புதுடில்லி, ஆக. 19– கிறிஸ்தவ நிறுவ னங்களை விட இந்து அமைப்புகளுக்கே வெளிநாட்டு நிதி அதிகம் வருகிறது என ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஒன்றிய சிறு பான்மையினர் நலத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஆங்கில செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாடாளுமன்றத்துக்கு வந்து விவாதிக் குமாறு காங்கிரஸ் கட்சியிடம் நாங்கள் பலமுறை கேட்டுக்கொண்டோம். ஆனால் அவர்கள் வர விரும்பவில்லை.
அரசுக்கு பெரும்பான்மை உள்ளது. எனவே நாங்கள் மசோதாவை எப்படியும் நிறைவேற்றுவோம். அதே நேரத்தில் ஒவ்வொரு மசோதா மீதும் விவாதம் நடைபெறவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
நாடாளுமன்றத்தை எதிர்கொள்ள காங்கிரஸ் பயப்படுகிறது. நாங்கள் ஒரு கலந்துரையாடல் வேண்டும் என்று கூறி வந்தோம். ஆனால் அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டனர். ராகுல்காந்தியால் உருவாக்கப்பட்ட ஒரு ‘படை’ ரகளை செய்வதையும், வசவுகளை வீசுவதையும் வேலையாக வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி தன்னை ஒரு மாவோயிஸ்ட்டு மற்றும் நக்ஸலைடு அமைப்பாக மாற்றிக் கொண்டுள்ளது.
மாணவர்களின் கவலைகள் நியாயமானவை. அபிஜீத் திக்கே மராட்டியத்தைச் சேர்ந்தவர். ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர். அவர் எப்படி ஒரு ‘மாணவர்’ ஆனார்?
வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்கு முறை) திருத்த மசோதா, நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது ஒரு சிறந்த முடிவு. எதிர்க் கட்சியினர், இந்த மசோதா கிறிஸ்தவ நிறுவனங்களை குறிவைக்கிறது என்று பொய்களை பரப்புகிறார்கள். உண்மையில், இந்தியாவுக்கு வரும் மொத்த வெளிநாட்டு நிதிகளில் கிறிஸ்தவ நிறுவனங்கள் வெறும் 16 சதவீதம் மட்டுமே பெறுகிறார்கள். மீதமுள்ளவை இந்து அமைப்புகளுக்குச் செல்கின்றன.
எனவே, யாராவது எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றால்; அது இந்துக்கள்தான் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் வாக்கு வங்கி அரசியலால் இது மாற்றி பேசப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
