திருப்பதி, ஜூலை 30 திருப்பதி தேவஸ்தானத் தால் நிர்வகிக்கப்பட்டு வரும் சிறீ வெங்கடேஸ்வரா ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 20 மாணவிகள் மற்றும் 8 மாணவர்கள் என மொத்தம் 28 பேர் திடீரெனக் கடுமையான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எவ்வகை நோய் என்பதை ஆயுர்வேதக் கல்லூரி நிர்வாகத்தால் உடனடியாகக் கண்டுபிடிக்க முடியாதை அடுத்து, அனைவரும் அருகில் உள்ள கிறித்துவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகளாகச் சேர்க்கப் பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த சில நாட்களாகவே பல மாணவர் களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது 28 பேரின் நிலைமை மோசமடைந்துள்ளது. இந்நிகழ்வு தொடர்பாகப் பெயர் குறிப்பிட விரும்பாத கல்லூரி நிர்வாகி ஒருவர் கூறுகையில், “ஆயுர்வேத மருத்துவத்தில் பசு மாட்டு மூத்திரத்திற்கு முக்கிய இடம் உண்டு. எனவே அன்றாடம் காலையில் மாட்டு மூத்திரம் அருந்துமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்படுவது வழக்கம். நம்பிக்கையின் அடிப்படையில் சில மாணவர்கள் இதைப் பின்பற்றி வந்தனர்” என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும், முதற்கட்டமாக இது உணவு ஒவ்வாமையால் ஏற்பட்ட பாதிப்பாக இருக்கலாம் என்றும், மருத்துவமனையின் முழுமையான ஆய் வறிக்கை வந்த பிறகே உண்மையான காரணம் தெரிய வரும் என்றும் அவர் கூடுதலாகக் குறிப்பிட் டுள்ளார். சமீபத்தில் ஒன்றிய அரசு ஆயுர்வேதத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் “மருத்துவர்” என அழைத்துக்கொள்ளவும், சில குறிப்பிட்ட அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற்கும் அனுமதி அளித்துள்ளது.
இந்தச் சூழலில், தங்கள் சொந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு என்ன நோய் ஏற்பட்டது என்பதைக் கூடக் கண்டுபிடிக்க முடியாமல், அலோபதி (ஆங்கில) மருத்துவமனையை நாடும் நிலை ஏற்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது:
அரசு மற்றும் மருத்துவத் துறையின் பங்கு: தங்களுக்கு ஏற்பட்ட நோயையே கண்டறிய இயலாத ஆயுர்வேதப் பட்டதாரிகளுக்கு, பொது மக்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய அனுமதி அளிப்பது எந்த வகையில் நியாயம்?
பாரம்பரிய மருத்துவ முறையை அறிவியல் பூர்வமாக அணுகாமல், மதவாதக் கண்ணோட்டத் துடன் அணுகி இதுபோன்ற முடிவுகளை எடுப்பது பொதுமக்களின் உயிரோடு விளையாடும் செயல் அல்லவா?
யார் யாரை ஏமாற்றுகிறார்கள்?: அரசானது மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடு கிறதா? அல்லது ஆயுர்வேத “மருத்துவர்கள்” பொது மக்களின் உயிருடன் விளையாடுகிறார்களா?
மாணவர்கள் தொடர்ந்து சிகிச்சையில் உள்ள நிலையில், ஆங்கில மருத்துவமனையின் அறிக்கை வந்த பிறகே நோய் பாதிப்புக்கான உண்மையான காரணம் என்னவென்று வெளிச்சத்திற்கு வரும்.
மன்மோகன் சிங் குற்றமற்றவர்..
உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
2015-இல் நிலக்கரி ஒதுக்கீட்டு வழக்கில், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பப்பட்ட சம்மனை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன் மறைந்திருந்தாலும், சிறப்பு நீதிமன்றத்தின் அறிவிக்கையில் அவருக்கு எதிரான கருத்துகள் இருந்ததால் வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தது. அவர் குற்றமற்றவர் என சிபிஅய் கூறியதால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஒருவர் உயிரிழந்த பிறகு, குற்றமற்றவர் என தீர்ப்பளிப்பதால் என்ன பயன் என்ற கேள்வி எழுகிறது.
