சென்னை, ஆகஸ்ட் 1 தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை குறைவாகப் பெய்துள்ள மாவட்டங்களில் குடிநீர் விநியோகம், நீராதார மேம்பாடு, கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தலைமைச் செயலகத்தில் நேற்று (31.7.2026) நடந்த ஆய்வுக் கூட்டத்தில், பருவமழை நிலவரம், குடிநீர் பற்றாக்குறை, வேளாண் பயிர்ச்சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது. குறுவை தொகுப்புத் திட்டத்தை ஆக.15-க்குள் முடிக்க வேளாண்மைத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டது. வறட்சி காரணமாக கால்நடைகளுக்கான தீவனத்தை உள்ளூரில் சேமிக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும், நகராட்சி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைகள் மூலம் நீராதாரங்களை மேம்படுத்தவும், வாகனங்கள் மூலம் குடிநீர் வழங்கவும் ரூ.330 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வள-மீனவர் நலத்துறைக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் குடிநீர் விநியோகம் மற்றும் அத்தியாவசியப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தி, தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநிலக் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்ட மூத்த அய்.ஏ.எஸ். அலுவலர்கள் தொடர்ந்து மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் வினோத், மரிய வில்சன், தலைமைச் செயலாளர் சாய்குமார், உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டுறவுச் சங்கங்களுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும்
அமைச்சர் தகவல்
சென்னை, ஆகஸ்ட் 1 ‘தமிழ்நாட்டில் நீண்ட ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் விரைவில் நடத்தப்படும்’ என்று அமைச்சர் காந்திராஜ் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் 2023-ஆம் ஆண்டு கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், திமுக ஆட்சியில் தேர்தல் நடத்தப்படவில்லை. தற்போது கூட்டுறவுச் சங்கங்கள், மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் அதிகாரிகள் மூலமாக இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே தவெக ஆட்சியில் கூட்டுறவுச் சங்கத் தேர்தல் நடத்தப்படுமா என கேள்விகள் எழுந்தன.
இதுகுறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் வ.காந்திராஜிடம் சென்னையில் செய்தியாளர்கள் நேற்று கேள்வியெழுப்பினர். அதற்கு அவர், ‘‘தவெக அரசு அமைந்த பிறகு கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள போலி உறுப்பினர்கள், மறைந்த உறுப்பினர்களின் பெயர்களை நீக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த பணிகள் முடிக்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் மானியக் கோரிக்கை நிறைவுற்றவுடன் கூட்டுறவு சங்கத் தேர்தலை நடத்த திட்டமிட்டு வருகிறோம். இந்த தேர்தல் வெளிப்படைத் தன்மையோடு நடத்தப்படும்’’என்றார்.
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பல்வேறு சங்கங்களில் தேர்தல் மூலமாக சுமார் 2 லட்சம் பேர் தேர்வு செய்யப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
