இம்பால், ஆக 25 மணிப்பூர் மாநிலம் சேனாபதி மற்றும் காங்போக்பி மாவட்டங்களில் நேற்று (24.8.2026) அதிகாலை முதல் பயங்கர வன்முறை வெடித்தது. காங்போக்பி மாவட்டத்தில் அமைந்துள்ள தஃபோ குக்கி கிராமத்தில் நேற்று (24.8.2026)அதிகாலை 2:30 மணியளவில் புகுந்த சமூக விரோதிகள் சிலர் அங்கிருந்த வீடுகளுக்குத் தீ வைத்தனர். இதன் தொடர்ச்சியாக, சேனாபதி மாவட்டத்தில் உள்ள நாகா தஃபோ பகுதியிலும் அதிகாலை 4 மணியளவில் வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்டன. வீடுகள் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து தஃபோ நாகா பகுதியில் இரு சமூகத்தைச் சேர்ந்த குழுக்களிடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. நிகழ்வு இடத்திற்கு விரைந்து சென்று பாதுகாப்பில் ஈடுபட்ட மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) வீரர் ஒருவர் இந்த துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்தார்.
சேனாபதி பகுதியில் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட நிகழ்வைக் கண்டித்து, கோபமடைந்த உள்ளூர் மக்கள் திரண்டனர். சேனாபதி மாவட்டத்தின் நுழைவாயில் பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றுகூடிய பொதுமக்கள், மரக்கட்டைகள் மற்றும் டயர்களை கொளுத்திப் போட்டு தீவிர சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டம் காரணமாக அந்த வழியிலான வாகனப் போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டது. தொடர் வன்முறை மற்றும் பொதுமக்கள் போராட்டத்தை அடுத்து, அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
