நன்கொடைகளைப் பெற்றுக்கொண்ட கழகத் தலைவர் ஆசிரியர் மனிதர்கள், மானமும் அறிவும் பெற மாலைநேர வகுப்பெடுத்தார்!

8 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

திருச்சி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில்
ரூ.8,17,000/- பெரியார் உலகம் நன்கொடையும், திருச்சி பெரியார் கல்வி நிறுவனங்களின் சார்பில்
18 டன் எஃகுக் கம்பிக்கான தொகையும் கழகத் தலைவரிடம் வழங்கப்பட்டது!

ஆசிரியர் உரை

திருச்சி, ஆக. 24 திருச்சி மாவட்டக் கழகத்தின் சார்பில், திருச்சி சிறுகனூரில் அமையவிருக்கும் பெரியார் உலகத்திற்கு நன்கொடையும், திருச்சி கல்வி நிறுவனங்கள் சார்பாக அதன் முதல்வர்கள், பேராசிரி யர்கள் மேனாள் மாணவர்கள் ஆகியோர் சேர்ந்து எஃகுக் கம்பிக்கான தொகையையும் நன்கொடை யாக வழங்கினார்கள். கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிதியளிப்புக்கும், இரும்பு நன்கொடைக்கும் தனது உளங்கனிந்த பாராட்டைத் தெரிவித்தார். தொடர்ந்து, பெரியார் உலகத்தின் அவசியம் குறித்தும், நீட் மற்றும் EWS ஆகியவற்றின் பச்சை அயோக்கியத்தனத்தைப் பற்றியும் விவரித்து உரையாற்றினார்.

‘பெரியார் உலக’ நிதி அளிப்பு விழா – பொதுக்கூட்டம்!

திருச்சி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெரியார் உலகம் நிதி அளிப்பு விழா பொதுக்கூட்டம் திருச்சி உறையூரில் குறத்தெருவில் நேற்று (23.08.2026) மாலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. நிகழ்வில் திராவிடர் கழகத் தொழிலாளரணி மாநிலச் செயலாளர் மு.சேகர் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். திருச்சி மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமையில், மாநில தகவல் தொழில்நுட்ப அணிச்செயலாளர் வி.சி.வில்வம் முன்னிலை வகித்து, “சமூகநீதி காக்கும்படை வருதண்ணே!” எனும் பாடலைப் பாடினார்.

மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் மாநாட்டையும் ஒருங்கிணைத்தும், இயக்கப் புத்தகங்களை அறிமுகப்படுத்தியும், பொதுக்கூட்டத்தின் நோக்கத்தை விளக்கியும் உரையாற்றினார். திண்டிவனம் – புதுச்சேரி வரை செல்லும் நீட், EWS ஆகியவற்றை ரத்து செய்ய வலியுறுத்தி பரப்புரைப் பயணம் செல்லும் குழுவின் கழகப் பேச்சாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, அந்த பயணத்தின் தேவை குறித்து உரையாடினார். மாநில மகளிர் பாசறைத் துணைச் செயலாளர் க.அம்பிகா, திருச்சி மாவட்ட மகளிரணித் தலைவர் ரெஜினா பால்ராஜ், மாணவர் கழகப் பொறுப்பாளர் யாழினி, கரூர் மாவட்டத் தலைவர் குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். இலால்குடி மாவட்டத் தலைவர் அன்புராஜா, மாவட்டச் செயலாளர் அங்கமுத்து, திருச்சி மாவட்டச் செயலாளர் மகாமணி, பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோபு.பழனிவேல், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் பா.லெ.மதிவாணன், பொதுக்குழு உறுப்பினர்கள் சங்கிலிமுத்து, கனகராஜ், பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் மலர்மன்னன், கரூர் மாவட்டக் காப்பாளர் ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.

கழகத் தலைவருக்கு உற்சாக வரவேற்பு!

கழகத் தலைவர் மாலை நிகழ்விடத்துக்கு வருகை தந்தார்.  அவருக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் கொள்கை முழக்கங்கள் முழங்க எழுச்சிகரமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கழகச் சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன், தமிழ்நாட்டின் தனித்தன்மைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பங்களிப்பை விரிவாக எடுத்துரைத்தார். அதைத் தொடர்ந்து, இருசக்கர வாகனப் பயணம் செய்யும் தோழர்கள் பொதுக்கூட்ட மேடைக்கு வருகை தந்தனர். கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அனைவருக்கும் பயனாடை அணிவித்து, வாழ்த்தினார். அதைத் தொடர்ந்து, திருச்சி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், அதன் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் அவர்களின் தலைமையில், மாவட்டத் தோழர்கள் புடைசூழ, பெரியார் உலகத்திற்கு முதல் தவணையாக ரூபாய், 8,17,000/- வழங்கினர்.

தொடர்ந்து, பெரியார் வீரவிளையாட்டுக்கழக மாநிலத் தலைவர் ப.சுப்பிரமணியம் ஒருங்கிணைப்பில், திருச்சி பெரியார் கல்வி நிறுவனங்களின் மேனாள் முதல்வர்கள், மேனாள் பேராசிரியர்கள், மேனாள் மாணவர்களின் ஒத்துழைப்புடன் 18 டன் இரும்புக்கான 11 லட்சம் ரூபாயை வழங்குவதாகவும், மாதிரிக்காக ஒரு இரும்புத்துண்டை அளித்தனர். தொடர்ந்து, மாவட்டக் கழகம் சார்பாக தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், கழகத் தலைவருக்குச் சிறப்பு செய்தார். இரவு 8.15 மணிக்கு கழகத் தலைவர் நிறைவுரையை வழங்கினார்.

கழகத் தலைவர் வாழ்த்து!

நீட் மற்றும் EWS முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு, புதுச்சேரியில் பயணம் செய்யும் 6 குழுவினரில், திண்டிவனம் முதல் புதுவை வரை செல்லும், பேச்சாளர் உள்பட 21 பேர் அடங்கிய பயணக்குழுவினர், திருச்சி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், நடைபெற்ற ”பெரியார் உலகம் நிதியளிப்பு விழா” பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

பங்கேற்றோர் விவரம்

பேச்சாளர்: மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை

ஒருங்கிணைப்பாளர்: மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தம்பி பிரபாகரன்

தலைமை: திராவிட மாணவர் கழக மாநில துணை செயலாளர் அறிவுச்சுடர், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் அரங்க.பரணிதரன், விருத்தாச்சலம் மாவட்டத் தலைவர் இளந்திரையன், அப்பியன்பேட்டை வேலு, வேகாக்கொல்லை வேணுகோபால், விருத்தாச்சலம் மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் தமிழ்ச்செல்வன், தென்காசி மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் முருகன், எனதிரிமங்கலம் இராஜேந்திரன், சேந்தநாடு மணிராஜ், இலால்குடி மாவட்டத் தலைவர் அன்புராஜா, இலால்குடி மாவட்ட துணைச் செயலாளர் சித்தார்த்தன், இலால்குடி சண்முகசுந்தரம், இலால்குடி பனிமலர்ச்செல்வன், இலால்குடி தினேஷ்குமார், இலால்குடி அறிவுச்சுட ரொளி, இலால்குடி செல்வி, பெரம்பலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் நடராஜன், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் விஜயேந்திரன், வாகன் ஓட்டுநர் முகேஷ், மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், திருச்சி மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், செயலாளர் சு,மகாமணி, மாநில தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் வி.சி.வில்வம், திராவிடர் கழகத் தொழிலாளரணி மாநில செயலாளர் மு.சேகர், பெரியார் வீரவிளையாட்டுக் கழக மாநிலத் தலைவர் ப.சுப்பிரமணியம் உள்ளிட்ட தோழர்கள் முன்னிலையில், இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணத்தில் கலந்துகொண்டிருக்கிற தோழர்களுக்கு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், பயனாடை அணிவித்து மரியாதை செய்து, வாழ்த்தினார்.

(திருச்சி, 23.08.2026)

 

தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

அவர் தமதுரையில், ‘‘திருச்சி மாவட்டத்திற்கு தனிப்பெருமை இருக்கிறது. காரணம், இங்குதான் சிறுகனூரில் பெரியார் உலகம் உருவாகியிருக்கிறது. அதற்கு முதல் தவணைத் தொகை வழங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு பாராட்டு, அதேபோல, எதிர்பாராத வகையில், திருநெல்வேலியில் பெரியார் உலகத்துக்கு 100 மூட்டை சிமெண்ட் கொடுத்தது போல், இங்கே 18 டன் எஃகுக் கம்பிக்கான தொகையயும் வழங்கியிருப்பது இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது” என்று உற்சாகத்துடன் தொடங்கினார்.

பெரியார் என்ற சொல்லுக்கு
ஒரு புதிய பரிமாணம்!

தொடர்ந்து, ‘‘செயற்கரிய செய்வார் பெரியார் என்று திருவள்ளுவர் கூறியிருக்கிறார். ஆனால், ’பெரியார்’ என்றாலே, பெரியவர்களைக் குறிக்கும் பொதுச் சொல்லாக இருந்த அந்தச் சொல், ஈ.வெ.ராமசாமியைக் குறிக்கும் ‘பெரியார்’ என்ற தனிச் சொல்லாக மாறிவிட்டதையும், அந்தச் சொல்லைச் சொன்னாலே சிலருக்கு மின்சாரத்தைத் தொட்டதைப் போல் அதிச்சியைத் தருகிற சொல்லாக இருக்கும் வியப்பை மக்களுடன் பகிர்ந்துகொண்டார். மேலும், “பெரியார் ஏன் பெரியார்? என்றொரு கேள்வி யைக் கேட்டுவிட்டு, “வடலூர் இராமலிங்கர் கூட, ‘கடைவிரித்தேன்; கொள்வாரில்லை; கட்டிவிட்டேன்’ என்ற முடிவுக்கு வந்துவிட்டார். ஆனால், பெரியார், ‘குடிஅரசு’ ஏடு நட்டத்தில் ஓடுகிறது. நிறுத்திவிடலாமா என்று தோழர்கள் ஆலோசனை சொன்ன போது, ‘நானே எழுதி, நானே அச்சுக்கோர்த்து, நானே அச்சடித்து, நானே படிப்பேனே தவிர ஒருபோதும் நிறுத்தமாட்டேன்’ என்று சொல்லி, அப்படியே செய்து காட்டினார். அதனால்தான் அவர் பெரியார்!” என்று பெரியார் என்ற சொல்லுக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தந்தார். அந்தச் சொல்லுக்குள் இருக்கும் ஆழமான கருத்தை இன்னமும் வெளிப்படுத்த, “பதவிக்காக எதையும் செய்யத் தயாராக இருப்போர் இருக்கும் இந்தக்காலத்தில்தான், 29 பதவிகளை வேண்டாம் என்று ஒரே தாளில் எழுதிக்கொடுத்துவிட்டு பொதுவாழ்க்கைக்கு வந்தவர் பெரியார்!” என்று செயற்கரிய செய்வார் பெரியார் என்பதற்கு அழுத்தமான, ஆழமான, நியாயமான பொருளை எடுத்து
ரைத்தார்.

மனுதர்மத்துக்கும்,
நமக்கும் என்ன சம்பந்தம்?

தொடர்ந்து, “1922 இல் திருப்பூரில் நடைபெற்ற மாநாட்டில், இராமாயணம் ஜாதியைச் சொல்கிறது என்றால் அந்த இராமாயணத்தை கொளுத்த வேண்டி யதுதான் என்று காங்கிரசில் இருக்கும் போதே சொன்னவர் பெரியார்” என்றதுடன், ”அந்த ஜாதிக்கு அடிப்படையே மனுதர்மம்தான்” என்று சொல்லிவிட்டு, “பன்றி மோந்தால் உணவு தீட்டாகிவிடும். ஆனால், சூத்திரன் பார்த்தாலே உணவு தீட்டாகிவிடும் என்று மனுதர்மம் சொல்கிறது” என்பதை, அசல் மனுதர்மம் புத்தகத்தைத் தூக்கிக்காட்டிப் பேசினார். அடுத்து, “நம்மை எவ்வளவு கேவலமாக எழுதி வைத்திருக்கிறார்கள். இந்தக் கேவலமான மனுதர்மத்தைத் தானே அரசியல் சட்டமாக்கத் துடிக்கிறது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.” என்று வரப்போகும் கொடூரமான ஆபத்தை பச்சையாகச் சுட்டிக்காட்டினார். அடுத்து, “மனுதர்மத்துக்கும், நமக்கும் என்ன சம்பந்தம்? திருவள்ளுவர் என்ன சொல்கிறார்?” என்று அடுத்தடுத்த கேள்விகளைக் கேட்டுவிட்டு, ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். 2000 ஆண்டுகளுக்கு முன்னால் நாம் இப்படித்தானே இருந்தோம்?” என்று கேள்விகளுக்கு, கேள்வியையே பதிலாக்கிச் சொன்னார்.

‘இந்துமதம் எங்கே போகிறது?’

மேலும் அவர், “சூத்திரனுக்கு எதைக்கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று மனுதர்மம் சொல்கிறது” என்று சொல்லிவிட்டு, “அதனால்தானே ராஜாஜி இரண்டு முறை ஆட்சிக்கு வந்த போது பள்ளிகளை மூடினார். இதைத்தானே 2000 ஆண்டுகளாக செய்துகொண்டு இருந்திருக்கின்றனர். இதை உடைக்கத்தானே சுயமரியாதை இயக்கம் தோன்றியது! இதை உடைக்கத்தானே பெரியார் பிறந்து வந்தார்!” என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே கூறினார். காஞ்சி சங்கராச்சாரியாரின் நண்பர் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய, ‘இந்து மதம் எங்கே போகிறது?’, ’அசல் மனுதர்மம்’ ஆகிய இரண்டு புத்தகங்களையும் வைத்துக்கொண்டு, இந்துமதம் எங்கே போகிறது புத்தகத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை வாசித்தார். அதாவது, ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்தேறிகள் என்றும், அவர்கள் பெண்களை விட்டுவிட்டு வந்தார்களே தவிர, கையோடு மனுதர்மத்தை கொண்டு வந்தார்கள் என்று, ‘இந்துமதம் எங்கே போகிறது?’ என்ற புத்தகத்தை வாசித்துக்கொண்டே இன்னொரு கையால், ’அசல் மனுதர்மம் புத்தகத்தை எடுத்துக்காட்டினார். தொடர்ந்து, ”அந்த மனுதர்மத்தின் விளைவுதான் நாம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக படிக்க முடியாமல் போனது” என்று கூறிவிட்டு, இன்றைக்கு வந்திருக்கும் நீட் தேர்வும், EWS இரண்டும் அதன் தொடர்ச்சிதான் என்று ஆழமாகப் புரியவைத்தார். அடுத்து, ஊழலின் பிதாமகர்கள் பார்ப்பனர்கள் என்று அதற்கான தரவுகளாக, நீட் தேர்வு முறைகேடுகளில் தற்போது வெளிவந்திருக்கும் மலக்குடலில் கேமரா வைத்திருந்தையும், அது ஆங்கில நாளிதழ்களில் வெளிவந்துள்ளதையும் சுட்டிக்காட்டினார். மேலும் அவர், நீட் தேர்வு வந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகி விட்டதே என்று கவலை வேண்டாம். 23 ஆண்டுகள் போராடி எம்.ஜி.ஆர்.கொண்டு வந்த நுழைவுத் தேர்வை ஒழித்துக்கட்டியது திராவிடர் கழகம். அதுபோலவே நீட் தேர்வையும், EWS இரண்டையும் ஒழித்துக்கட்டும் வரை எங்கள் தொண்டு தொடரும்” என்று கூறி உரையை நிறைவு செய்தார். நிறைவாக ஜெயில்பேட்டை பகுதித் தலைவர் தமிழ்மணி நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

பங்கேற்றோர்!

மாவட்ட மகளிரணி பாசறைத் தலைவர் ரூபியா ஸ்டாலின், மாவட்ட துணைச் செயலாளர் சு.ராஜசேகர், திருவரங்கம் தோழர் இரா,மோகன்தாஸ், திருவெறும்பூர் ஒன்றியத் தலைவர் இரா.தமிழ்ச்சுடர், பகுத்தறிவாளர் கழக மாநகரத் தலைவர் குத்புதீன், தோழர் பெல்.ஆறுமுகம், மாவட்ட மகளிரணித் தலைவர் சு.சாந்தி, திருச்சி மாநகரத் தலைவர் வ.இராமதாஸ், காட்டூர் பகுதித் தலைவர் அ.காமராஜ் உள்ளிட்ட கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை கேட்டும், பார்த்தும் பயன் பெற்றனர். காவல் துறையினரும் ஏராளமானோர் தங்கள் கடமையைச் செய்துகொண்டிருந்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *