தேர்வு முறைகேடுகளும் ‘ஜும்லா’ சட்டங்களும்: மாநில உரிமையே ‘நீட்’ கொடுமைக்குத் தீர்வு!

பாணன்

கட்டுரை, ஞாயிறு மலர்

வினாத்தாள் கசிவு முறைகேட்டில் 2011ஆம் ஆண்டிலிருந்து ஈடுபட்டவரும், தேடப்படும் குற்றவாளியுமான பேதிராம் 30.7.2026 அன்று முதலமைச்சர் சாமியார் யோகி ஆதித்யநாத்தோடு ஒரே மேடையில்!

 

நீட் தேர்வு என்பது சாமானியனுக்கு மருத்துவக் கல்வி எட்டாத ஒன்றாக இருக்கவேண்டும் என்பதே குறிப்பாக சமத்துவத்தை விரும்பாத பார்ப்பனிய அமைப்பான
ஆர்.எஸ்.எஸ். முழுமையாக கல்விக் கட்டமைப்பை அபகரித்ததற்கான ஓர் அடையாளம் ஆகும். 2017 நவம்பரில் ஒன்றிய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, 2018 முதல் செயல்படும் அமைப்பு தேசியத் தேர்வு முகமை இந்தத்தேர்வு முகமை சாமானியர்களுக்கு உயர்கல்வி எட்டக்கூடாது என்ற கொடுர நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதா என்ற அய்யம் எழுகிறது.

2021 முதல் 2023 வரையிலான காலக்கட்டத்தில் ராஜஸ்தான் (2022), குஜராத் (2023), உத்தரகாண்ட் போன்ற மாநிலங்கள் தங்கள் மாநிலத் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகக் கடுமையான சட்டங்களைக் கொண்டுவந்தன. ஆனால் தலைநகர் டில்லியில் தேர்வு முறைகேடுகளைத் தடுக்க கடுமையான போராட்டம் நடந்துகொண்டு இருக்கும் போதே  குஜராத் ஆயுர்வேதப் படிப்பிற்கான நுழைவுத்தேர்வு வினாத்தாள் கள்ளத்தனமாக சமூகவலைதளத்தில் விற்பனைக்கு வந்தது.

2021-2022 காலக்கட்டத்தில் ஒன்றிய அரசு  பணிகள் தேர்வாணையம், ஜேஇஇ, நீட் போன்ற தேர்வுகளில் ஆள் மாறாட்டம் மற்றும் முறைகேடுகள் புகார்கள் எழுந்தபோது, சிபிஅய் விசாரணை, மின்னணு முறையின்  தேர்வு மய்யக் கண்காணிப்பை அதிகரித்தல் மற்றும் என்.டி.ஏ. அமைப்பைக் கணினி வழித் தேர்வுகளுக்கு  முழுமையாக மாற்றுதல் போன்ற நிர்வாக ரீதியான முடிவுகளையே ஒன்றிய அரசு அறிவித்திருந்தது.

‘தேர்வு முறைகேடு தடுப்பு சட்டமசோதா’
மற்றொரு ‘ஜும்லா’ தான்

தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுகளைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகள் பிறப்பித்துள்ள முக்கியச் சட்டங்கள், திருத்தங்கள் மற்றும் அரசாணைகள் தொடர்ந்து வந்துகொண்டு தான் இருக்கிறது

மாநில அரசுகளின் சிறப்புச் சட்டங்கள்

ஒன்றிய  அரசு சட்டம்கொண்டு வருவதற்கு முன்பே, பல்வேறு மாநிலங்கள் தங்கள் எல்லைக்குள் நடக்கும் தேர்வுகளுக்குக் கடுமையான சட்டங்களை இயற்றின:

ராஜஸ்தான் (2022): Rajasthan Public Examination Act, 2022 – வினாத்தாள் கசிவில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை, சொத்து பறிமுதல் மற்றும் ரூ.10 கோடி வரை அபராதம். நீட் மோசடிகள் பெரும்பாலும் இந்த மாநிலத்தில் தான் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத் (2023): Gujarat Public Examination Unfair Means Act, 2023 – குற்றவாளிகளுக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் அபராதம்.  ஆனால் தேர்வு முறைகேடுகளின் தாயகம் குஜராத் என்று பல்வேறு நாளிதழ்களில் வந்த செய்திகளின் படி தெரியவந்துள்ளது.

உத்தரகாண்ட் (2023): Uttarakhand Competitive Examination Ordinance, 2023 – நாட்டின் மிகவும் கடுமையான சட்டங்களில் ஒன்று. இதில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை (Life Imprisonment) மற்றும் ரூ.10 கோடி வரை அபராதம் விதிக்க வழிவகை உள்ளது.23.07.2026 அன்று அங்கு தேர்வு மோசடி நடந்துள்ளது. சட்டங்களைத் தாண்டி, நிர்வாக ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் பல நடவடிக்கைகள் தொடர்ச்சியாக வந்துகொண்டு தான் இருக்கிறது. காங்கிரஸ் காரரும் இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவருமான நந்தன் நீலகேனி தலைமையில் தேர்தல் முறைகேடு தடுப்பு மற்றும் சீர்திருத்தக் குழு ஒன்றை கடந்த ஞாயிறு அன்று அறிவித்தார் மோடி. அவருக்கு கீழே இரண்டு கல்வி தொடர்பான வல்லுநர்கள் மற்றவர்கள் எல்லாம் கல்வி அமைப்பிற்கு தொடர்பில்லாத நபர்கள்.

நந்தன் நீலகேனி முன்னாள் காங்கிரஸ்காரராக இருந்தாலும் ஆட்சியில் உள்ளவர்களோடு இணக்கமாகவே இருப்பார். இதனால்தான் மோடி அவரைத் தேர்ந்தெடுத்தார். மேலும் அதில் உள்ள ஒரு உறுப்பினரான சென்னை
அய்.அய்.டி. இயக்குநர் வி.காமகோடி மாட்டுமூத்திரம் குடித்தால் 15 நிமிடத்திற்குள் காய்ச்சல் குணமடையும் என்று கூறியவர்.

2024 ஆம் ஆண்டு அமைத்த குழு என்ன ஆயிற்று?

2024 ஆண்டு ‘நீட்’ வினாத்தாள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக மோடி இதே போன்று ஒரு குழுவை அமைத்தார். என்.டி.ஏ அமைப்பை முழுமையாக மறுசீரமைக்கவும், தரவுப் பாதுகாப்பை பலப் படுத்தவும் இஸ்ரோ முன்னாள் தலைவர் டாக்டர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில்  7 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கும் அரசாணை வெளியிடப்பட்டது. அந்தக்குழு 101 பரிந்துரைகளை அளித்தாலும் மேலோட்டமாக என்.டி.ஏ. (NTA) என்ற அமைப்பு தேவையில்லை என்றே கூறியிருந்தனர். ஆகையால்தான் அவர்களது பரிந்துரைகளை இன்றுவரை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. தேர்வு எழுதியவர்களின் பயோமெட்ரிக் தகவல்கள் மற்றும் ஏ.அய். ஒளிப்பதிவுக் கருவிகள் மூலம் நிகழ்நேரக் கண்காணிப் பைக் கட்டாயமாக்கும் பரிந்துரை என்ன ஆனது? அண்மையில் நடந்து முடிந்த மறு நீட் தேர்வில் மகாராட்டிரா மாநிலத்தில் ஆள்மாறாட்டம் நடைபெற்றுள்ளது.

வினாத்தாள்களை அச்சிட்டு அனுப்புவதற்குப் பதிலாக, தேர்வு தொடங்குவதற்குச் சில நிமிடங்களுக்கு முன் பாதுகாப்பான டிஜிட்டல் குறியீடுகள்  முறையில் இணைய வழியில் தேர்வு மய்யங்களுக்கு அனுப்பி, மாணவர்கள் பதில்களை எழுதும் முறையைச் செயல்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வினாத்தாள் அச்சிடுதல் மற்றும் போக்குவரத்தின்போது கசியும் அபாயம் தடுக்கப்படும். பல்வேறு கட்டத் தேர்வுகள்  போன்ற அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் எழுதும் தேர்வுகளை ஒரே கட்டமாக நடத்தாமல், இரண்டு கட்டங்களாக நடத்தலாம் எனக் கூறப்பட்டது. ஆனால் ஒன்றிய அரசு வினாத்தாளை ராணுவத்தைப் பயன்படுத்தி தேர்வு மய்யங்களுக்கு கொண்டு சென்று நாடகமாடியது.

‘வெளிப்படையான’ தேர்வு மய்யங்கள்!

தனியார் தேர்வு மய்யங்கள் மற்றும் கணினி மய்யங்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை முதன்மைத் தேர்வு மய்யங் களாகப் பயன்படுத்த வேண்டும் என்ற பரிந்துரை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு பெரும்பாலும் தனியார் தேர்வு மய்யம் மற்றும் கணினி மய்யங்களிலேயே தேர்வு நடைபெறுகிறது. தனியார் தேர்வு மய்யங்கள் மற்றும் கணினி மய்யங்கள் ‘நீட் கோச்சிங்’ உள்ளிட்ட பல பயிற்சி மய்யங்களில்தான் மாதிரித் தேர்வுகளை நடத்துகிறது.

திருடர்கள் கைகளில் தேர்வு நடத்தும் உரிமை

வினாத்தாள் கசிவு குறிப்பாகப் பயிற்சி மய்யங்கள் மூலமாகவே நடக்கிறது. எடுத்துக்காட்டாக மகாராட்டிரா மாநிலம் லாத்தூரில் உள்ள பயிற்சி மய்யம் நாடு முழுவதும் பல பயிற்சி மய்யங்களோடு இணைந்து பயிற்சி கொடுக்கும் வேலையைச் செய்து வருகிறது. இந்தப் பயிற்சி மய்யம் நடத்துபவர் நீட் தேர்வு வினாத்தாள் தயாரிக்கும் குழுவில் உள்ள ஒரு முக்கியமான நபர் ஆவார்.

அண்மையில் இவரையும் சிபிஅய் கைதுசெய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நீட் தேர்வு தொடங்கப்பட்டக் காலத்தில் இருந்தே வினாத்தாள் தயாரிப்பு குழு உறுப்பினராக இருந்துள்ளார். விசாரணை அமைப்புகள் எதிலுமே முக்கிய குற்றவாளிகளை நெருங்குவதே இல்லை.

இதோ இந்த ஆண்டு கைதானவர்களின் விவரங்கள்

என்.டி.ஏ. சார்பாக வினாத்தாள் தயாரிப்பு/மொழி பெயர்ப்பில் ஈடுபட்ட பாட நிபுணர்கள் பி.வி.குல்கர்னி – வேதியியல்  விரிவுரையாளர். என்.டி.ஏ வினாத்தாள் மொழிபெயர்ப்பு மற்றும் தயாரிப்புப் பணியில் இருந்தவர்.

மனிஷா குருநாத் மந்தாரே – உயிரியல்  பாட நிபுணர்.

மனிஷா சஞ்சய் ஹவால்டார்: இயற்பியல்  பாட நிபுணர்.

சிவராஜ் ரகுநாத் மோடேகான்கர் லத்தூர்:  பகுதியில் உள்ள பயிற்சி மய்யத்தின் உரிமையாளர்.

தேஜஸ் ஹர்ஷத்குமார் ஷா: பூனேயில் உள்ள தனியார் பயிற்சி மய்ய ஆசிரியர்.

டாக்டர் மனோஜ் ஷிருரே: லோதூரைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் (பணப் பரிவர்த்தனை இடைத்தரகர்).

மனிஷா வாக்மாரே – அழகுநிலையம்  உரிமையாளர்; வினாத்தாள்களைப் பெற்றுத் தட்டச்சு செய்து பரப்பியவர்.

தனஞ்சய் நிவ்ருத்தி லோகண்டே அகமத்நகர் – சுபம் கைர்னார்  நாசிக்.

மங்கிலால் பிவால் விகாஸ் பிவால் –  தினேஷ் பிவால்: ஜெய்ப்பூர், ராஜஸ்தான்.  யஷ் யாதவ்  குருகிராம், அரியானா. இதில் பிவால் குடும்பத்தினரில் பெரும்பாலானோர் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி நாட்டின் பல மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. விகாஸ் பிவால் தான் கைது செய்யப்பட்ட போது ஊடகத்தினரிடம் கூறியதாவது: “நாங்கள் சிறு எலிகள் மட்டுமே எங்களை திறந்த விட்ட பெரிய பெருச்சாளிகளை இவர்கள் என்றுமே கைது செய்யமாட்டார்கள்” என்று கூறினார்.

என்.டி.ஏ அமைப்பால் ஒப்பந்த அடிப்படையில் வினாத்தாள் தயாரித்தல் மற்றும் மராத்தி மொழிபெயர்ப்புக்காக நியமிக்கப்பட்ட பாட நிபுணர்களே, பயிற்சி மய்யங்கள் மற்றும் இடைத்தரகர்கள் மூலம் பல லட்ச ரூபாய்க்கு விற்றது சிபிஅய் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

‘வியாபம்’ ஊழலில் கைதானவர்கள் எத்தனை பேர்?

தேர்வு முறைகேடுகளில் தாயகம் என்று கூறப்படும் மத்தியப் பிரதேச ‘வியாபம்’ தேர்வு மோசடி குறித்து பல நூல்களே வெளியாகியுள்ளது.  இந்த ‘வியாபம்’ ஊழலால் 607 மருத்துவ மாணவர்களின் அட்மிசனை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது அனைவரும் அறிந்ததே!

வியாபம் ஊழலில் அப்போது மத்தியப் பிரதேச முதலமைச்சராக இருந்த சிவ்ராஜ் சிங் சவுகான் குடும்பத்தினர் பெயரும் இருந்ததாக கூறப்பட்டது. நாட்டையே பரபரப்பிற்குள்ளாக்கிய ‘வியாபம்’ ஊழலில் கைதாகி சிறைசென்றவர்கள் எத்தனை பேர், 2024 ஆம் ஆண்டு ஒடிசா மாநில அரசுப்பணியாளர் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் கைதான சிலருக்கும் ‘வியாபம்’ ஊழலுக்கும் தொடர்பிருந்ததும் தெரியவந்தது,  வியாபம் ஊழல் காலத்தில் முதலமைச்சராக இருந்த சிவ்ராஜ் சவுகான் தற்போது ஒன்றிய அமைச்சராக உள்ளார்.  பாஜக ஆளும் மாநிலங்களில் தேர்வு முறைகேடுகள் என்பது பணம் ஈட்டும் ஒரு வழியாக மாற்றப்பட்டு விட்டது. அப்படி இருக்க புதிய மசோதா என்பது மேலும் ஒரு ‘ஜும்லாதான்’.

தேர்வு முறைகேடுகளைத் தடுக்க ஒரே வழி என்.டி.ஏ.வைக் கலைத்து விட்டு மாநிலங்களிடமே தேர்வு நடத்தும் பணியைக் கொடுத்துவிட வேண்டும். நுழைவுத் தேர்வு வேண்டுமா வேண்டாமா என்பதை மாநிலமே முடிவு செய்யப்பட்டும். இதைச் செய்யாமல் புதிய புதிய சட்டங்கள் கொண்டுவருவது பழைய புண்ணுக்கு புணுகு பூசுவது போன்றதுதான்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *