வாசிங்டன், ஆக. 19– ஈரானுடனான ராணுவ மோதல்களின் எதிரொலியாக, வளைகுடா நாடுகளிலுள்ள அமெரிக்க ராணுவத் தளங்களின் அளவைக் குறைக்கவும், அங்குள்ள படைவீரர்களின் எண்ணிக்கையைத் திரும்பப்பெறவும் அமெரிக்க பாதுகாப்புத் துறையான பென்டகன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
ஈரானின் ஏவுகணை மற்றும் தாக்குதல்களால் வளைகுடாப் பகுதியில் அமைந்திருந்த முக்கிய அமெரிக்க ராணுவ மய்யங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.
இதனால், அந்தத் தளங்களை மீண்டும் பழைய நிலைக்குக் கட்டியெழுப்புவதா அல்லது முற்றிலும் கைவிடுவதா என்பது குறித்துக் கொள்கை ரீதியான கேள்விகள் எழுந்துள்ளன.
அமெரிக்காவின் மத்தியப் பிரிவு கட்டளைத் துறை வளைகுடாப் பகுதி முழுவதும் சுமார் 20 இடங்களில் 40,000 படைவீரர்களைப் பராமரித்து வருகிறது. இருப்பினும், தொடர் தாக்குதல்கள் காரணமாக இப்பகுதியில் பெரும் படையைக் குவிப்பது பாதுகாப்பற்றது எனக் கருதும் பென்டகன், தனது ராணுவக் கட்டமைப்பைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ‘வாசிங்டன் போஸ்ட்’ வெளியிட்ட அறிக்கையின்படி, பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் நேரடி உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை என்றாலும், எதிர்காலப் பாதுகாப்பு உத்திகளைக் கருத்தில் கொண்டு இந்த ‘முன்னெச்சரிக்கை திட்டமிடல்’ மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் 5ஆவது படைப்பிரிவு தலைமையகம் மற்றும் குவைத்தில் உள்ள முதன்மை ராணுவத் தளங்கள் ஈரானியத் தாக்குதலால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா தனது மத்திய கிழக்குக் கொள்கையை முழுமையாக மறுபரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளது.
விண்வெளியில் அனில் மேனன்…

வாசிங்டன், ஆக. 19- பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கும், ஹூஸ்டனில் உள்ள நாசாவின் கட்டுப்பாட்டு மய்யத்திற்கும் இடையே அதிவேகத் தகவல்தொடர்புக்கான, விண்வெளியிலிருந்து தரைக்கு செல்லும் ஆண்டெனாவில் பழுது ஏற்பட்டது.
இதையடுத்து ஆண்டெனாவை மாற்றுவதற்காக விண்வெளி வீரர் அனில் மேனன், விண்வெளி வீராங்கனை சோபி அடெனெட்டும் விண்வெளியில் நடந்து ஆண்டெனாவை மாற்றுவதற்கான பணியை மேற்கொண்டனர்.அனில் மேனன் விண்வெளி நடைப்பயணம் மேற்கொள்வது இது இரண்டாவது முறையாகும். ஏற்கெனவே, அனில் மேனனும், விண்வெளி வீராங்கனை ஜெசிகாவும் சூரிய மின் உற்பத்தி சாதனத்தில் மாற்றங்களை செய்ய விண்வெளியில், 7 மணி நேரம் நடந்துள்ளனர்.
