அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் நியமனங்களை விரைவுபடுத்தட்டும்!

இணையவழி கையெழுத்து இயக்கம்

இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில், “தமிழ்நாடு அம்மை வார்த்தவர்கள் தங்கும் மண்டபம் ரூ.1.50 கோடியில் திருச்சி-திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலின் உபகோயிலான அன்பில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் அமைக்கப்படும்” ஒரு செய்தி இந்து சமய அறநிலையத்துறையின் சமூக ஊடகப் பக்கங்களில் கடந்த ஆகஸ்ட் 21 அன்று படவடிவச் செய்திகளுள் ஒன்றாக வெளியிடப்பட்டது. அதிர்ச்சிக்குரிய இந்த அறிவிப்பைக் கண்டவர்கள் அனைவரும் , திமுக மருத்துவர் அணி செயலாளர் மருத்துவர் எழிலன் உள்பட அனைவரும் உடனடியாகக் கண்டனம் தெரிவித்தனர்.

அம்மை நோய் (Smallpox) என்பது ஒரு தீவிரமானதும், பெரும்பாலும் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய வைரஸ் தொற்றாகும்.  ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்களை அம்மை நோய் பாதித்து வந்தது. இங்கிலாந்து மருத்துவரான எட்வர்ட் ஜென்னர் என்பவர்தான் 1796-ஆம் ஆண்டு உலகின் முதல் பெரியம்மை தடுப்பூசியைக் கண்டுபிடித்தார். ஆனாலும், அதனை உலகம் முழுவதும் அனைவருக்கும் கொண்டு சேர்க்க இருநூறு ஆண்டுகள் தேவைப்பட்டன.  கடைசியாக 1977-ஆம் ஆண்டில் ஒருவருக்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டதாகப் பதிவாகியுள்ளது. ஆக, தடுப்பூசிகள்தான் பெரியம்மை நோயைத் தடுத்தன; ஒழித்தன.

இன்று பரவலாக இருக்கும் சின்னம்மை போன்றவை கோடை வெப்பத்தால் பூமி சூடாகும்போது, அசுத்தமான சுற்றுச்சூழல் உள்ள இடங்களில் கொட்டிக் கிடக்கிற குப்பை, கூளங்களில் வாழும் பல்வேறு வைரஸ் கிருமிகள் உயிர்த்தெழுந்து, காற்று மூலம் பரவுவதால் ஏற்படுபவை.. இவற்றில் ஒன்றுதான் ‘வேரிசெல்லா ஜாஸ்டர்’ எனும் வைரஸ் கிருமி. இதன் மூலமாகத்தான், சின்னம்மை நோய் ஏற்படுகிறது. இவை தான் அம்மை நோய்கள் குறித்த அறிவியல் செய்திகள்!

இதற்கும் அன்பில் ‘அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலுக்கும்’ ஏதாவது தொடர்பு உண்டா? அந்தக் கோயில் உருவாகி 700 ஆண்டுகள் ஆகிவிட்டதாகத் ‘தல புராணம்’ கூறுகிறார்கள்.  (உண்மை வரலாற்றைக் கேட்கக் கூடாது.) அங்கே சென்று வழிபட்டா பெரியம்மை நோய் குணமானது? அல்லது, சின்னம்மை, தட்டம்மை (மணல்வாரி), புட்டாலம்மை, ரூபல்லா  போன்றவை குணமாகும், வராமல் தடுக்கப்படும் என்று ஏதாவது உத்தரவாதம் கொடுப்பார்களா?

அறநிலையத் துறையின் அறிவிப்பு, மருத்துவத்தைப் புறக்கணித்து, நோய் தாக்குண்டவர்களைக் கோயிலுக்கு அழைப்பது போல் இருந்த காரணத்தால் கண்டனங்கள் எழவே, தமிழ்நாடு அரசின் தகவல் நம்பகத் தன்மை பிரிவு இந்து சமய அறநிலையத் துறையின் விளக்கத்தை வெளியிட்டது.

அவ்விளக்கத்தில், “அன்பில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில், அம்மை வார்த்து குணமானவர்கள் தங்களின் பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில், திருக்கோயிலில் தங்கி வழிபடுவதற்காக மண்டபம் வேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது”என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய்க்குக் காரணம் என்ன? அதைத் தடுக்கும், தீர்க்கும் வழிமுறைகள் என்ன? என்பவற்றையெல்லாம் தெரிந்து பரப்புகிறது அரசின் சுகாதாரத் துறை! அதற்கு மாறாக, குணமானவர்கள் பிரார்த்தனை செய்யவும், நேர்த்திக் கடன் செலுத்தவும் இங்கே வாருங்கள் என்று அழைக்கிறது அறநிலையத் துறை! நோய் தீரக் காரணமான சுகாதாரத் துறைக்கு, அதனால் பயன் அடைந்த ஒருவர் நன்றிக் கடனாக நன்கொடை செலுத்தினால், அதனால் அத் துறைக்குப் பயனுண்டு; மக்களின் சுகாதாரத்துக்கும் அதனால் பயன் உண்டு. நோயைத் தீர்த்ததில் எந்தத் தொடர்பும் இல்லாத முத்துமாரியம்மனுக்கு, அறநிலையத் துறைக்கு அந்தப் பணம் ஏன் செல்ல வேண்டும்? அதிலிருந்து மருத்துவத் துறையின் செலவுகளுக்கு ஏதாவது பணம் ஒதுக்க முடியுமா?

இந்து சமய அறநிலையத் துறையே எதற்காக வந்தது என்று அறிய வேண்டாமா? இப்படி மூடநம்பிக்கைகளை வளர்க்கவா? பக்தியை வளர்க்கவா? அல்லவே!

கோவில் நிர்வாகத்தை மேற்கொண்டவர்கள், அர்ச்சகர்கள் அடித்த கொள்ளைகளை தடுக்க மக்களின் வேண்டுகோளை ஏற்று கிழக்கிந்திய கம்பெனி சார்பில் 1817லும் பின்னர் நீதிக்கட்சி முதலமைச்சர் பனகல் அரசர் முயற்சியால் 1925லும் பின்னர் 1951லும் கொண்டு வரப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் இந்து சமய அறநிறுவனங்களின் நிர்வாகத்தினை அரசு ஏற்றது.  இதன்படி அதற்கான தனியான அரசுத்துறை ஒன்று உருவாக்கப்பட்டது. இதுதானே வரலாறு. இதைத்தானே அத்துறையும் சொல்கிறது. இதில், எங்கே மதப் பிரச்சாரம், மூடநம்பிக்கை வளர்ப்பு எல்லாம் வருகின்றன?

கடந்த தி.மு.க. ஆட்சியிலேயே, சிவராத்திரி என்றும், 160 அடி முருகன் சிலை என்றும், முருகன் மாநாடு என்றும் இதே போன்ற செயல்பாடுகள், அறிவிப்புகள் செய்யப்பட்டபோதும் திராவிடர் கழகம் அதனை வன்மையாகக் கண்டித்துள்ளது. யார் செய்கிறார்கள் என்பதைவிட, என்ன செய்யப்படுகிறது என்பதுதான் முக்கியம்.

இந்து சமய அறநிலையத் துறை கடந்த ஆட்சியில் ஆற்றிய மிகப் பெரிய சாதனை என்பது ‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் திட்டம்’. தந்தை பெரியார் தனது இறுதிப் போராட்டமாக அறிவித்து, நெஞ்சில் தைத்த முள்ளோடு புதைக்கப்பட்ட பிறகு, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தொடர் போராட்டத்தால், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 2006இல் கொண்டு வந்த சட்டத்தால் நிறைவேறியது. அதற்கு ஏற்பட்ட சட்டத் தடைகளை முறியடித்து, 2015-இல் வழக்கில் வெற்றிபெற்ற பிறகும், ஆகமக் கோவில்களில் அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் ஆக்கிட அடுத்த ஆறு ஆண்டுகள் ஆயின. 2021-இல் அமைந்த திராவிட மாடல் தி.மு.க. ஆட்சியில் தான், அதன் நூறாவது நாள் சாதனையாக அதற்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டு, கோயில் கருவறையில் இருந்த தீண்டாமை ஒழிக்கப்பட்டது. அதற்காகத் தான் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் என்று பாராட்டியது திராவிடர் கழகம்.

அர்ச்சகர் பணி நியமனங்களை எதிர்த்து, பார்ப்பனர்கள் சிலர் தொடர்ந்த   வழக்குகள் நீதிமன்றத்தில் இருக்கின்றன. அதனை முறையாகச் செயல்படுத்தவில்லை என்று தற்போது சட்டமன்றத்தில் குற்றம்சாட்டும் தமிழ்நாடு த.வெ.க.அரசு, அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்குதலை விரைவுபடுத்தி, பயிற்சிகளைத் தொடர்ந்து நடத்தி, 69% என்ற அளவில் இடஒதுக்கீட்டையும் அமல்படுத்துவதில் கவனம் செலுத்தட்டும்! அதுதான் அறநிலையத் துறையின் பணி! அப்போது மனமார இந்த அரசை நாம் பாராட்டுவோம்!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *