்யோ, இதுதான் ஜாதிவாரிக் கணக்கெடுப்பா?’ என்று ஒரு போலித்தனமான பொய்யழுகைக் காரணங்களைக் காட்டுகிறார்கள்.

ஆனால், இந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பில் மிக முக்கியமானது; ஒரு குழப்பமான கருத்து என்ன வென்றால், மாநில அரசுகள் செய்தால் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்வதில்லை. இன்னும் கேட்டால், மாநில அரசுகளுக்கு அரசியலமைப்புச் சட்ட ரீதியாக ‘சென்சஸ்’ எடுத்துப்போடுவதற்கு அதிகாரம் கிடையாது.

ஒன்றிய அரசுக்கு மட்டும்தான் உரிமை!

மாநில அரசு கணக்கை எடுத்தால், சில பேர் கேட்கிறார்கள், ‘‘ஏன் மாநில அரசு… அரசியலில் ஓட்டு வாங்குவதற்காகக் கேட்கிறார்களா?’’ என்று குறை கூறுகிறார்கள்.  நான் ஒரு வழக்குரைஞன் என்ற முறை யிலும், அரசியலமைப்புச் சட்டத்தைத் தெரிந்தவன் என்ற முறையிலும் சொல்லவேண்டுமானால்,  சென்சஸ் என்று, அரசியலமைப்புச் சட்டத்தினுடைய பிரிவுகளில், அது ஒன்றிய அரசுக்கு மட்டும்தான் உரிமை.

அதனால் என்ன சொல்கிறார்கள், இப்போது பீகார்,  கருநாடகத்தில் கணக்கு எடுத்தார்கள், உச்ச நீதிமன்றத்துக்குப் போனால் இடஒதுக்கீடு கேட்கி றார்கள். மகாராட்டிராவில் அதேபோன்று வந்தவுடன், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேட்கிற ஒரே கேள்வி, ‘‘What is your quantum? நீங்கள் மொத்தத்திலே எவ்வளவு ஜாதி, எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ன போட்டீங்க?’’ என்கிறார்கள்.  ‘‘இல்லை, மாநில அரசு கணக்குக் கொடுத்திருக்கிறது’’ என்றால், மாநில அரசு சொல்வதை ஏற்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார்கள்.

‘‘அதற்குப் பெயர் சர்வே. அதற்குப் பெயர் சென்சஸ் அல்ல, கணக்கில்லை. ஆகவே, சென்சஸ் வர வேண்டும்’’ என்று சொல்லியிருகிறார்கள். இவ்வளவு நாளாக மறுத்தது ஒன்றிய அரசு, பாஜக, ஆர்.எஸ்.எஸ். அரசு. சில ஆண்டுகளுக்கு முன்னால் பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் வந்தது. அந்த பீகார் தேர்தலுக்கு, அது பயன்படுமோ அல்லது வேறென்ன கருதியோ… ‘‘இல்லை இல்லை,  ஜாதிவாரிக் கணக்குக் கேட்டவர்களை எல்லாம் ‘அர்பன் நக்சல்கள்’ என்றார்கள்.

ஆனால், அதையெல்லாம் விட்டு, ‘ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நாங்கள் நடத்துகிறோம்’ என்றும் ஒப்புக்கொண்டார்கள். அதை ஆரம்பிக்க வேண்டும் இப்போது. கரோனா காலத்தில், 2021 இல் சென்சஸ் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்; அது  தடுக்கப்பட்டது. இத்தனை ஆண்டுகள் அதைத் தாண்டி வந்து, இப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.

அந்தக் கணக்கெடுப்பை முடித்துக் கொடுத்தால்தான், அதிகாரப்பூர்வமாக ஆங்கங்கே இருக்கக்கூடிய இடஒதுக்கீடு சதவீதம், உச்ச நீதிமன்றத்தாலே ஏற்றுக் கொள்ளக்கூடியது இருக்கும். அது சரியாக வரும்.

ஒரு வேண்டுகோளை ஒன்றிய அரசுக்கு வைத்திருக்கிறார்கள்!

ஆகவேதான், சென்சஸ் கணக்குப்படி என்று சொன்னால், அவர்களாலே மறுக்க முடியாது. இப்பொழுது இன்னொரு குழப்பத்தை உண்டாக்குகிறார்கள். என்ன வென்றால், ஜாதியைக் குறித்துத் தனித்தனியாக சரியான, தெளிவான ஒரு பதில் இல்லை. அதனால்தான் எதிர்க்கட்சிகள், குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியானாலும், அதேபோல மற்றவர்களானாலும் ஒரு வேண்டுகோளை ஒன்றிய அரசுக்கு வைத்திருக்கிறார்கள்.

நம்முடைய நாட்டில், தனிப்பட்ட முறையில் சொன்னால், ஒரு ஜாதி… ஜாதிக்குள்ளே பிரிவு, பிரி வுக்குள்ளே பிரிவு என்று இருக்கிறது. வெவ்வேறு பெயர்களில் இருக்கிறது. அதனால், அத்தனையும் தனிப்பிரிவு அல்ல. ஆனால், அதைப் போட்டுக் குழப்பிக் கொண்டுவருவதற்காகக் கடைசியில் பார்த்தீர்கள் என்றால், முதல் சென்சசில், அதாவது பேக்வேர்ட் கிளாசை நிர்ணயம் செய்யும்போது ஃபர்ஸ்ட் பேக்வேர்ட் கிளாஸ்ல ஓர் எண்ணிக்கை.

அதற்கடுத்தது மண்டல் கமிஷனுக்கு முன்னால் இருந்தபோது வந்தால், அதற்கு இன்னொரு எண்ணிக்கை. காரணம் என்னவென்றால், ஒரு ஜாதி என்றால், ஒருவருக்குப் பல பட்டங்கள் உண்டு. பல பிரிவுகள் உண்டு. ஒவ்வொரு பகுதியில் போனீர்கள் என்றால், நம்முடைய நாட்டில் ஒவ்வொரு ஜாதிப் பெயர் சொல்வார்கள்.

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்

ஆகவேதான், அதற்கு என்ன செய்யவது என்று, வி.பி.சிங் அவர்கள் இதற்கு ஓர் அருமையான பதில் சொன்னார், சமூகநீதிக் காவலர், மண்டல் கமிஷனை செயல்படுத்தும்போது கூறிய அந்தப் பதில், இப்போது  மிகவும் முக்கியமானதாகும். அவர் சொன்னார், ‘‘இத்தனை ஜாதி இருக்கிறதே, அதை எப்படி நாம் பிரித்துக் கொடுக்க முடியும்?” என்று கேட்டவுடனே, ‘‘இல்லை, மாநில அரசுகள் தெளிவாகத் தொகுத்து ஒரு பட்டியல் வைத்திருக்கிறார்கள். யார் பிற்படுத்தப்பட்ட ஜாதி? யார் பிற்படுத்தப்பட்டவர்கள்? யார் BC? யார் SC, ST, MBC? எல்லாம் இருக்கிறது. அதை அந்தந்த மாநிலத்திற்குச் செயல்படும்போது அதைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதைத் தாண்டி, ஒன்றிய அரசுக்கு ஒரு பட்டியல் இருக்கிறது. ஒன்றிய அரசுப் பட்டியலை, ஒன்றிய அரசுக்குத் தேவை வரும்போது தெளிவாகச் சொல்ல லாம். இதனால் குழப்பமே கிடையாது. அதைச் செய்யணும்’’ என்றார். அதைச் செய்யாமல், இப்பொழுது நடுவில் குழப்புகின்றார்கள்.

ஏற்கெனவே, போன சென்சஸ்சிலேயே ஜாதி கேட்கப்பட்டது, பதிவு செய்யப்பட்டது. ஆனால், திட்டமிட்டே கடைசி நேரத்தில், வெளி யிடும்போது, அதை மட்டும் எடுத்துவிட்டு, மீதியை வெளியிட்டுவிட்டார்கள். அதற்குக் காரணம், ஆதிக்கங்கள், ‘இதை செய்யவிடக் கூடாது’ என்பதால்தான்.

ஆகவேதான், மிகப்பெரிய ‘Quantum of reservation’ என்று  சொல்லும்போது, இடஒதுக்கீடு எதை அடிப்ப டையாகக் கொண்டு கொடுப்பது, மக்கள் தொகையில் பெரும்பான்மை இருக்கிறார்கள், உரிமை மறுக்கப்பட்டது. அதன் அடிப்படையிலே ‘Socially and Educationally‘ என்று வரும்போது சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் இருக்கிறவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் என்பது.

அரசியலமைப்புச் சட்ட முதல் திருத்தம், பெரியாருடைய முயற்சியினால் வந்தது!

பொருளாதாரத்தில் அளவுகோல் என்ன? என்று கேட்டார்கள். நேரு பிரதமராக இருந்த காலத்தில், அரசியலமைப்புச் சட்ட முதல் திருத்தம், பெரியாருடைய முயற்சியினால் வந்தது. அப்பொழுதே நாங்கள் சொன்னோம், பொருளாதார அடிப்படையில் வரக்கூடாது. ஏனென்றால், சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் ‘Socially and Educationally’ என்று வந்தால், காலம் காலமாக ஒடுக்கப்பட்ட சமுதாயம், உரிமை மறுக்கப்பட்ட சமுதாயம் என்று இருப்பதற்கு ஜாதி அடிப்படையும் காரணமாக இருக்கலாம், அது தெளிவானது.

அடுத்தபடியாக, இன்னொன்று மிக முக்கியமான விஷயம் கல்வி. கல்வியில் தொடர்ந்து பின்னால் இருக்கக்கூடியவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள். பொரு ளாதார அடிப்படையில் என்ன சிக்கல் என்றால், இப்போதும் நடைமுறையில் வருகிறது.  இந்த ஆண்டு இருக்கின்ற பொருளாதாரம், அடுத்த ஆண்டிற்கு இருக்காது. இப்போதுகூட கிரீமிலேயர் என்று வரும்போது, இன்றைய  ‘இந்து’ பத்திரிகை மற்ற பத்திரிகைகளில் வந்திருக்கிறது. அது என்ன பிரச்சினை என்றால், இரண்டு அமைச்சர்களுக்கும், அமைச்சரவைக்கும் போராட்டம்.

இவையெல்லாம் குழப்பத்தை உண்டாக்கும்!

பிற்படுத்தப்பட்டவர்கள்பற்றி சமூகநீதி அமைப்பில் என்ன சொல்கிறார்கள், பொருளாதார அளவுகோலை ஏற்க முடியாது. வருமானம் என்று சொல்லும்போது, இரண்டு வருமானம் இருக்கிறது. ஒரு வருமானம் அவருக்கு இயல்பானது.  சம்பளமற்றது. இன்னொரு வருமானம் வருவாய். சொத்து இருக்கும், நிலம் இருக்கும், அதில் வருமானம் வரும். இந்த ஆண்டு மழை பொழிந்தால், வருமானத்திற்கு ஆபத்து இல்லை.  இன்னொரு ஆண்டு மழை பொழியாது. அப்போது ஆபத்து. இவையெல்லாம் குழப்பத்தை உண்டாக்கும்.

ஆகவேதான், இந்தக் குழப்பங்கள் எல்லாம் வராமல் இருப்பதற்கு, பொருளாதார அளவுகோல் கூடாது.

9 ஆயிரம் வருமான வரம்பை
திரும்பப் பெற்றார்!

எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, 9 ஆயிரம் வருமான வரம்பைக் கொண்டு வந்தபோது, அதனை எதிர்த்து திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், இன்னும் சில கட்சிகள் சேர்ந்து பல ஆண்டுகளாகப் போராடினோம். ஆனாலும், பிடி வாதமாக இருந்தார் எம்.ஜி.ஆர். பிறகு, தேர்தலில் தோல்வி ஏற்பட்டவுடன், மறுபரிசீலனை செய்து, 9 ஆயிரம் வருமான வரம்பை திரும்பப் பெற்றார்.

அவர் மட்டுமல்ல, நரசிம்மராவ் முதலமைச்சராக இருந்தபோது, இப்போது EWS இல் 10 சதவிகிதம் கொடுத்ததுபோன்று, பொருளாதார அடிப்படையில் ஒதுக்குகிறோம் என்று சொன்னபோது, உச்சநீதிமன்றம் என்ன சொன்னது என்றால், அதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் கிடையாது என்றது.

அதற்காக இப்போது உயர்ஜாதி ஏழைகள் என்று ஒரு பிரிவை உண்டாக்கி, அவர்களுக்கு நாங்கள் 10 சதவிகிதம் கொடுக்கிறோம் என்று சொல்லி, அவசர அவசரமாக ஒரு மசோதவைக் கொண்டு வந்து, அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி, ஒப்புதல் வாங்கி, நிதி ஒதுக்கினார்கள்.

ஏழைகளிலேயே
உயர்ஜாதி ஏழைகளாம்!

இன்றைக்கு அதனுடைய விளைவு, ஓராண்டுக்கு 8 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறவர்கள்; ஒரு நாளைக்கு 2,500 ரூபாய் சம்பாதிக்கின்றவர்கள் உயர்ஜாதி ஏழைகள். ஏழைகளுக்குக் கொடுக்கிறோம் என்பதல்ல; ஏழைகளிலேயே உயர்ஜாதி ஏழைகளாம். அதைத்தான் நாங்கள் எதிர்த்துப் பிரச்சார இயக்கம் நடத்துகிறோம்; நீட் தேர்வை எதிர்த்துப் பிரச்சார இயக்கம் நடத்துகிறோம்.

பொருளாதார அடிப்படையில் குழப்பங்கள் இருக்கின்றன!

ஆகவேதான், பொருளாதார அடிப்படையில் இவ்வளவு குழப்பங்கள் இருக்கின்றன. அவை இல்லாமல் தவிர்க்கவேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தில், அம்பேத்கர் கொண்டு வந்ததில், தந்தை பெரியார் போராடி வந்ததில், அரசியலமைப்புச் சட்ட முதல் திருத்தப்படி, ‘Socially and Educationally‘ என்பது மட்டும்தான் இருக்கவேண்டுமே தவிர, Economically என்று போட்டால், சரியான அளவுகோல் இல்லை. இதுதான் அதனுடைய அடிப்படை.

ஆகவே, இதனை அடிப்படையாகக் கொண்டு வரவேண்டும்.

செய்தியாளர்: பரந்தூர் விமான நிலையம் ரத்து செய்யப்பட்ட இடத்தில், புதிய தொழிற்பேட்டை வரும் என்று த.வெ.க. அரசு சொல்லியிருக்கிறதே, அது வருமா?

சினிமா செட் போடுவது போன்றதல்ல!

தமிழர் தலைவர்: ஒரு பழமொழி உண்டு. அதுதான் எனக்கு நினைவிற்கு வருகிறது. ‘‘இருப்பதை விட்டுவிட்டு, பறப்பதற்கு ஆசைப்பட்டால்’’ என்று.

நிலம் எடுப்பது என்பது உடனே உத்தரவு போட்டு, சினிமா செட் போடுவது போன்றதல்ல அது. அதற்கென்று சட்டங்கள் இருக்கிறது; அதற்கென்று நட்ட ஈடு கொடுக்கவேண்டும். இவை அத்தனையும் இத்தனை ஆண்டுகள் செய்திருக்கிறார்கள். இவை எல்லாவற்றையும்விட, ஒன்றிய அரசின் கிளியரன்ஸ் வேண்டும். இவ்வள வையும் செய்து வைத்திருப்பதைவிட்டு, சமைத்து வைத்திருப்பதைவிட்டுவிட்டு, பரந்தூரை மாற்றுகி றோம் என்பது  ‘‘இப்பொழுதுதான் காய்கறித் தோட்டம் போட்டிருக்கிறோம். அந்தத் தோட்டத்தில், காய்கறிகள் வளர்ந்த பிறகு, அதைப் பறித்து, சமையல் செய்வதற்குக் கொடுப்போம்’’ என்று சொல்வது போன்று இருக்கிறது.

அடுத்ததாக, எந்த மாறுதலைச்  செய்தாலும், ஏற்கெனவே இருந்தவர்கள், மாறுதலுக்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஒரு குடிசை வீட்டை, கல் வீட்டாகக் கட்டித் தருகிறோம்; சில ஆண்டுகளுக்கு வெளியே போங்கள் என்று சொன்னால், ‘‘நாங்கள் இங்கே 30 ஆண்டுகளாக இருக்கிறோம், எங்கேயும் போகமாட்டோம்’’ என்றுதான் சொல்வார்கள்.

வளர்ச்சிக் கண்ணோட்டத்திற்கும்,
ஓட்டுக் கண்ணோட்டத்திற்கும் நடைபெறுகின்ற போராட்டம்தான்!

நேற்று (28.8.2026) கூட அறிக்கையில் சொல்லி யிருந்தோம், ‘‘நாட்டுக் கண்ணோட்டம் மிகவும் முக்கியம்’’ என்று.

பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள இடங்களுக்கு மூன்று மடங்கு தொகை கொடுத்து, தி.மு.க. ஆட்சியில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, விமான நிலையம் என்று சொன்னால், பல தொழில்கள் அதனால் வரும்; பல வாய்ப்புகள் வரும். வேலை வாய்ப்புகளைத் தேடி, வெளிநாடுகளுக்குப் போகிறார்கள். வெளிநாட்டுக்காரர்களை இங்கே வர வேற்பதற்கு வாய்ப்பில்லை என்றால், அவ்வளவு எளிதில், யாரும் இங்கே வரமாட்டார்கள்.

நிலையான அரசியல் வேண்டும்; அதைவிட நல்ல வாய்ப்புகள் வேண்டும். ஆகவே, எதிர்கால வளர்ச்சிக் கண்ணோட்டத்திற்கும், ஓட்டுக் கண்ணோட்டத்திற்கும் நடைபெறுகின்ற போராட்டம்தான் பரந்தூர் விமான நிலையம்.

எனவே, ஓட்டுக் கண்ணோட்டம் என்பது தற்காலி கமானதாகும். வளர்ச்சிக் கண்ணோட்டம் என்பது நிரந்தரமானதாகும்.

ஆகவே, வேறொரு இடத்தில் புதிதாக விமான நிலையம் அமைப்பதற்கு இடம் வாங்குவதற்கு 12 ஆண்டுகள் ஆகும். பரந்தூரில், நிலங்களை வாங்கியவர்களிடமிருந்து, மீண்டும் அவர்களிடமே கொடுத்துவிடுகிறோம் என்றால், அது முடியாது. அந்த இடத்தை, வேறொரு திட்டத்திற்குப் பயன்படுத்துவோம் என்று சொல்வது என்பது இருக்கிறதே, அது அறியாமை அல்லது திட்டமிட்டே திசை திருப்பலாகும்.

செய்தியாளர்: த.வெ.க. அரசினுடைய 100 நாள்கள் செயல்பாடுகள், சாதனைகள் எப்படி இருக்கின்றன?

சட்டமன்றம், சத்தமன்றமாக
இருக்கக் கூடாது!

தமிழர் தலைவர்: சாதனை என்பதைவிட, அவர்களு டைய ஆட்சி, காட்சியாக இருக்கிறது. ஆட்சி என்பது, ஆட்சியாக இருந்தால் நல்லது. பல நேரங்களில் அது காட்சியாக இருக்கிறது.

சட்டமன்றம், சத்தமன்றமாக இருக்கக் கூடாது. ஆக்கப்பூர்வமாக ஆளுங்கட்சியாக இருப்போம் என்று சொன்னார்கள். அதேபோன்று, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெளிவாகச் சொன்னார்கள், ‘‘நாங்கள் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக இருப்போம்’’ என்று சொன்னார்கள்.

இரண்டு பேரும், ஆக்க ரீதியான ஓர் அரசை உருவாக்குவதற்கு, ஒத்துழைக்கவேண்டும்.

த.வெ.க. ஆட்சி அமைந்து 100 நாள்கள் கடந்தி ருக்கிறது.  100 நாள்களில் எப்படி இருக்கிறது என்றால், யார், எந்தக் கட்சியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு வந்தார்கள் என்பதுதான் 100 நாள் படம்.

திட்டங்களின்  பெயரை மாற்றுகிறோம்
என்பது சரியில்லை!

இந்த 100 நாள் படத்தில், அவர்கள் சொன்ன வாக்குறுதியில், என்ன செய்திருக்கிறார்கள்? ஏற்கெனவே இருக்கின்ற திட்டங்களைத் தொடர்ந்திருக்கிறார்கள். ஓர் அரசு என்றால், நல்ல திட்டங்களைத் தொடரவேண்டும்; அதனைச் செய்கிறார்கள், அதை வரவேற்கிறோம்.

ஆனால், அந்தத் திட்டங்களின்  பெயரை மாற்று கிறோம் என்பது சரியில்லை. பெயரை நீங்கள் மாற்றி னாலும், காமராசர்தான், பகல் உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார் என்பதை, பெயர் போட்டுச் சொல்லவேண்டியதில்லை. சாப்பிடுகின்ற அத்தனைப் பிள்ளைகளுக்கும் தெரியும்.

அதேபோன்று, காலை உணவுத் திட்டம் என்றால், மு.க.ஸ்டாலின் ஆட்சியில், ‘திராவிட மாடல்’ ஆட்சி யில்தான் வந்தது என்பது எல்லோருக்கும் தெரியும்.

வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்!

தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதியிலிருந்து காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள், அது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

புதிதாகக் கொண்டு வரக்கூடிய திட்டங்களுக்கு என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ள லாம். பழைய திட்டங்களுக்குரிய பெயர்களை மாற்று வது என்பது, ஆக்கப்பூர்வமான அரசு என்பதற்கு எதி ரானதாகும்.

ஆசிரியர் உரை, தமிழ்நாடு

சட்டப்பேரவையில் விவாதங்கள் இன்னும் ஆக்கப்பூர்வமாக ஆகவில்லை; அது காட்சிப் பூர்வமாக இருந்து கொண்டிருக்கின்றது. நல்ல வாய்ப்பாக, பேரவைத் தலைவர் அவர்கள், நீக்க வேண்டியவற்றை நீக்குகிறார்.

வேறு எந்த ஆட்சியிலும்

இதுவரை வரலாற்றில், வேறு எந்த ஆட்சியிலும், ஆளுங்கட்சியினுடைய பேச்சை, பேரவைத் தலைவர் இத்தனை முறை நீக்கினார் என்பது கிடையாது. அதுதான், இவர்களுடைய 100 நாள்கள் ஆட்சியினுடைய தனித்த சாதனையாகும்!

நன்றி, வணக்கம்!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆசிரியர் உரை, தமிழ்நாடு

ஆசிரியர் உரை, தமிழ்நாடு

இரவு 10 மணிக்கு விழுப்புரம் விருந்தினர் மாளிகைக்கு வருகை தந்த, கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு, மாவட்டத் தலைவர் அரங்க பரணிதரன், மாவட்டச் செயலாளர் சே.வ.கோபண்ணா, ச.பழனிவேல், விழுப்புரம் நகரச் செயலாளர் ஆ.சதீஷ், விழுப்புரம் நகரத் தலைவர் இராஜேந்திரன் ஆகியோர் உற்சாக வரவேற்பளித்தனர் (29.8.2026)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *