கோவை, ஆக. 20- கோவையில் ரூ.300 கோடி மதிப்பில் மிகப் பெரியதாக அமைக்கப்பட்டுள்ள ‘தந்தை பெரியார் அறிவுலகம்’ நூலகம், கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையிலும் திறக்கப்படாமல் இழுபறியில் உள்ளது. இதனால், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி யுள்ளனர்.
தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை மற்றும் நூலகத் துறை சார்பில், கோவை காந்தி புரத்தில் சுமார் 6 ஏக்கர் 98 சென்ட் பரப்பளவில் இந்த நூலகம் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 1.98 லட்சம் சதுர அடியில், தரைத் தளத்துடன் 7 தளங்களைக் கொண்டுள்ள இக்கட்டடத்தின் தளவாரியாக உள்ள வசதிகள்:
தரைத் தளம்: நவீன ஆடிட்டோரியம் மற்றும் அறிவியல் மய்யம். 1-ஆம் தளம்: அறிவியல் மய்யம். 2-ஆம் தளம்: குழந்தைகள் பிரிவு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான நூலகம். 3-ஆம் தளம்: மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பிரிவு மற்றும் தலைமை நூலகர் அலுவலகம். 4, 5-ஆம் தளங்கள்: தமிழ் புத்தகப் பிரிவுகள், சொந்தப் புத்தகங்களை வைத்துப் படிக்கும் பகுதி மற்றும் இன்குபேஷன் சென்டர்.
6-ஆம் தளம்: பருவ இதழ்கள் பிரிவு மற்றும் இன்குபேஷன் சென்டர். 7-ஆம் தளம்: ஆங்கிலப் புத்தகப் பிரிவு, டிஜிட்டல் நூலகம் மற்றும் அறிவியல் மய்யம். இங்கு ரூ.50 கோடி மதிப்பில் புத்தகங்கள் மற்றும் இ-புத்தகங்களும், ரூ.5 கோடி மதிப்பில் கணினிகள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
முந்தைய ஆட்சியின் இறுதியில் பணிகளை விரைந்து முடிக்க உத்தர விடப்பட்ட நிலையில், ஆட்சி மாற்றத்திற்குப் பின் இதன் திறப்பு விழா தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது.
சட்டமன்றத்தில் நடைபெற்ற பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலு, “கோவை பெரியார் நூலகப் பணிகள் 95 சதவீதம் முடிவடைந்த நிலையில், புதிய அரசு பொறுப்பேற்று 3 மாதங்களாகியும் இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பது ஏன்?” என கேள்வி எழுப்பினார். இருப்பினும், இந்த வினாவுக்கு அரசு தரப்பில் இருந்து முறையான விளக்கங்கள் எதுவும் அளிக்கப்படவில்லை.
தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகள் நடைபெற்று வருவதால், நூலகத்தை உடனடியாகத் திறக்க வேண்டும் என இளைஞர்களும் மாணவர் களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில்:
“நூலகத்தின் அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறை வடைந்துவிட்டன. சுமார் 80,000 புத்தகங்கள் கொண்டுவரப்பட்டு கட்டடம் முழுமையாகத் தயார் நிலையில் உள்ளது. அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காகக் காத்திருக்கிறோம். வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு இந்த நூலகம் திறக்கப் பட வாய்ப்புள்ளது,” என்று தெரிவித்தனர்.
அரசின் அறிவிப்பு வராததால், இந்த பெரிய நூலகம் பயன்பாட்டிற்கு வரும் நாளை எதிர்பார்த்து கோவை மக்கள் மற்றும் மாணவர்கள் காத்திருக்கின்றனர்.
