கூடுதல் கட்டணப் புகார்கள் எதிரொலி 3.70 லட்சம் வீட்டு மின் இணைப்புகளில் மறு ஆய்வு

3 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஜூலை 30– மின் நுகர்வோரிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்ட புகார் எழுந்த நிலையில், 3.70 லட்சம் வீட்டு மின் இணைப்புகளில் மறு ஆய்வு செய்து ஆக.7-ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க மின் வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக மின்வாரிய தலைவர் அருண் ராய், அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவு: கடந்த மே 2026 மாத மின் கட்டணத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு ஜூலை 2026 மாதத்தில் மின் நுகர்வு மற்றும் கட்டண விகிதம் 3.70 லட்சம் வீட்டு மின் இணைப்புகளுக்கு அதிகரித்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மின் இணைப்புகளில் தகுந்த மூத்த அதிகாரிகளை நியமித்து நேரடியாக கள ஆய்வு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், மறுஆய்வுப் பணிகளை விரைந்து முடிக்க பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இதன்படி தலைமைப் பொறியாளர் 25 மின் இணைப்புகளையும், மேற்பார்வைப் பொறியாளர் 50 மின் இணைப்புகளையும், செயற்பொறியாளர் 75 மின் இணைப்புகளையும், துணை நிதி கட்டுப்பாட்டாளர் 50 மின் இணைப்புகளையும் ஆய்வு செய்ய வேண்டும்.

இவர்கள் மட்டுமின்றி, உதவி செயற்பொறியாளர் 100, கணக்கு அதிகாரி 150, மூத்த மதிப்பீட்டு அதிகாரி 150, உதவி கணக்கு அதிகாரி 100, மதிப்பீட்டு அதிகாரி 150 மற்றும் உதவிப் பொறியாளர் 100 மின் இணைப்புகளையும் நேரடியாகச் சென்று சரிபார்க்க வேண்டும். இந்த நேரடி மறுஆய்வுப் பணிகள் அனைத்தும் வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதிக்குள் முழுமையாக முடிக்கப்பட வேண்டும்.

மேலும், இந்த ஆய்வுகளின் போது மின் கணக்கீட்டில் ஏதேனும் தவறுகள் அல்லது பிழைகள் கண்டறியப்பட்டால், உடனடியாகத் தேவையான திருத்தங்களை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

151 உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் வழக்கு:

உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

சென்னை, ஜூலை 30 தமிழ்நாட்டில் மருத்துவத் துறை உயர்கல்வியில் நிரப்பப்படாமல் காலியாக இருக்கும் 151 உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்களை அகில இந்திய தொகுப்புக்கு ஒப்படைக்குமாறு உச்ச நீதிமன்றம் அண்மையில் ஆணையிட்டுள்ளது.

இந்த உத்தரவுக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“மருத்துவத் துறையில் தமிழ்நாடு தொடர்ச்சியாகச் செய்து வந்துள்ள சாதனைகள் மூலம் கிடைத்த வாய்ப்பையும் வசதியையும் கைநழுவ விடுவதற்கு உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு சமமானதாகும்.

எனவே, மாநில அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத் தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். திறமைமிக்க வழக்குரைஞர்களைக் கொண்டு வலுவாக வாதிட்டு, தமிழ்நாட்டின் இந்த உரிமையை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.”

 

‘நீட்’ தேர்வு சீர்திருத்தத்தால்
பயன் இல்லை: தொல். திருமாவளவன்

‘நீட்’ தேர்வில் சீர்திருத்தம் செய்வதால் பயன் இல்லை, ரத்து செய்ய வேண்டும் என மக்களவையில் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். சட்டத்திருத்தம் மூலம் தேர்வை சரி செய்யலாம் என்பது மக்களை ஏமாற்றும் செயல், மாநில அரசுகளே நுழைவு தேர்வுகளை நடத்த ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும் என்றார். நீட் தேர்வால் விளிம்பு நிலை மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *