நாங்கள் ‘மிசா’ காலத்தில் சிறையில் இருந்தபோது பெரியார் திடலை ஒரு காவலாளிபோல காத்தவர் கவிஞர் கலி.பூங்குன்றன்!
என் பெயரில் கவிஞருக்கு விருது வழங்கியது–
எனக்கு நானே வழங்கிக் கொண்ட விருது போன்றது!
‘திராவிடம்’ என்பது எஃகு பாறை – அதை யாராலும் அசைக்க முடியாது!
சென்னை, ஆக. 5 நாங்கள் ‘மிசா’ காலத்தில் சிறையில் இருந்தபோது பெரியார் திடலை ஒரு காவலாளிபோல காத்தவர் கவிஞர் கலி.பூங்குன்றன்! என் பெயரில் கவிஞருக்கு விருது வழங்கியது– எனக்கு நானே வழங்கிக் கொண்ட விருது போன்றது! ‘திராவிடம்’ என்பது எஃகு பாறை – அதை யாராலும் அசைக்க முடியாது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
பெரியார் பன்னாட்டமைப்பின் ‘‘சமூகநீதிக்கான கி.வீரமணி விருது’’ வழங்கும் விழா
நேற்று (4.8.2026) மாலை 6.30 மணியளவில், சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு, பெரியார் பன்னாட்டமைப்பின் ‘‘சமூகநீதிக்கான கி.வீரமணி விருது’’ வழங்கும் விழாவில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பாராட்டுரையாற்றினார்.
அவரது பாராட்டுரை வருமாறு:
எனக்கு நானே
வழங்கிக் கொண்ட விருது!
வாழ்நாளில் எத்தனையோ முக்கிய திருநாள்கள் என்று நாம் சிலவற்றைக் குறிப்பிடுவோம். அதுபோல எங்கள் வாழ்நாளில் இது ஒரு மகிழ்ச்சி கலந்த, அறிவுப் பூர்வமான மகிழ்ச்சி கலந்த, ஏனென்றால் மகிழ்ச்சி என்று சொல்லும்போது, அது உணர்ச்சியை மட்டுமே குறிக்கும். இது அறிவுப் பூர்வமான ஒரு மகிழ்ச்சி. உணர்ச்சியோடு இணைந்த ஒன்று. அப்படிப்பட்ட ஓர் அருமையான நிகழ்ச்சியாக இன்றைக்கு, எனக்கு நானே வழங்கிக் கொண்ட விருது; இதுதான் சிறப்பு. இந்தச் சிறப்பு என்பது, கவிஞருக்கு, எங்கள் இயக்கத்தின், பெரியார் திடலின் ஆஸ்தான கவிஞருக்கு. இது ஒரு சிறப்பு என்று சொல்வது புறத்தோற்றம். ஆனால் அதனுடைய அகத்தோற்றம் என்னவென்று சொன்னால், முழுக்க முழுக்க பெரியாருடைய வாழ்நாள் மாணவரான எனக்கு, நானே வழங்கிக் கொண்டிருக்கிற ஒரு சிறப்பு. ‘நானே’ என்று சொல்லும்போது, ஆணவம் இல்லை; அகம்பாவம் இல்லை. அந்த ‘நான்’ என்று சொல்வதற்குள், ‘நாம்’ என்பது அடங்கியதால்தான், அந்த ‘நான்’ இருக்கிறேனே தவிர, ‘நாம்’ இல்லாமல், ‘நான்’ இல்லை. இது வித்தியாசமானது. பலபேர் ‘நான்’ அதனால்தான் ‘நாம்’ என்று சொல்வார்கள். இது வித்தி யாசமானது, வேறுபட்டது. ‘நான்’, ‘நாம்’ என்பதிலே, ‘நாம்’ பிறகு, ‘நான்’ முதலிலே என்ற அளவிலே, அப்படிப்பட்ட ஓர் அற்புதமான நிகழ்ச்சி.
நமக்கு நாமே பாராட்டு வழங்கிக் கொள்ளலாம்!
இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்று இங்கே அமர்ந்திருக்கிற மும்பை மகாராட்டிராவைச் சார்ந்த லெமூரியா அறக்கட்டளை நிறுவனத் தலைவர், தோழர் மானமிகு குமணராசன் அவர்களே, அதேபோல இந்த விருது கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாக வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அப்படித் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்குக்கு முதலாவது விருது; இதே இடத்தில் இருந்துதான் ஆரம்பித்தது. தொடர்ந்து மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞருக்கு. அதேபோல் நம்முடைய ‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய சின்னமான, வரலாற்றில் என்றும் நிலைக்கக்கூடிய ஒருவராக இருக்கக்கூடிய ஒப்பற்ற, நம்முடைய மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னாலே கொடுக்கப்பட்டது. அதேபோல உலக அறிஞர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதெல்லாம் ரொம்பப் பெருமையானது. விருது வழங்கிய நேரத்தில் நான் வாழ்த்துரை வழங்கி இருக்கிறேன். ஆனால், இப்போது நான் வாழ்த்துரை வழங்கவில்லை. அழைப்பிதழில், பாராட்டுரை என்று போட்டிருக்கிறார்கள். சில நேரங்களில் மற்றவர்கள் நம்மைப் பாராட்டுவதற்குத் தயாராக இல்லை என்று சொல்லும்போது, நமக்கு நாமே பாராட்டு வழங்கிக் கொள்ளலாம். இது முரண்பட்ட ஒரு சூழ்நிலை இல்லை. அப்படிப்பட்ட ஓர் அற்புதமான இந்த நிகழ்ச்சியிலே, அருமையான ஓர் உரையாற்றிய தோழர்கள் ‘கலைஞர் செய்திகள்’ தொலைக்காட்சியினுடைய செய்தி ஆசிரியரும், ‘முரசொலி’ நாளேட்டினுடைய ஒப்பற்ற தலையங்கக் கர்த்தாவாக இருக்கக்கூடிய என்றைக்கும் கருத்தாழமிக்க எழுத்தாளராக இருக்கக்கூடிய, இந்தத் திடலில் பங்கு உள்ள அளவுக்கு இருக்கக்கூடிய அருமைச் சகோதரர் ப.திருமாவேலன் அவர்களே,
ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடித்தார்!
பெரியார் சமூக சேவை மன்றம்; சிங்கப்பூர் நாடு – அதுவும் தொடங்கி, ஏறத்தாழ இப்போது 20 ஆண்டு களுக்கு மேலாக ஆகிவிட்டது. சிறப்பாக ஆன்றோர் நடத்துகிறார்கள். அந்த மன்றத்தின் சார்பாக, சிங்கப்பூர் நாட்டிலே இருந்து அவர்கள் சார்பாக வந்து, பேசிய திரு.நாகரத்தின மாறன் அவர்களே. அவர் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடித்தார். சிங்கப்பூர் நாட்டுக்கும்தான் சொந்தம் என்று சொன்னார்; மயிலாடுதுறையும் எனக்கு உறவு என்று சொன்னார். அப்படிப்பட்ட ஓர் ஈர்ப்புகள் இருக்கின்றன. இந்த சிறப்பான நிகழ்ச்சியிலே, சிறப்பான வகையிலே இந்த விருதை கவிஞருக்கு வழங்கிய பெருமைக்குரியவர் டெக்சாஸ் மாநிலத்திலே நிரந்தரப் பேராசிரியராக இருக்கக்கூடிய மாபெரும் சிந்தனையாளரும், செயல்வீரருமாக இருக்கக்கூடிய இலக்குவன்தமிழ் அவர்கள் ஆவார்கள். அவருடைய உரை மிக ஆழமான உரையாகும்.

‘‘நம் முதுகை யாரும் தட்டுவதற்குத் தயாராக இல்லை என்றால்,
நாமே ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றித் தட்டிக்கொள்ளலாம்!’’
எதிரே இருக்கக்கூடிய அன்பர்களைப் பார்க்கிறோம். இந்தப் பெருமை இருக்கிறதே, அதுதான் மகிழ்ச்சி, எல்லையற்ற மகிழ்ச்சி! இது உழைப்புக்கு ஊதியம்; கவிஞரும் நானும் சந்திக்கும் போது பேசிக்கொள்வோம், ‘‘நம் முதுகை யாரும் தட்டுவதற்குத் தயாராக இல்லை என்றால், நாமே ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றித் தட்டிக்கொள்ளலாம்’’ என்று சொல்லுவோம்.
காரணம் என்னவென்றால், மற்றவர்கள் நினைப்பதை விட, தந்தை பெரியாருடைய தொண்டர்களாக, நாங்கள் தலைவரைத் தேர்ந்தெடுத்தோமே, இந்தக் கொள்கையைத் தேர்ந்தெடுத்தோமே, அதனால் அல்லவா, இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறோம்; அதனால் அல்லவா இவ்வளவு பெருமைகள் நமக்குக் கிடைக்கிறது. ஒரு சமூக மாற்றத்திற்கு, மிகப்பெரிய வாய்ப்பை உருவாக்க வேண்டுமே என்பதற்காகத்தான், இந்த வாய்ப்புகள் எங்களுக்குக் கிடைத்தன.
என்னுடைய நிழலானவர் கவிஞர்!
‘‘இவருக்கு இவரே வழங்கிக் கொள்கிறார்’’ என்று சொன்னால், நாங்கள் வேறு வேறு அல்ல; ஒரே உருவம். நான் கட்டுரையில் எழுதியது போல, என்னுடைய நிழலானவர் கவிஞர். மிகப்பெரிய அளவிற்கு உரியது இயக்கம் என்று நாம் கருதும் நிலையில், இவர் மட்டுமல்ல, இதோ எதிரில் அமர்ந்திருக்கின்ற என்னுடைய தோழர்கள், தமிழ்நாடு முழுக்க இருந்து வந்திருக்கிறார்கள்; முக்கிய பொறுப்பிலே இருக்கக்கூடிய தோழர்கள் வந்திருக்கிறார்கள். ஒரு வகையில் நாங்கள் ஏமாந்து விட்டோம். இவ்வளவு பேர் வருவார்கள் என்று தெரிந்திருந்தால்,இதைப் பொதுக்குழுவாகவே போட்டிருக்கலாம். செலவு, ஒரே செலவாகப் போயிருக்கும்.
திராவிடம் என்பது எஃகு பாறை!
அப்படிப்பட்ட அளவில், அவ்வளவு மிக முக்கிய மான தோழர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள் என்று சொன்னால், இந்த இயக்கம் ஆழங்கால் பதித்த ஒன்று; ஆயிரங்காலத்துப் பயிர். இங்கே சொன்னார் இலக்குவன் தமிழ் அவர்கள், ‘‘திராவிடம் என்பது எஃகு பாறை; அதை அசைக்க முடியாது’’ என்று. சில பேர் அந்தப் பாறையை உரசிப் பார்க்கிறார்கள்; உரசு உரசு என்று என்னதான் உரசினாலும், உரசுகிறவர்கள் முதுகுக்கு வேண்டுமானால் ஆபத்தாகுமே தவிர, பாறைக்கு ஒருபோதும் நட்டம் வராது; அதை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். அப்படிப்பட்ட ஓர் அற்புதமான ஒரு சூழ்நிலையில் நல்ல அளவிற்குக் கவிஞர் வளர்ந்திருக்கிறார்; நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை.

‘‘பெரியார் உலக மயம்;
உலகம் பெரியார் மயம்!’’
‘‘பெரியார் உலக மயம்; உலகம் பெரியார் மயம்’’ இந்தச் சொற்றொடரில் எவ்வளவு ஆழமான பொருள் உள்ளது. இதை ஏதோ நாங்கள் கண்டுபிடித்தோம் என்று நினைக்காதீர்கள்; ஆணையிட்டார் தந்தை பெரியார், நாங்கள் செய்து முடிக்க இன்றைக்குப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். அதுதான் பெரியார் பன்னாட்டு அமைப்பு. பெரியார் பன்னாட்டு அமைப்பு சிகாகோவில் தொடங்கப்பட்டு, 32 ஆண்டுகள் ஆகி இருக்கின்றன. அவ்வமைப்பைச் சிறப்பாக நடத்துகிறார் டாக்டர் சோம.இளங்கோவன் அவர்கள்; அதுபோலவே டாக்டர் சரோஜா இளங்கோவன் அவர்கள். இந்த இரண்டு பேருமே பேராசிரியர்கள். அவர்கள் இந்தப் பணிக்காகவே விருப்ப ஓய்வு வாங்கிக்கொண்டு, மிகப்பெரிய அளவிற்கு 24 மணி நேரம் இந்த வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதனுடைய விளைவு, தந்தை பெரியார் அவர்களுடைய வழிகாட்டுதல்தான். நன்றி உணர்ச்சி. இந்த அரங்கத்தைப் பார்க்கிறேன், தலை சிறந்த நிபுணர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள், சர்வீஸ் கமிஷனில் இருந்து ஓய்வு பெற்றவர்கள்; அதேபோல திட்டக்குழுவினுடைய பொறுப்பாளர்கள்; பேராசிரியப் பெருமக்கள், டாக்டர்கள், வழக்குரைஞர்கள், எழுத்தாளர்கள் நிறைந்திருக்கிறார்கள்.
பெரியாருடைய கொள்கைகள் ஏன்
உலகம் முழுவதும் இருக்க வேண்டும்?
பெரியார் என்ன செய்தார்? இதைத்தான் செய்தார். பெரியாருடைய கொள்கைகள் ஏன் உலகம் முழுவதும் இருக்க வேண்டும்? இந்த வாய்ப்பு தமிழ்நாட்டோடு இருக்கக்கூடாது என்பதை உணர்ந்துதான், மராத்தியத்திலே அம்பேத்கர் அவர்கள் ஆரம்பிப்பதற்கு முன்னால், ஜோதிபா பூலே அவர்கள் ஆரம்பித்தார். இன்றைக்குக் கொழுந்து விட்டுக் கொண்டிருக்கிறது, மிகப்பெரிய அளவிற்கு. அப்படிப்பட்ட ஒரு பெரிய நிலையை, உலகளாவிற்கு ஆக்க வேண்டும் என்பதற்காகத்தான் தான், இந்தப் பணி செய்தோம். பெரியாரோடு போய்விட்டது என்பது அல்ல; சிலர் கணித்தார்கள், ‘‘பெரியாருக்கு வயதாகிவிட்டது’’ என்று.
ஒன்றிய நிதியமைச்சராக இருந்த
உமாசங்கர் தீட்சத்!
ஏன், வருமான வரித் துறையைப் பொறுத்தவரையில் தொந்தரவு கொடுத்தார்கள், அய்யா இருக்கும் போதும்; அதற்குப் பிறகும். அப்போது ஒருவர் இருந்தார், ஒன்றிய அரசாங்கத்தில், உமாசங்கர் தீட்சத் என்று அவருக்குப் பெயர். அவரை கடைசி காலத்தில், கொஞ்ச நாள்கள் நிதி அமைச்சராகவும் போட்டிருந்தார்கள், பழைய அரசாங்கத்தில். அவர் எழுதி வைத்தார் என்று, பிறகு அந்தத் துறையில் இருந்து ஓய்வு பெற்ற வருமான வரித்துறை தலைமை அதிகாரிகள் சொன்னார்கள். அய்யா அவர்களிடத்திலும் சொன்னார்கள்.
‘‘அய்யா, இந்த மாதிரி எழுதி இருக்கிறார்கள்’’ என்று.
என்ன எழுதி இருக்கிறார்கள் என்று சொன்னால், ‘‘வருமான வரியைப் போட்டுக் கொண்டே இருங்கள்; பெரியாருக்கு வயதாகிவிட்டது. ஆகவே, பெரியாருக்குப் பிறகு இதைப் பார்த்துக் கொள்ளலாம்; அப்புறம் அந்த இயக்கம் ஒன்றும் பெரிய அளவில் இருக்காது; ஊதித் தள்ளிவிடலாம்’’ என்று அந்த ஓய்வு பெற்ற அதிகாரி சொன்னார்.
பெரியாருக்கு வயதாகிவிட்டது, இன்னும் எவ்வளவு நாள் இருக்கப் போகிறார்?
அதுமட்டுமல்ல, ஒன்றிய நிதியமைச்சராக இருந்த அந்த உமாசங்கர் தீட்சத் அவர்களே, அந்த உணர்வை எப்படிக் காட்டினார்? ஒரு நாள் அவர் பேசும்போது, ‘‘பெரியார், அவருடைய இயக்கம் எல்லாம் எங்களை எதிர்த்துப் பேசுகிறார்கள்; ஏதோ இந்தியை எதிர்க்கிறேன் என்கிறார்கள். திணிப்பை எதிர்க்கிறேன் என்கிறார்கள். அவருக்கு வயதாகிவிட்டது, இன்னும் எவ்வளவு நாள் இருக்கப் போகிறார்? இந்த எதிர்ப்பெல்லாம் அதற்குப் பிறகு இருக்காது’’ என்று அவர்கள் சொன்னது, அன்றைய பத்திரிகைகளில் வந்தது.
கோவை தெப்பக்குளம் மைதானத்தில் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னர், மாலைப் பத்திரிகையில் வந்த அந்தச் செய்தியைக் அய்யாவிடம் காட்டினேன்.
எனக்குத்தான் வயசாச்சே தவிர,
என் கொள்கைக்கு வயசாகவில்லை –
என் இயக்கத்துக்கு வயசாகவில்லை!
அப்போது அய்யா அவர்கள் ஒரே வார்த்தை சொன்னார். ‘‘இது மாதிரி யாரோ ஒரு மந்திரி இருக்கிறார் என்று சொன்னாங்க. அவர் நேரு வீட்டில் கணக்கு பிள்ளையாக இருந்தவர் என்று கேள்விப்பட்டு இருக்கேன் நான். அவர் சொல்லி இருக்கார், எனக்கு வயது ஆகிவிட்டது என்று. ஆமாம், எனக்கு வயதாகிவிட்டது என்பதில் ஒன்றும் பெரிய விஷயமே இல்லையே! எனக்கு வயதாகவில்லை என்று நான் சொல்லப் போவதில்லை. ஆனால், ஒன்றே ஒன்று சொல்கி றேன். எனக்குத்தான் வயசாச்சே தவிர, என் கொள்கைக்கு வயசாகவில்லை. என் இயக்கத்துக்கு வயசாகவில்லை. என் தோழர்களுக்கு வயசாக வில்லை’’ என்று சொன்னார். அதனுடைய விளைவுதான், இன்றைக்குப் பெரியார் பன்னாட்டு அமைப்பு; அதனுடைய விளைவுதான் சமூகநீதி விருது. ஓர் அடையாளம் காட்ட வேண்டும்; அந்த அடையாளம் என்ன என்று சொல்லும்போதுதான் கவிஞர்.
எதற்கும் எளிதில் கலங்காதவன் நான்!
இங்கே அமர்ந்திருக்கிற சான்றோர்கள், பெரியோர்களைப் பார்க்கும்போது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கள் இரண்டு பேருக்கும் வயதெல்லாம் பார்க்காதீர்கள். அது ஒரு காலண்டர் கணக்கு, அவ்வளவுதான்; மனசைப் பாருங்கள். சில மாதங்களுக்கு முன்பு, கவிஞருக்கு ஏற்பட்ட ஒரு உடல் தொல்லையால், ஒரு சிறு விபத்தால், ஒரு மாதம் அவர் அசையாமல் படுத்திருக்க வேண்டும் என்று மருத்துவர் சொன்னார். எதற்கும் எளிதாகக் கலங்காதவன் நான்; எதையும் எதிர்கொள்ள வேண்டும் என்று, பெரியாரிடம் பாடம் கற்றுக்கொண்டே வாழ்நாள் மாணவன், பெரியாருடைய மாணவன். அப்படிப்பட்ட நான் கலங்கினேன். காரணம், வேறொன்றுமில்லை, அவரைப்போல் இன்னொருவரை உருவாக்க முடியாது.
கவிஞர், ‘‘தந்தை பெரியார் தன்மானப் பேரவை என்று கீவளூரிலே நாங்கள் அரசு ஊழியராக இருக்கும்போது தொடங்கி னோம்’’ என்று சொன்னார். கழகப் பொதுக்கூட்டத்துக்கு போகும்போது, நாங்கள் அங்கே சென்றோம்.
தன்மான இயக்கம் மட்டுமல்ல;
தன்னலம் துறந்த இயக்கம்!
ஆனால், அவர் அன்றைக்கு ஓய்வு பெறவில்லை. இன்றைக்கும் அந்தப் பணியைத் தான் செய்து கொண்டிருக்கிறார். அப்போது அதற்கு பேர், தன்மானப் பேரவை. இந்த இயக்கம் தன்மான இயக்கம்; தன்மான இயக்கம் மட்டுமல்ல; தன்னலம் துறந்த இயக்கம். தன்னலத்துக்காரர்களுக்கு இந்த இயக்கத்தில் இட மில்லை. அதனால்தான், இந்த இயக்கத்தில், எப்போது தன்னலம் தலைதூக்குகிறதோ அப்போது அவர்கள் இந்த இயக்கத்தில் இருக்க மாட்டார்கள். அது சாதாரணமாகப் பயிர் வளரும்போது, களை வளர்வதைப் போல.
பெரியார் திடலை, ஒரு காவலாளி போல காத்தவர்தான், இந்த விருதுக்குரியவர்!
அந்த வகையில், கவிஞர் அவர்கள், நெருக்கடி காலத்தைப் பற்றிச் சொன்னார்கள். நேரம் அதிக மாகிவிட்டது; இங்கேயும் நெருக்கடி – கால நெருக்கடி. அந்த நேரத்திலே ஒன்றைச் சொல்ல வேண்டும். நாங்கள் எல்லாம் மிசாவில் சிறையில் இருந்தபோது, பெரியார் திடலை, ஒரு காவலாளி போல காத்தவர்தான், இந்த விருதுக்குரியவர். எனவே, விருது எதற்காக கொடுக்கப்பட்டாலும், இந்தக் கொள்கைப் பாதுகாப்புக்காக – பல விருதுகள் வழங்கப்படுவதில்லை; வாங்கப்படுகின்றன. வாங்கப்படுகிற விருதுகள் வேறு; வழங்கப்படுகிற விருதுகள் வேறு. எனவே இது வழங்கப்படுவது; அதுவும் இன்னொரு நாட்டுக்காரர்களால், பன்னாட்டு அமைப்பில் இருந்து, அந்தத் தகுதிக்குரியவராக கவிஞர் வளர்ந்து வந்திருக்கிறார்கள் என்று சொல்லும்போது, பெருமைப்படுகிறோம்.
விருது அவருக்கு வழங்கப்படவில்லை;
எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது!
என்னுடைய உடலில் ஒரு பாகம் இருக்கும்; அது ஓர் அடையாளம். மகிழ்ச்சியைக் காட்டுவதற்கு நாம் என்ன செய்கிறோம்? கை குலுக்கிக் கொள்கிறோம். கும்பிடுவதைவிட, கை குலுக்குவதுதான் மிக முக்கிய ஒன்றாகும். நம்முடைய இனமான பேராசிரியர் அன்பழகன் அவர்கள், யார் போனாலும் முதலில், கையைத்தான் நீட்டுவார். அது மாதிரி, கை குலுக்குகிறோம் என்று சொல்லும்போது, கை உடலினுடைய ஒரு பாகம்; உடம்பு முழுவதையும் பாராட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அந்தக் கையை குலுக்கினாலே என்ன அர்த்தம் என்றால், உடம்பு முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று அர்த்தம். அது மாதிரி, இந்தக் கை குலுக்களைப் போலத்தான், இந்த விருது அவருக்கு வழங்கப்படவில்லை; எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது, எங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதற்கு மேலே என்ன சொல்வதற்கு இருக்கிறது? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
தந்தை பெரியார் அவர்கள் சொன்னார், சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய போது, 100 ஆண்டுகளுக்கு முன்னால். ‘‘இன்றைக்கு ஒரு சிறு கூட்டத்தாரோடு போராடக்கூடியதாக இருக்கலாம். ஆனால், அது விரிவடையும்; உலகளாவிய அளவிற்கு விரிவடையும். எந்தெந்த நாட்டில் என்னென்ன பிரச்சினைகளோ, அங்கெல்லாம் அது விரிவடையும்’’ என்று.
அமெரிக்காவிலும் பெரியார் தேவைப்படுகிறார்; ஆஸ்திரேலியாவிலும் பெரியார் தேவைப்படுகிறார்!
இன்றைக்கு அமெரிக்காவுக்குப் போனாலும், ஜாதியை தூக்கிக் கொண்டு போகிறார்கள்; ஆஸ்தி ரேலியாவுக்குப் போனாலும் ஜாதியை முன்னாலே நிறுத்தக்கூடிய அளவிற்கு வருகிற காரணத்தால்தான், அமெரிக்காவிலும் பெரியார் தேவைப்படுகிறார்; அதே மாதிரி ஆஸ்திரேலியாவிலும் பெரியார் தேவைப்படு கிறார். எங்கெங்கெல்லாம் நோய் வருகிறதோ, அங்கெங்கெல்லாம் மருத்துவமும், மருந்தும் தேவைப்படுவதைப் போல. ஆகவேதான், ‘‘பெரியார் உலக மயம்; உலகம் பெரியார் மயம்.’’
அக்டோபர் 11, 12 ஆம் தேதிகளில்,
ஜப்பான் டோக்கியோவில் பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாக மாநாடு!
இவர்களைப் பாராட்ட வேண்டும்; பெரியார் பன்னாட்டமைப்பை அவர்களுடைய தன்னலத்தை மறந்து செய்கிறார்கள். டாக்டர் சோம இளங்கோவன் அவர்கள், பிரபலமான டாக்டர். இன்னும் அவர் பல ஆண்டு காலம் உத்தியோகத்தில் இருந்து சம்பாதிக்கலாம். அதே மாதிரி டாக்டர் சரோஜா இளங்கோவன் அவர்களும், பெரிய அளவிற்கு இரத்தத் துறையில் இருக்கக்கூடியவர். அவர்கள் இரண்டு பேரும் இணைந்து இந்தப் பணியைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். பல தோழர்களை இணைத்திருக்கிறார்கள். அவருக்கு 24 மணி நேரமும் தோழர்களை இணைப்பதுதான். அதனுடைய விளைவுதான், முதலில் ஜெர்மனியில் மாநாடு; அதற்கு அடுத்தது ஜெர்மனியைத் தாண்டி, அமெரிக்காவிலே மேரிலாண்டில் மாநாடு; அங்கே இருக்கிற அமைப்புகளையொட்டி, கனடாவிலே மாநாடு. அதற்கடுத்து கனடாவைத் தாண்டி, சில மாதங்களுக்கு முன்னாலே ஆஸ்திரேலியாவிலே மாநாடு. வருகிற அக்டோபர் 11, 12 ஆம் தேதிகளில், ஜப்பான் டோக்கி யோவில் பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாக மாநாடு நடைபெறவிருக்கிறது. ‘‘பெரியார் உலக மயம்; உலகம் பெரியார் மயம்’’ என்பதற்கான தொண்டை செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நாங்கள் நன்றி செலுத்த வேண்டும்.
என்னுடைய தலைதாழ்ந்த பாராட்டுகள்!
பாராட்டு என்பது, விருது அளித்திருக்கிறவருக்கு மட்டும் பாராட்டு அல்ல; இந்த விருதை அளிப்ப தற்காக திட்டமிட்டு, அதன் மூலம் பெரியாரை உலகமயமாக்கிக் கொண்டிருக்கிற பணிக்கு ஓர் உத்வேகம் கொடுத்திருக்கிறார்கள் அல்லவா, அதற்காக இவர்களுக்கும் தலைதாழ்ந்த பாராட்டுகள்.
கடைசியாக ஒன்று! இன்னும் பெரியார் தேவையா? கொஞ்சம் ஆங்கிலம் படித்தவர்கள் ஆங்கிலத்தில் ஒரு கேள்வி கேட்கிறார்கள், ‘‘”Sir, is Periyar relevant today?”’ ஏனென்றால், குழாய் மாட்டிட்டார்; ஆங்கிலம் படிச்சிட்டார், பட்டம் வாங்கிட்டார்; அதனால், ஆங்கிலத்தில் கேட்பார்.
இன்று மட்டுமல்ல,
என்றும் பெரியார் தேவை!
அதற்கு ஒரே பதில், ‘‘என்றும் பெரியார் தேவை! இன்று மட்டுமல்ல, என்றும் பெரியார் தேவை!’’ எப்படி என்றும் மருந்து தேவையோ, எப்படி என்றும் மருத்துவக் கல்லூரி தேவையோ, எப்படி என்றும் மூச்சுக் காற்று ஆக்சிஜன் – சிலிண்டர் தேவையோ, அதுபோல பெரியார் தேவை! அதைப் பாதுகாக்க வேண்டும். அதைப் பரப்ப வேண்டும்.
பெரியாரைப் பரப்புவதை விட,
பெரியாரைப் பாதுகாப்பது முக்கியம்!
இப்போது ஒரு கட்டம், மிக முக்கியமான கட்டம். பெரியாரைப் பரப்ப வேண்டுமே என்று கவலைப்பட்ட கட்டம் தாண்டிவிட்டது. பெரியார் இன்றைக்குப் பல பேருக்கு முகமூடியாக இருக்கிறார். எனவே, பெரியாரைப் பரப்புவதை விட, பெரியாரைப் பாதுகாப்பது என்பது மிக முக்கியமானதாகும்.
எங்களை குருதி இணைக்கவில்லை;
கொள்கை இணைத்திருக்கிறது!
ஆனால், பெரியார் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார். தானாகவே அவருக்குத் தெரியும். எது வளரும்? எது போகும்? என்று. ஏனென்றால், அவர் எந்தப் பதவியையும் நினைத்ததில்லை. அந்த உறுதி, அதுதான் எங்களுக்கு, கவிஞரைப் போன்றவர்கள் எங்களை எல்லாம் இணைத்திருக்கிறது. எங்களை குருதி இணைக்கவில்லை; கொள்கை இணைத்திருக்கிறது. எங்களுக்குக் குருதி முக்கியமல்ல; நாங்கள் எடுத்துக்கொண்ட உறுதி முக்கியம். அந்த அடிப்படையிலேதான் எங்கெங்கோ இருக்கிறார்கள். எண்ணிப் பாருங்கள், இந்த அரங்கத்திலே இருக்கிறவர்களைப் பார்த்துப் பார்த்து நான் பூரிப்படைகிறேன். நேரத்தைக் கூட மறந்து விடுகிறேன். இப்படி ஒரு வாய்ப்பு, ஒரு காலத்திலே முடியுமா? நம்மவர்கள் படிக்க முடியுமா? துணைவேந்தர்கள், ஓய்வு பெற்றவர்கள், சர்வீஸ் கமிஷன் மெம்பர்கள், அதேபோல மிகப்பெரிய வாய்ப்புகள் பெற்றவர்கள், அய்ஏஎஸ், அய்பிஎஸ் அதிகாரிகள் எத்தனை பேர், பாரம்பரியமாய் இளைஞர்கள், துடிப்பு மிகுந்த இளைஞர்கள், எழுத்தாளர்கள், பெண்கள்; ஒரு காலத்திலே அடுப்பு ஊதுகிற பெண்களுக்குப் படிப்பெதற்கு என்று கேட்டார்கள். கரண்டியைப் பிடுங்கித் தூக்கி எறிந்து விட்டுப் பேனாவைக் கொடுத்தவர் தந்தை பெரியார். பேனாவைப் பிடித்த உடனே, அடுத்த கட்டத்துக்குப் போனார்; பேனாவைப் பிடித்தால் மட்டும் போதாது; துப்பாக்கியைச் சேர்த்துப் பிடியுங்கள், காவல் துறையிலே, ராணுவ துறையிலே என்று சொன்னவர்.
பெரியாரின் புரட்சி, ஓர் அமைதிப் புரட்சி,
கருத்து புரட்சி, அறிவுப் புரட்சி!
பெரியாரின் புரட்சி, இரத்தம் சிந்தாத புரட்சி! பெரியாரின் கொள்கையினுடைய தூய விளைவு, விளைச்சல் இருக்கிறதே, அது ஓர் அமைதிப் புரட்சி, கருத்து புரட்சி, அறிவுப் புரட்சி. அந்தப் புரட்சியி னுடைய தூதுவர்களாகத்தான் தான், பெரியார் பன்னாட்டமைப்பால் நன்றித் திருவிழாவாக இதனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமானால், சொல்லுகிறேன் நண்பர்களே! இந்த இரண்டு பேரும், எல்லா தோழர்களும் இருக்கிறார்கள்; அடையாளத்துக்கு இந்த இரண்டு பேரைச் சொன்னால், தலைமையைச் சொல்கிறோம் என்று அதற்கு அர்த்தம். டாக்டர் சோம.இளங்கோவன், திருச்சிக்கு அருகில் இருக்கக்கூடிய ஒரு கிராமத்தில் விவசாயியினுடைய பிள்ளை. அவர்தான், அவர்கள் குடும்பத்தில், முதல் டாக்டர். அதே மாதிரி, சரோஜா இளங்கோவனின் தந்தையார் அவர்கள், கொஞ்சம் படித்து, ரயில்வேயில் வேலைக்குப் போனவர். பெண்களைப் படிக்க வைக்க வேண்டும் என்கிற கருத்து, அய்யாவினுடைய கருத்தி னால், பெரிய அளவுக்கு வந்தார்கள்.
மனுதர்மத்தைத் தாண்டி, மனித நேயத்தை பெரியார் ஊட்டியதால்தான்..
நம்முடைய டாக்டர் இலக்குவன்தமிழ் அவர்கள், காரைக்குடி பக்கத்திலே ஓர் எளிய சிறிய கிராமத்தைச் சார்ந்தவர். அவர் இன்றைக்கு, மிகப்பெரிய ஆய்வாளராக இருக்கக்கூடிய, பாராட்டத் தகுந்த அளவிற்குப் பெரு மைக்குரிய ஒருவராக இருக்கிறார். அப்படி பல பேரைச் சொல்லலாம். இன்றைக்குப் புலம்பெயர்ந்த தமிழர்கள் எல்லாம்; ஒரு காலத்தில் நாமெல்லாம் கங்காணிகளாக, நம்முடைய தோழர்களை அழைத்துப் போனார்கள். இன்றைக்கு நம்மவர்களைப் பார்த்து, அந்த நாட்டுக்காரர்கள் பயப்படுகிறார்கள்; ‘‘அய்யோ, இவர்கள் வந்தால், நமக்கு வேலை வாய்ப்புப் போய்விடுமோ’’ என்று சொல்லக்கூடிய அளவுக்குத் தடுக்கவேண்டும் என்று நினைக்கக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள் என்றால், இந்த அறிவு, மனுதர்மத்தைத் தாண்டி, மனித நேயத்தை பெரியார் ஊட்டியதால்தான், போராட்டத்தால் விளைந்தது.
நாங்கள் எப்போதும்
ஒரே பாதையில் நடக்கிறோம்!
ஆகவேதான், விருது பெற்ற எங்கள் கவிஞர் அவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டபோது, அன்றைக்கு நான் கலங்கினேன் – நாங்கள் எல்லாம், ‘‘மறுபடியும் இவர் எழுந்து நிற்க வேண்டும்’’ என்று. ஆனால், எங்களுக்கு இருக்கிற உறுதியால், கடைசி வரைக்கும் எழுந்து நிற்போம். நாங்கள் நடப்பதில் கொஞ்சம் தடுமாகிற மாதிரி இருக்கின்றதே என்று நீங்கள் கேட்கலாம். அது உங்கள் தோற்றமே தவிர, நாங்கள் தடுமாறவில்லை. அது புறத் தோற்றம். ஆகவேதான், நாங்கள் எப்போதும் ஒரே பாதையில் நடக்கிறோம்.
விருது வழங்கும் விழா அல்ல –
வெற்றி திருவிழா!
நம்முடைய திருமாவேலன் அவர்கள் சொன்னார்கள், ஒரே தலைவர், ஒரே கொள்கை, ஒரே கொடி, ஒரே சட்டை அவ்வளவுதானே தவிர, வேறொன்றுமில்லை. ஆனால், இப்பொழுது பார்த்தீர்கள் என்றால், தமிழ்நாட்டு பொது வாழ்க்கையே குதிரைச் சந்தையாகவும் இருக்கிறது; கழுதை சந்தையாகவும் இருக்கிறது. அதற்குள் நான் போக விரும்பவில்லை. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை யில் இந்த விழா, ஓர் அருமையான வெற்றித் திருவிழா! இது வெறும் விருது வழங்கும் விழா அல்ல – வெற்றி திருவிழா!
ஒரு கலாச்சாரப் பாதுகாப்பு இயக்கம் –
மறுமலர்ச்சி இயக்கம்!
பெரியார் கொள்கையை யாரும் சாய்க்க முடியாது; திராவிடம் என்பது இருக்கிறதே, அது தனி நபர்களைப் பொருத்தது அல்ல. இது ஓர் இனவாத இயக்கம் அல்ல; இது ஒரு கலாச்சாரப் பாதுகாப்பு இயக்கம். ஒரு Cultural Protection – அதுதான் Renaissance என்று சொல்லக்கூடிய மறுமலர்ச்சி இயக்கம். இது அறிவு இயக்கம்.
ஓர் இயக்கம் வெற்றி பெறவேண்டுமானால்…
இந்த இயக்கத்தைப் பற்றிச் சொல்லுகிற போது நண்பர்களே, அன்றைக்கு இந்த இயக்கம் வெற்றி பெறுவதற்கு என்ன காரணம் என்று சொல்லும்போது, தந்தை பெரியார் அவர்கள் ஒன்றைச் சொல்லுகிறார்,
‘‘ஓர் இயக்கம் வெற்றி பெறவேண்டுமானால்,
- உத்தமமான தலைமை
- உறுதியான கொள்கை
- உண்மையான தொண்டர்கள்
- யோக்கியமான பிரச்சாரம்!
இந்த நான்கும் எங்கே இருக்கிறதோ, அவர்கள் வெற்றி பெறுவார்கள். இந்த நான்கும் இருக்கிற இயக்கம்தான் திராவிட இயக்கம்; அதுதான் திராவிடர் கழகம்; அதுதான் சுயமரியாதை இயக்கம். அந்த இயக்கத்தினுடைய பன்னாட்டு அமைப்பு, இந்தச் சிறப்பான விழாவை நமக்குக் கூட்டி, மகிழ்ச்சியை வழங்கி இருக்கிறது.
எனவேதான், இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, கவிஞருக்கு 87 வயதாக இருக்கலாம்; எனக்கு 93 வயது என்று நீங்கள் ஞாபகப்படுத்தலாம். இந்த விழா நடைபெறுவதற்கு முன்னால் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், இந்த விழா முடிந்தவுடன், ‘வாக்கரைப்’ பிடித்துக்கொண்டு நடந்தவர், அது இல்லாமல் நடப்பார். நானும் நடப்பேன், அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை.
இவை எல்லாவற்றையும் விட, அவருடைய வாழ்விணையர் வெற்றிச் செல்வி. அவருடைய பிள்ளைகள்,குடும்பத்தினர் எல்லோருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.
அதே மாதிரி என்னுடைய வாழ்விணையராக இருந்தாலும், யாராக இருந்தாலும், அவர்களுடைய தொண்டு அடிக்கட்டுமானம்; அது புதைந்துதான் இருக்கும்; அது கோபுரம் மாதிரி வெளியே தெரியாது. அது மட்டுமல்ல, விருந்தோம்பலாக இருந்தாலும், கொள்கையாக இருந்தாலும்.
எங்களுக்கெல்லாம் 80 ஆண்டுக்கு முன்னாலே தெரிந்த குடும்பம்!
எனக்கு இன்னொரு பெரிய வசதி என்னவென்றால், கவிஞருடைய திருமணத்தில் நான் கலந்துகொண்டேன், பெரியார் அய்யாவோடு. ஆனால், கவிஞரை விட, அதிகமாக வெற்றிச்ெ்சல்வி அவர்களின் குடும்பத்தைத் தெரியும் எனக்கு. ஏனென்றால், மாணவப் பருவத்தில், 1946 இல் அவர்கள் வீட்டிற்குப் போய்ச் சாப்பிட்டிருக்கிறோம். அந்த அளவிற்கு, எங்களுக்கெல்லாம் 80 ஆண்டுக்கு முன்னாலே தெரிந்த குடும்பம்.
நாடே ஒரு குடும்பமாக ஆக வேண்டும்; சமத்துவபுரமாக ஆக வேண்டும்!
எனவேதான், இன்றைக்கும் நாங்கள் ஒரு குடும்பமாக இருக்கிறோம். நாடே ஒரு குடும்பமாக ஆக வேண்டும்; சமத்துவபுரமாக ஆக வேண்டும் என்பதற்காகத்தான் இதுபோன்ற இயக்கங்கள்; அதற்காக உழைக்கிறவர்கள்.
எனவே, கவிஞருக்கு கொடுத்த சிறப்புக்கு நன்றி!
எனக்கு நானே வழங்கிக் கொண்ட இந்த விருதுக்கு நன்றி!
நான் முழு மனதோடு வரவேற்கிறேன், வழிமொழிகிறேன்!
இந்த விருதினுடைய பலன் என்று சொல்வதற்கும் உரியதாக உள்ள பணத்தைப் ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடையாகக் கொடுக்கிறேன் என்று கவிஞர் சொன்னார். விழா ஏற்பாட்டாளர்களோ, ‘முடியாது, முடியாது’ என்று சொன்னார்கள். அதை நான் முழு மனதோடு வரவேற்கிறேன், வழிமொழிகிறேன்.
காரணம், அவர் பெரியார் உலகத்துக்கு எல்லாம் நிறைய நன்கொடைகள் கொடுத்திருக்கிறார். இன்னும் கொடுப்பார். அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை. பல பேர் தரலாம். ஆகவேதான், கொடுக்கிறவர்கள் எதைச் சொல்லி கொடுக்கிறார்களோ, அதை நிறைவேற்ற வேண்டும் நாம்.
ஆகவேதான், அவர்கள் சொன்ன கருத்துகள் எந்த அடிப்படையில் இருக்குமோ, அது நிறைவேறி வரும்; நன்கொடைகளையும் மற்றவர்கள், மக்கள் நன்றி உணர்ச்சியோடு தாராளமாக வழங்குகிறார்கள். அதனால் எந்தவிதமானப் பிரச்சினைகளும் இல்லை. இவ்வளவு பெரியவர்கள் எல்லாம் இவ்வளவு நீண்ட நேரம் அமர்ந்து, சிறப்பான ஒரு கொள்கை விழாவாக – சிறப்பான விழாவாக – இந்த விழா நடந்திருக்கிறது.
பெரியாருடைய தொண்டின் கனிந்த பலன்!
பெண்கள், மகளிர் படித்தவர்களாகவும், பெருமை பெற்றவர்களாகவும், கல்லூரித் தலைவர்களாகவும் இங்கே வந்திருக்கிறார்கள். இந்தக் கூட்டம், பெரியாரு டைய தொண்டின் கனிந்த பலன்; பூத்துக் காய்த்து, கனிந்த பலன்களைப் பார்க்கிறோம்.
எனவே, பெரியாருடைய பெருந்தோட்டத்தில் இன்றைக்குக் கனிகள், பூத்துக் குலுங்குகின்றன; பூக்கள் என்று சொல்லுவதைவிட, எல்லாமே கனிந்து போயிருக்கின்றன. அந்தச் சுவையை மக்கள் நம்புகிறார்கள்; ஆனால், தோட்டம் வைத்தவனைப் பற்றி யாரும் நினைப்பதில்லை. நினைவூட்டுவதைப் பற்றிக் கவலை இல்லை. அந்த உணர்வுகள் இருக்கிறது.
150 ஆவது ஆண்டு பிறந்த நாளில்…
எனவே, ‘‘பெரியார் உலக மயம்; உலகம் பெரியார் மயம்’’ பெரியார் உலகம் தயாராகிக் கொண்டிருக்கிறது. பெரியாரின் 150 ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா விலே, சிறப்பாக அது இருக்கும்.
எனவே, நான் உங்கள் அத்தனை பேருக்கும் நன்றி! நன்றி! நன்றி! பாராட்டு, என்று சொல்லும்போது, இதை ஏற்பாடு செய்த உங்களுக்கு நன்றி!
அய்யா சொன்னார், ‘‘நான் ஏன் பிரச்சாரம் செய்து, எனக்கு என் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும் என்று ஏன் சொல்கிறேன் என்றால், அது எனக்குப் பெருமை இல்லை. ஏன் கடவுளுக்கு பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள்? பிறக்காத கடவுளுக்கே பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள் என்பது எதற்காக என்றால், அப்படி கொண்டாடாமல் விட்டால், மறந்து விடுவார்கள் என்பதற்காகத்தான். அதுபோலத்தான், என்னுடைய பிறந்த நாள் என்பது கொள்கைப் பிரச்சாரமாகும்’’ என்றார்.
கொள்கைப் பிரச்சாரமே தவிர, வேறில்லை!
எனவேதான், இது ஒரு கொள்கைப் பிரச்சாரமே தவிர, வேறில்லை. அதற்கு ஒரு சாக்கு, அதற்கு இந்த ஒரு விருது ஒரு வாய்ப்பு!
‘‘பெரியார் உலகமயம்; உலகம் பெரியார் மயம்!
அனைவருக்கும் நன்றி!
வணக்கம்!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பாராட்டுரை வழங்கினார்.
