சென்னையில் செய்தியாளர்களிடம் கழகத் துணைத் தலைவர்

6 Min Read

* சமூகநீதி உள்ளிட்ட கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வாகனப் பிரச்சாரத்தை மேற்கொள்வது திராவிடர் கழகத்தின் அணுகுமுறை
* இன்று தொடங்க இருந்த இரு சக்கர வாகனப் பிரச்சாரத்திற்குத் தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது
* இதுவரை தி.க.வின் கொள்கைப் பிரச்சாரத்தை எந்த அரசும் தடை செய்ததில்லை *சட்ட ரீதியான வழிகளில் அனுமதி பெற்று மீண்டும் நடத்துவோம்
உறுதியாக விரைவில் பரப்புரைப் பயணம் எழுச்சியுடன் நடைபெறும்!

சென்னை,  ஜூலை 30   சமூக நீதிக்காக மக்கள் மத்தியில் இரு சக்கர வாகனத்தின் மூலம் திராவிடர் கழகம் மேற்கொள்ள இருந்த பரப்புரைப் பயணத்திற்கு காவல்துறை மறுத்தாலும், விரைவில் அப்பயணம் நடைபெறும் என்றார் திராவிடர் கழகத் துணைத் தலைவர்  கலி.பூங்குன்றன் அவர்கள்.

செய்தியாளர்களுக்குப் பேட்டி!

‘நீட்’ தேர்வையும், உயர்ஜாதியினருக்கான EWS இட ஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி, திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று (30.7.2026) முதல் 2.8.2026 வரை இரு சக்கர வாகனத்தின் மூலம் பரப்புரைப் பயணத்திற்குத் தமிழ்நாடு அரசு தடை விதித்திருந்தது.  அதனைக் கண்டித்து திராவிடர் கழகத் துணைத் தலைவர்  கலி.பூங்குன்றன் அவர்கள், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக

தமிழ்நாடு முழுவதும் திராவிட மாணவர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி, மகளிரணி பாசறை சார்பாக, இரு சக்கர வாகனப் பிரச்சாரப் பயணம் இன்று முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதிவரை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன் நோக்கம், நீட் தேர்வு எதிர்ப்பு, EWS என்கின்ற பொருளாதாரத்தில் நலிந்த உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு இவற்றை எதிர்க்கின்ற அடிப்படையில், மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டு, இப்பரப்புரைப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

முறைப்படி அனுமதி கோரினோம்!

அப்பரப்புரை பயணத்திற்கு அனுமதி வழங்குமாறு, காவல்துறை தலைமை இயக்குநரான டிஜிபி அவர்களிடத்தில், கடந்த 18 ஆம் தேதி  திராவிடர் கழகத்தின் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது.

கடந்த 27 ஆம் தேதியன்று, டிஜிபி அலுவலகத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது. இந்தப் பரப்புரைப் பயணத்திற்கு நாங்கள் ஒட்டுமொத்தமாக அனுமதி கொடுக்கத் தேவையில்லை. எங்கெங்கெல்லாம் பரப்புரைப் பயணம் செய்கிறீர்களோ, அந்தந்த இடத்தில் உள்ள காவல் நிலையங்களில் அனுமதி பெற்றுக்கொள்ளலாம் நீங்கள் என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார்கள்.

அந்த அடிப்படையில், அப்பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்வதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளையெல்லாம் செய்தாயிற்று. இந்நிலையில், கடைசி நேரத்தில், தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் நீங்கள் பிரச்சாரப் பயணம் செய்வதற்கு அனுமதியில்லை என்று காவல்துறையினர் சொல்லியிருக்கிறார்கள்.

நீதி முறையிலும் தவறு;
சட்ட ரீதியிலும் தவறு!

நாங்கள் என்ன கேட்கிறோம் என்றால், 18 ஆம் தேதி, அனுமதிக் கோரி கடிதம் கொடுத்திருந்தோம். இன்றைக்கு 13 நாள்கள் ஆகியிருக்கிறது. திடீரென்று, இந்தப் பயணம் தொடங்குகின்ற நேரத்தில், அதற்கு அனுமதியில்லை என்று காவல்துறை சொல்வது, நீதி முறையிலும் தவறு; சட்ட ரீதியிலும் தவறாகும்.

1938 ஆம் ஆண்டு திருச்சியிலிருந்து
சென்னை வரை நடந்தே வந்தார்கள்!

திராவிடர் கழகம், இதுபோன்ற பரப்புரைகளை மேற்கொள்வது, இது ஒன்றும் புதிதல்ல. 1938 ஆம் ஆண்டு ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது, திருச்சியிலிருந்து சென்னை வரை நடந்தே வந்தார்கள். பட்டுக்கோட்டை அழகிரிசாமி தலைமையில் 100 பேர் வந்தார்கள், அதில் ஒரு மகளிரும் வந்தார் – அவர்தான்  மூவாலூர் இராமாமிர்தம் அம்மையார்.

சமூக நீதிப் பிரச்சினைக்காக நாங்கள் பல நேரங்களில், பிரச்சாரப் பயணம் மேற்கொண்டிருக்கின்றோம். கன்னியாகுமரியிலிருந்து திருத்தணி வரையில், 3.4.2022 முதல் 25.4.2022 வரை எங்கள் கழகத் தலைவர் தலைமையில் நடத்தியிருக்கின்றோம். 20.1.2020 முதல் 30.1.2020 வரை தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் தலைமையில் 2,700 கி.மீ. பரப்புரைப் பயணம் மேற்கொண்டோம்.

எந்த அரசாங்கமும் அனுமதி மறுக்கவில்லை!

இரு சக்கர வாகனப் பரப்புரைப் பயணத்தையும் நடத்தியிருக்கின்றோம். அப்போதெல்லாம், எந்த அரசாங்கமும் அனுமதி மறுக்கவில்லை.

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், எந்தப் போராட்டத்தை நடத்தினாலும், எந்தப் பிரச்சாரத்தை மேற்கொண்டாலும், எந்தவிதமான அசம்பாவிதமும் இருக்காது. அறவழியில் நடைபெறும்.

இந்நிலையில், திடீரென்று பிரச்சாரப் பயணத்திற்கான தடையை காவல்துறை கொடுத்திருப்பது அதிர்ச்சிக்குரியதாகும்.

இவ்வளவுக்கும், தமிழ்நாட்டில் இன்றைக்கு இருக்கும் முதலமைச்சர் அவர்கள், ‘‘எங்களுடைய கொள்கை தலைவர் பெரியார்’’ என்று சொல்கிறார். பெரியாருடைய முக்கியமான கொள்கை ‘சமூகநீதிதான்’ – ‘இட ஒதுக்கீடு’தான். அதனால்தான், 1925 ஆம் ஆண்டு காங்கிரசை விட்டு வெளியே வந்தார் தந்தை பெரியார் அவர்கள்.

இந்த நிலையில், என்ன காரணத்திற்காக, இப்பிரச்சாரத்திற்கு அனுமதி இல்லை என்று சொல்கிறார்கள் என்பதற்கு விளக்கம் இல்லை.

ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு காரணங்களைச் சொல்கிறார்கள். காரணங்கள் ஒரே மாதிரியாக இல்லை.

அனுமதி கோரி நீதிமன்றத்தை அணுகுவோம்!

அதனால், இதைத் திட்டமிட்டு தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற சூழலைக் கருத்தில் கொண்டு,  இன்று தொடங்கவிருந்த இரு சக்கர வாகனப் பிரச்சாரப் பயண நிகழ்ச்சியை, திராவிடர் கழகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கின்றது; ஒத்தி வைக்கப்பட்டு இருக்கின்றது. பிறகு, விரைவில்  நீதிமன்றத்தை அணுகுவோம். அங்கேயும் நீதி கிடைக்கவில்லை என்றால், தடை விதிக்கப்பட்டால், அத்தடையை மீறி கண்டிப்பாக மிகப்பெரிய அளவில், இந்தப் பயணம் எந்த நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டு இருக்கிறதோ, அதைவிட பல மடங்கு வேகமாக மக்கள் மத்தியில் சேரும் வகையில், எங்களுடைய முயற்சிகள் இருக்கும். அதற்கு வெகு மக்களும் ஆதரவு கொடுப்பார்கள்.

மீறுவதைத் தவிர, வேறு வழியில்லை!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், இது பெரியார் மண், சமூகநீதி மண். அதற்கு எதிர்ப்பாக, எந்தத் தடையாக இருந்தாலும், அதை மீறுவதைத் தவிர, வேறு வழியில்லை என்று அறிவிப்பது இந்தச் செய்தியாளர்களின் சந்திப்பின் நோக்கமாகும்.

திராவிடர் கழகத் தலைவரின் அறிக்கை

இது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு வீரமணி அவர்கள் ஓர் அறிக்கையைக் கொடுத்திருக்கிறார். அந்த அறிக்கையின் நகல்கள் உங்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

இப்போது தற்காலிகமாக இப்பிரச்சாரப் பயணம் ஒத்தி வைக்கப்பட்டாலும், இதைவிட வீரியமான முறையில், இரு சக்கர வாகனப் பரப்புரைப் பயணம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி விரோதமாகும்!

நீட் தேர்வை எதிர்த்து மட்டும் இந்த இரு சக்கர வாகனப் பரப்புரை பயணம் அல்ல. EWS என்ற ஒன்றைக் கொண்டு வந்திருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இது அரசியலமைப்புச் சட்டத்தின்படி விரோதமாகும். முதல் திருத்தச் சட்டம் வந்தபோதுகூட, சமூக ரீதியாக, கல்வி ரீதியாக என்கிற அளவுகோலுக்கு மேல், பொருளாதார அளவு கோல் என்று ஒரு திருத்தம் கொண்டு வந்தபோது, அது தோற்கடிக்கப்பட்டது.

உச்சநீதிமன்றம் தடுத்து நிறுத்தியது!

அதற்குப் பின்பு, பலமுறை அந்தப் பொருளாதார அளவுகோலைக் கொண்டு வரவேண்டும் என்று முயற்சி செய்தார்கள். நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோதுகூட, பொருளாதாரத்தில் நலிந்த உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்று சொன்னபோது, உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

அதேபோல, மோடி அவர்கள் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, பொருளாதாரத்தில் நலிந்த உயர்ஜாதியினருக்கு குறிப்பிட்ட சதவிகிதம் என்று சொன்னபோது, அதை உச்சநீதிமன்றம் தடுத்து நிறுத்தியது.

இந்நிலையில், EWS என்கிற பொருளாதார அளவுகோலைக் கொண்டுவந்திருக்கிறார்கள். இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதாகும்.

உதாரணத்திற்கு, ஸ்டேட் பாங்க்கில் ஒரு தேர்வு நடந்திருக்கிறது.

அதில், தாழ்த்தப்பட்டோருக்கு கட் ஆஃப் மார்க் 61.5

பழங்குடியின மக்களுக்கு கட் ஆஃப் மார்க் 53.75

இதரப் பிற்படுத்தப்பட்டோருக்கு கட் ஆஃப் மார்க் 61.25

EWS என்று சொல்லப்படுகின்ற பொருளாதாரத்தில் நலிந்த உயர்ஜாதியினருக்கு கட் ஆஃப் மார்க் 28.5

நன்றாக நினைத்துப் பாருங்கள், யார் அந்த EWS?

ஏற்கெனவே ஒன்றிய அரசு துறைகளிலும், வங்கித் துறையிலும் நிரம்பி வழிகின்றவர்கள் உயர்ஜாதி பார்ப்பனர்கள்தான். அவர்கள், 28.5 மார்க் வாங்கினாலே, அவர்களுக்கு இடம் கிடைக்கும்.

சமூகநீதிக்கு எதிரானதாகும் EWS!

ஆகவே, இந்த மிகப்பெரிய, சமூகநீதிக்கு எதிரான இந்தச் சட்டத்தை எதிர்த்தும், திராவிடர் கழகம்  இரு சக்கர வாகனப் பிரச்சாரப் பயணத்தில் கொள்கை அடிப்படையில் முக்கிய அம்சமாகக் கருதி பிரச்சாரம் மேற்கொள்ளவிருந்தோம்.

அதற்கும் சேர்த்துத்தான் இன்றைக்குத் தடை விதித்திருக்கிறார்கள். அதையும் மீறி, வெற்றி பெறுவோம்!

– இவ்வாறு திராவிடர் கழகத் துணைத் தலைவர்
கலி.பூங்குன்றன் செய்தியாளர்களிடம் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *