நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு முதலமைச்சர் அலுவலகம் மாற்றம்! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

சென்னை, ஜூலை 29- தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10ஆவது தளத்துக்கு மாற்றப்படுவதாக தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முதன்மைச் செயலர்கள் மற்றும் ஆலோசகர்களின் அறைகளை மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

10ஆவது தளத்தில் இயங்கிவரும் செய்தி, மக்கள் தொடர்புத் துறை பிரிவுகள் கலைவாணர் அரங்குக்கு மாற்றப்படுகிறது. 10ஆவது தளத்தில் உள்ள தளவாட பொருள்களை கலைவாணர் அரங்கிற்கு மாற்றவும் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10ஆவது தளத்தில் தற்போது உள்ள செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் அலுவகத்தின் பிரிவுகள், வரவு செலவு பிரிவு, பொருட்காட்சி அனுமதிப்பிரிவு, முதலமைச்சரின் சமூக, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டு பிரிவு அனைத்தும் உடனடியாக, தரைத்தளம் (500 சதுர அடி), இரண்டாம் தளம் (400 சதுர அடி) மற்றும் மூன்றாம் தளம் (2000 சதுர அடி) ஆகியவற்றில் காலியாக உள்ள சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்திற்கு மாற்றம் செய்யப்படுகின்றன.

நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10ஆவது தளத்தில் தற்போது செயல்பட்டு வரும் சுற்றுலாத் துறையின் எழுதுப்பொருட்கள் அறையினை அத்துறை அமைந்துள்ள 9ஆவது தளத்திற்கு மாற்றம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முதலமைச்சரின் அலுவலகம் 10ஆவது தளத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளதால் தற்போது அத்தளத்தில் செயல்பட்டு வரும் அலுவலகங்கள் மற்றும் அலுவலர்களின் அறைகள் அனைத்தும் மாற்றம் செய்யப்படுகின்றன.

நாமக்கல் கவிஞர் மாளிகையில் 1, 3, 5, 7 மற்றும் 8 ஆகிய தளங்களில் அமைந்துள்ள கூட்ட அரங்குகள் உடனடியாக பொதுத் (கட்டடங்கள்) துறைக்கு ஒப்படைக்குமாறு சம்மந்தப்பட்ட துறைகளின் உயர் அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப் படுகின்றார்கள்.

மேலும் கூட்ட அரங்கில் விலை மதிப்புள்ள பொருட்கள் இருப்பின் அதை எடுத்துப் பாதுகாக்குமாறு சம்மந்தப்பட்ட துறையின் அலுவலக நடைமுறைப் பிரிவு கேட்டுக் கொள்ளப்படுகிறது. உதவி செயற்பொறியாளர் (கட்டடம்), பொதுப்பணித் துறை, மாற்றம் செய்யப் பட்டுள்ள இடங்களுக்குத் தேவையான மேஜை, நாற்காலிகள் அனைத்தையும் இட மாற்றம் செய்து தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

உதவி செயற்பொறியாளர் (மின்சாரம்) மாற்றம் செய்யப்பட்ட அனைத்து அறைகளிலும் அலுவலர்கள் அனைவரும் உடனடியாக பணிபுரிய ஏதுவாக மின்சார வசதிகள் சம்மந்தமாக அனைத்து பணிகளையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

பொதுத்துறையின் அலுவலக நடைமுறை-II பிரிவு தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் மற்றும் பிரிவுகளுக்கு இணைய வசதி செய்து தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. பொதுத்துறையின் தொலைபேசிகள் பிரிவு, தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் மற்றும் பிரிவுகளுக்கு ஏற்கெனவே உள்ளவாறு தொலைபேசி வசதி செய்து தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இம்மாற்றங்கள் அனைத்தும் உடனடியாக நடைமுறைக்கு வருகின்றன என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *