ராஜபாளையம், ஆக.21 அன்றைக்குத் திருக்கை மீன் வால் முள்ளால் பெரியாரைத் தாக்க முயன்ற அதே ராஜ பாளையத்தில்தான் இன்றைக்கு ‘பெரியார் உலக’த்துக்கு 35 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியி ருக்கிறார்கள்! இது வெற்றிப் பெருமிதம் என்றார் ராஜபாளையம் மாநாட்டில் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்! 80 ஆம் ஆண்டு விழா! ‘பெரியார் உலக’் நிதி வழங்கும் விழா! திறந்தவெளி மாநாடு’’
விருதுநகர் மாவட்டக் கழகம் சார்பில், ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்! 80 ஆம் ஆண்டு விழா! ‘பெரியார் உலக’ நிதி வழங்கும் விழா! திறந்தவெளி மாநாடு’’ நேற்று (20.08.2026) மாலை 5.30 மணிக்கு, மதுரை ராஜா கடை தெருவில் ஏற்பாடு செய்யப்பட்டு, ஏ.எஸ்.ஆர்.தங்கராசா அவர்களின் நினைவாக மேடை அமைக்கப்பட்டு இருந்தது. நிகழ்வில் விருதுநகர் மாவட்டத் தலைவர் இல.திருப்பதி தலைமையேற்றார். பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் கோ.பெத்தையா, மாவட்ட அமைப்பாளர் வழவை முத்தரசன் ஆகியோர் வரவேற்புரை நல்கினர். விருதுநகர் மாவட்டத் துணைத் தலைவர் கா.நல்லதம்பி, பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் பா.அசோக், இராஜபாளையம் நகர செயலாளர் இரா.பாண்டிமுருகன், கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். விருதுநகர் தி.மு.க. தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் இராசா அருண்மொழி தொடக்க உரையாற்றினார்.
தொடர்ந்து, தி.மு.க.தெற்கு நகரச் செயலாளர் இராமமூர்த்தி, தி.மு.க. தெற்கு ஒன்றியச் செயலாளர் சோ.ஞானராசு ஆகியோர் முன்னிலை வகித்து உரை யாற்றினர். மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன் புத்தகங்களை அறிமுகம் செய்தும், புத்தகங்களை வாங்கிப் பயன்பெறவும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தும் உரையாற்றினார். அடுத்து, கழகச் சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் உரையாற்றினார். தி.மு.க. வடக்கு நகர செயலாளர் மணிகண்டன் ராஜா, பா.சுமதி ராமமூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட னர். விருதுநகர் மாவட்டச் செயலாளர் தி.ஆதவன் இணைப்புரை வழங்கினார்.
‘பெரியார் உலக’த்துக்கு
35 லட்சம் ரூபாய் நன்கொடை!
தொடர்ந்து விருதுநகர் மாவட்டத் தலைவர் இல.திருப்பதி தலைமையில் ‘பெரியார் உலக’த்துக்கு 35 லட்சம் ரூபாய் நன்கொடை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கப்பட்டது. ஏற்கெனவே முதல் தவணையாக 4 லட்சம் ரூபாய் வழங்கியிருப்பதாகவும், மொத்தம் இதுவரை ரூ.39 லட்சம் வழங்கப்பட்டிருப்பதாகவும் இல.திருப்பதி அறிவிப்பு செய்தார்.
கழகத் தலைவர் சிறப்பு
அதைத்தொடர்ந்து, சிறப்பு அழைப்பாளர்களுக்கு கழகத் தலைவர் சிறப்பு செய்தார். பெரியார் பெருந் தொண்டர்களுக்கு கழகத் தலைவர் அடுத்து சிறப்பு செய்தார். அதில் மாவட்டக் காப்பாளரான அ.தங்கசாமி அவர்களுக்கு 98 வயதாகிறது என்பதை, கழகத் தலைவர் அறிவுறுத்தல் பேரில், மாவட்டச் செயலாளர் தி.ஆதவன் பலத்த கைதட்டல்களுக்கிடையே அறிவித்தார். அதைத்தொடர்ந்து, மாநாட்டுக்கு உழைத்தவர்களுக்கு கழகத் தலைவர் வரிசையாக சிறப்பு செய்தார். அடுத்து, மாநில ஒருங்கிணைப்பாளர்கள், விழாவிற்கு தலைமையேற்றிருந்த இல.திருப்பதி என்று ஆசிரியர் ஓயாமல் பயனாடை அணிவித்து மரியாதை செய்து கொண்டே இருந்தார். இந்நிகழ்வை விருதுநகர் மாவட்ட தலைவர் இல.திருப்பதி ஒருங்கிணைத்தார். சுமார் 8.10 மணிக்கு கழகத் தலைவர் ஆசிரியர் உரையாற்றத் தொடங்கினார்.
கழகத் தலைவர்
ஆசிரியர் உரை
அவர் தமது உரையில், ‘‘சுயமரியாதைச் சுடரொளிகள் பட்ட துன்பத்தையும், தடைகளையும், அந்தத் தடை களை உடைத்து அவர்கள் இந்த இயக்கத்தை ஒரு சிறு வன்முறைக்கும் இடமில்லாமல் வளர்த்ததையும் சுட்டிக்காட்டி, அவர்கள் போட்டுத் தந்த மேடையில் தான் இப்போது நம்ம அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றோம்’’ என்று நன்றி உணர்ச்சி மேலோங்க தனது உரையைத் தொடங்கினார். அதேபோல, ‘‘பெரியார் உலகம் நன்கொடையாக, 35 லட்சம் ரூபாய் கொடுத்து, பெரியார் ஆற்றிய தொண்டுக்கு இந்தப் பகுதி மக்கள் தங்களின் நன்றி உணர்ச்சியை காட்டி இருக்கிறார்கள்’’ என்றும் சுட்டிக்காட்டி பேசினார். அடுத்து, இப்போது நடைபெற்ற ராஜபாளையம் மாநாட்டின் தோற்றுவாய் வரலாற்றை விவரித்தார். ராஜபாளையம் தோழர் பொன்னுசாமி அவர்கள் எழுதிய கடிதத்தின் பேரில், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த நான், 1954 இங்கு வந்தேன். அதற்கு முன்பாகவே மாணவர் கழகத்திலிருந்து நான் வந்து சென்றிருக்கிறேன். 1954 இல், காவல் துறையினர், ‘‘திராவிடர் கழகத்துக்கு நாங்கள் அனுமதியே கொடுப்பதில்லை. இப்போது அனுமதிக்கிறோம். 4 மணிக்குத் தொடங்கி, 6 மணிக்குள் நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஊரைவிட்டே போயிடுங்க’ என்று சொன்னார்கள். என்.வி.நடராசன் பேசிய கூட்டத்தில், கல் விழுந்து கலவரம் நடந்ததை சுட்டிக்காட்டி காவல்துறையினர் இப்படி கூறினார்கள். அதன்படி நாங்கள் நடந்தோம். அந்தக்காலத்தில் காங்கிரஸ் கட்சி மட்டும் தான் இரவு 10 மணி வரை நிகழ்ச்சியை நடத்த முடியும்.
திருக்கை மீன் வால் முள்ளால், பெரியாரைத் தாக்குவதற்கு காலிகள் காத்திருந்தனர்!
இரண்டு ஆண்டுகள் கழித்து, 1956 இல், பழைய இராமநாதபுரம் மாவட்டத்தில் வழக்குரைஞர் சிவகங்கை சண்முகநாதன் தலைவராக, காரைக்குடி என்.ஆர்.சாமி செயலாளராக இருந்தனர். அந்தக் கூட்டத்தில் பெரியார் 3 மணி நேரம் பேசினார். கூட்டம் முடிந்து பெரியார் செல்லும் பாதையைத் தெரிந்து கொண்டு, திருக்கை மீன் வால் முள்ளால், பெரியாரைத் தாக்குவதற்கு காலிகள் காத்திருந்தனர். இதை அறியாத பெரியார் கடைசி நேரத்தில் பாதையை மாற்றிக் கொண்டு சென்று விட்டார். ஆனால், கூட்டம் முடிந்து பெரியார் சென்றிருக்க வேண்டிய பாதையில் சென்ற நமது இயக்கத் தோழர்களை, அதே திருக்கை மீன் வால் முள்ளால் தாக்கியிருக்கிறார்கள். தோழர்கள் இரத்தம் சிந்தி இருக்கின்றனர். அதேபோன்று, 1972 இல் கடலூரில் ஒரு நிகழ்வு நடைபெற்றது. அதைத்தான் ‘செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்’ என்றார் கவிஞர் கருணானந்தம்.
திராவிடர் இயக்கம் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக நெருப்பாற்றில் நீந்தி வந்த இயக்கம்!
1944இல், பெரியார் கூட்டத்தில் கடலூரில் பாம்பை விட்டார்கள். அதே கடலூரில் 1972 இல் பெரியாருக்கு சிலை வைத்தார்கள். பாம்பைப் போட்டதற்கு பத்தாயிரம் ரூபாய் தருகிறோம் என்று அன்றைக்குத் தந்தார்கள். அதேபோல, திருக்கைவால் மீன் முள்ளால் தாக்கிய இந்த ஊரில் தான் ‘பெரியார் உலகம்’ நன்கொடையாக, 35 லட்சம் ரூபாய் தந்திருக்கிறார்கள். திராவிடர் இயக்கம் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக நெருப்பாற்றில் நீந்தி வந்த இயக்கம். இதை இன்றைய இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்’’ என்று கூறியதும், மக்கள் உணர்ச்சி வசப்பட்டு கைதட்டினர்.
சுயமரியாதைச் சுடரொளிகள் போட்டுத் தந்த மேடை!
மானமிகுவாளர்கள் ஏ.எஸ்.ஆர்.தங்கராசா, கருப்புத் துண்டு அ.மாரியப்பன், ஆர்.பி. ஆதிநாராயணன், செல்வமீனா, மா. துரைசாமி, தையலர் துரைராஜ், துளசிமணி, அங்கமுத்து, சங்கமுத்து, வேலாயுதம், செந்தட்டிக்காளை, கணபதி, காளியப்பன், பழக்கடை மாடசாமி, சேதுராமலிங்கம், மம்சாபுரம் லெனின், மருத்துவர் மாறன், மருத்துவர் ஓ.எம்.பாலன், முகவூர் பன்னீர்செல்வம், தமிழ்மணி, போ.சு.நடராஜன், சோ.சந்திரன் ஆகியோர் ராஜபாளையம் பகுதியின், சுயமரியாதைச் சுடரொளிகளாவர். அவர்களின் படங்கள் அடங்கிய பதாகை மாநாட்டில் வைக்கப்பட்டிருந்தது.
கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், அனைவர் முன்னிலையிலும் பதாகையைத் திறந்து வைத்தார். அவர் தமது நிறைவுரையில் அவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக நினைவுகூர்ந்து பேசினார். ‘‘அத்தகைய சுயமரியாதைச் சுடரொளிகள் போட்டுத்தந்த மேடையில் தான் (அடித்தளத்தில் தான்) நாம் பேசிக்கொண்டிருக்கின்றோம்’’ என்றும், உணர்வுப் பூர்வமாக அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
(ராஜபாளையம் மாநாடு, 20.08.2026)
‘‘இந்து மதம் எங்கே போகிறது?’’
தொடர்ந்து, ‘‘20.07.1982 இல், மம்சாபுரத்தில் மருத்துவர் பாலன் மருத்துவமனை திறப்பு விழாவுக்குச் சென்ற நான் தாக்கப்பட்டு, இரத்தம் வடிய வடிய அதே மருத்துவமனையில் முதல் மருத்துவப் பயனாளியாக சேர்ந்து, சிகிச்சை எடுத்துக் கொண்டு, ஒத்துக் கொண்ட நிகழ்ச்சியில் பேசிய முடித்து விட்டுத்தான் சென்றேன்’’ என்று 44 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியை சொல்லிவிட்டு, ‘‘நாங்கள் என்ன தவறு செய்தோம்? எங்களால் பொதுச் சொத்துக்களுக்கு ஊறு நேர்ந்தது உண்டா?’’ என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து அவரே, ‘‘வேறு எந்தக் காரணமும் இல்லை, நாங்கள் மனுதர்மத்தை எதிர்க்கிறோம். அவ்வளவுதான். அந்த மனுதர்மம் என்ன சொல்கிறது? ‘சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை கொடுக்காதே’ என்கிறது. இதை ஏற்றுக்கொள்ள வேண்டுமா? திராவிடர் கழகம் என்பது, காவல் நிலையம்; தீயணைப்புத்துறை; மருத்து வமனையைப் போன்றது. அந்தத் தேவை இருக்கும் வரையில் எங்கள் பணிகளை நாங்கள் தொடர்ந்து செய்வோம்’’ என்று பழைய வரலாற்றைச் சொல்லிவிட்டு, மனுதர்மத்தின் தோற்றுவாய் பற்றி குறிப்பிட வந்தவர், அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய, ‘‘இந்து மதம் எங்கே போகிறது?’’ என்ற புத்தகத்தில் இருந்து ஆரியர்கள் மனுதர்மத்தை கொண்டு வந்தனர் என்பதற்கான ஆதாரத்தைப் படித்துக் காட்டி, ‘‘இந்த பேதத்தைச் சுட்டிக்காட்டி அதைப்போக்குவதுதான் எங்கள் பணி. அதைச்சொல்லத்தான் வந்தோம்’’ என்று கூறி, தனது உரையை நிறைவு செய்தார். நிறைவாக, மாவட்ட துணைத் தலைவர் ப.மனோகரன் நன்றி கூறி, நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
பங்கேற்றோர்
தொடக்கத்தில், மாவட்டத் துணைத் தலைவர், பூ.சிவக்குமார் மந்திரமா? தந்திரமா? என்ற அறிவியல் விளக்க நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினார். பொதுக்குழு உறுப்பினர் இரா.அழகர், மாவட்ட இளைஞரணித் தலைவர் ச.சுந்தரமூர்த்தி, சிவகாசி மாநகரத் தலை வர் மா.முருகன், திருவி ஒன்றிய அமைப்பாளர் கு.போத்திராஜ், வத்திராயிருப்பு ஒன்றிய தலைவர் மு.சீனி, மாவட்ட மகளிரணித் தலைவர் ஆ.சாந்தி, அருப்புக்கோட்டை ஒன்றியச் செயலாளர் இரா.முத்தையா, அருப்புக்கோட்டை ஒன்றியத் தலை வர் மா.முத்துக்குமார், பொதுக்குழு உறுப்பினர் வெ.புக ழேந்தி, மாவட்ட துணைச் செயலாளர் வெ.முரளி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் க.திருவள்ளுவர், சிவகாசி மாநகரச் செயலாளர் து.நரசிம்மராஜ், திருவி நகரச் செயலாளர் இரா.கோவிந்தன், சிவகாசி ஒன்றியச் செயலாளர் பெ.கண்ணன், சிவகாசி நகர இளைஞரணிச் செயலாளர் மு.ஜீவா முனீஸ்வரன், வத்திராயிருப்பு ஒன்றியச் செயலாளர் பா.நடராஜன், அருப்புக்கோட்டை நகரச் செயலாளர் பா.இராஜேந்திரன், அருப்புக்கோட்டை நகரத் தலைவர் மு.முனியசாமி, சிவகாசி மாநகர இளை ஞரணித் தலைவர் மணிமாறன் உள்ளிட்ட ஏராளமான இயக்கத் தோழர்களும் பொதுமக்களும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த தோழர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
