பொதுமக்களுக்கா? சுயசேவைக்கா? பா.ஜ.க. எம்.எல்.ஏ-வின் சொகுசுக் காரைக் கழுவிய தீயணைப்புத் துறை!

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

அவசரகாலப் பணிகளுக்காகவும், தீ விபத்துகளில் மக்களின் உயிரையும் உடைமைகளையும் காப்பாற்றுவதற்காகவும் மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் தீயணைப்பு வாகனங்கள், மக்கள் பிரதி நிதிகளின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கான சேவை வாகனங்களாக மாறிவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ரவுலி தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) ராமநிவாஸ் ஷா, தான் வெளியே செல்வதற்காக காரில் ஏற வந்தபோது, காரில் சில கறைகள் இருப்பதைக் கண்டுள்ளார். அதைத் துடைப்பதற்கு கூட யோசித்தவர், உடனடியாக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தீயணைப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதிகாரத்தின் குரலுக்கு அஞ்சி, சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தீயணைப்புத் துறை கட்டுப்பாட்டு அறையிலிருந்து முழு தண்ணீர் டேங்கருடன் கூடிய தீயணைப்பு வாகனம் சட்டமன்ற உறுப்பினரின் வீட்டிற்கு விரைந்துள்ளது. அங்கு, ஒரு ஓட்டுநர், மூன்று தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஒரு உதவியாளர் என 5 அரசு ஊழியர்கள் இணைந்து, சட்டமன்ற உறுப்பினரின் சொகுசு காரைக் கழுவி பளபளப்பாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

8 கி.மீ தொலைவிலிருந்து ஒரு அவசர கால வாகனம் சட்டமன்ற உறுப்பினரின் காரைக் கழுவ வந்த நேரத்தில், அப்பகுதியில் எங்காவது உண்மையான தீ விபத்து ஏற்பட்டிருந்தால் என்னவாகியிருக்கும்? மக்களின் உயிரை விட சட்டமன்ற உறுப்பினரின் கார் தூய்மைதான் முக்கியமா?

ஆபத்துக் காலத்தில் உயிரைப் பணயம் வைத்து மக்களைக் காக்கப் பயிற்சி பெற்ற தீயணைப்பு வீரர்கள், ஓர் அரசியல்வாதியின் காரைத் துடைக்கும் வேலையாட்களாக மாற்றப்பட்டிருப்பது அரசுத் துறையின் கண்ணியத்தைச் சீர்குலைப்பதாக உள்ளது.

தீயணைப்பு வாகனத்தின் எரிபொருள் மற்றும் அதில் இருந்த ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் அனைத்தும் ஒரு நபரின் தனிப்பட்ட ஆடம்பரத்திற்காக வீணடிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்குச் சேவை செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், தங்களை அதிகார வர்க்கத்தின் மேல்தட்டாக நினைத்துக் கொண்டு அரசு அதிகாரத்தை இவ்வாறாக தவறாகப் பயன்படுத்துவது ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட மிகப்பெரிய ஏமாற்றம் மற்றும் சவால் ஆகும்.

காரில் படிந்த கறையைத் தண்ணீரை ஊற்றித் துடைத்துவிட்ட சட்டமன்ற உறுப்பினர் ராமநிவாஸ் ஷா, இதன் மூலம் தனது அரசியல் செயல்பாட்டின் மீது படிந்த இந்த அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஏமாற்றும் கறையை எப்படித் துடைக்கப் போகிறார்? அரசு இயந்திரத்தை சொந்தத் தேவைக்குப் பயன்படுத்திய இவர் மீதும், இதற்குத் துணைபோன அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *