கருநாடகாவின் ‘திடீர்’ நீர் திறப்பு – காவிரி மேலாண்மை வாரியம்,
உச்சநீதிமன்றத்தின் ஆணையை மதிப்பதற்கல்ல; வெள்ள நீர் வடிகால் போன்றதே!
கருநாடக முதலமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம்!
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தமிழ்நாட்டின் ஒன்றுபட்ட குரலை முதலமைச்சர் எதிரொலிக்கவேண்டும்!
உச்சநீதிமன்றத்தின் ஆணையை மதிப்பதற்கல்ல; வெள்ள நீர் வடிகால் போன்றதே!
கருநாடக முதலமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம்!
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தமிழ்நாட்டின் ஒன்றுபட்ட குரலை முதலமைச்சர் எதிரொலிக்கவேண்டும்!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை
அறிக்கை
கருநாடகாவின் ‘திடீர்’ நீர் திறப்பு – காவிரி மேலாண்மை வாரியம், உச்சநீதிமன்றத்தின் ஆணையை மதிப்பதற்கல்ல; வெள்ள நீர் வடிகால் போன்றதே! கருநாடக முதலமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம்! அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தமிழ்நாட்டின் ஒன்றுபட்ட குரலை முதல மைச்சர் எதிரொலிக்கவேண்டும்! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
கடந்த ஜூலை 14 ஆம் தேதி அன்று நாம் ஓர் அறிக்கை விடுத்திருந்தோம்.
ஒவ்வோர் ஆண்டும் தமிழ்நாட்டிற்கு 177.25 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
லட்சக்கணக்கான விவசாயிகள்
ரத்தக் கண்ணீர் வடிக்கின்றனர்!
ரத்தக் கண்ணீர் வடிக்கின்றனர்!
தண்ணீர்த் திறக்கப்படாததால், காவிரி டெல்டா பகுதியில் குறுவை மற்றும் பிற சாகுபடிகள் பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கான விவசாயிகள் ரத்தக் கண்ணீர் வடித்து, ‘‘வாடிய பயிரைக் கண்டோம்’’ என்று வருந்திய உள்ளத்தோடு துயரக் கடலில் மூழ்கியுள்ளனர்.
அடுத்த 15 நாள்களுக்கு தினமும் 3,500 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும் என்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆணையிட்டும், கருநாடக அரசு அதனை ஏற்கவோ, மதிக்கவோ தயாராக இல்லை என்பதோடு, நேற்று (2.8.2026) பெங்களூருவில், கருநாடகா (காங்கிரஸ்) அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தினை கூட்டி, ‘‘இந்த உத்தரவுகளை ஏற்க முடியாது, உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீடு (அப்பீல்) செய்வோம்’’ என்று ஒருமனதாக தீர்மானித்துள்ளார்கள்.
கருநாடகாவில், ஆளுங்கட்சி – எதிர்க்கட்சி அனைவரும் ஓரணியில் நிற்கின்றனர்!
அங்கே ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் என்ற வேறுபாடின்றி, முன்னாள் முதலமைச்சர்கள், அமைச்சர்கள், பா.ஜ.க.வின் எடியூரப்பா, சதா னந்த கவுடா, பசவராஜ் பொம்மை, காங்கிரஸ் கட்சியின் வீரப்ப மொய்லி, சித்தராமையா, ஒன்றிய இந்நாள் அமைச்சர்கள் குமாரசாமி, ஷோபா, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அசோக், எல்லா எம்.பி.,க்களும் அழைக்கப்பட்டு, அத்துணை பேரும் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர்த் தரக்கூடாது என்பதில் கட்சிகளை மறந்து ஒற்றுமை அணியாக நிற்கின்றனர்.
ஆரம்பத்திலிருந்தே அதே நிலைதான் அங்கே!
ஆனால், நமது தமிழ்நாட்டில் உள்ள புதிய, அரசியல் அனுபவம் அற்ற ஒரு புதிய அரசு, புதிதாக அறிந்து கொள்வதில் தயக்கமோ காட்டாமல், மற்ற அனைத்துக் கட்சிகளையும் கூட்டி, கருத்திணக்கத்தினை ஏற்படுத்தி, மற்றவர்கள் கருத்துரைகளைப் பெற்று ஒரே மனதாக மேகதாது அணை கட்ட எதிர்ப்பு, காவிரி நீர்ப் பங்கீடுகளைப் பெறுதல், வறட்சி ஏற்படும் காலங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய (Distress formula) நீர் நெருக்கடி – வறட்சி – பருவ மழை தவறிய கால நிலையில், எப்படி இரு மாநிலங்கள் அதை மனிதாபிமானத்தோடு, நிரந்தரமாக எதிர்கொள்வது என்பதை நன்கு விவாதித்து முடிவு எடுத்து, கருநாடக அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் அறிவித்தால், தமிழ்நாடு அரசு சரியான நிலைப்பாட்டினை மேற்கொள்ள முயற்சிக்கிறது என்று கருதி, பாதிப்பினை ஏற்படுத்த முயலுவோரும், தமிழ்நாட்டின் நிலைப்பாட்டிற்கு மதிப்பளிக்க முன்வரும் நிலையை ஏற்படுத்த உதவும்.
இங்கே நடைபெறும் த.வெ.க. ஆட்சி என்ன காரணத்தினாலோ, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, கருத்திணக்க முடி வினை எடுக்க வேண்டும் என்ற அத்துணை எதிர்க்கட்சிகளின் யோசனைகளையும் திட்டவட்டமாக மறுத்துவிட்டது பிடிவாதமாக!
அதுமட்டுமா?
முதலமைச்சர் ஜோசப் விஜய், கருநாட கத்திற்குச் சென்று, அம் மாநில முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரைச் சந்தித்து, மேகதாது அணை விஷயம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த, நேரம், நாள் கேட்டு, தமிழ்நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்று நம்பியது என்பது கருநாடக அரசின் முடிவு, பிறகு நடந்து கொண்ட விதத்தால், அது வீண் நம்பிக்கை – வீண் வேலை என்று நாட்டிற்கே காட்டிவிட்டது! தேதியும் குறித்துவிட்ட பிறகு, ‘‘இங்கே நிலைமை சரியில்லை, இப்போது வராதீர்கள்’’ என்று கூறி, தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு இணங்க மறுத்தார்கள்.
கருநாடகா முதலமைச்சரின்
ஒப்புதல் வாக்குமூலம்!
ஒப்புதல் வாக்குமூலம்!
‘‘அங்கே செல்வது என்பது, தமிழ்நாட்டு அரசுக்கோ, முதலமைச்சர் பதவிக்கோ பெருமை சேர்ப்பதா?’’ என்று, தமிழ்நாட்டின் உரிமை, மதிப்பைக் காப்பாற்றும் எவரும் நியாயமாகக் கேட்பார்கள்.
இதற்கிடையில், நாம் பலமுறை சுட்டிக்காட்டி யுள்ள ஒரு செய்தியை, கருநாடக முதலமைச்சர் – மேகதாது அணையைக் கட்ட ‘முதலை’ப் பிடிவாதத்துடன் தொடக்கத்திலிருந்தே இருந்து வரும் சிவக்குமார் அவர்கள், ஓர் உண்மையை இப்போது உலகளவில் ஒப்புதல் வாக்குமூலம் போல் வெளியிட்டுள்ளார்.
‘‘நாம் தண்ணீர்த் திறக்க வேண்டாம் என்று முடிவு செய்தாலும், தேக்கி வைக்க முடியாது; தண்ணீரைத் தேக்கினால், நாம்தான் வெள்ளத்தில் மூழ்கிவிடுவோம்’’ என்று கருநாடக மக்களுக்கு ‘‘அறிவுரை’’ கூறியுள்ளார்.
கருநாடகாவில் கடும் மழை பொழிவால், கபினி அணை உடையும் அபாயத்திலிருந்து தங்களைக் காப்பாற்ற எப்போதும் வெள்ள நீர் வடிகால் (Drainage Outlet) போல, அவர்களைக் காப்பாற்றிக் கொள்ள, தேங்கும் வெள்ள நீரைத் தமிழ்நாட்டிற்கு அளிப்பது, மனிதாபிமானமோ, நம் மீது உள்ள பச்சாதாபமோ அல்லது காவிரி நீர் மேலாண்மை, உச்சநீதிமன்ற ஆணையை மதிப்பதற்காகவோ அல்ல! மாறாக, தங்களது பாதுகாப்புக்கான ஒரு தேவை!
‘‘மாபெரும் அரசியல் அறப்பிழை!’’
இதையெல்லாம் உணராமல், தமிழ்நாட்டி லிருந்து கருநாடக சென்று, பேச்சுவார்த்தைக்குச் செல்ல முயற்சித்த முடிவு ‘‘மாபெரும் அரசியல் அறப்பிழை’’யாகும்.
இனியும் காலந்தாழ்ந்துவிடவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் முதல் அனைவரும் விடுத்த வேண்டுகோளை ஏற்று, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, தமிழ்நாடு விவசாயிகள் வாழ்வுரிமையைக் காப்பாற்ற, ஒன்றுபட்டு நிற்கிறோம் என்று காட்டவேண்டிய நல்வாய்ப்பினை இழந்துவிடக் கூடாது.
முதலமைச்சர், கலந்துகொள்ள மறுக்கும் கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுத்து, இப்பிரச்சினையில் நமது ஒன்றுபட்ட உறுதி யினை எடுத்துக் காட்டி, களங்கண்டு, நீதிமன்ற நடவடிக்கைகள் உள்பட எடுக்கவேண்டும். எதிர்க்கட்சிகள் தயார்; ஆனால், என்ன கார ணத்தினாலோ, ‘ஜனநாயகன்’ என்று அழைத்துக் கொள்ளும் ஆட்சித் தலைமை முன்வராத நிலை உள்ளது! ஜனநாயகம் காட்சியாக இருக்கக் கூடாது, ஆட்சியாக இருக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் முன்வரவேண்டும்!
உச்சநீதிமன்றத்தில், நமது உரிமையை நிலை நாட்ட முயல்வோம்; வாடும் பயிர்களும், வாழ முடியாதவர்களாகி வரும் நமது விவசாயப் பெருங்குடிகள் நிலையும் இப்படியா பரிதாபத்திற்குரியதாவது?
இனியாவது சிந்தித்துச் செயலாற்ற, தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் முன்வரவேண்டும்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
3.8.2026
