டோக்கியோ, ஆக. 15- ஜப்பானின் டோக்கியோ மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் வரலாறு காணாத மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜப்பானில் விடுமுறை நாள்களை முன்னிட்டு மக்கள் அதிக அளவில் பயணம் மேற்கொள்ளும் இந்த வாரத்தில், டோக்கி யோவை ஒட்டியுள்ள சிபா (Chiba) மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 36.7 செ.மீ. மழை பதிவா னது.
இந்த பலத்த மழை யால் சாலைகள், ரயில் தண்டவாளங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 20,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், சுமார் 13,000 வீடுகளுக்கான சமையல் எரிவாயு விநியோகமும் தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ளது.
வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் இருந்து நூற்றுக் கணக்கான மக்கள் அரசுக் கட்டடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளுக்காக ராணுவத்தினர் வரவழைக் கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கிய வாகனத்தில் மூழ்கி உயிரிழந்த ஒருவர் உள்பட மொத்தம் 8 பேர் இறந்ததாக சிபா மாகாண காவல்துறை மற்றும் பேரிடர் மீட்பு அதி காரிகள் தெரிவித்தனர்.
சிபா மாகாணத்தில் உள்ள முக்கிய நெடுஞ் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், போக்குவரத்து துண்டிக்கப் பட்டுள்ளது. இதனால், நரிட்டா பன்னாட்டு விமான நிலையத்தில் சுமார் 7,000 பயணிகள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். விமான நிலைய ஊழியர்கள் அவர்களுக்குத் தேவையான படுக்கைகள், குடிநீர் மற்றும் உணவுப் பொருள்களை வழங்கினர். நரிட்டா-டோக்கியோ இடையேயான ரயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

