புதுடில்லி, ஆக.18 காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ் நாட்டுக்கு காவிரி நீரைத் திறக்க கருநாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் 17.8.2026 அன்று உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கருநாடக அரசு முற்றிலும் புறக்கணித்து அவற்றைச் செயல்படுத்தத் தவறியுள்ளதாக குற்றஞ்சாட்டி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அமா்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், “காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கருநாடக அரசு பின்பற்றவில்லை. நேற்று (17.8.2026) காலை நிலவரப்படி, கருநாடக அணையில் 76% பயன்பாட்டுக்குரிய நீர் இருப்பு உள்ளது. தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி கிடைக்க வேண்டிய 64 டிஎம்சி தண்ணீருக்குப் பதிலாக, தமிழ்நாடு 14 டிஎம்சி நீரை மட்டுமே பெற்றுள்ளது. விகிதாச்சார அடிப்படையில் தமிழ்நாடு 55.29% நீரைப் பெற்றிருக்க வேண்டும். இதனால் சுமார் 20 டிஎம்சி நீர் நிலுவையில் இருக்கிறது” என்று வாதத்தை முன்வைத்தார்.
கருநாடகம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், உத்தரவுகளை அமல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்ததுடன், காவிரிப் படுகைப் பகுதியில் மாநிலம் ‘‘மிகக் கடு மையான நெருக்கடியை” எதிர்கொண்டு வரு வதாகக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறக்காதது ஏன்? இயற்கை கொடுத்த மழை நீரை முழுமையாக தேக்க முடியவில்லை என்ற காரணத்தால் திறந்துவிடப்பட்டதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், இந்த விவகாரம் மறுஆய்வு செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள் ஒருவார காலத்துக்கு அடுத்த 24.8.2026 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். இதற்கிடைபட்ட காலத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பதை கருநாடக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முந்தைய உத்தரவுகளின்படி, கருநாடக அரசு திறந்துவிடாத மீதமுள்ள 21.357 டிஎம்சி தண்ணீரையும் விடுவிக்குமாறு உத்தரவிடக் கோரிய கோரிக்கையை உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
