நெல்லை, ஆக. 17– நெல்லை மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு பக்தர் ஒருவர் பஞ்சலோகத்தாலான சொரிமுத்து அய்யனார் உருவத்தை டாலராக செய்து பூசாரியிடம் வழங்கியதாகவும், இதனை பூசாரி அபகரித்து தனது கழுத்தில் அணிந்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் ஒளிப்படத்துடன் தகவல் வெளியாகி பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அந்த பக்தர், கோயிலுக்கு வழங்கிய பஞ்சலோகநகைக்கு பூசாரி உரிய ரசீது தரவில்லை என்றும் குற்றம்சாட்டி பதிவிட்டு இருந்தார்.
இதுகுறித்து கோயில் நிர்வாக அதிகாரியிடம் கேட்டபோது, “கோயிலுக்கு காணிக்கை வழங்கிய பக்தரிடம் பேசினேன். பஞ்சலோகத்தாலான சொரிமுத்து அய்யனார் உருவ டாலரின் மதிப்பு சுமார் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.27 ஆயிரம் வரையிலும் இருக்கும். இதுகுறித்து விசாரணை நடத்தி, தவறு நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தவறான தகவல்களை பரப்பி, கோயிலின் நற்பெயரை கெடுக்க வேண்டாம்” என்றார்.
