உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில்
ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மைச் சமூகத்தவர்க்கு இடம் எங்கே?
சமூகநீதி கேட்டுப் போராடும் குரல்கள் வலுக்க வேண்டும்!
ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மைச் சமூகத்தவர்க்கு இடம் எங்கே?
சமூகநீதி கேட்டுப் போராடும் குரல்கள் வலுக்க வேண்டும்!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை
அறிக்கை
உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியம னங்களில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மைச் சமூகத்தவர்க்கு இடம் எங்கே? ஒடுக்கப்படும் சமூகங்களைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் கவலை கொள்ளாமல் இருப்பது வெட்கக்கேடான வருத்தமல்லவா? சமூகநீதி கேட்டுப் போராடும் குரல்கள் வலுக்கட்டும்! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நமது அரசியலமைப்புச் சட்டம், தனது முகப்புரை யிலே (Preamble) அனைத்து குடிமக்களது உரிமைகளுக்குத் தக்க காப்புறுதி அளித்துள்ளது.
நீதிகளில் முன்னுரிமை கொடுக்கப்பட்டிருப்பது சமூகநீதிக்கே ஆகும்
நீதி வழங்குவதிலும், சமூகம், பொருளாதாரம், அரசியல் ஆகிய மூன்று துறைகளிலுமே தவறமாட்டோம் என்று கூறப்பட்டுள்ளது.
அதில்கூட, நீதிகளில் முன்னுரிமை கொடுக்கப்பட்டி ருப்பது சமூகநீதிக்கே ஆகும். முதலில் Justice, Social என்றுதான் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தைச் செயல்படுத்துவதில், பாதுகாப்பதில் மிகவும் கவனமாகக் கடமையாற்றுவோம் என்றுதான் பதவியேற்கும் போது ஒவ்வொரு நீதிபதியும், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி முதல் அனைத்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் வரை அச்சட்டத்தின்மீது பிரமாணம் எடுக்கிறார்கள்.
ஆனால், சமூகநீதியைச் செயல்படுத்தும் கடமையை உச்சநீதிமன்றம் சரியாக செய்கிறதா என்ற நியாயமான கேள்விக்கு விடை வெறும் ஏமாற்றமே!
சமூகநீதி என்பது
‘அனைவருக்கும் அனைத்தும்’
‘அனைவருக்கும் அனைத்தும்’
சமூகநீதி என்பது ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்பதே! இதைச், சட்டங்களை அலசி ஆராய்ந்து, தவறுகளைச் சுட்டிக்காட்டி, ஆட்சியாளர்களின் அதிகார ஆளுமைகளையும் நெறிப்படுத்தும் மிக முக்கியப் பொறுப்பு, உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு உண்டு. மக்களின் கடைசி நம்பிக்கை அதுதான்.
இவ்வளவு மிக முக்கிய வழிகாட்டும் நீதியின் கலங்கரை வெளிச்சமாக இருக்கும் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில், சமூகநீதி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு, துலாக்கோல் ஒரு பக்கமே சாய்ந்து உயர்ஜாதி வர்க்கத்திற்கே வாய்ப்ப ளித்து வருவது மிகவும் வேதனையானதாகும். அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு வழங்கும் நீதி உறுதிக்கே ஊறு விளைவிக்கும் நிலை உள்ளது.
34–லிருந்து 38 ஆக உயர்த்தப்பட்டுள்ளது
எடுத்துக்காட்டாக,
உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை வழக்குகளின் நிலுவையைக் குறைக்கவும், நீதி நிர்வாகத்தின் தேவையைக் கருதியும் அண்மைக் காலத்தில் 34–லிருந்து 38 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி, மாண்பமை நீதிபதிகள் நியமனத்தில், அது ஏதோ உயர்ஜாதியினர் ஏகபோக உரிமை என்பதைப்போல, தொடர்ந்து சமூகநீதி மறுக்கப்படுகிறது. ‘கொலிஜியம்’ என்ற அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளில் கூறப்படாத ஒன்றை வைத்துக் கொண்டு, நீதிபதிகள் நியமனத்திற்குப் பரிந்துரை நடைபெறுகிறது. சில காலம் முன்பு, ஒரு பிற்படுத்தப்பட்ட சமூக நீதிபதியை நியமனம் செய்தபோது, ‘கொலிஜியம்’ சமூகநீதி அடிப்படையில் ஒப்புக்கொண்டு, இந்த நியமனம் செய்யப்படுகிறது என்ற ஒரு குறிப்பினை அளித்தது.
ஆனால், அதற்குப் பிறகு, அது தொடரப்படவில்லையே ஏன்? மற்ற சமூக மக்களுக்கு – அவர்கள் அதற்குரிய சட்டத் தகுதியைப் பெற்றிருந்த போதிலும், தொடர்ந்து சமூகநீதி மறுக்கப்பட்டே வருவது நியாயம்தானா?
நீதிபதிகள் (தலைமை நீதிபதியிலிருந்து) மொத்தம் உள்ள 38 இல், எத்தனை பேர் ஒடுக்கப்பட்டோர் (S.C./S.T.) பிற்படுத்தப்பட்டோர் (OBC), சிறுபான்மையினர் (Minorities) பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்? அதில் எத்தனை பேரை ஒன்றிய அரசின் சட்டத் துறை ஏற்று, இதுவரை குடியரசுத் தலைவர்மூலம் நியமிக்கப்பட்டிருக்கிறது? என்ற தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் திருமதி சல்மா அவர்களின் கேள்விக்கு, மழுப்பலான பதில்தான், நாடாளுமன்றத்தில் கிடைத்தது.
‘‘கொலிஜியத்தில்’’ பரிந்துரை செய்யப்பட்டுள்ளது!
38 நீதிபதிகளின் நியமனம், முழுமை அடைய புதிதாக 4 பெயர்கள் உச்சநீதிமன்ற ‘‘கொலிஜியத்தில்’’ பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று வெளிவரும் செய்தி.
- ஜஸ்டிஸ் M.C.திரிபாதி – பம்பாய்உயர்நீதிமன்றத்தலைமைநீதிபதி
- ஜஸ்டிஸ்ஆஷாகுமார்மிஸ்ரா – பஞ்சாப் – அரியானாஉயர்நீதிமன்றத்தலைமைநீதிபதி
- ஜஸ்டிஸ் R.V.குகே – கல்கத்தாஉயர்நீதிமன்றநீதிபதி
- ஜஸ்டிஸ்காமேஸ்வர்ராவ் – பாட்னா (பீகார்) உயர்நீதிமன்றநீதிபதி
இதில், ஒருவர்கூட பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்தவரே இல்லை!
இதற்குமுன், உச்சநீதிமன்ற நீதிபதியாக ஒரு பெண்மணி நியமிக்கப்பட்டார்; அவரும் முற்பட்ட சமூகத்தவர்தான்.
சமூகநீதியை அறவே
குழிதோண்டிப் புதைப்பதல்லவா?
குழிதோண்டிப் புதைப்பதல்லவா?
தனிப்பட்ட முறையில் இவர்கள் எவர்மீதும் நமக்கு வெறுப்பு இல்லை. கொள்கை, நியாயம், சமூகநீதிக் கண்ணோட்டத்தில் இது முறையற்றது. இதைச் சுட்டிக்காட்டுவதில் நமக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. சமூகநீதியை அறவே குழிதோண்டிப் புதைப்பதல்லவா?
அதிகமான பெண் நீதிபதிகள் வரவேண்டியது சமூகநீதியைப் போல, பாலியல் நீதிக் கண்ணோட்டத்தில் (Gender Justice) நாம் வரவேற்போம்.
ஆனால், அந்தப் போர்வையில், உயர்ஜாதி பெண்களுக்குத்தான் வாய்ப்பா? மற்ற எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., சிறுபான்மையினர் ஆகிய வாய்ப்பற்ற சமூகத்தவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது நியாயமா?
ஒன்றிய அரசு தொடர் நடவடிக்கையாக
ஆக்கிக் கொண்டுள்ளது!
ஆக்கிக் கொண்டுள்ளது!
ஒன்றிய அரசு இதைத் தங்கள் தொடர் நடவடிக்கையாக ஆக்கிக் கொண்டு, உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நியமனங்களில் சமூகநீதியைப் புறக்கணிப்பதும், இரட்டைத் தாழ்ப்பாள் போடும் சமூக அநீதி அல்லவா?
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வழக்குரைஞர்கள் தொகுதி (from the Bar)யிலிருந்து… 8 பேரும், மாவட்ட நீதிபதிகளிலிருந்து (from the Bench) 7 பேரும் ஆக 15 பேர் நியமனமாகி, பதவியேற்பும் நடந்து முடிந்து, பணிகளில் சேர்ந்து கடமையாற்றுகிறார்கள்.
தமி்ழ்நாடு சமூகநீதி மண் என்பதால், இந்த அளவுக்கேனும், மற்ற உயர்ஜாதியினர் ஆதிக்கம் முன்புபோல இல்லாவிடினும், இன்னமும் தந்திர முறைகளில் அவர்களது விகிதாச்சாரத்திற்கு மேல் பன்மடங்கு இடம்பெறவே செய்வது, சமூகநீதியை புறந்தள்ளிடும் ஒரு முயற்சியேயாகும்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை 75 நீதிபதிகள். தற்போது 66 நீதிபதிகள் உள்ளனர். இவர்களில் 10 பேர் பார்ப்பனர்கள் என்பது சமூகநீதிப்படி சரியானதா? பார்ப்பனர்களின் விகிதத்தைவிட, ஆறு மடங்கு அதிகமாக நீதிபதி பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனரே! வாய்ப்பற்ற சமூகங்கள் ‘வாயில்லா ஜீவன்கள்’ போல உள்ளனரே!
இதில், ஜாதிக் கண்ணோட்டம் பார்க்கலாமா? என்பவர்கள், இதில் பெரும்பாலும் ஆளுங்கட்சிக் கண்ணோட்டம் புகுவதை நியாயப்படுத்த முடியுமா?
திறமையானவர்களுக்குப்
பஞ்சமே இல்லை!
பஞ்சமே இல்லை!
முன்பெல்லாம் ஒடுக்கப்பட்ட சமூகங்களான
எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., சிறுபான்மைச் சமூகத்தினருக்கு தகுதி, படிப்பு இல்லை என்று சாக்குச் செ்ால்லும் கூற்றை, இப்போது முன்வைக்க முடியாத அளவுக்கு இங்கே திறமையானவர்களுக்குப் பஞ்சமே இல்லை.
என்றாலும், காணாமல்போன சமூகநீதியைத் தேடிக் கொண்டிருக்கும் பரிதாப நிலையே ஏற்பட்டுள்ளது!
ஏராளமான ஒடுக்கப்பட்ட பார்ப்பனரல்லாத சமூகத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் இதுபற்றிச் சிறிதும் கவலையோ, அக்கறையோ கொள்ளாமல் இருப்பது, இன்னமும் வெட்கக்கேடான வருத்தமாகும்.
ஒரே ஒரு வழக்குரைஞர் திரு.வாஞ்சிநாதன் போன்றவர்கள்தான், இந்த சமூக அநீதியைப் போக்க வேண்டும் என்று துணிந்து முன்வருகிறார்கள்.
தந்தை பெரியார் சொல்வார், ‘‘உயர்ஜாதியினர் (சிறு அளவில்) என்பவர்கள் (Communally Selfish) சமூக ரீதியான (பெருவாரியான) சுயநலவாதிகள். ஒடுக்கப்பட்ட பார்ப்பனரல்லாத சமூகத்தவரோ (Individually Selfish) தங்களைப்பற்றி மட்டும் உயர்த்திக் கொள்ளும் தனித்த சுயநலவாதிகள்’’ என்று!
இப்படி அவிழ்த்துக் கொட்டப்பட்ட நெல்லிக்காய்கள், முதலில் அநீதியை, அநீதி என்று சொல்லக்கூட மனம் வரவில்லையே!
நீதி கேட்டுப் போராடும்
குரல்கள் வலுக்க வேண்டும்!
குரல்கள் வலுக்க வேண்டும்!
உங்கள் நுகத்தடி என்றும் நிரந்தரம்தான் என்றாலும், நமது குரல், நியாயத்தை, அரசியலமைப்புச் சட்டம் தந்துள்ள சமூகநீதியை பாதுகாப்பை ஓயாது ஒலிக்கும் குரலாகவே நமது குரல் என்றும் விளங்கும். காரணம், தந்தை பெரியார் தொண்டர்கள் எதையும் எதிர்பார்க்காத ‘துறவிகள்’ என்பதுதான்!
நீதி கேட்டுப் போராடும் குரல்கள் வலுக்க வேண்டும்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
13.8.2026
