சென்னை, ஆக. 26- சட்டப் பேரவையில் பேசிய அமைச்சர் கீர்த்தனா, சில ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் காசு வாங்கிக் கொண்டு தங்களுக்கு எதிராகச் செய்தி எழுதுவதாக குறிப்பிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள் ஊடகங்களை தவறாக கூறுவதை ஏற்க முடியாது என்று கண்டனம் தெரிவித்தனர்.
ஜனநாயகத்தின் நான்காவது தூண் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஆகும். அதனைக் கொச்சைப்படுத்தக் கூடாது. பணம் அளித்தால் செய்தி எதை வேண்டுமானாலும், பத்திரிகையாளர்கள் எழுதி விடுவார்கள் என்பதை ஏற்று கொள்ள முடியாது என்று சட்டப்பேரவையில் பேசிய திமுக உறுப்பினர் எ.வ.வேலு கூறினார்.
பொத்தாம் பொதுவாகப் பத்திரிகைகள் காசு வாங்கிக்கொண்டு எழுதுகிறார்கள் என்று அவையில் அமைச்சர் பேசக் கூடாது. காசு வாங்கி கொண்டு என்று பேசுவது ஒட்டுமொத்த பத்திரிகைகளையும் அவமதிப்பதாகும் என சட்டப் பேரவையில் அமைச்சர் கீர்த்தனாவின் பேச்சுக்கு, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எதிர்ப்பை பதிவு செய்தார்.
மேலும் உங்கள் மனதில் ஏதோ ஒரு ஊடகத்தை நினைத்துக் கொண்டு இங்கே பேசுவது, ஒட்டுமொத்த ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளை குறிப்பிடுவது போலாகிவிடும் என்றார். அனைத்துப் பத்திரிகைகளையும் ஊடகங்களையும் பொதுவான ஒரு குற்றச்சாட்டின் கீழ் அமைச்சர் விமர்சிப்பது முறையல்ல என்றும், அவதூறாகப் பேசுவது அழகல்ல என்றும் குறிப்பிட்டு கடும் கண்டனத்தை பதிவு செய்தார்.
