சென்னை, ஆக.2 மருத்துவக் கல்வி கனவுடன் வாழ்ந்த மாணவி அனிதா மறைந்து கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் நீண்டகாலப் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி, ‘நீட் எதிர்ப்பு கூட்டு நடவடிக்கைக் குழு’ சார்பில் சென்னையில் காலவரையற்ற பட்டினிப் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மாணவி அனிதாவின் சகோதரர் மணிரத்தினம், கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர் களுக்கு நீதி கோரி ஆகஸ்ட் 1 அன்று இந்த பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கினார்.
சென்னை கோயம்பேடு சின்மயா நகரில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைமையகமான ‘திருவள் ளுவர் இல்லத்தில்’ இப்போராட்டம் நடைபெற்று வருகிறது.
காவல்துறை அனுமதி மறுப்பு
பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்கும் வகையில் திறந்தவெளி இடத்தில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததால், கட்சி அலுவலகத்திலேயே போராட்டத்தைத் தொடங்கும் நிலை ஏற்பட்டதாக மணிரத்தினம் தெரிவித்தார்.
ஒன்றிய அரசு நீட் தேர்வை உடனடியாக முழுமையாக ரத்து செய்ய வேண்டும். கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும். இதன் மூலம் மாநில அரசுகள் தங்களுக்கான சேர்க்கைக் கொள்கைகளைச் சுயமாக வகுத்து, நீட் போன்ற தேர்வுகளை நீக்கும் அதிகாரத்தைப் பெற முடியும். மாணவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட வேண்டும்: நீட் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து டில்லி ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
ஒன்றிய அரசு நீட் தேர்வை ரத்து செய்யும் வரை எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை இந்தப் போராட்டம் அமைதியான முறையில் காலவரையற்ற முறையில் தொடரும். அனிதாவின் சகோதரர் மணிரத்தினம் கூறினார்
