ஆணாதிக்க சமூகத்தின் சில புரையோடிய சந்தேகங்களும், பதில்களும்!

8 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

போலி பெண்ணியம், பாரபட்சமான (selective) பெண்ணியம் போன்றவற்றை எல்லாம் குப்பையில் போட்டுவிட்டு, பெண் என்ற ஒரே காரணத்திற்காக சர்வாதிகாரத்தைத் தைரியமாகவும் கிறுக்குத்தனமாகப் பேசுவதைப் பேச்சாற்றலாகவும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அபத்தங்களையெல்லாம் தூக்கிக் கடாசி விட்டு கொஞ்சம் கள எதார்த்தத்தோடு நியாயமாகக் கதைப்போம். இக்கட்டுரையை எழுதத் துவங்கும் போது ‘ஆணியம்’, ‘பெண்ணியம்’ என்றெல்லாம் யோசிக்கவே இல்லை. மிக இயல்பாக கட்டுரை அதன் போக்கைத் தீர்மானித்துவிட்டது. எனவே இனி சமூகத்தின் சில clicheகள் குறித்த சந்தேகங்கள் சில:

  • ‘ஆண்களால் மனந்திறந்து அழுகையைக் கூட வெளிப்படுத்த முடியாது’ – ச்ச! எவ்வளவு கஷ்டம்? அதாகப்பட்டது ஆண்கள் உருவாக்கிக் கட்டமைத்த அந்த patriarchy அவர்களை உணர்ச்சி வசப்படவோ அழவோ விடுவதில்லை! என்ன ஓர் அவலம்! என்ன ஓர் அநியாயம்? ஆணியம் இவ்விடத்தில் நசுக்கப்படுவது நக்கலுக்குரிய விசயமா என்ன?

ஓர் உண்மை சொல்லவா? பெண்களும் அழ அனுமதிக்கப்படுவதில்லை. அழுதால்தான் பலவீனமானவள், எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவள், dramatic, தலைமைப் பொறுப்பிற்குச் சற்றும் தகுதியில்லாதவள் என்றெல்லாம் விருதுகள் வந்து விழுகின்றனவே.

  • “‘நிலக்கரிச் சுரங்கங்கள்’, ‘எண்ணெய்க் கிணறுகள்’ போன்ற இடங்களில் நீங்களும் பணிக்கு வந்து சமத்துவத்தை நிலைநாட்டுவதுதானே?” என்ற அறிவார்ந்த கேள்வியைக் கேட்க நேரும் போதெல்லாம் இரண்டு விசயங்கள் மனதிற்கு வரும் : ஆபத்தான அவ்விடங்களில் ஆண்களே கூட பணியமர்த்தப்படக் கூடாது என்பதே என் வாதம். ரோபோ எந்திரங்கள் பயன்படுத்தப்படட்டும். இரண்டாவது விசயம் இயற்கை ஆணையும் பெண்ணையும் ஒரே மாதிரியான உடல் வலிமையுடன் படைக்கவில்லை. எனவே பெண்கள் கோருவது அறிவுநிலையில் சமமான வாய்ப்புகள்… அதாவது cognitive meritocracy.
  • ‘ஆண்கள் தமது கஷ்டத்தை அமைதியாகக் கடந்து செல்வார்கள். வெளியே சொல்வதேயில்லை’ – அப்புறம் வெளியே சொல்லப்படாத கஷ்டம் எப்படி எல்லோர் காதுகளுக்கும் வந்தது? To put it in a lighter vein, அந்த அமைதி ஒலிவாங்கிகளிடமும்(mic) வலையொலிகளிடமும்(podcast) தஞ்சம் அடைகிறது போலும்!
  • எல்லா ஆண்களும் பாலியல்/வன்முறை குற்றங்களில் ஈடுபடுவதில்லை. Not all men but always a man! Period.

எந்தப் பெண்ணுக்கும் ஒழுங்காக வண்டி ஓட்டத் தெரிவதில்லை; எல்லாப் பெண்களும் moody/emotional……

Not all men but always all women?

எந்தப் பெண்ணுக்கும் சரியாக வண்டி ஓட்டத் தெரிவதில்லை, ஆனால் 73 விழுக்காடு விபத்துகள் ஆண்களால்தான் நிகழ்கின்றன. எல்லாப் பெண்களும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள், ஆனால் 95 விழுக்காடு ஆண்கள்தாம் பல வன்முறைகளில் ஈடுபட்டவர்கள். கணக்கு கண்டமேனிக்கு இடிக்குதே!

  • “எல்லா ஆண்களும் என்று பொதுவாகக் கூறும் போதெல்லாம் உன் வாழ்விலும் ஆண்கள் இருப்பதை மறந்துவிட்டாயா?” என்று கேட்போருக்கு,

“ஓ! தவறிழைக்கும் ஆண்கள் தமக்கும் சகோதரி, தாய் இருப்பதை மறக்கிறார்களே? அது போலவா?” என்னும் பதிலைப் பையிலேயே வைத்துச் சுற்றிக்கொண்டிருக்கிறேன்.

  • So… YES, ALL MEN! ஏனெனில் என்னைச் சார்ந்த ஆண்கள் ஒழுக்கத்தில் சிறந்தவர்கள் எனவே நான் பாதுகாப்பாக உணரலாம். பிற பெண்கள் இவர்களைப் பார்த்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் இவர்களுக்குத் தெரியும். ஆனால் அந்நியப் பெண்களுக்குத் தெரியாதே? எனில் பிற பெண்கள் அர்த்த சாமத்தில் சாலையில் இவர்களைக் கடக்க நேரிடுமாயின் பயப்படுவது, பதட்டப்படுவது, எச்சரிக்கை உணர்வுடன் தங்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கவனமாக இருப்பது… எல்லாம் முற்றிலும் நியாயமானதே. எந்தக் கண்ணியமான ஆணும் இதை ஒப்புக் கொள்வார்.
  • ஒரு சில ஆண்களால் பெண்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படும் சாத்தியம் இருப்பதால் அனைத்து ஆண்களுக்கும் எல்லா இரவுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தால் எப்படி இருக்கும்? கேட்கவே முட்டாள்தனமாக இருக்கிறதல்லவா? ஆனால் அச் சில ஆண்கள் செய்யும் தவறுக்கு ஒட்டு மொத்த பெண்களும் தனியாக வெளியே செல்ல இயலாது, அதுவும் இரவில் வெளியே செல்லவே இயலாது என்ற தண்டனை மட்டும் சரியா? இதெல்லாம் ஓர் ஊரு… இதுக்கு ஒரு நியாயம் வேற!
  • “பெண் கொலைகளுக்கு Femicide என்றொரு பதம் உருவாக்கப்பட்டு அது சட்டத்தால் அங்கீகரிக்கவும் படுகிறது. பாதிக்கப்பட்டது பெண் எனில் ஆண்களுக்குக் கடுமையான தண்டனையும் வழங்கப்படுகிறது. ஆனால் நீங்கள்தான் அடக்கி ஒடுக்கப்படுவதாக எப்போதும் கூச்சலிடுகிறீர்கள். Mancide என்ற ஒன்றே இல்லை. அது homicide ஆகிவிடுகிறது. நாங்கள்தான் பாவம்”

“அதாகப்பட்டது…. விகித சாரத்தில் பெண்கள் ஆண்களின் வன்முறைக்கு ஆளாகி வெகு அதிகமாகக் கொலை செய்யப்பட்டு அதற்கென ஒரு பதம் வழக்கத்திற்கு வந்தது எங்களுக்கான privilege? பெண்கள் ஆண்களுக்கெதிரான குற்றங்களில் குறிப்பிட்டுச் சொல்லத் தகுந்த அளவில் ஈடுபடவில்லை என்பதுதான் உங்கள் குற்றச்சாட்டா? நிஜமாகவே பாவம்தான் நீங்கள்”

  • “உன் சகோதரிக்கோ அம்மாவுக்கோ….” – இப்படிச் சொல்லித்தான் எந்தப் பெண்ணையும் ஒரு மனித உயிராகக் கருதச் சொல்லித் தர வேண்டுமெனில், அம்மாவாகவோ சகோதரியாகவோ இல்லாது சற்றும் சம்பந்தம் இல்லாதவளுக்காகவும் பச்சாதாபம் கொள்ள வேண்டும் என்றெல்லாம் வாய்விட்டுச் சொல்லிப் புரிய வைக்க முனைய வேண்டுமெனில் அடிப்படையிலேயே பிரச்சினை என்றுதானே பொருள்?
  • அம்மாவுக்கும் மனைவிக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு முழிப்பதாகச் சதா சர்வ காலமும் பினாற்றிக் கொண்டே திரியும் அந்தோ பரிதாபத்திற்குரிய(!) அப்பாவியான(!!) பாவப்பட்ட(!!!) ஆண்களுக்குத் தெரிவதில்லை – அந்த மனைவிதான் மாமியார், கணவன் ஆகிய இருவரால் கரும்புச் சாறு இயந்தரத்தினுள் அனுப்பப்படுகிறாள்…. இல்லை! தூக்கி எறியப்படுகிறாள் என்று.
  • ‘இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து’ – இதுவரை சாதாரணமாக வாசித்துக் கொண்டிருந்துவிட்டு அதில் ஒரு ஓட்டுநர் பெண் என்றறிந்ததும் ஓர் ஏளனத் தொனி வந்தமர்ந்துவிடுகிறதே! ஏன்? இதற்கு முன் இரு ஆண் ஓட்டுநர்களால் விபத்துகள் உண்டானதே இல்லையா?
  • Beauty with brains –அழகும் அறிவும் சேர்ந்து ஒரு பெண்ணிடத்தில் இருப்பதை அரிதாகக் காண்பதைத்தானே இது கூறுகிறது? இது பாராட்டும் விதமாகக் கூறப்படுவது என்பது எனக்கும் தெரியாமல் இல்லை. ஆனால் சமூகம் வளர வளர தனது பார்வையில் ஏதேனும் பிசகு இருந்தால் மாற்றிக் கொள்வதில் தவறொன்றும் இல்லையே? பெண்களது அழகை வியத்தலும் இலமே; அறிவை வியத்தல் அதனினும் இலமே!
  • “பெண்கள் இயற்கையாகவே தியாக உள்ளம் கொண்டவர்கள், பணிந்து செல்லக் கூடியவர்கள்” – அந்த ‘இயற்கை’ உண்மை எனில் மதம், கட்டுப்பாடுகள், விதிகள் ஆகியவற்றின் உதவியுடன் இதைச் சமூகம் நினைவுபடுத்திக் கொண்டேயிருக்க வேண்டிய தேவை இல்லை. ஆமா…. அது எப்படி எல்லா மதங்களும் ஒரே மாதிரி பெண்களை வெறுக்கின்றன? [Misogynists from a corner : This me created a religion created for me….. hehehehe!]
  • சும்மா ஒரு கற்பனை… இப்படி ஒரு மதத்தைக் கற்பனை செய்து பாருங்கள் : கடவுளுக்குப் பெண் உருவம் அளிக்கப்பட்டு, பரிசுத்த ஆத்மாக்கள் எல்லாம் பெண்களாக இருந்து, (12 பெண்கள் சேர்ந்து) ‘ஆண்கள் கீழ்ப்படியவே படைக்கப்பட்டவர்கள்’ என்னும் கருத்தை மய்யமாக வைத்து ஒரு புத்தகம் எழுதி அதற்கும் புனிதத்தைச் சாற்றினால், எத்தனை ஆண்கள் அம்மதத்தைப் பின்பற்றுவார்கள்?
  • தொலைக்காட்சி நெடுந்தொடர்கள், திரைப்படங்கள் ஆகியவற்றில் சில மனைவி கதாபாத்திரங்கள் நச்சரிப்பவர்களாகச் சித்தரிக்கப்படுவதன் பின்னணியில் பெறுப்பற்ற/எதற்கும் லாயக்கில்லாத/திரும்பத் திரும்ப ஒரு விசயத்தை நினைவூட்டினாலும் செய்யாத ஒரு கணவன் இருப்பான். ஆனால் அது முக்கியமல்ல! ஓயாமல் தொண்டைத் தண்ணியை வற்றும் அவள்தான் நசை!
  • ஆண்டாண்டு காலமாக இரத்தம் தெறிக்கத் தெறிக்கப் போர்களில் ஈடுபட்டுப் பல கொடூரங்களை அரங்கேற்றிய ஓர் இனத்திற்குத் தன் சக இனத்தின் இயற்கையான மாத சுழற்சியின் போது வரும் இரத்தம் மட்டும் எவ்வாறு அசிங்கமானதாக இருக்கிறது? ஊழல்/பாலியல்/ கொலை/கொள்ளை குற்றங்கள் ஆகியவற்றில் ஈடுபட்டவர்களெல்லாம் கோயிலினுள் நுழைய எவ்வித மறுப்பும் கிடையாது. ஏனெனில் இவற்றை விடக் கொடிய குற்றம் – மாதவிடாய்! ரைட்டு.
  • “I will not give birth to a life that will discriminate against my gender. My own flesh and blood must not become a blade turned against me. If the world born from my body oppresses me, I will not let that world exist” – வட கொரிய பெண்களால் 4B என்ற இயக்கம் துவங்கப்பட்டதற்கான அடிப்படையே இதுதான். ஓர் இனத்தை எவ்வளவு சித்திரவதைக்கும் நெருக்கடிக்கும் உள்ளாக்கியிருந்தால் இப்படி முடிவெடுத்திருப்பார்கள்?

மத்துவம் பேசுவதையே தேவையில்லாத ஆணியாகவும் தமக்கெதிரான அடக்குமுறையாகவும் கருதினால் என்னதான் செய்வது? “ஆண்களில் மோசமானவர்களுக்கு நிகராகப் பெண்களும் உண்டு” – சரி. ஓர் ஆண் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம்; ஆண் உடலுக்கென விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்; ஒரு பெண்ணை நிராகரித்ததற்காக ஆசிட் வீச்சை எதிர்கொண்ட ஆண்;….. இப்பட்டியலின் குற்றத் தரவுகள், புள்ளி விபரங்கள் என அனைத்தையும் எடுத்து வாருங்கள். பிறகு வக்கிரமான பெண்களின் எண்ணிக்கை குறித்துப் பேசுவோம்.

இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்நொடியில் கூட பீகாரின் ஒரு கிராமத்தில் பஞ்சாயத்துக்காரர்களால் தரையில் காறி உமிழப்பட்ட எச்சிலை ஒரு பெண்ணை நக்கித் தின்னச் சொன்னதாக ஒரு செய்தி. அவள் தன்னை வன்புணர்வு செய்த இருவர் மீதும் குற்றம் சாட்டியதும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதுமே காரணம்.

இவ்வகையான குற்றங்களை ஆண்டாண்டு காலமாகக் கேட்டு கேட்டுப் பழக்கப்பட்டுவிட்டதால் (இது மனதிற்குப் பழகிப் போனதே தவறு!) தற்போது பெண்களின் பக்கம் கவனத்தைத் திருப்பி குற்றங்களில் (மட்டும்!) சமநிலையை நிலைநாட்ட முற்படுகிறது சமூகம். பெண்ணுக்கெதிரான குற்றங்கள் நிகழ்ந்து வருவதை உரத்து எடுத்துக் கூறினாலும் எப்போதாவது பெண்ணால் ஆணுக்கு எதிராக நடக்கும் குற்றத்தை செய்தி வழியே பார்த்து ஒலிபெருக்கியில் பேசிப் படதிரையில் (projector) மீண்டும் மீண்டும் திரையிட்டு அங்கிங்கு சுற்றியடித்துக் கடைசியில் ‘இந்தப் பெண்களே இப்படித்தான்!’ என்னும் புள்ளியில் வந்து நிற்கும் சமூகத்திற்கு என் ஆழ்ந்த வாழ்த்துகளும் புறங்கைப் பாராட்டுகளும்! (இந்த ஆக்கங்கெட்ட மொழியாக்கம் போதும் இவ்விடத்திற்கு!)

வாசித்து விட்டு ஏதோ ஆண் வெறுப்பு பேசிருப்பதாகப் புரிந்து கொள்ள வேண்டாம். உள்ளதை உள்ளபடி எவ்வித மிகைப்படுத்தலும் இன்றி கூறியிருக்கிறேன். அவ்வளவே!

எங்கோ எப்போதோ ஒரு பெண் வாயாடியாக, பாரபட்சத்தைக் கண்டு பெருங்கோபம் கொண்டவளாக, அறமற்ற அசவுகர்யங்களைக் கொஞ்சமும் பொறுத்துக் கொள்ளாதவளாக வெடித்ததால்தான் இன்று என் சுதந்திரத்தையும் உரிமைகளையும் பரிபூரணமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அதனால் Patriarchy என்னும் இந்த இழவைத் தூக்கிப் பிடிக்கும் ஆண், அதற்குத் தோள் கொடுத்துத் தாங்கி நின்று துரோகம் இழைக்கும் பெண் என அனைவரையும்தான் இகழ்ந்து வெறுக்கிறேன்.

பெண்ணியத்தைப் போலவே ஆணியமும் சமூகத்திற்கானதுதான். ஆனால் அது கொஞ்சம்… இல்லை! ரொம்பவே அளவில் மிகுந்து அதிகாரம் செலுத்தும் போது அடாத ஆணியமாக – அதாவது ஆணாதிக்கமாக உருமாறுகிறது. மற்றபடி ஆணியமும் பெண்ணியமும் சமூக நீதிக் கோட்பாட்டிற்கிணங்க மனித உரிமைகள் என்னும் புள்ளியில் கைகோர்க்கும் அற்புதத்தைக் காண ஆவலாகவே இருக்கிறேன்!

– சோம. அழகு

“திண்ணை இணைய வாரப்பத்திரிக்கை”

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *