‘தொகுதி மறுவரையறை கொண்டு வரப்பட்டால் பெரிய ஆபத்து’ என்று இந்தியாவுக்கே முதன் முதலாக சொன்ன கட்சி தி.மு.க.!

சிறப்பு புத்தக சலுகைகள்

சட்டப் பேரவையில் அரசின் தனித் தீர்மானத்தை வரவேற்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை, ஆக.13 – “தொகுதி மறுவரையறை கொண்டு வரப்பட்டால் பெரிய ஆபத்து ஏற்படும் என்று இந்தியாவுக்கே முதன் முதலாக சொன்ன கட்சி தி.மு.க.” என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சட்டப் பேரவையில் நேற்று (12.8.2026) அரசின் தனித் தீர்மானத்தின் மீது உரையாற்றும்போது கூறினார்.

சட்டப் பேரவையில், எதிர்க்கட்சித் தலை வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு: –

தொகுதி மறுவரையறை என்கிற பேரில், எக்காரணம் கொண்டும் நம் தமிழ்நாடு பாதிக்கப்படக்கூடாது என்பதுதான் எங்களின் உறுதியான நிலைப்பாடு.

தற்போதைய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், புதி தாகத் தொகுதி மறுவரையறையைக் கொண்டு வந்தால், அது எவ்வளவு பெரிய ஆபத்தாக அமையும் என்பதை, இந்தியாவுக்கு முதன்முதலாகச் சொன்ன இயக்கம், எங்களின் திராவிட முன்னேற்றக் கழகம், எங்களின் தலைவர் அவர்கள்தான்.

இந்த விஷயத்தில், எங்களின் அரசு (தி.மு.க.) எடுத்த பல்வேறு நடவடிக்கை களை, இங்கு பேசிய அமைச்சர் பெரு மக்கள் உள்பட, பலரும் இங்கே பதிய வைத்துள்ளார்கள். இருந்தாலும், சில நட வடிக்கைகளை இங்கே பதிய வைக்க விரும்புகிறேன்.

2024 ஆண்டு இதே பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியவர் எங்கள் தலைவர்!

தொகுதி மறுவரையறை என்று சொல்லி, தமிழ்நாட்டு எம்.பி.க்களின் எண்ணிக்கையைக் குறைக்க அனுமதிக்க மாட்டோம். தமிழ்நாட்டுக்கு தற்போதுள்ள விகிதாச்சாரம் குறையக் கூடாது என்று, இதே சட்டமன்றத்தில், 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தீர்மானத்தை நிறைவேற்றியவர் எங்கள் கழகத் தலைவர், அப்போதைய முதலமைச்சர் அவர்கள்.

பிறகு, சென்ற ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி இது தொடர்பாக, ஓர் அமைச்சரவைக் கூட்டத்தையும் எங்கள் தலைவர் அவர்கள் கூட்டினார்கள். அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் சென்ற ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் தேதி, எங்கள் தலைவர் தலைமையில், ஓர் அனைத்துக் கட்சிக் கூட்டமும் கூட்டப்பட்டது. அந்தக் கூட்டத்தில்இங்கு இருக்கின்ற நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள், அவர்களின் இயக்கத்தின் சார்பாக கலந்துகொண்டு, அவரின் கருத்துகளை அங்கே பதிய வைத்துள்ளார்.

அதன் பிறகு மார்ச் 7 ஆம் தேதி, தொகுதி மறுவரையறையின் ஆபத்தை விளக்கி, தென் மாநிலங்கள் உள்பட 7 மாநில முதலமைச்சர்களுக்கும், அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த முக்கிய மான அரசியல் கட்சி தலைவர்கள் அனை வருக்கும் எங்களின் தலைவர், அப்போ தையை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விளக்கமாக, ஒரு கடிதத்தையும் எழுதி இருந்தார்.

பின்பு மார்ச் 22 ஆம் தேதி ‘ஃபேர் டி லிமிட்டேசன்’ என்ற தலைப்பில், 5 மாநில முதலமைச்சர்கள் மற்றும் இந்தியாவின் மிக முக்கியமான 10-க்கும் அதிகமான கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களைக் கொண்டு ஒரு ‘ஜாயின்ட் ஆக்சன் கமிட்டி’ கூட்டத்தை எங்கள் தலைவர் அவர்கள், சென்னையில் நடத்தினார்கள்.

அந்தக் கூட்டத்தில் இந்தத் தொகுதி மறுவரையறையின் பாதிப்புகளை, நான்தான் பிரசென்ட்டேசனாகக் கொடுத்தேன். 2026 ஆம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில், எம்.பி. தொகுதிகளை நிர்ணயித்தால், தென் மாநில எம்.பி.-க்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். அதே நேரம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தாத வட மாநிலங்களில் உள்ள எம்.பி.க் களின் தொகுதிகள் அதிகரித்து விடும்.

1971 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பே தொடர வேண்டும்!

எனவே, தொகுதி மறுவரையறைத் திட்டத்தை, அடுத்த 25 ஆண்டுகளுக்கு நடத்தக்கூடாது, நிறுத்தி வைக்க வேண்டும். 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படியே, மக்களவைத் தொகுதிகள் தொடர வேண்டும் என்று பிரசென்டேசனில் நான்தான் விளக்கிக் கூறினேன். அதுவே அந்த ‘ஜாயிண்ட் ஆக்சன் கமிட்டி’ கூட்டத்தில் முக்கிய முடி வாக எடுக்கப்பட்டது.

அதையடுத்து, அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை, எங்களின் தலைவர், அப்போதைய முதலமைச்சர் அவர்கள், மார்ச் 24 ஆம் தேதி இதே சட்டமன்றத்தில் விளக்கிக் கூறினார்கள்.

இந்த ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி அந்த மசோதாவின் நகலை, தமிழ்நாடு எங்கும் எரித்து, எங்களின் எதிர்ப்பை நாங்கள் வெளிக்காட்டினோம். அப்போதைய முதலமைச்சர், எங்கள் தலைவர் அவர்களே அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு, தொகுதி மறுவரையறை மசோதாவை எரித்தார்கள்.

அந்த மசோதா தோற்கடிக்கப்பட்டதை, இந்தத் தீர்மானத்தில் இந்த அரசு குறிப்பிட்டு உள்ளது. அந்த மசோதாவுக்கு, நாங்கள் திராவிட முன்னேற்றக் கழகம் காட்டிய எதிர்ப்புதான், அந்த மசோதா நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டதற்கான காரணம்.

இந்தச் சூழலில், தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்துக்கான மசோதாவை, ஒன்றிய அரசு மீண்டும் கொண்டு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் முக்கியமான விஷயம் என்ன வென்றால், 1971 ஆம் ஆண்டிலிருந்து, 2026 ஆம் ஆண்டு வரை `ஃப்ரீஷ்’ செய்யப்பட்டிருக்கின்ற அந்த `டிலி மிட்டேசன் எக்ஸர்ஸை’ மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கவேண்டும். அதற்கான புதிய சட்டத் திருத்தம், இந்த ஆண்டு வரவில்லை என்றால், 2027 இல் மக்கள் தொகை அடிப்படையில் எம்.பி.க்கள் தொகுதிகள் நிர்ணயம் செய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுவிடும்.

33 சதவிகித மகளிர்
இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறோம்!

அப்படி செய்வதற்கான அதிகாரத்தை, அரசியலமைப்பு வழங்கி இருக்கிறது என்று, சட்ட வல்லுநர்கள் தொடர்ந்து கூறிவருகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரைக்கும், 33 சதவிகித மகளிர் இட ஒதுக்கீட்டை, நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம், வரவேற்கிறோம்.

ஒருவேளை மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்காகத் தொகுதி மறுவரையறை பணி செய்யப்பட்டால், 1971 ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையிலேயே செய்ய வேண்டும். அதில் ஏதாவதுமாற்றம் வந்தால், நாடாளுமன்றத்தில், தமிழ்நாடுஎம்.பி.க்களின் விகிதாச்சாரம் இப்போது இருக்கின்ற 7.18 சதவிகிதத்தைக் குறைக்க அனுமதிக்கக்கூடாது என்று மீண்டும் வலியுறுத்திச் சொல்லி, அரசு கொண்டு வந்துள்ள இந்தத் தீர்மானத்தை நாங்கள் வரவேற்கிறோம்.

இவ்வாறு சட்டப் பேரவையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *