அலுத்து சலித்துக் கொள்ளாத வழி முறைகள் ஏழு என்று ஒரு வெளிநாட்டு, கொள்கை குடும்பத்து தோழர் ஒருவர் அனுப்பியவற்றை வைத்து இந்த ‘வாழ்வியல் சிந்தனை’ தொடங்குகிறது.
- நமது உடலின் ‘Circadian Rhythm’ என்ற முறையான வகைப் பழக்கங்களை ஒருமுகமாக கடைப்பிடித்தால் அது நமது ஆயுளை நீட்டித்து வாழ்க்கையில் மருந்துக்காகப் பயன்படும். மருத்துவப் பரிசோதனைக்காக அதிகப் பணம் செலவழிக்க வேண்டியதாக இருக்காது.
இதைப்பற்றி டாக்டர் கேண்டிஸ் நைட் (Dr. Candice Knight M.D.) என்ற குடும்ப நல மருத்துவ நிபுணர் (A physician who is board – certified in Family Medicine and Integrative medicine), கூறுகிறார் – உங்கள் உடல் கடிகாரத்தை நாளும் தவறாது கடைப்பிடிக்கும் உங்களது வாழ்வுப் பழக்கத்தில் அது பகலானாலும் சரி, இரவானாலும் சரி நிச்சயம் நிரம்பப் பலன்கள் தரும். எப்படியென்றால் நமது உடம்பில் உள்ள ‘செல்கள்’ (Cells) 24 மணி நேர கடிகாரத்தை தொடர்ந்து ஓடச் செய்வன.
அந்த டாக்டர் அம்மையார் கூறுகிறார்.
“அந்த ரிதம் வலுவாகவும் சீராகவும் இருக்கும் போது உங்கள் டிஎன்ஏ பழுதுபார்த்தல், ஹார்மோன் (நொதி) வெளியீடு மற்றும் நோய் எதிர்ப்புச் செயல்பாடு அனைத்தும் உச்சபட்ச செயல்திறனுடன் செயல்படுகின்றன. நம் வாழ்வை நீட்டிக்கச் செய்கின்றன” என்கிறார்.
இரண்டாவது நமது மனநிலை (Mind set).
2026 ‘ஜாமா நெட்ஒர்க் ஓப்பன்’ என்ற மின் இதழ் நடத்திய ஆய்வில் தொடர்ந்து இந்த ‘சர்கார்டியன் ரிதம்’ சீராக இருப்போருக்கு இளமை நீடிப்பதாகக் கூறுகிறது. அதாவது மேற்சொன்ன முறையில் ஒழுங்கு முறையுடன் இயங்கும் பழக்க முறையை நமது உடலின் கடிகாரம் – உடல் ரீதியான இளமையை நமக்குத் தானே வழங்கிடும் என்பது வியக்கத்தக்கது அல்ல! எனவே எப்போதும் வயது முதிர்ந்த ஓர் இளைஞராக, வாலிபனாகவே உங்களை எண்ணிக் கொண்டு, உங்களது மனப்பாங்கு என்றென்றும் சீரிளமைத்திறன் உள்ளது என்ற எண்ணத்தை உங்களுக்குள் விதைத்துக் கொள்ளுங்கள்! இவை சரியாக இந்த ஒழுங்கு முறை உடல் கடிகாரத்திற்கு நீங்கள் அளிக்கத் தவறினால் அது உங்களை அதிவிரைவில் ‘கிழவனாக்கி’ விடும்!
இதை எப்படிச் செய்வது? (அதாவது மனதை இளமையாக்கி வாழ்வை நீட்டித்து, நலத்துடன் வாழ்வது என்பது) என்றுதானே உங்களுக்குக் கேட்கத் தோன்றுகிறது – இதோ தெளிவான விடை.
பின்வரும் முயற்சிகளை ஒழுங்கு முறை செய்து பழகுங்கள். எடுத்துக்காட்டாக,
- காலை காபி குடிக்கிறீர்களல்லவா… அதை வீட்டிற்குள்ளே உங்கள் இருக்கையிலோ, சமையற் கூடங்களிலோ அமர்ந்து குடிப்பதை விட, வெளியே வந்து 10 நிமிடம் இயற்கையில் காலை மலர்ந்த வெளிச்சத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டே செய்யலாம்.
- காலை சிற்றுண்டியோ, மதியம் சாப்பாட்டு நேரமோ, இரவு சாப்பாடோ – எதுவாக இருந்தாலும் குறிப்பிட்ட மணி நேரத்தில், குறிப்பிட்டவாறு சாப்பிடப் பழகுங்கள். இதை வாழ்க்கை முறையில் ஒரு திட்டமாக ஆக்கிக் கொள்ளுங்கள்.
முன்பு, நான் ‘விடுதலை’ அலுவலகத்தில் தொடர்ந்து பணி செய்து கொண்டே இருப்பேன். ஜன்னல் வெளிச்சம் மூலம் வெளியே மதியம் பார்க்கையில், நெடுஞ்சாலைத் துறையில் மேற்பார்வைப் பொறியாளராக இருந்து, பெரியார் திடலில், தமிழக மூதறிஞர் குழு செயலாளராகப் பல ஆண்டு எங்களுக்கு உதவிட வந்த முதியவர் ஞான.அய்யாசாமி அவர்கள் மதியம் வீட்டிற்குக் கிளம்புகிறார் என்றால், ‘பகல் ஒரு மணி’ – அதுபோலவே அவருக்கு முன்னர் திடலில் தொண்டாற்றிய பெரும் புலவர் பேராசிரியர் ராமநாதன் அவர்கள் கையில் ஒரு குடை பிடித்துக் கொண்டு மதியம் திடலை விட்டு (மதிய உணவிற்காக) புறப்படுகிறார் என்றால் பகல், ‘12 மணி’ என்று நாங்கள் புரிந்து கொள்வோம்.
ஆனால் இதில் மருந்துவர்கள் எனக்குத் தொடர்ந்து வழங்கும் இதே அறிவுரையைப் பின்பற்றிடத் தவறுபவன் என்ற வகையில் நானும் இதில் ஒரு “குற்றவாளி” தான் – இன்னமும் என்பதையும் வருத்தத்துடன் பதிவு செய்கிறேன் – பொது வாழ்வில் – கடமையைச் செய்யும் தீவிர உணர்வின் விளைவு இது!
- அதுபோல தூங்கப் போவதற்கு முன்பும் அதே ஒழுங்கு முறையைக் கடைப்பிடிப்பது அவசியம்! விளக்கொளியை மங்கச் செய்து, தொலைக்காட்சியைப் பார்ப்பதை ஒரு மணி, இரண்டு மணி நேரத்திற்கு முன்பே நிறுத்திவிட வேண்டும். இருட்டு தூக்கத்திற்கு முக்கியம்.
‘வெளிச்சத்தில் தூங்கினால் அது மூளைக்கு நல்ல ஓய்வைத் தருவது இல்லை’ என்பது தூக்க நிபுணர்களின் கருத்தும் – அறிவுரையுமாகும்!
- அதேபோல் காலை படுக்கையிலிருந்து எழும் ஒழுங்கு முறையை செய்து வருவதும் சிறந்தது.
அது விடுமுறை காலமானயினும் – சனி, ஞாயிறு போன்ற நாள்களாக இருந்தாலும் வழக்கமாக ஒழுங்கு முறையில் துயிலெழுதல், படுக்கைக்குச் செல்வது எப்படி ஒழுங்கை கடைப்பிடிக்க வேண்டுமென கருத்து கூறுகிறார்.
தூங்கி எழும் நேரத்தைச் சரியாகக் கடைப்பிடிப்பது அவசியமான பழக்கமாகவும் அமைய வேண்டும். இதில் (நான் பெரும் அளவில் வெற்றி பெற்றுள்ளதாக எண்ணி என் முதுகை நானே தட்டிக் கொள்கிறேன்).
(தொடரும்)
