சென்னை, ஆக.5– இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் தியாகராயர் நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் நேற்று (4.8.2026) நடைபெற்றது.
இதில் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:
மு.வீரபாண்டியன்: ஏழை, எளிய மக்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராட, தொடர்ந்துகூட்டியக்கங்களை நடத்த இடதுசாரிக் கட்சிகள் திட்டமிட்டுள்ளோம்.
முதலாளித்துவத்தில் இருந்து இந்த தேசத்தை சோசியலிசத்தின் பக்கம் நகர்த்துகிற போராக அது அமையும்.
பெ.சண்முகம்: இடதுசாரி கொள்கைகளை முன்னிறுத்தி மாநில அளவில் பேரணியை திருச்சியில் அக்.6ஆம் தேதி நடத்த முடிவு செய்துள்ளோம். போராடுகிற உரிமையை எந்த அரசாங்கம் தடுத்தாலும் நாங்கள் எதிர்ப்போம்.
பழ.ஆசைத்தம்பி: பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை த.வெ.க. அளித்திருந்தது. அந்த வகையில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்டை மக்கள் மட்டுமல்ல; நாங்களும் ஆவலோடு எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினர்.
பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி
சென்னையில் விவசாயிகள் தொடர் காத்திருப்புப் போராட்டம்
சென்னை, ஆக. 5- தேர்தல் வாக்குறுதிபடி அறிவித்த பயிர்க் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யக்கோரி சென்னையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
த.வெ.க. அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம், எழும்பூரில் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர்கள் சாமி.நடராஜன், பி.எஸ்.மாசிலாமணி, தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் முருகசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.
போராட்டம் குறித்து பி.எஸ்.மாசிலாமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மாநிலம் முழுவதும் விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு பயிர்க்கடனில் 5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடியும், 5 ஏக்கருக்கு மேல் கடன் பெற்ற விவசாயிகள் கடனில் பாதி தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதி கொடுத்தது தவெக.
அதைத்தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் ஜோசப் விஜய் தேர்தல் வாக்குறுதிப்படி கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்யாமல், முதலில் ரூ.50 ஆயிரம் வரை கடன் பெற்றவர்களுக்கு முழு தள்ளுபடி என்றும், அதற்கு பின் பல்வேறு விவசாய சங்கங்களின் போராட்டங்களுக்கு பிறகு அடுத்த அறிவிப்பில், ரூ.75,000 வரை கடன் பெற்ற சிறு, குறு விவசாயிகளுக்கு முழு தள்ளுபடி என்றும், ரூ.75 ஆயிரத்துக்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு கடன் பெற்ற தொகையில் வெறும் ரூ.35,000 தள்ளுபடி என்றும் அறிவித்தது விவசாயிகளுக்கு மிகப் பெரிய ஏமாற்றமாகும்.
எனவே, 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கங்கள் இணைந்து தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிபடி கூட்டுறவு பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். மேலும் எங்களது கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சரை சந்திக்கவும் அனுமதி கோரியுள்ளோம். முதல்வரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்படும்.” இவ்வாறு அவர் கூறினார்.
