வரலாற்றை அரிக்கும் காவிக் கரையான்கள்

சிறப்பு புத்தக சலுகைகள்

இந்திய வரலாற்றை வேத நாகரிகத்தின் விளைச்சலாகவும், ஆரியர்களை இந் நாட்டின் பூர்வ குடிகள் போலவும் காட்ட முயற்சிக்கும் ஆர்.எஸ்.எஸ்.சின் கோயபல்ஸ் பிரச்சாரத்திற்கு ஏற்ப, கல்விக் கொள்கையிலும், பாடத் திட்டத்திலும் கைவைக்கும் வேலையை நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தொடர்ந்து செய்துவருகிறது. அதற்குப் பவிசான பூச்சுகளை, வார்த்தைகளாக அள்ளித் தெளிப்பார்கள். தேன்பாகு கலந்த  நச்சு எழுத்துகளால், இந்தியாவின் கலாச்சார வேர்களைக் காக்க வந்திருப்பதாகப் பம்மாத்து செய்வார்கள். இந்திய அறிவு மரபை (Indian Knowledge System) மேற்கத்திய பார்வையிலிருந்து தனித்துப் பிரித்தெடுத்து, வறுத்துக் கொடுக்கவிருப்பதாக நாக்கைச் சொட்டிக் காட்டுவார்கள்.

அதன் ஒரு பகுதியாக மீண்டும் என்.சி.இ.ஆர்.டி என்னும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றத்தின் சார்பில் 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான அரசியல் அறிவியல் பாடநூலை உருவாக்கும் குழுவைத் தற்போது மாற்றி அமைத்துள்ளனர்.

கருநாடகாவைச் சேர்ந்த ‘நிட்டே’ (Nitte) நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும், கல்வியாளரும் அரசியல் ஆய்வாளருமான சந்தீப் சாஸ்திரி வழிநடத்தும், இப் பாடநூல் உருவாக்கும் குழுவின் உறுப்பினர்களில், ஆர்.எஸ்.எஸ்.-இன் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்துடனும் பாஜகவுடனும் தொடர்பு கொண்ட நான்கு பேர் கல்வியாளர்கள், கல்விசார் நிபுணர்கள் என்ற பெயரில் இடம் பெற்றுள்ளனர்.

தற்போது கல்வி அமைச்சகத்தில் மூத்த ஆலோசகராகப் பணியாற்றும் யதுநாத் தேஷ்பாண்டே என்பவர், ஏ.பி.வி.பி. அமைப்பில் நீண்டகாலப் பின்னணியைக் கொண்டவர். மகாராட்டிராவிற்கான அந்த அமைப்பின் மாநில இணை அமைப்புச் செயலாளராகவும், பின்னர், ஏ.பி.வி.பி.யின் மும்பை-கொங்கன் பிரிவில் அமைப்புச் செயலாளராகவும் பணியாற்றியவர் என்பதுடன், தற்போது பாஜக-வின் அரசியல் ஆலோசகராக இருப்பதாக ‘லின்க்ட் இன்’ இணையதளத்திலுள்ள அவரது சுயவிவரக் குறிப்பு குறிப்பிடுகிறது.

ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரும் பிரச்சாரகருமான விநாயக் விஸ்வநாத் என்பவரால் 1962-இல் தொடங்கப்பட்ட புனேவைச் சேர்ந்த ‘ஞான பிரபோதினி’ எனும் ஆர்.எஸ்.எஸ். இணைப்பு நிறுவனத்துடன் நீண்ட காலத் தொடர்பைக் கொண்டுள்ள பிரசாந்த் திவேகர் என்பவர் மற்றொருவர்.  தனது அணுகுமுறை “பாரதிய கல்வித் தத்துவத்தில் வேரூன்றியது” என்று திவேகர் குறிப்பிட்டுள்ளார்.  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் அரசியல் ஆய்வுகள் மையத்தின் பேராசிரியரான வந்தனா மிஸ்ரா, ஏ.பி.வி.பி. அமைப்பின் முன்னாள் தேசியச் செயலாளராக இருந்தவர் ஆவார்.

ஜே.என்.யூ-வின் ஒப்பீட்டு அரசியல் மற்றும் அரசியல் கோட்பாட்டு மய்யத்தின் இணைப் பேராசிரியரான ரவி ரமேஷ் சந்திர சுக்லா, ஆர்.எஸ்.எஸ். உடன் தொடர்புடைய ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெமாக்ரடிக் லீடர்ஷிப் – ராம்பாவ் மல்கி பிரபோதினி’ வெளியிடும் ‘இந்தியன் ஜர்னல் ஆஃப் டெமாக்ரடிக் கவர்னன்ஸ்’ இதழின் ஆசிரியர் குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார். 2021-ஆம் ஆண்டில் தேவேந்திர ஃபட்னாவிஸ் அதன் தலைவராகப் பொறுப்பேற்றார். கலாச்சார மற்றும் ஆன்மிகத் தேசியத்தை மய்யமாகக் கொண்ட ஆய்வுகளையும் மேற்கொள்பவராம் இவர். “பாரதத்தின் ஆன்மிக மற்றும் கலாச்சார தேசியத்தை வடிவமைப்பதில் திருவிழாக்களின் பங்கு: கும்ப மற்றும் மாக் மேளா குறித்த ஓர் ஆய்வு” என்ற தலைப்பிலான, அய்.சி.எஸ்.எஸ்.ஆர். நிதியுதவி பெறும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் திட்டத்தின் முதன்மை ஆய்வாளராகவும் அவர் செயல்படுகிறார்.

“கலாச்சார வேரூன்றல், இந்திய அறிவு அமைப்புகள், உள்ளடக்கிய தன்மை, கல்வித் தொழில்நுட்பம், மதிப்பீடு போன்ற பல்வேறு முக்கிய அம்சங்கள் பாடப்புத்தகங்களில் ஒருங்கிணைக்கப்படுவதைக் கண்காணிக்க, ஒவ்வொரு பாடப்புத்தகமும் மறுஆய்வு செய்யப்படும்,” என்று என்.சி.இ.ஆர்.டியின் இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லானி தெரிவித்துள்ளார்.

எல்லோரையும் உள்ளடக்கிய தன்மையைக் குறித்துப் பேசுகிறார் என்.சி.ஆர்.டி. இயக்குநர், ஆனால்,  இக் குழுவில் பெயருக்கு ஒரே ஒரு பள்ளி ஆசிரியர் டயானா இஸபெல் மட்டுமே சிறுபான்மைச் சமூகத்தவர். இஸ்லாமியர் எவரும் இல்லை. ‘குப்தா’க்கள், ‘கண்ட்பால்’கள், ‘பிரபு’க்கள் உள்பட பெரும்பெரும் செல்வாக்கு மிக்கோர் கல்வியாளர்கள் என்னும் பெயரில் இடம்பெற்றிருக்கும் ஒரு குழுவில், ஒரு பள்ளி ஆசிரியரின் குரல் என்ன செய்ய முடியும்?

இந்திய வரலாற்றைத் ‘திரித்து’ எழுத வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ்.சின் நெடு நாளைய வேட்கை. பள்ளிப் பருவத்திலேயே மதவாத நச்சுக் கருத்துகளையும், இந்துத்துவ சார்பு வரலாற்றுத் திரிபுகளையும், புரட்டுகளையும் வரலாறாகக் காட்டுவதற்குத் தான் வாஜ்பேயி காலம் முதலே இந்த வேலைகள் நடந்துவருகின்றன. பாடத் திட்டங்களில் மட்டுமல்லாமல், மக்கள் மனங்களிலும் அதனை உருவாக்க வேண்டும் என்பதற்காக, ஏராளமான பொய்ச் செய்திகளுடனும், புரளிகளைப் பரப்பும் வகையிலும் திரைப்படங்களையும் உருவாக்குகின்றனர். அதற்காகக் கோடிக்கணக்கான ரூபாய் செலவழிக்கப்படுகிறது. பாபர் மசூதிக்குப் பிறகு அவர்களின் அடுத்த இலக்கான தாஜ்மகாலை நோக்கிப் பாய, ‘தி தாஜ் ஸ்டோரி’ என்ற பெயரில் ஒரு படத்தை எடுத்து, அதில் தாஜ் மஹாலின் வரலாறு குறித்து உண்மைக்கு மாறான தகவல்களைப் பரப்பி இருப்பதுடன், குழப்பமூட்டும் கேள்விகளையும் போட்டு வைப்பதன் மூலம், ஒரு கருத்துப் பரப்பலைத் தொடங்குகின்றனர்.

இந்தியா என்பதை இந்து தேசமாகக் கட்டமைத்து, அதை அடுத்த தலைமுறையின் மூளைகளில் சாயமேற்றத் தான் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். வேலை செய்து கொண்டிருக்கிறது. இதிலிருந்து தமிழ்நாடும், இந்தியாவும் தப்பிப் பிழைக்க, வரலாற்று அறிவும், சமூகப் புரிதலும் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் ஊட்டப்பட வேண்டும். அதற்குச் சமூக இயக்கங்கள், முற்போக்காளர்கள் தான் பணியாற்ற முடியும். அதனையும் தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு கல்லூரிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி, கண்டனம் எழுந்ததும் திரும்பப் பெறுகிறது என்றால், நமக்கு இருக்கும் வேலை எத்தகையது என்பதை, சமூகநீதிச் சிந்தனையாளர்கள், மதச்சார்பற்ற நாட்டைக் காப்பாற்ற விரும்புவோர் உணர வேண்டுவது  மிக அவசியமாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *