திண்டுக்கல், ஆக.28 திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களது மற்றும் நாமினியின் அண்மைய ஒளிப்படங்களுடன் கூடிய விவரங்களை மாவட்டக் கருவூலத் துறையில் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் கடந்த ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் இத்திட்டத்தை ‘யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்’ நிறுவனம் மூலம் செயல்படுத்த அரசு புதிய ஒப்பந்தம் செய்துள்ளது. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 6,800 ஓய்வூதியர்கள், தாங்கள் நாமினியாகப் பதிவு செய்துள்ள கணவன் அல்லது மனைவியின் அண்மைய பாஸ்போர்ட் அளவிலான ஒளிப்படத்தையும், இதர விவரங்களையும் மாவட்டக் கருவூலத்துறையில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நாமினியாகப் பதிவு செய்யப்பட்டுள் ளவரின் ஒளிப்படம் மற்றும் விவரங்கள் கருவூலத்துறையில் பதிவானால், ஓய்வூதியதாரருக்கு எதிர்பாராதவிதமாக உயிரிழப்பு ஏற்படும் பட்சத்தில், அந்த விவரங்கள் பதிவான அடுத்த நிமிடமே தானியங்கி தொழில்நுட்பம் மூலம் ஓய்வூதியம் குடும்ப ஓய்வூதியர் பெயருக்கு உடனடியாக மாற்றப்படும். எனவே, ஓய்வூதியதாரர்கள் தயங்காமல் இந்தப் பதிவை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கருவூலத்துறை அலுவலர் கார்த்திகேயன் கேட்டுக்கொண்டுள்ளார்.
