இந்த ஜாதி – மத – மனுவாதத் திமிரை ஒழிக்காமல் ‘சுதந்திர’ நாடு என்றால் ஏற்க முடியுமா?

3 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்குத் தீண்டாமைக் கொடுமையா? தீட்டுக்கழிக்க யாகமாம்!

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை

ஆசிரியர் அறிக்கை

காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்குத் தீண்டாமைக் கொடுமையா? இந்த ஜாதி – மத – மனுவாதத் திமிரை ஒழிக்காமல் சுதந்திர நாடு என்றால் ஏற்க முடியுமா? என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி உத்தராகண்ட்டின் ஹல்தவானியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் அங்கு வந்த சிறீராம் சேனா என்ற ஹிந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் கங்கை நீரைக் கொண்டு அந்த இடத்தைச் சுத்திகரிப்புச் செய்த காணொலிகள் இணையத்தில் வெளிவந்துள்ளன.

நம் ரத்தம் கொதிக்கிறதே!

இந்தியாவை வெகுகாலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவர், நாடாளுமன்ற மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராகச் செயலாற்றியவர், அவர் கருநாடகாவைச் சார்ந்த ஒடுக்கப்பட்டவர் என்பதால், அவர் உரையாற்றிய இடத்தைத் தீட்டுக் கழிக்கும் திமிர்த்தனம் இன்னமும் மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் நடைபெறுகிறது என்றால் எப்படிப் பொறுப்பது? என்ன மனுவாதத் திமிர்த்தனம் இது? அந்தக் காட்சியைப் பார்த்ததும் நம் ரத்தம் கொதிக்கிறதே!

இந்தியாவின் 80 ஆம் ஆண்டு சுதந்திர நாள் என்று பெருமைப் பாட கொஞ்சமாவது தகுதி உண்டா? ‘சுதந்திர நாட்டில் ஜாதி இருக்குமா? ஜாதி இருக்கும் நாடு சுதந்திர நாடு ஆகுமா?’ என்று தந்தை பெரியார் கேட்ட கேள்வி தானே இன்னமும் நம் காதுகளில் ஒலிக்கிறது!

ஜாதி இருக்கும் வரை தீண்டாமை இருந்துதானே தீரும்! வெறும் தீண்டாமையை ஒழித்துவிட்டோம் என்று அரசியலமைப்புச் சட்டத்தில் எழுதி வைத்துக் கொண்டால் போதுமா?

கண்டித்தாலும், நடவடிக்கை இல்லை!

நாடாளுமன்றத்தில், இதுகுறித்துப் பேசிய மல்லி கார்ஜுன கார்கே, ”நான் ஒரு பட்டியலின வகுப்பைச் சார்ந்தவர் என்பதால் என்னைப் பாதுகாக்க வேண்டும் என்று நான் யாரிடமும் ஒருபோதும் கூறியதும் இல்லை, கெஞ்சியதும் இல்லை. எனக்காகப் போராடும் வலிமை என்னிடம் இருக்கிறது. அதே நேரம் ஹல்தவானியில் நான் நின்ற மேடையைச் சுத்தம் செய்ததன் மூலம், பொதுவில் தீண்டாமையின் உணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், நான் அவமதிக்கப்பட்டேன். இந்தச் செயலைச் செய்தவர்களைத் தீண்டாமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். பா.ஜ.க. ஒன்றிய அமைச்சர் நட்டாவும், குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.இராதாகிருஷ்ணனும் இதைக் கண்டித்திருக்கிறார்கள் என்றாலும், இன்னும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

1978 ஆம் ஆண்டு இதே போல உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் டாக்டர் சம்பூர்ணானந்த் சிலையைத் திறந்துவைத்த அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் பாபு ஜெகஜீவன்ராம் அவர்கள், (பின்னாளில் துணைப் பிரதமராகவும் திகழ்ந்தவர்) ஒடுக்கப்பட்ட சமூகத்தவர் என்று கூறி, அச் சிலையைக் ‘கங்கா ஜலம்’ விட்டுத் தீட்டுக் கழித்த கொடுமை நடந்தது. இக் கொடுமை நடந்து ஏறத்தாழ 50 ஆண்டு கள் ஆன பின்னும் இதே நிலை இன்னும் தொடர்வதா?

அவமதித்தது யார்?

குடியரசுத் தலைவரே ஆனாலும், ஒடுக்கப்பட்ட பழங்குடியினத்தைச் சார்ந்தவர், கணவனை இழந்தவர் என்பதால், நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவுக்குக் கூட அழைக்காமல் அவமதிக்கப்பட்டார் திரவுபதி முர்மு. அவமதித்தது யார்? மோடி தலை மையிலான பா.ஜ.க. அரசு தானே!

குடியரசுத் தலைவரே ஆனாலும், ராம்நாத் கோவிந்த் அவர்களையும், அவரது இணையரையும் அவமதித்து, கருவறையை நெருங்கவிடாமல் தடுத்து நிறுத்தியவர்கள் ஒடிசா பூரி ஜெகந்நாதன் கோயில் அர்ச்சகப் பார்ப்பனர்கள்; அவரை நாடாளுமன்றக் கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழாவுக்குக் கூட அழைக்காமல் அவமதித்தது பா.ஜ.க. அரசு!

தீண்டாமை வன்கொடுமை வழக்கு தொடுத்து, கடும் தண்டனைக்கு உள்ளாக்க வேண்டாமா?

இன்றும் வெளிப்படையாக, கார்கே அவர்களை அவமதித்துவிட்டு, அதுகுறித்துப் பேட்டி கொடுக்கி றார்கள் என்றால், அவர்கள் மீது தீண்டாமை வன்கொடுமை வழக்கு தொடுத்து, கடும் தண்டனைக்கு உள்ளாக்க வேண்டாமா? இன்னும் என்ன தாமதம்?

இந்த ஜாதி-தீண்டாமையை ஒழிக்காமல் இந் நாட்டுக்குச் சுதந்திரம் ஏது?

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை       

14.8.2026       

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *