சமூகநீதி என்பதும், வீரமணி என்பதும் வேறு வேறு சொற்கள் அல்ல
தந்தை பெரியாருக்கு ஒரு ஆசிரியர் – ஆசிரியருக்கு ஒரு கவிஞர் கிடைத்துள்ளார்
கவிஞருக்கு இந்த விருதைப் பொருத்தமாக வழங்கிய பெரியார் பன்னாட்டு அமைப்புக்குப் பாராட்டுகள்
பெரியார் பன்னாட்டமைப்பின் ‘‘சமூகநீதிக்கான கி.வீரமணி விருது’’ வழங்கும் விழாவில்
சென்னை, ஆக. 5 தந்தை பெரியாருக்கு ஒரு ஆசிரியர், ஆசிரியருக்கு ஒரு கவிஞர் கிடைத்துள்ளார். அத்தகையவருக்கு பெரியார் பன்னாட்டு அமைப்பு சமூகநீதிக்காக கி.வீரமணி விருது வழங்குவது பொருத்தமானது என்றார் ‘கலைஞர் செய்திகள்’ தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் ப.திருமாவேலன் அவர்கள்.
பெரியார் பன்னாட்டமைப்பின் ‘‘சமூகநீதிக்கான வீரமணி விருது’’ வழங்கும் விழா
நேற்று (4.8.2026) மாலை 6.30 மணியளவில், சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு, பெரியார் பன்னாட்டமைப்பின் ‘‘சமூகநீதிக்கான வீரமணி விருது’’ வழங்கப்பட்டது. அவ்விழாவில், ‘கலைஞர் செய்திகள்’ தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் ப.திருமாவேலன் வாழ்த்துரையாற்றினார்.
அவரது வாழ்த்துரை வருமாறு:
இன்றைய தலைமுறைக்குப் பெரியாரை அடையாளம் காட்டும் தலைவராய் வாழ்ந்து வரும் மானமிகு ஆசிரியர்!
பெரியார் பன்னாட்டு அமைப்பின் ‘‘சமூக நீதிக்கான கி.வீரமணி விருது’’ வழங்கும் விழாவில், பாராட்டுரை நிகழ்த்த இருக்கின்ற திராவிடர் கழகத்தின் தலைவர், தமிழ் இனத்தினுடைய தலைவர், பெரியாரின் வழித்தோன்றலாய், இன்றைய தலைமுறைக்குப் பெரியாரை அடையாளம் காட்டும் மாமனிதராக வாழ்ந்து வரும் மானமிகு ஆசிரியர் அவர்களே, சமூக நீதிக்கான கி.வீரமணி விருதைப் பெற்றுள்ள மானமிகு கவிஞர் அவர்களே, இந்த நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்களே, விருதை வழங்கிய இலக்குவன் தமிழ் அவர்களே, நிகழ்வுக்கு தலைமை வகித்துள்ள குமணராஜன் அவர்களே, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே, இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்துள்ள கருப்பு மெழுகுவத்திகளே, ஒவ்வொரு முகங்களும், இங்கே பெரியாரின் வாரிசுகளாக, கொள்கை வாரிசுகளாக, நாம் இங்கே கூடியிருக்கின்றோம்.
இன்று நாம் மகிழ்ச்சியாகக் கூடியிருக்கின்றோம்!
பெரியார் திடல் என்பது பல்வேறு காலகட்டங்களில் நாம் உணர்ச்சியாகக் கூடியிருக்கின்றோம்; பல நேரங்களில் கோபமாகக் கூடியிருக்கின்றோம்; பல காலத்தில் போராட்டமாகக் கூடியிருக்கின்றோம்; ஆனால், இன்று நாம் மகிழ்ச்சியாகக் கூடியிருக்கின்றோம். அந்த மகிழ்ச்சிக்குக் காரணம், நம்முடைய கவிஞர் விருது பெறுகிறார் என்பதுதான்.
தனது வாழ்நாள் கடமையாகக் கொண்டிருக்கிறார் டாக்டர் சோம.இளங்கோவன்
இந்த மகிழ்ச்சியை உருவாக்கியவர் நம்முடைய மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள். பெரியாரை உலக மயமாக்கியது ஆசிரியர் வீரமணி என்று சொன்னால், ஆசிரியர் வீரமணியை உலக மயமாக்கி வருபவர் நம்முடைய மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள். அவர் அமெரிக்காவுக்குப் பிழைக்கப் போனவர் அல்ல; பெரியாரியத்தை விதைக்கப் போனவர் என்பதை அரை நூற்றாண்டு காலமாக மெய்ப்பித்துக் கொண்டிருப்பவர் நம்முடைய மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள். கிட்டத்தட்ட 1994 இல் இப்படிப்பட்ட ஓர் அமைப்பை உருவாக்கி, அதில் இரண்டு ஆண்டுகள் கழித்து, 1996 இல் இப்படிப்பட்ட ஒரு விருதை உருவாக்கி, தமிழ் சமூகத்துக்கு உழைத்தவர்கள், உழைக்க வேண்டியவர்கள், இன்னும் உழைக்கக் கூடியவர்களைப் பார்த்து, இந்த விருதுகளை அவர் வழங்குவதைத் தனது வாழ்நாள் கடமையாகக் கொண்டிருக்கிறார் என்று சொன்னால், திராவிட இயக்கம் எத்தனையோ பேருக்கு நன்றிக் கடன்பட்டிருக்கின்றது, அதில் ஒருவராக நம்முடைய மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் இருக்கின்றார்.
அதுவும், ‘‘சமூக நீதிக்கான கி.வீரமணி விருது’’ என்று அந்த விருதுக்குப் பெயர் வைத்திருக்கிறார்கள். சமூக நீதி விருது என்று வைத்திருக்கலாம்; அல்லது கி.வீரமணி விருது என்று வைத்திருக்கலாம்; ‘‘சமூக நீதிக்கான கி.வீரமணி விருது’’ என்று ஏன் வைத்திருக்கிறார்கள் என்று சொன்னால், சமூக நீதி என்பதும், கி.வீரமணி என்பதும் வேறு வேறு சொற்கள் அல்ல. அவை இரண்டும் ஒரே சொற்கள்தான் என்பதின் அடையாளமாக இந்த விருது அமைந்திருக்கின்றது.
15 ஆண்டு காலம், 42 மாநாடுகள்,
16 போராட்டங்கள்!
இதே இடத்தில், இந்தப் பெரியார் திடலுக்கு பி.பி.மண்டல் அவர்கள் வந்து, ‘‘இப்படிப்பட்ட ஓர் அறிக்கையை நான் இந்தியா முழுவதும் பயணம் செய்து உருவாக்கிவிட்டேன்; என்னுடைய கடமையை நான் முடித்துவிட்டேன். ஆனால், இதை நிறைவேற்ற வேண்டிய கடமை என்பது உங்களுக்குத்தான் இருக்கிறது’’ என்று சொன்னார். அவர் சொன்ன ஒரே ஒரு வார்த்தைக்காக, ‘எறும்பு ஊர கல்லும் தேயும்’’ என்பதை போல, 15 ஆண்டு காலம், 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தி, இந்தியாவில் இருக்கின்ற அனைத்துத் தலைவர்களுக்கும் மண்டல் ஊசியைச் செலுத்தி, இந்தியாவில் இருக்கின்ற அனைத்துத் தலைவர்களையும் பெரியார் திடலுக்கு வரவைத்து, சமூக நீதியை, 27 சதவீத இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்து, இந்தியாவில் இருக்கின்ற பிற்படுத்தப்பட்ட கோடிக்கணக்கான மக்களுக்கு, அவர்களுடைய வாழ்க்கைக்கு மிகப்பெரிய உயர்வை ஏற்படுத்தியவர்தான் நம்முடைய தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள். அதனால்தான் ‘‘சமூக நீதிக்கான கி.வீரமணி விருது’’ என்கின்ற அடிப்படையில், இப்படி ஒரு விருதை உருவாக்கி, அந்த விருதினை இதுவரை பெற்றவர்கள் அனைவரையும் தாண்டி, இந்த விருதாளர் மிகப்பெருமைக்குரியவர் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
பெரியாருக்கு ஒரு ஆசிரியர் கிடைத்தார்; ஆசிரியருக்குக் கிடைத்தவர் ஒரு கவிஞர்!
பெரியாருக்கு ஒரு ஆசிரியர் கிடைத்தார் என்று சொன்னால், ஆசிரியருக்குக் கிடைத்தவர் ஒரு கவிஞர் அவர்கள். பெரியார் எழுதிய வரிகளிலேயே, மிக முக்கியமான ஒரு வரி, ‘‘எனது கொள்கையைப் பின்பற்றுபவர்கள், என்னைப் போன்ற பண்புடையவர்களாக அல்லது என்னைப் போன்ற தன்மை உள்ளவர்களாக இருப்பார்கள் என்று நான் எதிர்பார்க்க முடியாது’’ என்று ஓரிடத்தில் அவர் எழுதி இருக்கிறார். ஆனால், பெரியாரைப் போலவே, தன்மை கொண்ட, பண்பு கொண்ட மனிதராக ஆசிரியர் அவர்கள் இருக்கிறார் என்று சொன்னால், பெரியாரைப் போலவும், ஆசிரியரைப் போலவும் தன்மை கொண்ட ஒரு மனிதராக நம்முடைய கவிஞர் அவர்கள் இருக்கிறார்கள். அதனால்தான் அவருக்கு இந்த விருது மிகப் பொருத்தமானது என்று நான் சொல்கின்றேன்.
எவ்வளவு பெரிய கொள்கைவாதியாக இருந்தாலும், எவ்வளவு பெரிய தியாகியாக இருந்தாலும், எவ்வளவு பெரிய அறிஞராக இருந்தாலும், கடைசியில் அனைத்தையும் தனிப்பட்ட முறையில் பேசிவிட்டு, ‘‘எனக்காக இந்த இயக்கம் என்ன செய்தது? எனக்காக இந்தத் தலைமை என்ன செய்தது? எனக்கு உரிய மரியாதை கொடுத்ததா?’’ என்றெல்லாம் வருத்தப்பட்ட பல பேரைப் பார்த்திருக்கிறோம். ஆனால், அப்படிப்பட்ட எந்த வருத்தமும் இல்லாமல், மணியம்மையார் சொல்வார்களே, ‘‘எதைப் பற்றியும் கவலைப்படாமல் எந்த சபலங்களுக்கும் ஆளாகாமல் தொண்டாற்ற வேண்டும்’’ என்கின்ற 1974 ஆம் ஆண்டு தீர்மானத்தை அப்படியே பின்பற்றிக் கொண்டிருக்கின்ற ஒரு மகத்தான மனிதராக, நம்முடைய கவிஞர் அவர்கள் இருக்கின்றார்கள்.
பெரியார் வேறு; பெரியார் திடல் வேறு;
ஆசிரியர் வேறு என்று நினைக்காதவர் கவிஞர்!
கவிஞர் அவர்களுக்கு இருக்கின்ற இன்னொரு மிகப்பெரிய முக்கியமான தனிச் சிறப்பு என்பது பெரியார் வேறு; பெரியார் திடல் வேறு; ஆசிரியர் வேறு என்று நினைக்காதவர் கவிஞர் அவர்கள். பெரியாரியத்தைக் காப்பாற்றுவது என்பதற்குள் பெரியார் திடலும் அடங்கி இருக்கின்றது; ஆசிரியர் வீரமணியும் அடங்கி இருக்கின்றார்.
ஒரு மிகப்பெரிய காவல் அரண்!
பெரியார் திடலை வீழ்த்திவிட்டு, ஆசிரியர் வீரமணியைக் கொச்சைப்படுத்திவிட்டு பெரியாரியத்தை காப்பாற்றி விட முடியாது. அந்த அடிப்படையில், பெரியாரையும், பெரியார் திடலையும், கி.வீரமணியையும் காப்பாற்றுவதற்கு இருக்கின்ற ஒரு மிகப்பெரிய காவல் அரண் என்று சொன்னால், அது கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள்தான். ஆசிரியரே விரும்பாவிட்டாலும் சரி, திராவிட இயக்கத்தை, திராவிடர் கழகத்தை விமர்சித்து எழுதுகிறவர்களுக்கு, உரிய பதிலை, உரிய நேரத்தில் உடனடியாகத் தருகின்ற ஒரே மின்சாரம் நம்முடைய கவிஞர் அவர்கள்தான்.
சில நாட்களுக்கு முன்பு ஆனைமுத்து அவர்களுடைய மலருக்கு விமர்சனமாக, அவர் ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார். அதில் இருக்கின்ற கருத்துக் குறைபாடுகளுக்கு எதிராக, அதில் கடைசி வரி இருக்கின்றது – ‘‘இதையெல்லாம் எழுத வேண்டுமா? என்று ஆசிரியர் என்னிடம் கேட்டார். ஆனால், காலப்போக்கில் இதற்கு எல்லாம் பதில் எழுதாமல் போய்விட்டால், நாளைக்கு யாரோ ஒருவர் வந்து இதுதான் உண்மை என்று நினைத்து விடுவார்கள். அதனால் எழுதித்தான் தீர வேண்டும் என்று சொல்லி, நான் எழுதினேன்’’ என்று சொல்லி இருக்கின்றார்.
60 ஆண்டுகளாக, ஒரே வேலை;
ஒரே கொள்கை; ஒரே எழுத்து; ஒரே மேடை!
எத்தனை ஆண்டுகள்? ஒரு துறையில். ஒரு அலுவலகத்தில், இரண்டு ஆண்டுகள் அல்லது அய்ந்து ஆண்டுகள், ஒரு வேலையை 10 ஆண்டுகள் பார்த்தவர்கள் கூட, ‘‘ஒரே மாதிரி வேலை பார்ப்பதற்குப் போரடிக்குது, ஒரு சேஞ்ச் வேணும்’’ என்று வேலை கேட்டு வருகின்ற எத்தனையோ இளைஞர்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். 60 ஆண்டுகளாக, ஒரே வேலை; ஒரே கொள்கை; ஒரே எழுத்து; ஒரே மேடை; ஒரே மனிதர்கள்; ஒரே நிறத்தைப் பார்த்துக்கொண்டு, ஒரு மனிதன் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்று சொன்னால், அது கலி.பூங்குன்றன் அவர்கள் தான். இன்னும் சொன்னால், ஒரே இடத்தில் வாழ்வது கூட, 45 ஆண்டு காலம் பெரியார் திடலில், ஒரே இடத்தில், ஒரே வீட்டில் வாழ்வது கூட ஒரு சலிப்பு மனித இயல்புகளுக்கு வரும். ஆனால், அது ஏன் அவருக்கு வரவில்லை? என்று சொன்னால், திருவள்ளுவர் சொல்கிறார், ‘‘பற்றற்றான் பற்றினை’’ என்பதைப் போல, ‘‘நீ அனைத்தையும் கடவுளிடமே ஒப்படைத்து விடு’’ என்று ஆன்மீகவாதிகள் சொல்வதைப் போல, ‘‘பெரியாரிடமே ஒப்படைத்துவிட்டு’’ வாழ்கின்ற ஒரு மனிதனால் மட்டும்தான், இப்படி எல்லாம் இருக்க முடியும்.
மணவிழாவில், தந்தை பெரியாரின் உரை
இது பெரியார் திடலில் அல்லது திராவிட இயக்கத்தில் மட்டுமல்ல, அவர் பார்த்த பணியிலும் அப்படித்தான் இருந்திருக்கின்றார். அவருக்குத் திருமணத்தை நடத்தி வைத்தவர், தந்தை பெரியார். அன்றைய திருமண நாளில், பெரியார் பேசிய பேச்சு, ‘‘நீங்கள் அரசு ஊழியராக இருக்கிறீர்கள்; எனவே, இயக்கப் பணியை எல்லாம் குறைத்துக் கொண்டு அரசாங்க வேலையை ஒழுங்காகப் பார்’’ என்றார். எவ்வளவு பெரிய நல்வழியைக் காட்டி இருக்கின்றார். ஏனென்றால், ‘‘பார்ப்பனர்கள் அதிகமாக இருக்கும் இடம்; உன்னுடைய வேலையைக் காலி செய்து விடுவார்கள்’’ என்றெல்லாம் சொல்லி இருக்கின்றார். நெருக்கடி கால, 1976 இல் தொடங்கி 1985 வரை, சென்னையைச் சுற்றி தனது அரசுப் பணியிலும் மிகச் சுத்தமாக இருந்து, மனநிறைவோடு விடைபெற்று வந்திருக்கிறார் என்று சொன்னால், அங்கும் அதே நல்ல பெயர்.
காலத்தின் கொடை!
இப்படி, ஒரு மனிதர் இருப்பது என்பது காலத்தின் கொடை என்பது. இதைத்தான் நான் பெரியார் சொன்னார் என்று சொல்வேன். ‘‘என்னுடைய கொள்கையைப் பின்பற்றுவர்கள் என்னுடைய தன்மை கொண்டவர்களாகவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு’’ என்று சொன்னார். அந்த எதிர்பார்ப்பை மீறி, உருவாகிய உருவங்களில் ஒருவராக நம்முடைய கவிஞர் அவர்கள் இருக்கின்றார்கள். அவருக்கு இப்படிப்பட்ட ஒரு விருதை வழங்கியது என்பது, அவருக்குப் பெருமை என்பது ஒரு பக்கம்; சமூக நீதிக்கான கி.வீரமணி விருதுக்கே இது ஒரு பெருமை.
நாம், நம்முடைய இந்தக் கடமையை செய்கின்ற நிலையில், விருது பெறுகின்ற அவர், நாளைக்கு காலையிலேயே இயல்பான ஒரு மனிதராக, இதே பெரியார் திடலுக்குள் வருவார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, அவருடைய வீட்டிற்கு நான் சென்றிருந்தேன், ‘‘அவர் இல்லை, ‘விடுதலை’ அலுவலகத்துக்குச் சென்றுவிட்டார்’’ என்று சொன்னார்கள். இப்போது, நான் அவரிடம் கேட்டேன், ‘‘ஞாயிற்றுக்கிழமையும் ‘விடுதலை’ பேப்பர் வரணும் இல்லையா?’’ என்று சொன்னார்.
இன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்து
நமக்கு வழிகாட்டவேண்டும்!
காலம் என்பதை பெரியாரிடம் ஒப்படைத்துவிட்டு, தன்னுடைய நலன்கள், உடல் நலன், குண நலன் மொத்தத்தையும் பெரியாருடைய கொள்கைக்கு ஒப்படைத்துவிட்டு வாழ்கின்ற கவிஞர் அவர்கள், நம்மை வழிகாட்ட, இன்னும் பல்லாண்டு காலம் வாழ்க என வாழ்த்தி, நான் விடைபெறுகின்றேன்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு ‘கலைஞர் செய்திகள்’ தொலைக்காட்சியின் ஆசிரியர் திருமாவேலன் வாழ்த்துரையாற்றினார்.
