நீட் தேர்வு, உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு ஆகியவற்றை முற்றாக ஒழிக்க வலியுறுத்தி இரு சக்கர வாகனப் பரப்புரைப் பயணம் உறுதியாக நடைபெறும்!

18 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

1929 இல் பெரியாருக்கு எதிர்ப்பு இருந்த அதே நெல்லையில், 1946 இல் வரவேற்பு! ஜாதி போதை, ஆணவக் கொலைகள் கூடாது என்று பிரச்சாரம் செய்ய வந்திருக்கிறோம்! பெரியார் கொள்கை தோற்காது, நீர்த்துப் போகாது!

நெல்லை,  ஆக.19  1929 இல் பெரியாருக்கு எதிர்ப்பு இருந்த அதே நெல்லையில், 1946 இல் வரவேற்பு! ஜாதி போதை, ஆணவக் கொலைகள் கூடாது என்று பிரச்சாரம் செய்ய வந்திருக்கிறோம்! பெரியார் கொள்கை தோற்காது, நீர்த்துப் போகாது! நீட் தேர்வு, உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு ஆகியவற்றை முற்றாக ஒழிக்க வலியுறுத்தி இரு சக்கர வாகனப் பரப்புரைப் பயணம் உறுதியாக நடைபெறும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

செய்தியாளர்களுக்குப் பேட்டி!

இன்று (19.8.2026) திருநெல்வேலியில் ‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்’ என்ற தலைப்பில் நடைபெறும் திறந்த வெளி மாநாட்டில் பங்கேற்கச் சென்ற  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

சுயமரியாதை இயக்கத்திற்கு ஆதரவு காட்டுவதைக் கண்டு சிலர் அஞ்சினார்கள்!

கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்னால் சுய மரியாதை இயக்கத்தைத் தந்தை பெரியார் அவர்கள் தொடங்கியபோது, நெல்லை போன்ற வட்டாரங்களிலே மட்டுமல்ல, தமிழ்நாட்டிலேயே அது ஒரு புதிய இயக்க மாக, மற்றவர்கள், பெரும்பாலானோர் நினைக்கிற கருத்துகள், நம்புகிற கொள்கைகள் இவற்றிற்கெல்லாம் மாறாக இருக்கிறது என்பதை வைத்து, மக்கள், குறிப்பாக பாமர மக்கள், படித்தவர்கள் எல்லோருமே அந்த இயக்கத்திற்கு ஆதரவு காட்டுவதைக் கண்டு சிலர் அஞ்சினார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் ஒருமுறை இங்கே வந்தபோதுகூட, பெரியாரை வரச் சொல்லிவிட்டு, வரவேற்பதற்குக்கூட ஆள் இல்லை என்ற நிலை இருந்தது.

வரவேற்க யாரும் வரவில்லை!

பெரியாரும், கி.ஆ.பெ.விசுவநாதம் இரண்டு பேர் மட்டுமே அங்கு இருந்தார்கள். அப்படி ஒரு சூழ்நிலை இருந்தது.

‘‘யாரும் வரவில்லை’’ என்றவுடன், பெரியார் அவர்கள் ஒரு ஜட்கா வண்டியை ஏற்பாடு செய்தார். போகிற வழியில், ‘‘கூட்டம் எங்கே நடைபெறுகிறது?’’ என்று ஜட்கா வண்டிக்காரர் கேட்கிறார். அந்தக் கூட்டத்தில் ராமசாமி நாயக்கர் பேசுறார் என்று சொல்றாங்க’’ என்று ஜட்கா வண்டிக்காரர் சொல்கிறார்.

‘‘அப்படியா? நான்தான் அவர்!’’ என்கிறார் பெரியார்.

‘’என்னைப் பற்றி ஒரு நோட்டீஸ் போட்டிருக்காங்க. அது என் கவனத்திற்கு வந்தது. ‘அவர் சாமி இல்லை என்கிறவர். புராணம், சாஸ்திரங்கள் எல்லாம் தப்புன்னு சொல்கிறவர்’ என்ற ஒரு நோட்டீஸ் பார்த்தேன். அதுக்காகத்தான் விளக்கம் சொல்வதற்காகத்தான் நான்  வந்திருக்கேன்’’ என்றார்.

என்னுடைய நிலையை விளக்குவதற்காகத்தான் வந்திருக்கேன்!

‘‘நான் சொல்லவில்லை. அவரைப் பற்றி இவர் சொல்றார், இவரைப் பற்றி அவர் சொல்லியிருக்கார். இது எல்லாவற்றையும் நான் எடுத்துக் கண்டித்துச் சொல்லும்போது, எல்லாவற்றையும் தப்புன்னு சொல்லக்கூடாது என்று உங்களுக்கு விளக்கிச் சொல்வதற்காகவும், என்னுடைய நிலையை விளக்குவதற்காகவும்தான் வந்திருக்கேன். இதை நீங்கள் ஏற்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. கேட்கிறவர்கள் கேளுங்க, விட்டுட்டுப் போறவங்க போங்கள் என்று சொன்னார்’’ தந்தை பெரியார் அவர்கள்.

இது 1929 ஆம் ஆண்டு நடந்த நிகழ்வு. ஆதாரத்தோடு சொல்லுகிறேன் நான்.

அதே நெல்லையில், 1946 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு வரலாற்று நிகழ்வு!  அது என்னவென்றால், பேட்டை யில் மாநாடு. அந்த மாநாட்டிற்கு நான் வந்திருந்தேன். என்னுடைய ஆசிரியர் திராவிடமணி.

1946 இல்,  நெல்லை நகராட்சி சார்பில்
தந்தை பெரியாருக்கு வரவேற்பு!

அப்போது இயக்கத்தில் பெரியார், அண்ணா, சம்பத், நாவலர்  எல்லோரும் வந்தார்கள். அப்படி  வந்தபோது, குமாரவிலாஸ் உரிமையாளர்தான்  மாவட்டத் தலைவர், வரவேற்புக் குழுத் தலைவர். பெரிய அளவில் அந்த நிகழ்ச்சிகள் எல்லாம் நடந்தன. அன்றைக்கு, வரவேற்பு நெல்லை நகராட்சியில்! அதாவது, 1929 இல் யார் ஆதரவு இல்லை என்று சொன்னார்களோ, 1946 இல்,  நெல்லை நகராட்சி சார்பில் தந்தை பெரியாருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.

அந்த மாநாட்டில், நான் 13 வயது சிறுவனாகப் பேசி இருக்கிறேன். அதுகுறித்த விளம்பரமே பத்திரிகையில் போட்டிருந்தார்கள். ‘சிறுவன் வீரமணி பேசுவார்’ என்று!

அதற்குப் பிறகு, இந்த இயக்கம் வளர்ந்த பிறகு,  1929-லிருந்து இந்த இயக்கம், பெரியாருடைய கொள்கைகள் நெல்லைச் சீமையிலேயும்,  ஒடுக்கப்பட்ட மக்கள், எல்லா மக்கள் பகுதிகளிலேயும், பொதுவாக இருக்கிறவங்களையும், வ.உ.சி போன்றவர்களே அய்யாவை வரவேற்றுச் சொல்லக்கூடிய அளவிலும், ஒரு பெரிய மாறுதலை ஏற்படுத்தியது. அதை விளக்கிச் சொல்ல வேண்டும்.

அதேமாதிரி பிறகு கூட, சூரி, சேர்மனாக இருந்த போதும், மற்றவர்கள் இருந்தபோதும்கூட, அய்யாவுக்கு இரண்டு முறை வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள்.

‘பெரியார் பேருந்து நிலையம்’
என்றுதான்  பெயர்!

அய்யா மறைந்த பிற்பாடு, இன்றைக்குப் பேருந்து நிலையத்திற்கே ‘பெரியார் பேருந்து நிலையம்’ என்றுதான்  பெயர் வைத்திருக்கிறார்கள்.

ஆகவே, ஒரு கொள்கை, அதில் உறுதி, தெளிவு, தொடர்ந்து எதிர்ப்பு வந்தாலும், அந்த எதிர்ப்பைத் தாண்டி நிற்கக்கூடிய அளவிற்குத் திடசித்தம், இது அத்தனையும் படைத்தவர் பெரியார்.

மாணவர்களுடைய
எதிர்காலத்தை கருத்தில் கொண்டு…

அதை இளைஞர்கள் மத்தியிலே எடுத்துச் சொல்லி, இன்றைய சூழ்நிலையில் பதவி ஆசைக்காக கட்சி மாறுதல், கொள்கையைப் பற்றி கவலைப்படாத பொதுவாழ்க்கை, இவற்றையெல்லாம் எடுத்துச்சொல்லி, போதை ஒழிப்பு எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் மற்ற போதைகளான  ஜாதி போதை, ஜாதி வெறித்தனம், ஜாதி அடையாளப்படுத்துவது, ஜாதி ஆணவக் கொலைகள்  இருக்கக்கூடாது என்று பிரச்சாரம் செய்வதற்காகவும், அதேபோல் நம்முடைய மாணவர்களுடைய எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் இங்கே பிரச்சாரத்திற்காக வந்திருக்கின்றோம்.

நீட் தேர்வின் கொடுமையைப்பற்றி உணர்ந்து  முதன்முதலில் தமிழ்நாடுதான் எதிர்த்தது. திராவிடர் கழகம்தான் சொன்னது. தி.மு.க. ஆட்சி அதை உறுதியாக எடுத்துச் சொல்லி, மற்ற மாநிலங்களுக்கெல்லாம் கூட, வழிகாட்டியது.

‘நீட் தேர்வு, நல்ல தகுதியை உருவாக்குவதுதானே’ என்று சொல்லி, மருத்துவப்படிப்பைத் தடுத்தார்கள். இன்றைக்கு அதன் ஆபத்து இந்தியா முழுவதும் உணரக்கூடிய அளவுக்கு வந்து, டில்லி தலைநகரத்தையே குலுக்கக்கூடிய அளவுக்கு வந்துள்ளது. ஆனால், உயர்ஜாதி ஆதிக்கம் உள்ள ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. விடாப்படியாக  நீட்டைப் பிடித்துக் கொண்டிருக்கிறது.

மாணவர்களின் தொடர் போராட்டத்தின் காரணமாக ஒன்றிய  அமைச்சரை மாற்றினார்கள்!

என்ன நோக்கத்திற்காக நீட் தேர்வைக் கொண்டு வருகிறோம் என்று சொன்னார்களோ, அந்த நீட் தேர்வினுடைய நோக்கம் முழுக்கத் தோல்வி அடைந்தது என்பதெல்லாம் தெரிந்த பிற்பாடு கூட, நீட்டைத் தொடர்கிறார்கள். மாணவர்களின் தொடர் போராட்டத்தின் காரணமாக ஒன்றிய  அமைச்சரை மாற்றினார்கள்.

அமைச்சரை மாற்றினால் மட்டும் போதாது. நீட் தேர்வே ஒழிக்கப்படவேண்டும். ஆகவேதான், இதை சுட்டிக்காட்ட வேண்டும்.

அதேமாதிரி பொருளாதார அடிப்படையில்,  தனியாக உயர்ஜாதிக்கார ஏழைகள், EWS- என்று  சொல்லி, அவர்களுக்கு இட ஒதுக்கீடு. இதையெல்லாம் எடுத்து சொல்வதற்காகத்தான் இங்கே வந்திருக்கின்றோம்.

காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்!

திராவிடர் கழகம் ஒரு பிரச்சார இயக்கம். அந்தப் பிரச்சார இயக்கம், அதனுடைய பணியைச் செய்வதற்காகத்தான் நாங்கள். எங்கள் தோழர்கள் கூட்டத்தை நடத்தவேண்டும் என்று, காவல்துறையினரிடம் அனுமதி கேட்டார்கள். உடனே அதற்கு அனுமதி மறுத்தார்கள்.

என்ன காரணத்தினால் அனுமதி மறுத்தார்கள்? என்று தெரியவில்லை.

சில நாள்களுக்கு முன்புகூட இப்பொழுது ஜோசப் விஜய் அவர்களுடைய தலைமையில் இருக்கிற த.வெ.க. அரசு, சட்டமன்றத்தில் நீட் தேர்வை எதிர்த்துத் தீர்மானம் போட்டார்கள்.

ஏற்கெனவே தி.மு.க. ஆட்சியில், சட்டம் கொண்டு வந்து போராடியிருக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பா.ஜ.க.வை தவிர, எந்தக் கட்சியும் நீட் தேர்வு இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை.

நீட் தேர்வுபற்றி வடநாட்டிலும்
இப்போது தெளிவு ஏற்பட்டு வருகிறது!

அந்த அளவுக்குத் தமிழ்நாடு பக்குவப்பட்டது. தமிழ்நாடு புரிந்து கொண்டது போல, வடநாட்டிலும் இப்போது தெளிவு ஏற்பட்டு வருகிறது.

எனவே, இதைச் சொல்ல வேண்டும் என்பது, வழமையாக நாங்கள் செய்கிற பிரச்சாரம். பெரியாருடைய கொள்கைகள் தோற்றுப் போகாது, நீர்த்துப் போகாது என்பதைச் சொல்ல வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.

என்ன காரணத்தினாலே தெரியவில்லை, காவல்துறையினர்  அனுமதி மறுத்துவிட்டார்கள்.

இதில் மிக முக்கியமானது என்னவென்றால், பேச்சுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை என்பது எல்லா கட்சிக்கும் உரிமை இருக்கிறது.

தந்தை பெரியார்!

தந்தை பெரியார் சொல்வார், ‘‘நான் பேசுவதை நீங்கள் ஏற்றுக்கொள்ளாமல், தாராளமாகத் தள்ளுங்கள். என் கருத்தை மறுப்பதற்கு எப்படி உங்களுக்கு முழு உரிமை உண்டோ, அதுபோல சொல்வதற்கு எனக்கு முழு உரிமை உண்டு’’ என்றார்.

ஆகவே, அப்படிப்பட்ட ஓர் இயக்கம். இது ஒரு வன்முறை இயக்கம் அல்ல; அல்லது பதவிக்குப் போகிற இயக்கம் அல்ல. எங்களுடைய சக தோழர்கள், யார் பதவியில் இருந்தால், மக்களுக்குச்  சிறப்பாக இருக்குமோ, அவர்களை அடையாளம் காட்டுவதுதான் எங்களுடைய பணி.

எனவேதான், இந்தப் பணியைச்  செய்வதற்காக இங்கே பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தபோது திருநெல்வேலி காவல்துறையினர் அதைத் தடுக்கி றார்கள்? அதற்கு என்ன பின்னணி என்று தெரியவில்லை.

ஏற்கெனவே, தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வின் கொடுமையை எடுத்துச் சொல்வதற்காக இரு சக்கர வாகனப் பரப்புரைக்கு ஏற்பாடு செய்திருந்தோம். கடைசி நேரத்தில் அந்தப் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுத்தது காவல்துறை. அது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, அவ்வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இரு சக்கர வாகனப் பிரச்சாரத்திற்குத்
தடை விதித்தார்கள்
!

பிரச்சாரத்தை இடைவிடாமல் செய்ய வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து நாங்கள் அதனைச் செய்து வருகிறோம். ஏனென்றால் நேற்று நடந்த விஷயத்தை, இன்றைக்கு மறந்துவிடுவார்கள் மக்கள்! அதற்காக அந்தப் பிரச்சாரத்தைத் தொடருகிறோம்;  அ.தி.மு.க. அரசிலும் எங்கள் பிரச்சாரத்திற்கு அனுமதி கொடுத்தார்கள். தி.மு.க. அரசிலும் இருசக்கர வாகனப் பிரச்சாரத்திற்கு அனுமதி கொடுத்தார்கள்.

இப்பொழுது நடைபெறுகின்ற ஆட்சி, இரு சக்கர வாகனப் பிரச்சாரத்திற்குத் தடை விதித்தார்கள்.

தமிழ்நாடு முழுவதும் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து,  நீட் தேர்வு என்பது மோசடி, நம்மு டைய பிள்ளைகள் மருத்துவர்களாக, டாக்டர்களாக ஆவதற்கு வழி இல்லாத ஒன்று.  அதை மக்களுக்கு விளக்க வேண்டும். இதுவரையில், மாணவர்கள், பெற்றோர்கள்  150–க்கும் மேற்பட்ட தற்கொலைகள் நடந்திருக்கின்றன.

ஆகஸ்ட்  22 ஆம் தேதி தொடங்கி,
ஆகஸ்ட்  25 ஆம் தேதி வரை!

இவ்வளவு கொடுமையான ஒன்றை, வீண் பிடிவாதத்தைப் பிடித்துக்கொண்டு, யோக்கியதை, திறமை, அதிகாரம் இல்லாதவர்கள் அதை நடத்துகிறார்கள் என்று. மக்கள் மத்தியிலே விழிப்புணர்வு பிரச்சாரம் (Awareness) செய்து, அதை உண்டாக்க வேண்டும் என்பதற்காகத்தான், மொத்தம் ஆறு குழுக்கள். ஆகஸ்ட்  22 ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட்  25 ஆம் தேதி வரையில் நான்கு நாள்கள் இரு சக்கர வாகனப் பிரச்சாரம் நடைபெறவிருக்கிறது.

ஆறு குழுக்களாக
இரு சக்கர வாகனப் பிரச்சாரம்!

அதில் ஆறு குழுக்கள். முதல் குழு, சென்னை யிலிருந்து  பல்வேறு நகரங்களில் வழியே தாம்பரம் வரை,

திருவண்ணாமலை முதல் – ஆத்தூர் வரை,

திருப்பூர் முதல் – கோபிசெட்டிபாளையம் வரை,

திண்டிவனம் முதல் – புதுச்சேரி வரை,

மன்னார்குடி முதல் – பட்டுக்கோட்டை வரை

திருமங்கலம் முதல் – தென்காசி வரை நடை பெறவிருக்கிறது.

தமிழ்நாட்டினுடைய அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று, நீட் தேர்வின் கொடுமையைப்பற்றி விளக்கிச் சொல்வதற்காக கடந்த மாதம் ஜூலை 30 ஆம் தேதி தொடங்கி, 2 ஆம் தேதிவரை நடைபெறவிருந்த இரு சக்கர வாகனப் பிரச்சாரத்திற்குத் தடை விதித்தார்கள்.

கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்க எந்த அரசாங்கத்திற்கும் உரிமை இல்லை!

அந்தத் தடையை மீறி பிரச்சாரம் செய்யலாம் என்று சிலர் சொன்னார்கள். சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை உண்டாக்க வேண்டாம். நம்முடைய உரிமையை, நாம் நிலைநாட்டுவோம் என்று, உயர்நீதிமன்றத்துக்குச் சென்று திராவிடர் கழகம் தன்னுடைய உரிமையை வலியுறுத்தியது. அரசியலமைப்புச் சட்டப்படி எங்க ளுக்கு உரிமை இருக்கிறது. அதுமட்டுமல்ல, கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்க எந்த அரசாங்கத்திற்கும் உரிமை இல்லை.

உயர்நீதிமன்றம் கண்டிப்பு!

நிபந்தனைகள் விதிக்க அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கிற நியாயமான உரிமையை நீங்கள் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, உயர்நீதிமன்றத்தில்  வழக்குத் தொடுத்தோம். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, ‘ஏன் இதைத் தடுக்க வேண்டும்? எதற்காக நீங்கள் தடுக்க வேண்டும்? தடுப்பது நியாயமல்ல. ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு அனுமதி கொடுக்கிறீர்கள், குறிப்பிட்ட கட்சிக்கு அனுமதி மறுக்கிறீர்கள். இந்த இரட்டை அளவுகோல் எல்லாம் இருக்கக்கூடாது’ என்றெல்லாம் கடுமையாக எச்சரித்த பிற்பாடு, மறுபடியும் கூப்பிட்டு, ‘உங்களுக்கு அனுமதி வழங்குகிறோம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். அந்த வழக்கின் தீர்ப்பு நாளை வரவிருக்கிறது என்கிற தகவல் வெளியாகியிருக்கிறது.

ஆகவே, அதற்கான ஏற்பாடுகளையெல்லாம் நாங்கள் செய்துகொண்டிருக்கின்றோம். தென்கோடி முனையில் இருந்து தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பிரச்சார பயணத்திற்கு வந்திருக்கிறோம்.

அரசியலுக்கு அப்பாற்பட்ட இயக்கம்
திராவிடர் கழகம்!

உங்களுக்கெல்லாம் தெரியும், திராவிடர் கழகம், அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு சமுதாய வளர்ச்சிக்கான, அமைதியை விரும்பக்கூடிய ஓர்  இயக்கமாகும்.

எங்கள் பிரச்சாரத்தைத் தடுப்பது, அதற்குப் பிறகு நாங்கள் அனுமதி வாங்குவது என்பது எங்களுக்குப் பழக்கமான ஒன்றுதான்.

ஆகவேதான், ஊடக நண்பர்களான உங்களிடம் இந்தத் தகவல்களை  முறையாக எடுத்துச் சொல்கிறோம். இதை விளக்கி மாலையிலே சிறப்பாக ‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெறவிருக்கிறது. எப்படி எதிர்நீச்சலில் பெரியார் வென்றார் என்பதற்கான உதாரணத்தை தொடக்கத்தில் நான் சொல்லி இருக்கிறேன்.

எதிர்ப்பு எழுந்த ஊர்களில்,
எங்கள் பிரச்சாரக் கூட்டங்கள்
!

இதுமாதிரி பல ஊர்களில், பிரச்சாரக் கூட்டங்களை நடத்தவிருக்கிறோம்.

மதுரையில் எங்கள் மாநாட்டுப் பந்தல் கொளுத்தப்பட்டது, ஒரு காலத்தில்!

சிவகங்கையில் பெரியார், ஊர்வலம் போகும்போது, செருப்புத் தோரணங்களைக் கட்டியிருந்தார்கள். இப்படி எந்தெந்த ஊர்களில் எல்லாம் எதிர்ப்பு இருந்தது, அந்த ஊர்கள் பின்னாளில் எப்படி மாறியது? எப்படி மற்ற தோழர்கள் வந்தார்கள் என்பதை எல்லாம் விளக்கிச் சொல்வதற்குத்தான்  பிரச்சாரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கின்றோம்.

இன்று மாலை நடைபெறவிருக்கின்ற மாநாட்டில் பேசவிருக்கின்றோம்!

மக்களிடம் தெளிவை ஏற்படுத்த வேண்டும். ‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’ என்று சொன்னார் தந்தை பெரியார். அந்த உணர்வு இளைஞர்களுக்கு இருக்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் வழிதவறிப் போகிறார்கள், அவர்களை முறைப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இன்று மாலை நடைபெறவிருக்கின்ற மாநாட்டில் விளக்கிப் பேசவிருக்கின்றோம்.

இந்த மாநாட்டிற்கு அனுமதி மறுத்த காவல்துறை யினர், பிறகு வாகையடிமுனையிலேயே மாநாடு நடத்துவதற்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள்.

அம் மாநாட்டில் பல அரிய தகவல்கள், மற்றதெல்லாம் எடுத்துச் சொல்வோம். நீண்ட நாள்களுக்குப் பிறகு திருநெல்வேலி ஊடகத் தோழர்களைச் சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சி, நன்றி.

நடப்பு அரசியல் எப்படி இருக்கிறது?

செய்தியாளர்: 80 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அரசியல் அனுபவம் உள்ளவர் நீங்கள். பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் என்று நீங்கள் பழகாத தலைவர்களே இல்லை. நடப்பு அரசியல் எப்படி இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்? அந்தக் கொள்கை அடிப்படையிலான அரசியல் தமிழ்நாட்டில் இப்போது எடுத்துக்கொண்டு போகப்படுகிறது என்று நினைக்கிறீர்களா? மாறியிருக்கக்கூடிய கூட்டணிகள், ஆட்சிக்கு வந்த கட்சியோடு கூட்டணி சேர்ந்த கட்சிகள், இதுபற்றி திராவிடர் கழகத்தினுடைய பார்வை எப்படி இருக்கு?

தமிழர் தலைவர் ஆசிரியர்: திராவிடர் கழகத்தி னுடைய பார்வை என்பது மிகத் தெளிவான பார்வை. ஏனென்று சொன்னால், ஜனநாயகத்தில் 18 வயது உள்ளவர்களுக்கெல்லாம் வாக்குரிமை கொடுத்தி ருக்கிறார்கள். அந்த வாக்குரிமையைப் பயன்படுத்தி ஓர் ஆட்சி வந்திருக்கிறது. அந்த ஆட்சியைப் பொறுத்தவரையில், எதை எதைச் சொல்லி ஆட்சிக்கு வந்தார்களோ, ஆட்சிக்கு வந்து 100 நாள்கள் ஆகி யிருக்கிறது. அவற்றையெல்லாம் முறையாக செயல்படுத்தினார்களா? என்று கேட்கின்ற உரிமை, மக்களுக்கும் உண்டு; வாக்களித்தவர்களுக்கும் உண்டு; வாக்களிக்காதவர்களுக்கும் உண்டு.

ஓர் அரசு, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும்!

அந்த அடிப்படையில் பார்க்கும்பொழுது, ஆட்சிக்கு வந்த பிறகு, மக்கள் சரியாக ஓட்டுப் போட்டார்களா? தவறாக ஓட்டுப் போட்டார்களா? என்றெல்லாம் பார்க்கக்கூடாது. அது மக்கள் தீர்ப்பு. அது சரியாக இருந்தாலும்,  தவறாக இருந்தாலும், எப்படி உச்ச, உயர்நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு நாம் கட்டுப்படுகின்றோமோ, அதைவிட அதிக சக்தி வாய்ந்தது மக்கள் தீர்ப்பு.

அப்படி வந்த ஓர் அரசு, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும். நிறைவேற்றக் கடமைப்பட்டு இருக்கிறார்கள்.

ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சிகளும், ஆக்கப்பூர்வ மான ஆட்சியும் இருந்தால், மக்கள் வாக்களித்ததற்கு முழுப் பயன் ஏற்படக் கூடும்.

மாற்றம், மாற்றம் என்ற பெயராலே, வெறும் பெயர் மாற்றமோ, காட்சி மாற்றமோ இருக்கக் கூடாது.

கருத்துச் சுதந்திரம் பறிப்பதுபோன்ற காரியங்களைச் செய்யக்கூடாது!

ஆட்சி மாற்றம் வந்துவிட்டது; ஆனால், அதே நேரத்தில், ஜனநாயகத்திற்கு மேலும் பெருமைச் சேர்க்கக் கூடிய ஆட்சியாக இருக்கவேண்டுமே தவிர, இப்படி கருத்துச் சுதந்திரம் பறிப்பதுபோன்ற காரியங்களைச் செய்யக்கூடாது.

எதிர்க்கட்சிகளாக தி.மு.க., அ.தி.மு.க. இருக்கின்றன. கேள்விகள் கேட்கிறார்கள்.

நேற்று வரையில், ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இருக்கின்ற ஒரு வேறுபாடு என்னவென்றால், நேற்று, கட்சியைத் தொடங்கியவர், நிறைய கேள்விகளைக் கேட்டார். பதில் சொல்லவேண்டிய இடத்தில், ஆளுங்கட்சியினர் இருந்தார்கள்.

இப்போது ஆட்சி மாறிவிட்டது. இப்போது எதிர்க்கட்சியினருடைய பங்கு என்னவென்றால், கேள்வி கேட்பார்கள்; அதாவது, கேள்வி கேட்கவேண்டிய இடத்தில் எதிர்க்கட்சிகள் இருக்கின்றன. பதில் சொல்ல வேண்டிய கடமை ஆளுங்கட்சிக்கு இருக்கிறது. அதை மறுதலிக்க முடியாது ஆளுங்கட்சி.

பெரும்பாலான கேள்விகளுக்கு, முதலமைச்சர் அவர்கள் நேரிடையாகப் பதில் சொல்வதில்லை.

நீதிமன்றத்தில், நீதிபதி கேட்கிறார், ‘‘என்ன நடக்கி றது?’’ என்று.

‘‘சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியி ருக்கிறோம்’’ என்று அரசு வழக்குரைஞர்  சொல்கிறார்.

‘‘தீர்மானம் நிறைவேற்றிவிட்டீர்கள். அதைப் பிரச்சாரம் செய்யவேண்டாமா? அதற்காகச் செல்கின்றவர்களை ஏன் தடுக்கிறீர்கள்?’’ என்று நீதிபதியே கேட்கக்கூடிய அளவில் இருக்கிறது.

இப்பொழுது சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது? என்று சொல்லவேண்டிய அவசியமில்லை. ஒரு பக்கம் ஆணவக் கொலைகள், இன்னொரு பக்கம் கூலிப் படைக் கொலைகள் எல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கோவையில் என்ன நடந்தது என்பதுபற்றி உங்களுக்கெல்லாம் தெரியும்.

எல்லாவற்றிற்கும் கடந்த ஆட்சியின் மீது
பழி சொல்லக்கூடாது!

இதற்கு ஆளுங்கட்சியின் சார்பில் என்ன சொல்கி றார்கள் என்றால், அய்ந்து ஆண்டுகள் நாங்கள் ஆளவேண்டும். உடனடியாக இவற்றைச் சரிபடுத்த முடியுமா? கடந்த அரசாங்கத்தின் நடவடிக்கையால்தான் இதுபோன்ற செயல்கள் நடைபெறுகின்றன? என்று சொல்கிறார்கள்.எல்லாவற்றிற்கும் கடந்த ஆட்சியின் மீது பழி சொல்லக்கூடாது.

ஏனென்றால், அதனால்தானே, உங்களை ஆட்சியில் அமர வைத்திருக்கிறார்கள் மக்கள்.  நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கிறோம்; நீங்கள் ஆளுங்கட்சி வரிசையில் இருக்கிறீர்கள். உங்களுடைய கடமையை நீங்கள் செய்யவேண்டாமா?

எதற்கு அவகாசம்? எதற்கு அவகாசம் தேவையில்லை? என்று
பிரித்துப் பார்க்கவேண்டும்!

உடனடியாக எல்லாவற்றையும் செய்யவேண்டும் என்று சொல்லவில்லை. அவகாசம் தேவைதான். ஆனால், எதற்கு அவகாசம்? எதற்கு அவகாசம் தேவை யில்லை? என்று பிரித்துப் பார்க்கவேண்டும்.

சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டுவதில், அவகாசம் கொடுக்க முடியாது. அது தீயணைப்புப் பணி போன்றது. தீப்பற்றி எரியும் இடத்தை அணைப்பதற்கு, யாராவது அவகாசம் கேட்க முடியுமா?

‘‘இப்போதுதான் நான் தீயணைப்புத் துறையில் அதிகாரியாக வந்திருக்கின்றோம். ஆகவே, தீயை அணைப்பதில் எனக்குக் கொஞ்சம் அவகாசம் வேண்டும்’’ என்றால், அதற்குள் தீ முழுவதையும் எரித்துவிடும்.

ஆகவே, அவகாசம் கொடுக்கவேண்டியவற்றிற்கு கொடுக்கலாம். இதற்கெல்லாம் அவகாசம் கொடுக்க முடியாது.

அதேபோன்று, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கக்கூடிய மருத்துவப் பயனாளிக்கு மருத்துவம் செய்யும் மருத்துவருக்கு, அவகாசம் கொடுக்க முடியாது.

‘நான் இப்போதுதான், இந்தத் துறைக்குப் புதிதாகப் பொறுப்பேற்று இருக்கிறேன்; எனக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்’ என்று மருத்துவர் கேட்டால், அது சரியாக இருக்காது.

அதுபோல, சட்டம் – ஒழுங்கு என்பது, மக்களைக் காப்பாற்றுவது. மக்கள் இருந்தால்தான், யாரும் இருக்க முடியும், ஆட்சி உள்பட!

அவகாசம் கொடுக்கவேண்டியவற்றிற்கு, அவகாசம் கொடுக்கலாம். பெரிய பெரிய திட்டங்களை உடனே ஏன் நிறைவேற்றவில்லை என்று கேட்கவேண்டிய அவசியம் இல்லை. அப்படி கேட்டாலும், அதை நியாயப்படுத்த முடியாது.

ஆகவேதான், ஆட்சியைப் பொறுத்தவரையில், அவகாசம் என்பதை, பெரிய திட்டங்களுக்கு எடுத்துக் கொள்ளலாம். சட்டம் – ஒழுங்குப் பிரச்சினையில் எடுத்துக் கொள்ளக் கூடாது.

அதேபோல, பழிவாங்கும் செயலில் ஈடுபடக் கூடாது. அரசியல் என்றால், விமர்சனம் வைப்பார்கள், அது இயல்பானது.

தங்களின் போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும்!

இதுவரை பல இடங்களில் ஆளுங்கட்சி எடுத்த நடவடிக்கைகளை, உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாக வரலாறு இல்லை. அது ஒன்றே, ஆளுங்கட்சியின் நடவடிக்கைகள் எப்படி   என்பதற்குச் சரியான அடை யாளமாகும். அவர்கள் தங்களின் போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும்.

ஆட்சிகள், ஆட்சிகளாக நடக்கட்டும்; ஆட்சிகள், காட்சிகளாக மாறக்கூடாது.

திராவிடர் கழகத்தின் பிரச்சாரத்திற்குத்
தடை விதிப்பதற்குக் காரணம் என்ன?

செய்தியாளர்: நீட் தேர்விற்கு எதிராக, தற்போதைய த.வெ.க. ஆட்சி இருக்கும் என்று சொல்லிவிட்டு, நீட் தேர்வினை எதிர்த்து நடைபெறும் திராவிடர் கழகத்தின் பிரச்சாரத்திற்குத் தடை விதிப்பதற்குக் காரணம் என்ன?

தமிழர் தலைவர் ஆசிரியர்: காரணமே சொல்ல வில்லை என்பதுதான் வேடிக்கை.  காவல்துறை சொல்லுகின்ற காரணம், ஜன நெரிசல் அதிகமாக இருக்கிறது என்று. ஜன நெரிசல் இல்லாத இடம் எங்கே இருக்கிறது? பொதுக்கூட்டம் நடத்துவதற்கு என்று இடங்கள் இருக்கின்றன, அங்கே கொடுக்கலாம்.

உதாரணமாக,  நாங்கள் பாதை போட்டுக் கொடுத்திருக்கின்றோம். நீதிமன்றத்தில்கூட தீர்ப்புகள் இருக்கின்றன. போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல், ஒழுங்குபடுத்தலாம் என்று!

போதிய காரணத்தைச் சொல்லவில்லை அரசு. அப்படி போதிய காரணங்களைச் சொல்லியிருந்தால், அதற்கு நாங்கள் ஒத்துழைத்திருப்போம்.

நாங்கள், காவல்துறையினருக்கு எதிராகவோ, ஆட்சிக்கு எதிராகவோ பிரச்சாரத்தை நடத்தவில்லை. நீட் தேர்வின் கொடுமையை மக்களுக்கு விளக்கிச் சொல்வதற்காகத்தான் அந்தப் பிரச்சாரத்தை நடத்த விருக்கிறோம்.

எங்களுடைய உரிமைகளை வலியுறுத்துகிறோம்; மக்களைப் பாதுகாக்கவேண்டும்; மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவேண்டும் என்பதற்காக எங்களுடைய பிரச்சாரம் நடைபெறுகிறது.

ஒரு காரணத்தையும் சொல்லாமல், அந்தப் பிரச்சாரத்திற்குத் தடை போடுகிறார்கள்.

‘ராஜாவை மிஞ்சும் ராஜ விசுவாசிகளாக’
ஆகக் கூடாது காவல்துறையினர்!

ஒரு பிரச்சினையில், காவல்துறை அனுமதி கொடுக்கக்கூடாது என்று முடிவு செய்துவிட்டால், அதை நிச்சயமாக செய்வார்கள். எங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தைச் சொல்கிறேன்.

ஒருமுறை எங்களுடைய பேரணிக்காக அனுமதி வேண்டி, காவல்நிலையத்தில் அனுமதி கேட்டிருந்தோம். அதற்கு அந்தக் காவல்துறையினரிடமிருந்து கடிதம் வந்தது.

அக்கடிதத்தில், ‘‘மாணவர்கள் ஏராளமாக பள்ளிக் கூடங்களிலிருந்து திரும்பும் நேரம் என்பதால்,  இப்பேர ணிக்கு அனுமதி மறுக்கப்படுகிறது’’ என்று இருந்தது.

‘‘அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை’’ என்று நாங்கள் சுட்டிக் காட்டினோம்.

பிறகுதான், அவர்கள் அனுமதி கொடுத்தார்கள்.

மக்கள் புழக்கம் இல்லாத இடங்களே கிடையாது. எந்த இடமாக இருந்தாலும், மக்கள் புழக்கம் இருக்கும்.

தயவு செய்து, காவல்துறையினர், ‘ராஜாவை மிஞ்சும் ராஜ விசுவாசிகளாக’ ஆகக் கூடாது.

செய்தியாளர்: ஒன்றிய அரசினுடைய திட்டங்களை எதிர்ப்பதினால்,  தமிழ்நாடு அரசு, உங்கள் பிரச்சாரத்திற்கு மறைமுகமாகத் தடை போடுகிறதா?

மாற்றுக் கருத்துச் சொல்வதற்கு
உரிமை உண்டு!

தமிழர் தலைவர் ஆசிரியர்: ஒன்றிய அரசு திட்டமல்ல; மக்கள் விரோதத் திட்டம். ஒன்றிய அரசு திட்டமான ‘‘எல்லோருக்கும் உணவு கொடுங்கள்’’ என்று சொல்லுகின்ற திட்டத்தை நாங்கள் எதிர்க்கின்றோமா?

ஒன்றிய அரசு கொண்டு வருகின்ற திட்டம், மக்கள் விரோதத் திட்டமாகவும், மக்களைப் பாதிக்கக் கூடிய திட்டங்களாகவும் இருந்தால், அந்தத் திட்டங்க ளைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.

அப்படியே இருந்தாலும்கூட, மாற்றுக் கருத்துச் சொல்வதற்கு உரிமை உண்டு. அதற்காக, பிரச்சாரத்திற்குத் தடை விதிப்பது அதற்குப் பதில் இல்லை.

‘‘மாற்றுக் கருத்தே இருக்கக்கூடாது, நாங்கள் சொல்வதைத்தான் நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்’’ என்றால், அதற்குப் பெயர் பாசிசம்; சர்வாதிகாரமாகும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அமைச்சர்க ளிலிருந்து, சட்டமன்ற உறுப்பினர்களிலிருந்து, பஞ்சா யத்துத் தலைவர்களிலிருந்து, குடியரசுத் தலைவர் வரையில், பதவிப் பிரமாணம் எடுக்கும்போது, அரசிய லமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றுவோம் என்றுதான் பிரமாணம் எடுப்பார்கள்.

முதலமைச்சரோ, அரசாங்கமோ பதிலளிக்கவேண்டிய விஷயம்!

செய்தியாளர்: தமிழ்நாடு அரசு, பாசிசத்திற்குத் துணை போகிறதா?

தமிழர் தலைவர் ஆசிரியர்: அதற்குத் துணை போகிறதா, போகவில்லையா? என்று தமிழ்நாடு அரசுக்கே சந்தேகமாக இருக்கும். இது முதலமைச்சரோ, அரசாங்கமோ பதிலளிக்கவேண்டிய விஷயமாகும்.

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *