‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்’’ என்ற தலைப்பில், திருநெல்வேலி, வாகையடி முனையில் நாளை (19.8.2026) மாலை திராவிடர் கழகத்தின் சார்பில், திறந்தவெளி மாநாட்டை நடத்திட திராவிடர் கழகம் திட்டமிட்டிருந்தது. மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பங்கேற்க உள்ளார்.
இந்த விவரங்களையெல்லாம் தெரிவித்து, 27.7.2026 அன்று, திறந்தவெளி மாநாட்டை நடத்திட, திருநெல்வேலி காவல் நிலையத்தில், முறைப்படி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில், விண்ணப்ப மனு கொடுத்து, அனுமதி கோரப்பட்டிருந்தது.
மூன்று வாரம் சென்ற நிலையில், நேற்று (17.8.2026) இரவு திருநெல்வேலி காவல் நிலைய ஆய்வாளரிடமிருந்து திறந்தவெளி மாநாட்டினை நடத்திட, அனுமதி மறுக்கப்பட்டதாக, திராவிடர் கழக மாவட்டச் செயலாளருக்குக் கடிதம் அளிக்கப்பட்டடுள்ளது.
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (18.8.2026) பிரச்சினை எழுப்பப்பட்ட நிலையில், மாண்பமை நீதிபதி ஜஸ்டிஸ் திரு. வி.லட்சுமி நாராயணன் அவர்கள், அரசு வழக்குரைஞரிடம் கேள்வியாக சில விளக்கங்களைக் கேட்ட பின்னர், அதன் அடிப்படையில், மாநாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு, பொறுப்பாளர்களை அழைத்து, மறுக்கப்பட்ட அதே இடத்திலேயே மாநாட்டினை நடத்திக் கொள்ள திருநெல்வேலி காவல்துறை அனுமதி அளித்துள்ளது. பேச்சுரிமை நமது உயர்நீதி மன்றத்தால் காப்பாற்றப்பட்டது. இதுபோன்ற நிலைகள் தமிழ்நாட்டுக் காவல் துறைக்குத் தேவையா? என்பதை உணர்ந்து, காவல் துறை, கடமையாற்றுவதில் பாரபட்சமின்றி, அரசியலமைப்புச் சட்டக் கடமையை ஆற்றுவது முக்கியம்.
காவல்துறையிடம் மிகுந்த கட்டுப்பாடு, மரியாதை காட்டும் இயக்கம் தந்தை பெரியார் அவர்களது திராவிடர் கழகம்.
இனியாவது உணர்ந்து காவல்துறை நடந்து கொள்வது முக்கியம்.
திட்டமிட்டபடி நாளை (19.8.2026) மாலை திருநெல்வேலியில், திராவிடர் கழகத் திறந்தவெளி மாநாடு அதே இடத்தில் நடைபெறும். தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பங்கேற்பார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். (மாநாட்டு அழைப்பிதழை 8 ஆம் பக்கம் காண்க).
கருஞ்சட்டை வெள்ளம் கரை புரளட்டும்!
பேச்சுரிமை, கருத்துரிமை காப்போர், கட்சிகளைத் தாண்டி திரள்வீர்களாக!
கலி.பூங்குன்றன்,
துணைத் தவைர், திராவிடர் கழகம்.
