இங்கிலாந்தில் உயர்கல்வி படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள் மற்றும் இளம் வல்லுநர்களுக்குச் சிறந்த வாய்ப்பாக, 2027–2028ஆம் ஆண்டுக்கான சேவனிங் (Chevening) உதவித்தொகைக்கு விண்ணப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் இங்கிலாந்தில் ஓராண்டு முழுமைப் படிப்பை முழு நிதியுதவியுடன் படிக்க முடியும். இங்கிலாந்து அரசின் வெளிநாட்டு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (FCDO) இந்தத் திட்டத்துக்கு நிதியுதவி வழங்குகிறது.
நோக்கம்
உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து திறமைசாலியான இளம் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இங்கிலாந்தில் உயர்கல்வி மற்றும் பன்னாட்டு அனுபவத்தை வழங்கி, படிப்புக்குப் பிறகு தங்கள் சொந்த நாட்டில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் சேவனிங் திட்டத்தின் முக்கிய நோக்கம்.
யார் விண்ணப்பிக்கலாம்?
- விண்ணப்பதாரர்கள், இந்தியா போன்ற தகுதியான நாட்டின் குடிமகனாக இருக்க வேண்டும்.
- இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
- இளங்கலைப் படிப்புக்குப் பிறகு குறைந்தது 2,800 மணி நேரப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இது பொதுவாக 2 ஆண்டுகளுக்குச் சமமானது.
- முழுநேர வேலை மட்டுமின்றிப் பகுதிநேர வேலை, தன்னார்வப் பணி மற்றும் ஊதியத்துடனோ, இல்லாமலோ மேற்கொண்ட பயிற்சிகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படலாம்.
- தகுதியான 3 இங்கிலாந்து முதுகலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
- தேர்வானால், குறைந்தது ஒரு இங்கிலாந்து பல்கலைக்கழகத்திலிருந்து நிபந்தனையற்ற சேர்க்கை அனுமதியைப் பெற வேண்டும்.
என்னென்ன நன்மைகள்?
- சேவனிங் உதவித்தொகை மூலம் தேர்வு செய்யப்படுவர்களுக்கு இங்கிலாந்தில் முதுகலைப் படிப்பை மேற்கொள்ளத் தேவையான முக்கிய செலவுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.
- இதில் பல்கலைக்கழகக் கட்டணம், மாதாந்திர உதவித்தொகை, இங்கிலாந்துக்கான பயணச் செலவு உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் அடங்கும்.
தேர்வு முறை
- கல்வித் தகுதி மட்டும் அடிப்படையாகக் கொண்டு சேவனிங் மாணவர்கள் தேர்வு செய்யப் படுவதில்லை.
- தலைமைத்துவத் திறன், பிறருடன் இணைந்து செயல்படும் திறன், எதிர்காலத் தொழில் திட்டம் மற்றும் சமூகத்தில் நிகழ்ந்த நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் திறன் ஆகியவை முக்கியமாக மதிப்பிடப்படுகின்றன.
விண்ணப்பிக்கத் தேவையானவை
- விண்ணப்பத்தின்போது கல்வித் தகுதி, பணி அனுபவம் உள்ளிட்ட விவரங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும்
- நேர்காணலுக்குத் தேர்வு செய்யப்பட்டால், இளங்கலைப் பட்டச் சான்றிதழ் மற்றும் பரிந்துரைக் கடிதங்கள் உள்ளிட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
- சேவனிங்கின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் கணக்கை உருவாக்கி, தகுதிச் சரிபார்ப்பை முடித்த பின்னர் இணையதள விண்ணப்பத்தைப் நிறைவு செய்ய வேண்டும்.
- கல்வி, பணி அனுபவம், தலைமைத்துவம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பான விவரங்களைத் தெளிவாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
முக்கிய தேதி
- விண்ணப்பிக்க கடைசி நாள்: 6.10.2026 அன்று இந்திய நேரப்படி மாலை 4.30 மணி ஆகும்.
- 2027–2028 கல்வியாண்டிற்கான தேர்வான வர்கள் செப்டம்பர் / அக்டோபர் 2027 முதல் இங்கிலாந்தில் படிப்பைத் தொடங்க உள்ளனர்.
- உலகத் தரம் வாய்ந்த கல்வியைப் பெறுவதுடன், பன்னாட்டு அளவில் தொழில்முறைத் தொடர்பு களை உருவாக்கி, எதிர்காலத்தில் தலைமைப் பொறுப்புகளை நோக்கிச் செல்ல விரும்பும் இந்திய இளம் வல்லுநர்களுக்குச் சேவனிங் ஒரு முக்கியமான வாய்ப்பாகும்.
