சென்னை, ஆக.8 “யாரும் கேட்காமலேயே அவசர அவசரமாகத் தொகுதி மறுவரையறைக்கான கலந்தாய்வுக் கூட்டத்தை தவெக அரசு தற்போது கூட்டியிருப்பது காவிரி பிரச்சினையில் இருந்து மக்களை திசைதிருப்பும் அரசியல் நாடகமேயன்றி வேறில்லை. இதில் திமுக பங்கேற்காது” என்று திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தொகுதி மறுவரையறை எனும் ஆபத்தை முதன்முதலில் எடுத்துரைத்து எச்சரித்தவர் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின்தான். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் அழைத்து கூட்டம் நடத்தி, தமிழ்நாட்டின் கோரிக்கைகளைத் தீர்மானங்களாக நிறைவேற்றினார். அதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மற்றும் கட்சித் தலைவர்களை அழைத்து நியாயமான தொகுதி மறுவரை யறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தையும் சென்னையில் நடத்திக் காட்டினார்.
‘தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்’ என்ற முழக்கத்தை முன் வைத்து ஒட்டுமொத்த மாநிலத்தையும் எங்கள் தலைவர் ஓரணியில் திரட்டிக் காட்டினார்.
அனைவரது எதிர்ப்பையும் மீறி, நாடாளுமன்றத்தில் இது தொடர்பான சட்ட முன்வரைவை பாஜக. கொண்டு வந்தபோது, சட்டமன்றத் தேர்தல் பரப்புரைப் பணிகளுக்கு இடையிலும் இதனை எதிர்த்துப் போராடினார். கருஞ்சட்டை அணிந்து, கருப்புக் கொடி ஏற்றி, சட்ட வரைவின் நகலைக் கொளுத் தினார். நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறாமல் தோல்வியடையச் செய்தார்.
தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தொகுதி மறுவரையறை சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றப் போவதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. திருத்தப் பட்ட சட்ட முன்வடிவு குறித்து எந்தத் தகவலும் இல்லாத நிலையில் – அது இன்னும் கையில் கிடைக்கப்பெறாத நிலையில், இதில் புதிதாக விவாதிக்கவும் எதுவும் இல்லை.
தமிழ்நாட்டின் நிபந்தனைகளை ஏற்ெகனவே நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பின்வரும் அந்த நிலைப்பாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் இப்போதும் உறுதியாக நிற்கிறது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய தேசிய முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இப்போதும் அதே நிலைப்பாட்டிலேயே இருக்கும்போது இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்துக்கான தேவை என்ன? முந்தைய நிலைப்பாட்டில் இருந்து அவர்களை மாற்றுவதற்குத்தான் இந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறதா?
தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிரான, நமது பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் வகையிலான தொகுதி மறுவரையறையைத் திமுக நிச்சயம் எதிர்க்கும். அதில் எள்ளளவும் எங்களிடம் மாற்றம் இல்லை. ஆனால், காவிரிப் பிரச்சினைக்காகத் தமிழ்நாடு முழுவதும் தற்போது போராட்டம் நடைபெற்று வருகிறது. மேகதாது அணை தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென தமிழ்நாட்டின் பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருகிறார்கள். அனைவரும் கேட்கும் அந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தாமல், அதுகுறித்து வாயும் திறக்காமல் தவெக அரசு கள்ள மவுனம் காக்கிறது. யாரும் கேட்காமலேயே அவசர அவசரமாகத் தொகுதி மறுவரையறைக்கான கலந்தாய்வுக் கூட்டத்தைத் தவெக அரசு தற்போது கூட்டியிருப்பது காவிரி பிரச்சினையில் இருந்து மக்களைத் திசைதிருப்பும் அரசியல் நாடகமேயன்றி வேறில்லை.
தொகுதி மறுவரையறைக் கலந்தாய்வுக் கூட்டத்தில் திமுக பங்கேற்க வேண்டு மென்றால் அதற்கு முன்பாக தமிழ் நாட்டின் உயிர்ப் பிரச்சினை யான மேகதாது அணை குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என நிபந்தனை விதித்து எங்கள் கழகப் பொதுச் செயலாளர் துரைமுருகன், நேற்று திமுக-வின் நிலைப்பாட்டை அறிக்கை வாயிலாகத் தெளிவுபடுத்திவிட்டார்.
எனவே, தமிழ்நாடு அரசியல் கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையை நிராகரித்துள்ள தவெக அரசின் இன்றைய கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது. தமிழ்நாட்டின் காவிரி உரிமையிலும் டெல்டா உழவர்கள் மீதும் இந்த அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருக்கிறதென்றால், மேகதாது அணைக்கு எதிராகச் சட்டமன்றத்தில் நாம் நிறைவேற்றிய தீர்மானத்தை நமது நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சென்று ஒன்றிய ஜல் சக்தி அமைச்சரிடம் நேரில் வழங்கிடத் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் முன்வர வேண்டும். தமிழ்நாடு அரசின் சார்பில் பிரதிநிதிகளை அனுப்ப தமிழ்நாடு முதலமைச்சர் தயாரா? என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
