காங்கிரசை காப்பாற்றவே எம்.பி.க்கள் கூட்டம்!

9 Min Read

தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. பேட்டி!

சென்னை, ஆக.10– தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றத் தி.மு.க. குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘த.வெ.க. அரசை பின்னணியிலிருந்து இயக்குவது யார்’’ என்றும், ‘‘காங்கிரசை காப்பாற்றவே எம்.பி.க்கள் கூட்டம்’’ என்றும் கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்றத் தி.மு.க. குழுத் தலை வருமான கனிமொழி கருணாநிதி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தொகுதி மறுவரையறை குறித்துஅனைத்து நாடாளுமன்ற உறுப்பி னர் கூட்டத்தை கூட்டியிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளாத நிலையிலேயே அக்கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. இந்தக் கூட்டம் நடத்துவதற்கான அடிப்படைக் காரணம் என்ன என்பது தெளிவாக இல்லை. ஏனென்றால், இதேபோன்ற ஒரு கூட்டத்தை எங்களுடைய கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது, 5.3.2025 அன்று நடத்தி யிருக்கிறார்கள்.

தொகுதி மறுவரையறை குறித்து அனைத்துக் கட்சிகளின் கருத்துகளையும் தெரிந்துகொள்வதற்காக, அவர் முதல மைச்சராக இருந்தபோது ஒரு கூட்டத்தை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் த.வெ.க. சார்பில், இன்று அமைச்சராக இருக்கக்கூடிய அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் கலந்துகொண்டு, அங்கே நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டிருக்கிறார்.

அந்தத் தீர்மானங்களின் அடிப்ப டையிலே, நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, அத்தனை கட்சிகளும், பா.ஜ.க.வைத் தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் ஏற்றுக்கொண்ட ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள். அந்தத் தீர்மானத்திற்கும், இன்றைக்கு நடைபெற்றிருக்கக் கூடிய இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டிருக்கக்கூடிய முடி வுகளுக்கும் என்ன வித்தியாசம் என்பதை நாங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்.

தமிழ்நாட்டின் உரிமைகளே
முக்கியம் என்றார்
எங்கள் தலைவர்!

முதன்முதலில் இந்த தொகுதி மறு வரையறை குறித்த பேச்சு வந்தபோதே, எங்களுடைய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், அப்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், அய்ந்து மாநில முதலமைச்சர்கள், மற்ற கட்சிகளின் தலைவர்களை எல்லாம் அழைத்து தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படக்கூடிய அத்தனை மாநிலங்களில் இருந்தும் அனைவரையும் அழைத்து சென்னையி லேயே ஒரு கூட்டத்தை நடத்தினார். அந்தக் கூட்டத்திலேயும் கலந்து கொண்ட முதலமைச்சர்கள், அந்தத் தீர்மானங்களை ஏற்றுக்கொண்டு கையெ ழுத்திட்டிருக்கிறார்கள்.

அந்தக் கூட்டத்தில் ‘ஃபேர் டீலிமிடே ஷன்’ என்பதுதான் முக்கியமாக வலி யுறுத்தப்பட்டது. தொகுதி மறுவரையறையை நாங்கள் முற்றிலுமாக எதிர்க்கவில்லை. நியாயமான ஒரு தொகுதி மறுவரையறை நடைபெற வேண்டும் என்பதுதான் அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவாகவும், தீர்மானமாகவும் இருந்தது. அதில் கலந்துகொண்ட அத்தனை பேரும் ஒருமனதாக கையெழுத்திட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி, தேர்தல் நேரத்தில் தொகுதி மறுவரையறை கொண்டுவரப்பட்டபோது, தேர்தல் உச்சத்தில் இருந்த அந்த நேரத்தில்கூட, முதலமைச்சராக இருந்த மு.க. ஸ்டாலின் எங்களுக்கு தேர்தல் முக்கியம் இல்லை; தமிழ்நாட்டின் உரிமைகள்தான் முக்கியம். நாம் பாதிக்கப்படக் கூடாதுஎன்ற ஒரு முடிவோடு அந்தப் பிரச் சாரத்தை கையில் எடுத்தார்.

நாடாளுமன்றத்தில் மசோதாவை முறியடித்தோம்!

அதுமட்டுமில்லாமல், தேர்தல் பணியில் இருக்கக்கூடிய அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களையும், நீங்கள் போய் அந்தத் தீர்மானத்திற்கு எதிராகக் கொண்டுவரக்கூடிய மசோதாவிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று எங்கள் அனைவரையும் அனுப்பி, முதல் முதலாக பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு அவர்கள் கொண்டுவந்த ஒரு மசோதா முறியடிக்கப்பட்டது என்றால், அது திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற இயக்கங்கள் எதிர்த்த தொகுதி றுவரையறை மசோதா மட்டும்தான். தொடர்ந்து அதற்காகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கக்கூடிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.

ஆனால், அதே நேரத்தில் தமிழ்நாடு பாதிக்கப்படக்கூடாது என்பதுதான் எங்களுடைய தொடர் கோரிக்கையாக இருக்கிறது. நாங்கள் வைத்திருக்கக்கூடிய தீர்மானங்களின் அடிப்படையில், நாங்கள் போன முறை அந்த மசோதா கொண்டுவரப்பட்டபோது நாடாளு மன்றத்தில் எங்களுக்கு எதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை மிகத் தெளிவாக எடுத்துவைத்திருக்கிறோம்.

அந்த சட்ட மசோதாவில் எந்த இடத்தி லேயுமே, கொண்டுவரக்கூடிய தொகுதி மறுவரையறை எல்லாருக்கும் ஒரே சமமாக அதிகரிக்கப்படும் என்றும், தமிழ்நாட்டுடைய சதவீதம் எந்தக் காலகட்டத்திலும் மாறாது என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால், அந்த சட்ட மசோதாவிற்குள் அதற்கான உறுதியான ஏற்பாடு எதுவும் இல்லை. வாய்மொழியாக உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் வந்து அதைச் சொன்னாரே தவிர, அது தொகுதி மறு வரையறை மசோதாவில் இல்லை. அதனால் நாங்கள் இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நிராகரித்தோம்.

இப்போது அடுத்த முறை மசோதா வரப்போகிறது என்று பரவலாகப் பேசப்படு கிறது. ஆனால், இதுவரைக்கும் ஒன்றிய அரசாங்கம் எங்களை அழைத்தோ, எதிர்க்கட்சிகளை அழைத்தோ பேசியதாக எங்களுக்கு தகவல் இல்லை. ஒருவேளை ஒரு சில பேரிடம் பேசியிருக்கலாம். ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்தை இதுவரை அழைத்து, மசோதா மாற்றி அமைத்து கொண்டு வருகிறோம் என்று எந்தத் தகவலும் வரவில்லை.

இந்த கூட்டத்தொடரில் கொண்டு வருவதற்கான வாய்ப்பு இல்லை என்பதுதான் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கக்கூடிய செய்தி. அதனால் இந்த மசோதாவும் இல்லை; மசோதாவினுடைய வரைவும் தரப்படவில்லை. ஆகையால், என்னென்ன மாற்றங்கள் இருக்கின்றன, என்ன மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்பது பற்றியும் எந்தவிதமான தகவலும் இல்லை. அப்படி இருக்கும் பொழுது, பழைய மசோதாவிற்கு இங்கே இப்போது புதிதாக வரும் என்று நாம் நினைக்கக்கூடிய மசோதாவிற்கும் என்ன பெரிய மாற்றம் இருக்க முடியும்?

இந்நிலையில் இந்தக் கூட்டம் எதற்காக கூட்டப்பட்டது. யார் அந்தக் கூட்டத்திற்குப் பின்னணியில் இருக்கிறார்கள், யார் இவர்களை, இந்த அரசாங்கத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்? அதைத் தாண்டி, ஒரு கூட்டம் நடத்துகிறோம் என்றால், ஒரு அரசாங்கம் கட்சித் தலைமைக்குத்தான் கடிதம் எழுத வேண்டும். ஆனால், தலைமை செயலர் தனிப்பட்ட முறையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதத்தை அனுப்புகிறார். அப்படியென்றால், தலைமை செயலர் யாருக்குப் பணியாற்றுகிறார்? தமிழ்நாடு அரசாங்கத்திற்கா, இல்லையென்றால் ஓர் அரசியல் இயக்கத்திற்கா என்ற கேள்வி எழுகிறது.

கட்சித் தலைமைக்குத்தான் கடிதம் எழுத வேண்டும்!

தமிழக வெற்றிக் கழகத்தினுடைய தலைமை செயலர் போல வந்து ஒவ்வொரு எம்.பி.க்கும் கடிதம் எழுதி எங்களை அழைப்பது என்பதே முறையில்லாத ஒன்று. எங்களுடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அழைத்தபோது, கட்சியுடைய தலைவர்களுக்குத்தான் கடிதம் எழுதி னார்கள். யாரை அனுப்புவது என்று கட்சித் தலைமை மட்டுமே முடிவு செய்ய வேண்டும். அதனால் எம்.பி.க்களுக்கு தனியாக வந்து நீங்கள் கடிதம் எழுதுவது என்பதே முறையில்லாத ஒன்று.

மேகதாது பிரச்சினையை
திசை திருப்பவே கூட்டம்!

மேகதாது, விவாசாயிகள் பிரச்சனை என எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்ற சூழலில் திசை திருப்பக்கூடிய ஒரே எண்ணத்தோடு இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அவர்களுடைய கூட்டணியில் இருக்கக்கூடியவர்களுக்கு எந்தவிதமான ஒரு தர்மசங்கடமும் வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தோடு, திசை திருப்புவதற்காக இன்றைக்கு இந்தக் கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது; அதற்காகவே இந்தப் பிரச்சினையை கையில் எடுத்திருக்கிறார்கள்.

தற்போது கட்சியில் ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்ற அடிப்படையில்தான் நேரம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சுயேட்சையாக இருக்கக் கூடியவர்க ளுக்குத்தான் நேரம் குறையக்கூடிய வாய்ப்பு இருக்கிறதே தவிர, உங்களுடைய கட்சிக்கு எத்தனை பிரதிநிதிகள் இருக்கிறார்கள் என்பதன் அடிப்படையில்தான் நேரம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதனால் இதையெல்லாம் ஒரு காரணமாகச் சொல்லி, இது வேண்டாம் என்று சொல்வது கிடையாது.

மக்கள் தொகை
அடிப்படையில் கூடாது!

எங்கள் இயக்கத்தை பொறுத்தவரை நாங்கள் கேட்கக்கூடிய ஒன்றே ஒன்று, 33 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்பதுதான். அதுதான் எங்க ளுடைய தொடர் கோரிக்கையாக இருக்கிறது. ஆனால் சில இடங்களில், கிட்டத்தட்ட சில தொகுதிகளில் 40 லட்சத்திற்கும் மேலாக அங்கு இருக்கக்கூடிய மக்கள் தொகை இருக்கக்கூடிய ஒரு சூழலில், தொகுதி மறுவரையறையை மக்கள் தொகை அடிப்படையில் கொண்டு வந்தால் தென் மாநிலங்களுக்கு மிகப்பெரிய ஒரு பாதிப்பு இருக்கும். அதனால் மக்கள் தொகை அடிப்படையிலேயே அதை கணக்கீடு செய்யக்கூடாது என்பதுதான் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தக்கூடிய ஒன்று.

அதனால் தமிழ்நாட்டுக்கு எந்த விதத்திலும் இந்தப் பிரதிநிதிகளுடைய எண்ணிக்கை குறைந்து விடக்கூடாது. நாங்கள் மக்கள் தொகையைக் குறைத்திருக்கிறதற்காகப் பழிவாங்கப்படக்கூடாது என்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகம் சொல்லக் கூடிய விஷயம்.

தி.மு. கழகத்தை இதுவரை
யாரும் அழைத்துப் பேசவில்லை!

ஒரு மசோதா வரும்போது ஆளுங்கட்சி எல்லோரையும் அணுகுவது இயல்பு. அந்தவகையில்தான், பாஜக எல்லாரையும் அணுகியிருக்கிறார்கள். எனக்கு வந்த செய்திபடி நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய ராகுல் காந்தியை நேரடியாகச் சென்று சந்தித்தார் என்றும் சொல்கிறார்கள். தவெக வேண்டு மென்றால் யாரையும் சுமூகமாக அணுகிப் பேசாமல் இருக்கலாம். ஆனால் பொதுவாக நாடாளுமன்றத்தில் ஒரு சட்ட மசோதா கொண்டு வர வேண்டுமென்றால் எல்லாத் தலைவர்களையும் அழைத்துப் பேசுவார்கள். ஆனால், போன தடவை தோற்கடிக்கப்பட்ட மசோதாவை இப்போது மறுபடியும் கொண்டு வரப் போகிறோம்; அதனால் அதைப் பற்றி நாங்கள் பேச வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தை இதுவரை யாரும் அழைத்துப் பேசவில்லை.

நிச்சயமாக நம்முடைய மாநிலம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல், இப்பொழுது இருக்கக்கூடிய சதவீதம் குறைக்கப்படாமல், நம்முடைய எம்.பி.க்களுடைய எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்ற நோக்கில்தான், தொடர்ந்து எங்களுடைய தலைவரும், திராவிட முன்னேற்றக் கழகமும் இதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம்.

முதுகில் குத்தியவர்கள்
யார் என்பது மக்களுக்குத் தெரியும்!

தொடர்ந்து, யார் எட்டப்பர்கள், யார் எட்டப்பர்கள் இல்லை என்பது தேர்தல் முடிவுக்குப் பிறகு யார் யார் எப்படி நடந்துகொண்டார்கள் என்பதைப் பார்த்து மக்களுக்கு மிகத் தெளிவாகத் தெரியும். அதனால் யார் எட்டப்பர்கள் என்று தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும். யார் முதுகில் குத்தியவர்கள், யார் நேர்மையாக மக்களோடு அரசியல் செய்கிறார்கள் என்று தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும்.

மேலும், திராவிட முன்னேற்றக் கழகமும் அ.தி.மு.க.வும் மேகதாது விஷ யத்திலும் ஒருமித்த கருத்தைத்தான் கொண்டிருக்கிறோம். பல நேரங்களில் ஒரே விஷயத்திற்காக ஒன்றாகக்கூட போய் நாங்கள் டில்லியில் பிரதிநிதித்துவப்படுத்தியிருக்கிறோம். அதனால் இது புதிதான ஒரு விஷயம் அல்ல. இவர்கள் புதிதாக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்திருக்கிறார்கள்; இவர்கள் புதிதாக அரசியலுக்கு வந்திருக்கிறார்கள் என்பதால் காலம் காலமாக நடந்து கொண்டி ருக்கக்கூடிய பல விஷயங்கள் இவர்களுக்குத் தெரியவில்லை என்பதற்காக, இது இதுவரை நடக்காத ஒன்று இல்லை.

மேகதாது பிரச்சினையில்
தி.மு.க. இணைந்து செயல்படும்!

அதனால் இப்பொழுது கூட இன்று ஆட்சிப் பொறுப்பில் இருக்கக்கூடிய தவெக, எல்லாஎதிர்க்கட்சித் தலைவர்களையோ அல்லது அவர்களுடைய கட்சிகளுடைய பிரதிநிதி களையோ அழைத்துக்கொண்டு போய், அங்கே இருக்கக்கூடிய நீர்வளத் துறை அமைச்சரையோ அல்லது மற்ற அமைச்சர்களையோ சந்தித்து, இந்த மேகதாது பிரச்சினையைப் பற்றி அவர்க ளிடம் எடுத்துச் சொல்வது என்றால், நிச்சயமாக திராவிட முன்னேற்றக் கழகமும் அவர்களோடு செல்ல தயாராக இருக்கிறோம்.

ஆனால் திசை திருப்புவதைத் தவிர வேறு எதுவும் தவெகவிற்கு தெரிய வில்லை. இன்றைய கூட்டம் நடந்து முடிந்துவிட்டது இல்லையா? ஏதாவது தீர்மானம் வெளியிட்டிருக்கிறார்களா? இல்லையென்றால் முதலமைச்சர் இந்தக் கூட்டத்தில் நாங்கள் இந்த முடிவெல்லாம் எடுத்திருக்கிறோம் என்று சொன்னாரா? இதில் தவெக உடைய நிலைப்பாடு என்ன? ஏதாவது தெளிவுபடுத்தியிருக்கிறார்களா? அதனால் அவர்களின் நோக்கம் என்ன என்று எங்களுக்குத் தெரியவில்லை; அவர்க ளுக்காவது தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை.

விவசாயிகள் மீது அவர்களுக்கு இருக்கக்கூடிய அக்கறை என்ன என்பது நமக்கு நன்றாகத் தெரியும். இதையெல்லாம் தாண்டி திசை திருப்பக்கூடிய எத்தனையோ விஷயங்கள் இன்றைக்கு நடந்து கொண்டி ருக்கின்றன. இதிலிருந்து திசை திருப்பி, இன்றைக்கு திடீரென்று தனக்கு இந்தத் தொகுதி மறுவரையறை மீது அக்கறை இருக்கிறது என்று சொல்லிக்கொள்கிற விதமாகத்தான் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டி ருக்கிறது.

தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தவெகவில் இருந்து வந்து கலந்து கொண்ட ஆனந்த் அந்தத் தீர்மானங்களை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டிருக்கிறார். இப்பொழுது புதிதாக ஒரு தீர்மானம் போடப்படுகிறது. அந்தத் தீர்மானம் இருக்கும்பொழுது புதிதாக ஒரு தீர்மானம் கொண்டு வந்தால், அந்தத் தீர்மானத்தை நீங்கள் நிராகரிக்கிறீர்களா? அந்தத் தீர்மானத்தை எதிர்க்கிறீர்களா? எதற்காக ஒரு புதிய தீர்மானம்? ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில், அதைத் தாண்டி இன்னொரு தீர்மானம் கொண்டு வர வேண்டுமென்றால், அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்ன நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

இவ்வாறு தி.மு.க. துணைப் பொதுச்செய லாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. பேட்டியளித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *