சென்னை, ஆக. 19- ‘கருநாடகாவில் மூன்று தமிழர்களை அம்மாநில வனத்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்த கண்டனத்தையும் வெளியிடாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது’ என தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள எக்ஸ் பதிவில், “கருநாட காவில் மூன்று தமிழர்களை அம்மாநில வனத்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர் பாக தமிழ்நாடு அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்த கண்டனத்தையும் வெளியிடாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
சட்டப்பேரவையில் இந்த விவகாரம் தொடர்பாக பதிலளித்த அமைச்சரும், கருநாடகத்தின் பாதிப்பையே எதிரொலித்தார். தமிழ்நாடு அரசு சார்பிலோ, முதலமைச்சர் சார்பிலோ கருநாடக முதலமைச்சரிடம் விளக்கம் கேட்டு எந்தவொரு கடிதமும் இதுவரை எழுதப்படவில்லை.
தவெக தலைவர் என்கிற நிலையில் பட்டும் படாமல் ஒரு அறிக்கையை மட்டும் வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த சூழலில் சென்னையில் இன்று (19.8.2026) தென் மாநில முதலமைச்சர்கள் கூட்டம் கூடுகிறது. அந்தக் கூட்டத்தின்போது, கருநாடக முதலமைச்சரை சந்தித்து, இந்த நிகழ்வு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் உரிய விளக்கத்தைக் கேட்டுப் பெற வேண்டும். இந்த வழக்கு விசாரணையை கருநாடக காவல் துறை விசாரிப்பதற்கு பதிலாக நம்பகமான நீதி விசாரணை நடத்திட தமிழ்நாடு அரசு கோர வேண்டும்.
இந்த நிகழ்வில் நடைபெற் றுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணைய வழிகாட்டுதல்கள் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் அடிப்படையில் இந்த உயிரிழப்புகளுக்குக் காரண மானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு வலியுறுத்த வேண்டும்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதல் இழப்பீடு தரப்படுவதை உறுதி செய்ய கருநாடக முதலமைச்சரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

