மதுரை, ஆக. 26- மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி வழக்கில் 14 பேர் முன் பிணை கோரி தாக்கல் செய்த மனு மற்றும் கைதான உதவி ஆட்சியர் அன்பழகன் உள்ளிட்ட 2 பேர் பிணை கோரி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.
அடமானப் பத்திரங்கள்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில், சொத்து களை முறைகேடாகப் பொது அதிகாரம் மற்றும் அடமானப் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கோயில் நிர்வாக அதிகாரி புகார் அளித்துள்ளார்.
இதன் பேரில், சட்ட விரோதமாக நிலத்தை ஆக்கிரமிக்கச் சதித் திட்டம் தீட்டியதாக 19 பேர் மீது மதுரை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரேமா, முத்துராணி, மற்றும் கவிதா உள்ளிட்ட 14 பேர் தங்களுக்கு முன் பிணை வழங்கக் கோரியும் கைது செய்யப்பட்ட மாவட்ட துணை ஆட்சியர் அன்பழகன், ராஜ்குமார் இருவர் தனக்கு பிணை வழங்க கோரியும் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
பிணை வழங்கக் கூடாது
இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்குரைஞர் ஜான் சத்யன் ஆஜராகி சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்து காவலில் எடுத்து விசாரணை செய்ய வேண்டிய காரணம் உள்ளதால் விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் பிணை / முன் பிணை வழங்கினால் விசாரணை பாதிக்கும் மேலும் ஆவணங்கள் மூலம் மோசடி நடைபெற்றுள்ளதால் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியமாக உள்ளதா பிணை மற்றும் முன் பிணை வழங்கக் கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட நிலங்கள் கோயிலுக்கு சொந்தமானது. மேலும் அறக்கட்டளைக்கு வழங்கும்போது நிலங்கள் விற்பனை செய்யக்கூடாது என்ற உத்தரவாதத்துடன் வழங்கப்பட்டுள்ளது. இது தெரிந்தும் நிலங்களை விற்பனை செய்து உள்ளனர் எனவே பிணை வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி இந்த வழக்கில் உரிய இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறி உத்தரவுக்காக வழக்கை ஒத்தி வைத்தார்.
இந்த நிலை நேற்று (25.8.2026) தீர்ப்பு வழங்கினார். முன்பிணை, பிணை மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
