புதுடில்லி, ஆக.25 இந்தியாவில் 15 முதல் 29 வயது வரையிலான சுமார் 8.7 கோடி இளைஞர்கள் கல்வி, வேலை வாய்ப்பு அல்லது எந்தவிதமான தொழிற்பயிற்சியிலும் ஈடுபடாமல் இருப்பதாக நிதி ஆயோக் மதிப்பீடு செய்துள்ளதாகக் கூறி, பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சித் தலை வர் மல்லிகார்ஜுன கார்கே தனது ‘எக்ஸ்’ தளத்தில் மூன்று காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
கார்கே தனது பதிவில் சுட்டிக்காட்டி யுள்ள விவரங்கள் வருமாறு:
20 முதல் 29 வயதுக்குட்பட்ட வேலை யில்லாத இந்தியர்களில் 67 சதவீதம் பேர் பட்டதாரிகள் ஆவர். அதேபோல், 15 முதல் 25 வயதுக்குட்பட்ட பட்ட தாரிகளிடையே வேலையின்மை விகிதம் கிட்டத்தட்ட 40 சதவீதமாக அதிகரித்துள்ளது. ‘‘பட்டப்படிப்பு முடித்த பிறகும் வேலைகள் எங்கே?’’ என கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபோது அளித்த ‘‘ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்’’ என்ற வாக்குறுதி என்ன ஆனது என்று வினவியுள்ளார்.
மக்கள் தொகை சாதகம் பேரழிவாக மாறுகிறதா?
நாட்டின் இளைஞர் ஆற்றலை மக்கள் தொகை பேரழிவாக மாற்றி வருவது யார் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், அதிக செலவுமிக்க தரம் குறைந்த கல்வி, தொடர்ச்சியான வினாத்தாள் கசிவுகள், தாமதமாகும் அரசுப் பணி ஆட்சேர்ப்புகள் மற்றும் திறனுக்கேற்ற தரமான வேலைவாய்ப்புகள் குறைந்து வருவது ஆகியவை ஒரு முழு தலை முறையின் எதிர்காலத்தையே ஆபத்தில் தள்ளியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், வேலைவாய்ப்பும் கல்வியும் இன்றி முடங்கியுள்ள 8.7 கோடி இளைஞர்களில் சுமார் 88 சதவீதம் பேர் வீட்டின் அன்றாட வேலைகளிலேயே சுருங்கிப்போயுள்ளதாகவும், ஒன்றிய அரசின் கொள்கைகள் நாட்டின் இளைஞர் நலனுக்கு எதிரானதாகவே அமைந்துள்ளன என்றும் அவர் தனது பதிவில் சாடியுள்ளார்.
